ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இந்திய ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அனுதினமும் இன்று எத்தனை பேர் தாக்கப்பட்டனர் என்பது போன்ற விவரங்களைப் பிரசுரிக்கின்றன. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா‡வில் தொடங்கி பிரதமர் மன்மோகன்சிங் வரை அனைவரும் ஆஸ்திரேலியா அரசாங்கம் இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக உரிய துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.

ஏன் இந்தத் தாக்குதல்கள்?

இந்தியாவிலிருந்து மட்டுமல்ல உலகில் பின்தங்கிய நாடுகளின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கல்வி பயில்வதற்காக ஆஸ்திரேலியா செல்கின்றனர். அதனால் உள்ளபடியே ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களுக்கு மிகுந்த ஆதாயமே தவிர இழப்பு எதுவும் இல்லை. எனவே மேலோட்டமாகப் பார்த்தால் இந்திய மாணவர்களுக்கு எதிரானதாக ஆஸ்திரேலியா இருப்பதற்கு காரணம் எதுவுமில்லை. அப்படியானால் ஏன் இந்த தாக்குதல்கள்?

இந்திய மாணவர்கள் அங்கு கல்விகற்கும் வேளையில் தங்களது நடைமுறை செலவுகளை ஈடுகட்டுவதற்காக பகுதிநேர வேலைகள் பலவற்றைச் செய்கின்றனர். அது மட்டுமின்றி அவர்கள் கல்விகற்று முடித்த பின்னர் ஆஸ்திரேலியாவில் பல வேலைகளுக்கும் மனு செய்து வேலைகளில் அமரவும் செய்கின்றனர். நேரம் காலம் பார்க்காது கடுமையாக உழைப்பவர்களாக அவர்கள் உள்ளதால் பல ஆஸ்திரேலிய நிறுவனங்கள் அவர்களைப் பணியமர்த்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.

இனப்பிரச்னையா?

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை வாய்ப்புகள் சுருங்கிவரும் நிலையில் கிடைக்கும் ஒரு சில வேலைகளிலும் போட்டியாளர்களாக இந்தியர்கள் வருவது ஒரு பகுதி ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே ஒரு வகையான கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் தாக்குதல்களுக்கு மிகப்பெரும் காரணம் அத்தகைய கசப்புணர்வேயாகும்.

உண்மை இவ்வாறு இருக்கையில் இது இனதுவேசத்தின் காரணமாக நடைபெறும் வெறியாட்டம் என்பதுபோன்ற ஒரு சித்திரத்தை இந்தியப் பத்திரிக்கைகள் தொடர்ச்சியாக முன் வைக்கின்றன. இறுதியாக இதில் இனப்பிரச்னையும் இருப்பதாக ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவரும் கூறியுள்ளார். இதை ஒத்த தாக்குதல்களும் அந்நியத் தொழிலாளர் எதிர்ப்பு கிளர்ச்சிகளும் உலகின் பல பகுதிகளில் சமீபகாலமாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இங்கிலாந்தில் இத்தாலியின் சிசிலியைச் சேர்ந்த, எண்ணெய் வளத்துறையில் வேலைசெய்த 80 தொழிலாளர்களுக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற கிளர்ச்சி இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். அந்தக் கிளர்ச்சியின் விளைவாக 80 இத்தாலியத் தொழிலாளர்களை நகருக்குள் வைத்திருக்க முடியாமல் ஒரு படகில் கடலுக்குள் பல நாட்கள் வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து அணுநிலையக் கட்டுமானத் துறையில் ச்செல்லா பீல்ட், ஹேசாம் அணு உலைகளில் வேலை செய்த தொழிலாளர்களின் கிளர்ச்சியும் இங்கு கவனிக்கத் தக்கதாகும். அங்கு பல தினங்கள் நீடித்த தொழிலாளரின் வேலை நிறுத்தப் போராட்டத்தை இங்கிலாந்தின் ஊடகங்கள் அந்நியத் தொழிலாளருக்கு எதிரான வேலை நிறுத்தம் என்றே சித்தரித்தன.

அதைப் போலவே சிங்கப்பூரில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்கள் 50,000 பேரின் வேலைகளும், அதைப் போல் மலேசியாவில் வேலை செய்யும் தொழிலாளரின் வேலைகளும் பறிபோகும் நிலையில் உள்ளன. மலேசியாவில் அந்நியத் தொழிலாளருக்கு எதிரான போராட்டங்கள் தூண்டிவிடப்படும் சூழ்நிலைகள் உள்ளன. இதை ஒத்த நிலை போலந்து, லிபியா மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளிலும் ஹாங்காங்-கிலும் தோன்றியுள்ளது.

தானாக வெடித்துக் கிளம்புவையுமல்ல - இனவெறிப் போக்குமல்ல

பொதுவாக இத்தகைய அந்நியத் தொழிலாளர் மீதான தாக்குதல்கள் தாமாகவே வெடித்துக் கிளம்புவன என்பது போன்ற ஒரு தோற்றம் ஏகாதிபத்திய முதலாளித்துவ ஊடகங்களால் முன்வைக்கப்படுகிறது. அதைப்போல் இவைஅனைத்துமே இனவெறித்தன்மை கொண்டவை என்றவொரு சித்திரமும் முன் வைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இவை தாமாகவே வெடித்துக் கிளம்புபவையும் அல்ல; இனவெறித்தன்மையினை அடிப்படையாகக் கொண்டவையும் அல்ல.

ஏனெனில் ஆண்டாண்டுகாலமாக பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலை செய்து கொண்டே இருக்கின்றனர். மிக அதிக எண்ணிக்கையில் அவர்கள் வேலை செய்யும் துறைகள் பெரும்பாலும் கடினமான உடல் உழைப்பு தேவைப்படக் கூடிய தொழில்களாகும்.

அது மட்டுமின்றி மேலைநாட்டவர் அருவறுப்பானவை என்று ஒதுக்கித் தள்ளக் கூடிய பல சுகாதாரத்துறை சார்ந்த வேலைகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். எனவே சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஒரு இனவெறி மனநிலையுடன் இந்தத் தொழிலாளரைப் பார்ப்பதில்லை.

கடந்த காலங்களில் இத்தகைய இனவெறிப் போக்குகள் பெரிய அளவில் அந்நாடுகளில் வெளிப்பட்டதில்லை. அமெரிக்காவில், பொட்டுவைத்தவர்களை தாக்குவோம் என்ற பெயரில் ஆங்காங்கே இந்தியர்களுக்கு எதிராக சில அரைக்கிறுக்குப் பிடித்தவர்களால் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கலாம்.அது தவிர ஒரு சில தனி நபர்கள் மீதான தாக்குதல்கள் பல தனிப்பட்ட மனநிலை பாதித்த அல்லது மனவியாதி கொண்டவர்களால் நடத்தப்பட்டிருக்கலாம். அவையனைத்தும் விதிவிலக்காக நடைபெற்றவையேயன்றி ஒரு சமூகப் போக்காக தோன்றி நிலை பெற்றுள்ளவை அல்ல.

அப்படியானால் இந்தத் தாக்குதல்களை தூண்டுபவர்கள் யார்? உண்மையில் இத் தாக்குதல்களை தூண்டுபவர்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகளும், முதலாளித்துவத்தின் நலனைப் பாதுகாக்கப் பாடுபடும் ஊடகங்களுமேயாகும். இவ்விரு பகுதியினரும் ஒரு பெரிய சூழ்ச்சி மனநிலையோடு இவ்விசயத்தை கையாளுகின்றனர்.

தொட்டிலையும் ஆட்டி - பிள்ளையையும் கிள்ளி

ஒரு புறம் அவர்கள் எந்த வர்க்கத்தின் நலனுக்காக பாடுபடுகிறார்களோ அந்த முதலாளி வர்க்கத்திற்கு அது அதிகபட்ச லாபத்தை ஈட்டுவதற்காக குறைந்த கூலிக்கு வேலை செய்யத் தயாராக உள்ள அன்னியநாட்டுத் தொழிலாளர்கள் வேண்டும்.

அதே சமயத்தில் நெருக்கடி காலங்களில் உள்நாட்டின் தொழிலாளர்களே வேலையின்மைப் பிரச்னையில் அவதியுறும் நிலையில் அதற்கான காரணம் அந்நிய தொழிலாளரே என்று உள்நாட்டுத் தொழிலாளரின் முன்நிறுத்தி அவர்களது வேலையின்மைப் பிரச்னையைத் திசை திருப்பிவிடவும் வேண்டும்.

இதனையே முதலாளிவர்க்கத்தின் ஏவலர் பணியினை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் செய்கின்றன. அவை இதன் மூலம் தொட்டிலையும் ஆட்டிவிட்டு அதில் உறங்கும் பிள்ளையையும் கிள்ளிவிடும் வேலையை மிகவும் இலாவகமாகச் செய்துகொண்டுள்ளன. இதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு தற்போதைய இங்கிலாந்தின் பிரதமர் 'கார்டன் ப்ரவுன்' முன்வைத்துள்ள ஒரு பிரபல முழக்கமாகும். அதாவது அவர் 'இங்கிலாந்தில் உள்ள வேலை வாய்ப்புகள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கே' என்ற முழக்கத்தை முதலில் முன்வைத்தார்.

ஆனால் இங்கிலாந்து தொழிலாளரின் வேலைவாய்ப்புகளை அதிகமாக்குவதில் பெரும் அக்கறை கொண்டவர்போல் தன்னைக் காட்டிக் கொண்ட அவர் இங்கிலாந்தின் பொதுத் துறைகளில் அவரால் முடிந்த அளவு இன்றைய நெருக்கடி சூழலில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளாரா என்று பார்த்தால் அதுதான் இல்லை.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட பல முதலாளித்துவ நிறுவனங்களை மீட்டு எடுக்கிறோம் என்ற பெயரில் கோடிக்கணக்கான பவுண்ட் அளவிலான தொகைகளை மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்து செலவு செய்யும் அவரது அரசாங்கம் 12,000 தொழிலாளரை அத்துறைகளில் இருந்து வேலையை விட்டு நீக்கியும் உள்ளது . மேலும் 52,000 ஐரோப்பிய யூனியனைச் சேராத தொழிலாளரை அது பணியமர்த்தவும் செய்துள்ளது.

பிரிட்டிஷ் தொழிலாளரின் வேலை வாய்ப்பைப் பாதுகாப்பதற்காக என்ற பெயரில் புதுப்புது முழக்கங்களை முழங்கி வரும் கார்டன் பிரவுன் அவர்கள் உண்மையில் பிரிட்டிஷ் தொழிலாளருக்காகச் செய்து வருவது இது தான்.

அனைத்துப் போராட்டங்களும் அன்னியத் தொழிலாளருக்கு எதிரானவையா?

ஊடகங்களைப் பொறுத்தவரை அவை ஆட்குறைப்பிற்கு எதிராகவும் வேலைச் சூழ்நிலைகளின் மேம்பாட்டிற்காகவும் உள்நாட்டு, அந்நிய நாட்டுத் தொழிலாளர் என்ற பாகுபாடின்றி நடைபெறும் போராட்டங்களையும் அந்நியத் தொழிலாளருக்கு எதிரான போராட்டங்கள் என்றே சித்தரிக்கின்றன. எடுத்துக்காட்டாக ஸ்காட்லாந்திலும், ச்செல்லாபீல்டு, ஹேசாம் அணுநிலையங்களிலும் நடைபெற்ற கட்டுமானத் தொழிலாளர் போராட்டங்கள் இங்கிலாந்தின் ஊடகங்களால் அந்நியத் தொழிலாளருக்கு எதிரானவை என்றே சித்தரிக்கப்பட்டன.

அனைத்தும் வேசமே - லாப வெறி ஒன்றே நிஜம்

ஒரு கால கட்டத்தில் தனது இலாபநோக்க உற்பத்தி முறை அதிக நெருக்கடியின்றி நடைபெற்ற வேளையில் அவற்றில் வேலை செய்வதற்காக தேசம், இனம், மொழி, மதம் போன்றவை கடந்து தொழிலாளரை வேலைக்கு அமர்த்திய முதலாளித்துவம் மக்களுக்கிடையே நிலவிய குறுகிய, தேசிய மற்றும் குழுவாதப் போக்குகளை எதிர்த்துப் போராடி மக்கள் அனைவரும் சமம் என்ற குறிக்கோளை நிலைநாட்டப்பாடுபடுவது போல் பாவனை காட்டியது.

ஆனால் மக்களின் வாங்கும் சக்தி தான் கட்டவிழ்த்துவிடும் சுரண்டல் மூலம் சூறையாடப்படும் தன்மையைக் கொண்டிருந்ததால் அதனால் ஏற்படும் வாங்கும் சக்திக் குறைவினால் உருவாகும் சந்தை நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட சந்தை நெருக்கடிகளின் விளைவாக முதலாளித்துவம் தொழில் வளர்ச்சியினைத் தேவைப்படும் அளவிற்கு பராமரிக்க இயலாததாக ஆகிவிட்டது. அது தவிர தற்போது உலக அளவில் அது சந்தித்துக் கொண்டிருப்பது போன்ற மிகக் கடுமையான நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது.

அது போன்ற வேளைகளில் எந்த தேசம், இனம், மொழி, மதம் வேறுபாடுகள் கடந்து மக்கள் ஒற்றுமையைப் பராமரிக்கும் ஒரு உயர்ந்த அமைப்பாக தனது முதலாளித்துவ அமைப்பை அது காட்டியதோ அந்தப் பாவனைப் போக்கைத் தூக்கி எறிந்துவிட்டு - உள்நாட்டு தொழிலாளி, அந்நியத் தொழிலாளி தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்று என்ற அடிப்படையில் ஈரோ என்ற ஒரே நாணயத்தை ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் கொண்டுவந்துவிட்ட பின்னரும் - இவன் இத்தாலியத் தொழிலாளி, இவன் போலந்து நாட்டின் தொழிலாளி என்று ஐரோப்பிய நாட்டு மக்களுக்கிடையேயும் கூட வேறுபாடுகளை உருவாக்கி அதில் குளிர்காயும் வேலையையும் செய்கிறது.

வெறிவாதத்தை விசிறி விட புதுப்புது கட்சிகளையும் உருவாக்கும் முதலாளித்துவம்

இந்த வேலையை தன் நலனைப் பாதுகாக்க ஏற்கனவே இருக்கும் கட்சிகள் தான் விரும்பிய விதத்தில் செய்யவில்லை என்றால் அதனைச் செவ்வனே செய்வதற்கு பெரிய அளவில் நிதி உதவிகள் வழங்கி புதுக்கட்சிகளையும் அமைப்புகளையும் உருவாக்கி மிதமிஞ்சிய வெறித்தன்மையுடன் அவற்றை செயல்படச் செய்யும் வேலையையும் முதலாளித்துவ நிறுவனங்கள் செய்கின்றன. அத்தகைய அமைப்புகளாக முதலாளித்துவ நிறுவனங்களால் வளர்க்கப்பட்டு வருபவையே இங்கிலாந்தில் பிரிட்டிஷ் தேசியக் கட்சி (பி.என்.பி) என்ற பெயரில் வளர்ந்துவரும் அமைப்பும் ஜெர்மனியில் செயல்பட்டுவரும் நவீன பாசிஸ வாத அமைப்புகளுமாகும்.

இந்த அமைப்புகள் தங்களின் தாக்குதல் இலக்குகளாகப் பெரும்பாலும் உழைக்கும் வர்க்க கட்சிகளையும் அமைப்புகளையுமே வைத்துள்ளன. மேதின அணிவகுப்புகளின் போது இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் இவ்வமைப்புகள் அணிவகுப்புகளில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்குச் சென்றன.

உள்நாட்டுத் தொழிலாளியை தூண்டிவிடு- அன்னியத் தொழிலாளி உரிமையைப் பறி

ஒரு புறம் முதலாளித்துவ நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் முன் வந்தால் அவர்களை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்ட முனைகின்றன. அதேசமயம், இது போன்ற நெருக்கடிச் சூழ்நிலைகள் தோன்றும் போது அவர்களுக்கு எதிராக உள்நாட்டுத் தொழிலாளரைத் தூண்டி விட்டு, அந்தப் பின்னணியில் அந்நியத் தொழிலாளர்கள் அனுபவித்துவரும் குறைந்தபட்ச உரிமைகளையும் பறிக்கும் வேலையையும் செய்கின்றன.

எடுத்துக்காட்டாக ஹாங்காங்கில் வீட்டுவேலை செய்யும் அந்நிய தொழிலாளருக்கு குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தின் பலன்கள் கிடைக்காது என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரேக்க நாட்டில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர் அனைவரும் அவர்கள் செய்யும் வேலை நிரந்தர வேலையாக இருந்தாலும் கூட அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளராகவே கருதப்படுவர் என்று கருதுவதற்கு வழிவகுக்கும் ஒரு சட்டம் வரும் நவம்பர் மாதத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளிக்கெதிராக வெறியினை தூண்டும் இந்திய முதலாளிகள்

இவற்றின் மூலம் முதலாளித்துவ அரசுகள் புனைந்துவந்த ஜனநாயக வேடங்களும் முகமூடிகளும் சுக்குநூறாக கிழித்தெறியப்பட்டுக் கொண்டுள்ளன. சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் ஒரே வேலையைச் செய்பவர் அனைவரும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும் என்ற ஜனநாயக நியதிகள் இந்த முதலாளித்துவ அரசுகளால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இவ்வாறு முதலாளித்துவம் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் அந்த நெருக்கடிக்கான காரணத்தை அந்நியத் தொழிலாளர் மீது ஏற்றிவைத்து அவர்களை உள்நாட்டுத் தொழிலாளரின் வெறுப்பிற்கு ஆளாக்குகின்றனர். இப்போக்கு தற்போது நிலவும் இந்த நெருக்கடியின் போது ஐரோப்பிய நாடுகளில் மிகவும் வெட்ட வெளிச்சமாகத் தோன்றியுள்ளது. ஆனால் இந்தியா போன்ற வேலையில்லாத் திண்டாட்டம் காலங்காலமாக இருந்து வரும் நாடுகளில் இதே போக்கு வேற்று மாநிலத்தவருக்கு எதிராக தொடர்ச்சியாக இருந்து கொண்டுள்ளது.

மண்ணின் மைந்தர்க்கே வேலை என்று 70-களில் பால் தாக்ரே-யின் சிவசேனாவினால் மகாராஷ்டிர மாநிலத்தில் உருவாக்கப்பட்ட முழக்கம் இன்றும் மென்மேலும் தீவிரம் அடைந்து கொண்டுள்ளது.

70-களில் மும்பையில் இந்த முழக்கத்தை முன்வைத்து தமிழர் மற்றும் மலையாளிகளுக்கு எதிராக சிவசேனா உருவாக்கிய கிளர்ச்சி தற்போது மும்பையில் வேலைசெய்யும் பீஹார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளருக்கு எதிராகவும் திருப்பிவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தருணம் ஏற்படும் போதெல்லாம் மக்களுக்கிடையில் பிரிவினைவாதப் போக்குகளை உருவாக்கி அரசியல் லாபம் பெறுவதற்காக இதுபோன்ற அண்டை மாநிலத்தவருக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் முழக்கங்களை முன் வைக்கின்றனர்.

எம்.ஜி.ஆருக்கு மலையாளி முத்திரை குத்தியப் போக்கு

தமிழகத்தில் ஒரு மலையாளி எவ்வாறு தமிழ்நாட்டை ஆள அனுமதிக்கப்படலாம் என்ற வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகத்தினரால் செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதில் விநோதம் என்னவென்றால் இம்முழக்கத்தை எழுப்பிய கட்சியினர் முன்வைத்த அதாவது அது முன்னேற்ற விரும்பிய திராவிடத்தில் கேரளாவும் ஒரு அங்கமே என்பதாகும்.

சிறிய அளவிலும் பெரிய அளவிலும் இது போன்ற வெறிவாதத்தைத் தூண்டும் அமைப்புகளும் பல மாநிலங்களில் அந்தந்த பிராந்திய முதலாளிகளின் ஆதரவுடன் தோன்றி வளர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரத்தில் சிவசேனா-வைப் போல, கர்நாடகத்தில் கன்னட சலுவாலிகர், வங்கத்தில் அமரா பெங்காலி, தமிழகத்தில் தமிழ்தேசியம் பேசும் பல்வேறு அமைப்புகள் போன்ற அமைப்புகள், அண்டை மாநில மக்களின் மேல் வெறுப்புக்கனலைக் கக்கும் வேலையைச் செய்து கொண்டுள்ளன.

ஆனால் அந்த வெறுப்புணர்வினைப் போக்கி அகில இந்திய அளவில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பராமரிக்கும் விதத்தில் இங்கு இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சிகள் உட்பட எந்தக் கட்சியும் செயல்படுவதில்லை. நாடாளுமன்றவாத அரசியல் இலாபம் கருதி இந்த அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நிலைபாட்டினையே பெரும்பாலும் எடுக்கின்றன. அதாவது சரியோ தவறோ பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு உகந்த விதத்தில் தங்களது போக்குகளை அவை மாநிலத்திற்கு மாநிலம் வடிவமைத்துக் கொள்கின்றன.

உயர்ந்து நிற்கும் மேலை நாட்டு உழைக்கும் வர்க்கம்

இந்த வகையில் இந்தியாவைக் காட்டிலும் ஓரளவு முதலாளித்துவ ஜனநாயகம் நிலைபெற்றுள்ள மேலை நாடுகளில் உள்ள உழைக்கும் வர்க்க இயக்கங்கள் எவ்வளவோ உயர்ந்தவையாக உள்ளன. இவ்வாறு தூண்டிவிடப்படும் இனவெறிக்கு எதிரான அமைப்புகள் இங்கிலாந்தில் தோன்றியுள்ளன. குடிபெயர்ந்து அங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளரின் நலன்களை பாதுகாப்பதற்கு அவை குரல் கொடுக்கின்றன. பிரிட்டிஷ் தேசியக் கட்சி என்ற தேசிய வெறிவாத அமைப்பிற்கு எதிராக அணிதிரளுமாறு மக்களுக்கு அக்கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன.

உயர்த்திப் பிடிக்கப்படும் உண்மையான சமூக நீதி

இதையும் தாண்டி புலம்பெயர்ந்து வந்து வேலை செய்யும் மக்கள் வாழும் நெருக்கடி நிறைந்த சுகாதாரக் கேடுகள் மண்டிய பகுதிகளில் அனைத்து மக்களுக்கும் கிடைப்பது போன்ற சுகாதார வாழ்க்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் அமைப்புகளும் அங்கு உள்ளன. மிகப் பொருத்தமான விதத்தில் சமூக நீதி அவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் சமூக நீதிக் கண்ணோட்டத்தை இவ்விதத்தில் அவர்கள் உயர்த்தி பிடிக்கின்றனர்.

இங்குள்ளது போல் ஜாதிய வாதங்களுக்குத் தூபம் போடுவதாக சமூகநீதிக் கண்ணோட்டம் அங்கு தரம்தாழ்த்தப்படவில்லை.
ஒட்டு மொத்தத்தில் உலகெங்கிலும் இனவெறி என்ற பெயரில் வேற்றின மக்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதல்களின் பின்னணியில் இத்தகைய முதலாளித்துவத்தின் சூழ்ச்சி இருந்து கொண்டிருப்பதே மென்மேலும் வெட்டவெளிச்சமாகிக் கொண்டுள்ளது.

முதலாளித்துவம், மாமேதை மார்க்ஸ் கூறியதைப் போல அதனை சூழ்ந்துள்ள அது தவிர்க்க முடியாமல் உருவாக்கும் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. அவற்றில் இருந்து தற்காலிக நிவாரணம் தேட இது போன்ற இனவெறிப்போக்குகளை அது மென்மேலும் ஊக்குவிக்கவே செய்யும்.

முதலாளித்துவமே முக்கிய எதிரி என அடையாளம் கண்டு கொண்ட உழைக்கும் வர்க்கம்

இதையே ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளிலும் இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டுள்ள தாக்குதல்களும், கிளர்ச்சிகளும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் மேலை நாட்டு மக்கள் தங்களின் வேலையின்மைப் பிரச்னைக்கு மிகமுக்கியக் காரணம் இந்த முதலாளித்துவ அமைப்பே என்பதை உணர்ந்துள்ளனர்.

எனவேதான் அந்நாட்டு மக்களின் மேதின அணிவகுப்புகளின் போது உரத்த குரல்களில் முன்வைக்கப்படும் முழக்கம் "முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்" என்பதாக இருக்கிறது. ஆனால் அந்த மகத்தான வரலாற்றுப் பணியை செய்து முடிக்கவல்ல சரியான அமைப்புகள் இன்னும் இங்கு உருவாகவில்லை.

அப்படிப்பட்ட அமைப்புகளின் தேவையை வலியுறுத்தும் சுயமான சிந்தனைப் போக்கு மேலை நாடுகளில் மென்மேலும் பெருகிவருவதால் இன்றோ, நாளையோ நிச்சயம் அது உரிய ஸ்தாபனங்களுக்கு உருக்கொடுக்கவே செய்யும். அவ்விதத்தில் சுரண்டல் முதலாளித்துவ அமைப்பு தூக்கி எறிப்படுவதில் மட்டுமே இந்த முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டு இனப்பிரச்னை என்று முன்னிறுத்தப்படும் இப்பிரச்னைக்கான தீர்வு உள்ளது.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்படும் கட்சிகளும் கூட தேசிய முதலாளிகளை தங்களது நேச சக்திகளாகப் பாவிப்பதனால் இதுபோன்ற மக்களை பிளவுபடுத்தும் போக்குகளை மேலைநாட்டு முதலாளிகளைக் காட்டிலும் கூட ஒரு வகையில் கொடூரமாகச் செய்து வரும் இந்திய முதலாளிகளுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையையே அவை செய்து வருகின்றன.

எனவே நமது நாட்டைப் பொறுத்தவரை இக்கட்சிகள் மற்றும் அவற்றின் தேசிய முதலாளிகளின் ஆதரவுப் போக்கு, சமூக நீதி என்ற பெயரில் ஜாதியத்திற்கு தூபமிடுதல் ஆகிய போக்குகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதன் மூலமே மேலைநாட்டுத் தொழிலாளருடன் தோளோடு தோள் நின்று முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுக் கடமையினை நாம் செவ்வனே செய்ய முடியும்.

Pin It