எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய முதல் சிறுகதை ‘கபாடபுரம்’. ஆனால் இது கையெழுத்துப் பிரதியிலேயே தொலைந்துபோனது. அடுத்து இவர் எழுதிய ‘பழைய தண்டவாளம்’ என்ற சிறுகதைக் கணையாழியில் வெளிவந்து எஸ்.ராமகிருஷ்ணனைப் பிற்காலத்தில் மிகச்சிறந்த கதைக்காரராக உருவாகத் துணைபுரிந்தது. தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, மார்க்வெஸ், செகாவ், ஹெமிங்வே, வைக்கம் முகமது பஷீர் எனத் தொடர்ந்த இவரின் வாசிப்பு எல்லை இவரின் கதைகளுக்கு மாயத்தையும் எப்போதுமே அழிக்கமுடியாத புதிய நிலப்பரப்புகளையும் கொண்டுவந்து சேர்த்தது.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.ப.ரா., கு.அழகிரிசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், மௌனி போன்ற தமிழின் நவீனக் கதைசொல்லிகளைத் தீவிரமாக வாசித்த எஸ்.ராமகிருஷ்ணன், எண்பதுகளுக்குப் பிறகு உருவான நவீனத்துவக் கோட்பாடுகளைத் தம் கதைகளின் வழியாக உட்புகுத்தினார். கோணங்கியோடு சேர்ந்து கதையெழுதத் தொடங்கிய எஸ்.ரா.வின் கதைகளை மூன்று காலகட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். இவரின் ஆரம்பகாலக் கதைகள் முன்வைக்கும் நிகழ்வுகள் யதார்த்தமானவை; இக்கதைகளில் வரும் மனிதர்கள் நாம் தினமும் சந்திக்கூடியவர்கள். இவரது முதல் கதையான ‘பழைய தண்டவாளம்’ நடராஜன் என்ற சிறுவனின் மனவெளியில் சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக நிற்கும் ஒரு கூட்ஸ் வண்டி சில நாட்களில் அவ்விடத்திற்கான அடையாளமாகிப் போகிறது. ஒரு நாள் அந்த வண்டி அந்த இடத்திலிருந்து நகரும்போது அதனோடு சேர்ந்து அந்த இடத்தின் அடையாளமும் நகர்ந்துபோவதை அவன் உணர்கிறான். அவன் மனதில் வெறுமை குடிகொள்கிறது; கூட்ஸ் வண்டியை அவன் ஒரு பொருளாகப் பார்க்காமல் நிலத்தின் அடையாளமாகப் பார்த்ததினூடாக ஏற்பட்ட வெற்றிடத்தை அவனால் நிரப்பிக்கொள்ள முடியவில்லை. அடுத்தக் கதையான ‘இடம்பெயர்தல்’ என்ற கதை திருமணத்திற்குப் பிறகான அக்காவின் மனநிலையை விவரிக்கிறது. தன் வீட்டில் தங்கி வேலை பார்க்கும் தம்பி அப்போது அவளுக்கு வேறொருவனாகத் தெரிகிறான். கணவன் மற்றும் தம்பி என்ற இரண்டு உறவுக்குள் தம்பி என்கிற உறவு முக்கியத்துவம் இழப்பதைப் பெண்களால் எப்போதும் தவிர்க்க முடிவதில்லை. இந்த இரண்டு கதைகளிலும் இரயிலும் வெயிலும் குறியீடுகளாக நிற்கின்றன.

எஸ்.ராமகிருஷ்ணனின் மூன்றாவது சிறுகதை ‘உறவும் பிரிவும் இன்றி’. இவரின் ஆரம்பகால மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. வலிமையான உறவை ஆயிரம் ரூபாய் பணம் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது. வாங்கிய பணத்தைக் கொடுக்க முடியாதபோதும் கொடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்கும்போதும் இரண்டு உறவுகள் சிதைந்துபோவதை எப்போதும் தவிர்க்க முடிவதில்லை. ‘தெரிந்தவர்கள்’ என்ற கதையும் இதுவும் ஒரே வகையைச் சேர்ந்தவை. அம்மாவை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள்; மூத்த மகனும் மகளும் அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள்; கடைசி மகனுக்கு வறுமை, அம்மா மீது அளவுகடந்த அன்பிருக்கிறது; பணமில்லை. அம்மா பேச மறுக்கிறாள். மனப் புழுக்கமடைகிறான். அவன் வீட்டில் எப்போதும் வெயில் புழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இக்கதையில் வெயில்தான் வறுமையின் குறியீடு.

இவருடைய தொடக்ககாலக் கதைகள் அனைத்தும் கசப்புகள் நிரம்பியவை. எல்லாக் கதையிலும் ஏதோ ஒரு சோகம் பீடித்திருப் பதைக் உணர முடிகிறது. துக்கத்தால் போர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை அதன் தீவிரம் குறையாமல் சொல்லி செல்கிறது. பெண்கள் முடிவெடுக்கும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்; ஈரத்தின் வாடை அவர்களோடு ஒட்டியே கிடக்கிறது. ‘கல்யாணி இருந்த வீடு’ கதையில் ஆறு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் பால்யத்திலிருந்து புழங்கிய வீட்டை அந்த வீட்டின் ஆண் திடீரென ஒருநாள் விற்று விடுகிறான். அவர்கள் அவனை எதுவுமே கேட்கவில்லை; மாறாக வீட்டைப் பிரியவேண்டிய அந்த இரவில் அழ மட்டும் செய்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிகிறார்கள். இதேபோன்று ‘வீடு&வெளி’ கதையில் அந்த ஆண் வேலை தேடுவதற்காக கார்மெண்டில் பணிபுரியும் தன் மனைவியிடம் இருபத்தைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு வேலை தேடிச் செல்கிறான். நண்பன் ஒருவனோடு சேர்ந்து குடித்துவிட்டு விடியற்காலையில் வீடுவந்து சேர்கிறான். அவள் சத்தமாக அழ மட்டும் செய்கிறாள்; அவன் எதுவும் நடக்காததுபோல உறங்கிப் போகிறான். ‘தொலைந்து போதல்’ கதையில் வரும் ஆண், ஒருநாள் தன் இயலாமை உணர்ந்து வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறான். ஓர் ஆணால் வீட்டையும் உறவையும் விட்டு எளிமையாகத் துண்டித்துகொள்ள முடிகிறது என்பதை இம்மூன்று கதைகளும் மௌனமாகச் சொல்கின்றன. இவரது கதாபாத்திரப் பெயர்கள் அடுத்தடுத்தக் கதைகளிலும் ஒன்றாகவே இருக்கின்றன.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள காதல் கதைகள் நுட்பமானவை. அம்மாவின் அரவணைப்புக்காக ஏங்கும் ஒரு பெண் அது அவளிடம் கிடைக்காதபோது வேறொரு ஆடவனிடம் அந்த அன்பைக் காணுவதாகக் ‘காற்று மரங்கள்’ என்ற சிறுகதை அமைந்துள்ளது. ‘போய்க்கொண்டிருப்பவர்கள்’ நிறைவேறாத ஒரு பெண்ணின் காதல் கதை. பத்தாவது வரை மட்டுமே படித்துவிட்டு மெக்கானிக்காக வேலை செய்யும் சிவா அவன் மாமா மகளைக் காதலிக்கிறான். அவளுக்கும் விருப்பம் இருக்கிறது. ஆசிரியர் பயிற்சிபெற்ற அவளை வேறொருவனுக்கு மணம் முடிக்கிறார்கள். கணவனோடு ஊருக்குச் செல்லும் நாளில் அவனைக் காண வருகிறாள். அவனிடம் ‘நான் என்ன செய்ய’ என்று கேட்டுவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இக்கதை, ஒரு பெண்ணின் மனவெழுச்சியைக் கண்ணீரால் கரைத்துச் செல்கிறது. அவள் அழுத அந்த நொடியில் அவன் துக்கத்தை எளிதாகக் கடந்து விடுகிறான். அவள் துக்கத்தோடு பயணம் செய்கிறாள். நெருடலில்லாத மொழிநடையை இக்கதையில் காணமுடிகிறது. இதேபோன்ற ஒரு கதை ‘கழுவேற்றம்’. பஸ்ஸில் பிட்பாக்கெட் அடித்த பர்ஸில் இருக்கும் கடிதத்தின் வழியாக இக்கதை சொல்லப்படுகிறது. தன் காதலனுக்குத் தன்னுடைய எத்துப்பல் பிடிக்கவில்லை என்பதற்காக, தன் பல்லையே உடைத்துக் கொள்ளும் ஒரு பெண்ணின் குற்றமற்ற ஆழமான காதல் கதை. பெண்களின் மன உலகை வெளிப்படுத்தும் எஸ்.ரா.வின் மிகச் சிறந்த கதை இது.

எஸ்.ராமகிருஷ்ணன் தொடக்க கால முதல் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் முன்வைக்கும் சம்பவங்கள் இயல்பானவை; நமக்கும் ஒருகாலத்தில் நடக்ககூடியவை. தவிர்க்க முடியாத மனப்புழுக் கங்களை வெளிப்படுத்துபவை. வெயில், இருட்டு, இரயில் போன்ற படிமங்கள் இக்கதைகளில் தொடர்ந்து வருகின்றன. எல்லாக் கதைகளிலும் அவமானம், புறக்கணிப்பு, கசப்பு, துக்கம், இயலாமை போன்றவை பாசிபோலப் படிந்து தொடர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.

எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டாவது காலகட்டச் சிறுகதைகள் ‘தாவரங்களின் உரையாடல்’ தொகுப்பிலிருந்துத் தொடங்குகிறது. தேசாந்திரியாகத் திரிந்ததன் ஊடாகப்பெற்ற அனுபவமும் பின்நவீனத்தின் வருகையும் இவரது கதைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கின. புதிய நிலப்பரப்புகளை இக்காலத்தில் இவரது கதைகள் கட்டமைத்தன. காலம், வெளிகளைக் கடந்த சிறுகதைகள் இவரது எழுத்தின் வழியே வழிந்தோடின. அடர்த்தியான மொழிநடையும் அவிழ்க்க முடியாத புதிர்மையும் இவரது கதைகளில் ஊடாடின. ஒற்றைத் தன்மையிலிருந்து பன்முகத் தன்மையான படிமங்களை இவரது கதைகள் அடுக்கிக்கொண்டே சென்றன. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பல்வேறு சோதனை முயற்சிகளைச் செய்துபார்த்த இவர், இக்காலகட்டத்தில் தன்னையரு மாயக்கதைக்காரராக நிலைநிறுத்திக் கொண்டார். அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் யதார்த்தத்துக்குப் பின்னே ஒளிந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளையும் உருவங்களையும் புனைவுகளாக்கினார். அதேசமயம் வாசகர்கள் நெருக்கமாக உணர்ந்த இவரது கதைகள் இக்காலத்தில் அந்நியப்பட்டும் போயின என்பதையும் மறுக்க முடியாது.

இரண்டாம் காலகட்டச் சிறுகதைகளில் மிக முக்கியமான கதை ‘தாவரங்களின் உரையாடல்’. தாவரங்களின் ரகசிய வாழ்க்கையை அறிந்துகொள்ள முயற்சிக்கும் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ராபர்ட்ஸன், வனத்திற்குள் காணும் மாயங்களும் ஆச்சர்யங்களும்தான் கதை. மனிதர்களுக்குள்ள அத்தனை ஆசைகளும் தாவரங்களுக்கும் உண்டு என்பதை இப்புனைவு நம்பவைக்கிறது. மிக நுட்பமான விவரணைகளும் தொன்மக்குறிப்புகளும் நிரம்பிய இக்கதை, தமிழுக்குப் புதிய களம். தம் புனைவின் வழியாக மிகப்பெரிய ஒரு காட்டை உருவாக்கி, தாவரங்களுக்குள்ள அசாத்தியமான சக்திகளை நம்பவைக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் தனக்கென ஒரு கதை வடிவத்தை இக்கதையை எழுதியனூடாகக் கண்டடைகிறார் என்றே சொல்லலாம். இதேபோன்று ‘பறவைகளின் சாலை’ என்ற கதையும் வான்வெளியில் அலையும் ஒரு மனிதன் குறித்த சித்திரம். மனம் பிற உயிரினங்கள்போலத் தன் உருவத்தை மாற்றிக்கொள்ள ஆசைப்படுவதிலுள்ள மாயங்களும் அதீதக் கற்பனைகளும்தான் இப்புனைவு. இக்கால கட்டத்தில் இவரின் புனைவுகள் பெரும்பான்மையானவை மனிதர்கள் தவிர்த்த பிற உயிரினங்களின் வாழ்க்கையை எழுதிப்பார்த்திருக்கிறது. அந்த உயிர்களுக்கும் நம்மைப்போன்ற ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புனைவுகளினூடாக வாசிக்கும்போது எல்லையற்ற கற்பனைகளை நமக்குள்ளும் பரவச் செய்கிறது. யதார்த்தம் எப்போதும் யதார்த்தமாக இருப்பதில்லை என்பதையும் அது தனக்குள் மாயத்தை ஒளித்துகொண்டுள்ளது என்பதையும் இவர் புனைவின் பெரும்பரப்பு உருவாக்கிச் செல்கிறது.

இவர் எழுதிய ‘பெயரில்லாத ஊரின் பகல்வேளை’ என்ற சிறுகதை, தோழர்களின் மறைந்து திரியும் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக தம் நிறத்தை இழந்துகொண்டிருக்கும் கிராமத்தையும் அதன் தீவிரத்தோடு எழுதிச் செல்கிறது. கொண்டாட்டங்கள் மிகுந்திருந்த ஒரு கிராமத்தில் இன்று நாற்பத்தேழு பேர் மட்டுமே வசிக்கின்றனர் என்ற தகவல் அயற்சியைத் தருகிறது. அந்தக் கிராமத்தை மக்கள் நம்ப மறுக்கின்றனர்; அது தனக்கு எந்தவிதத்திலும் வாழ்வாதாரத்தைத் தேடித் தராது என்று மக்கள் நகரத்துக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். அந்தக் கிராமத்தின் எச்சமாகக் குட்டிச் சுவர்களும் கழுதைகளும் மட்டுமே இன்று இருக்கின்றன. வெயில் அந்த ஊரை கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருக்கிறது. பகலும் இருட்டும் வெவ்வேறு வாழ்க்கையை நமக்குக் கற்றுத் தருகின்றன. ஒவ்வொருவரும் இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யதார்த்தத்தை நீரோடையாகக் கொண்டிருக்கும் இக்கதைக்குள் தீர்க்கமுடியாத சோகம் அப்பிக் கொண்டிருப்பதையும் அது நம்மையும் பீடித்துக்கொள்வதையும் தவிர்க்கமுடியவில்லை. ‘ரகசிய ஆண்கள்’, ‘கடற்கரை இரயில் நிலையம்’ போன்ற கதைகள் சாதாரணமானவை. ‘காட்டின் உருவம்’ மற்றும் ‘எதிர்பார்த்த முகம்’ ஆகிய இரண்டு கதைகளும் திருட்டை ஒரு குற்றமாகப் பார்க்காமல் அங்கீகாரமாகப் பார்க்கும் கதை. காட்டின் உருவத்தில் வரும் மாட்டுத் திருடனுக்கு குற்றவுணர்ச்சி இல்லையென்றாலும் தன்னைப் பிறர் திருடன் எனும்போது மட்டும் அவமானமாக உணர்கிறான்; கோபம் வருகிறது. இந்த இரண்டு கதைகளும் திருட்டுத் தொழிலுக்கு அங்கீகாரம் கோரும் கதைகள். ‘உப்பு வயல்’ என்ற கதை ஒரு பெண் விபச்சாரியான கதை. ஒரு பெண் இந்தத் தொழிலுக்கு வருவதற்கு எப்போதும்போல ஓர் ஆணே காரணமாக இருக்கிறான் என்பதைச் சொல்லும் இக்கதையில் துயரத்தின் சாம்பல் படிந்தது. எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்து முடிக்கும்போது மகிழ்ச்சியைவிட துயரமே வாசிப்பவர் மீது படிகிறது. இந்தக் கதையும் துயரத்தை அதன் எல்லைவரைச் சென்று சொல்லும் கதைவகைதான். ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற கதை கேலிச்சித்திரம்.

மாயத்தையும் யதார்த்தத்தையும் மாற்றி மாற்றி அடுக்கிய இவர், தொன்மங்களையும் அது சார்ந்த உரையாடல்களையும் மீள்புனைவு செய்துள்ளார். பத்மவிகாரை என்ற சிறுகதை புத்தபிக்குகள் குறித்த புனைவு. ‘பால்ய நதி’ என்ற கதையும் யசன் என்ற புத்த பிக்குவின் வழியாகச் சொல்லப்படுகிறது. முன்னோர்கள்தான் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற தொன்மம் இக்கதையின் வழியாக விவாதிக்கப்படுகிறது. ‘ஆதாமின் பாஷை’, ‘நட்சத்திரங்களோடு சூதாடுபவர்கள்’, ‘மூன்று வான சாஸ்திரிகள்’ போன்ற கதைகள் கிறித்தவ மதம் சார்ந்த புனைவு. இதில் ‘நட்சத்திரங்களோடு சூதாடுபவர்கள்’ என்ற கதை இயேசு பெருமானின் பிறப்பு முதல் சிலுவையில் அறையப்பட்டது வரையிலான புனைவு. இயேசுவை மகனாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஜோசப்பின் மனநிலை மிக நுட்பமாகப் புனைவாக்கப்பட்டுள்ளது. ‘மூன்று வானசாஸ்திரிகள்’ என்ற கதை மறுவாசிப்பு கதை. இயேசுவின் பிறப்பை வான சாஸ்திரிகள் அறிவித்தப் பிறகு அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்பட்டதில் உள்ள குற்றவுணர்வை இக்கதை தூண்டிவிடுகிறது. வான சாஸ்திரிகள் இக்கேள்விக்கு பதில் தெரியாமல் விழிக்கின்றனர்.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள அடுத்த மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று ‘கானகப் புலியின் மனைவி’. பண்டிதன் வேடத்தில் வந்த புலிக்குத் தன் மகளை மணம் முடித்துத் தருகிறான் ஒருவன். அவர்கள் இருவரும் வனத்தின் குகை ஒன்றில் வசிக்கின்றனர். அவள், அவன் புலி என்பதை உணர்கிறாள். அவர்களுக்கு ஒரு புலி ஓர் ஆண் என இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன என விரியும் இக்கதை நினைத்துப் பார்க்கமுடியாத கற்பனையின் விவரிப்புகள் கொண்டவை. எஸ்.ராமகிருஷ்ணன் இக்கதையின் வழியாகத் தன்னுடைய கற்பனையின் உச்சத்தைத் தொடுகிறார். இப்புனைவில் அதிகப்படியான சாத்தியப்பாடுகளை நிகழ்த்திப்பார்க்கிறார். நிலமும் கற்பனையும் அதன் எல்லைகளைத் தொடர்ந்து விரித்துக்கொண்டே செல்வதை இக்கதை நிகழ்த்திக் காட்டுகிறது. மேஜிக் கலைஞனின் சாகசத்தைப் பற்றி எழுதிய ‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ என்ற சிறுகதையும் அசாத்தியமான கற்பனையைக் கொண்டது. பின்நவீனச் சிந்தனை சார்ந்த இக்கதையில் இறந்த காலமும் நிகழ்காலமும் மாறி மாறி தன் மாயத்தைச் செலுத்திக்கொண்டே இருக்கின்றன. இதே காலகட்டத்தில் இவர் எழுதிய மாய யதார்த்தக்கதைகள் ‘அ&கதையாளன் சொன்ன கதை’, ‘காட்சிப் பிழை’, ‘நேற்றிரவு நிம்மதியான தூக்கமிருந்ததா?’ போன்றவையும் உருவச் சிறப்பு மிக்கக் கதைகள். ‘பாடினி’ சங்கச்சித்திரம்; ‘இருகுரல்’ சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பு செய்யும் கதை. இளங்கோவடிகள் நிரப்பத் தவறிய ஒருசில இடைவெளிகளை நிரப்பும் இக்கதை, கண்ணகி குறித்து மட்டும் மௌனம் சாதிக்கிறது. பெண்கள் எப்போதும் காமத்தைப் புரிந்துகொள்ள உதவுவதில்லை; மாறாகக் காமத்தை அந்நேரத்தில் கடந்துசெல்லவே உதவுகிறார்கள் என்ற விவாதத்தை முன்வைக்கும் ‘நாபி’ என்ற கதையும் சென்னை மாநகரத்தின் கழிப்பறை வாயில்களில் அமர்ந்து காசு வசூலிப்பவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை சொல்லும் ‘நூறு கழிப்பறைகள்’ என்ற கதையும் சிறப்பு மிக்கவை. ‘நூறு கழிப்பறைகள்’ என்ற இச்சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளிலேயே வித்தியாசமான மொழிநடையைக் கொண்டது. சென்னைத் தமிழில் எழுதப்பட்ட இக்கதை ஜெயகாந்தன் சிறுகதைகளை நினைவுபடுத்துகிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் மூன்றாவது காலகட்டத்தில் உருவானக் கதைகள், கதையின் மையப்போக்கை சிதைத்து சிதைத்து ஒன்று சேர்ப்பவை; தமிழ்மொழியின் அதிகப்படியான சாத்தியங்களை நிகழ்த்திப் பார்த்தவை; நாம் இதுவரை அறியாத நிலக்காட்சிகளையும் காடுகளிலும் தீவுகளிலும் வசிக்கும் இனக்குழுக்களின் வாழ்க்கையை எழுதியவை; சொற்களின் வழியே புதிய நிலத்தைப் படைப்பவை எனப் பல்வேறு புதிர் விளையாட்டுக்களை இக்காலத்திய இவரின் சிறுகதைகள் நிகழ்த்திக்காட்டின. வாழ்வின் விசித்திரமான சம்பவங்களையும் அதன் போக்குகளையும் கண்டெழுதினார். ‘நகுலன் வீட்டில் யாரும் இல்லை’ என்ற குறுங்கதைகளின் தொகுப்பு தமிழ்ச் சூழலுக்குப் புதிய வடிவம். இவர் கதைகளுக்கே உரிய படிமமும் அங்கதமும் இக்கதைத் தொகுப்பிலும் உள்ளன. ‘நடந்து செல்லும் நீரூற்று’ என்ற தொகுப்பு மறைக்கப்பட்ட கசப்புகளையும் சொல்லமுடியாத தனிமைகளையும் கொண்டவை. ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ என்கிற கதை அசாத்தியமான கற்பனையைக் கொண்டது. கேரளக் காடுகளில் வசித்த முதுவர் இன மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றுவதற்கு 18ஆம் நூற்றாண்டில் வலேசா என்பவன் ஆங்கிலேயரால் அனுப்பப்படுகிறான். அவன் ஏற்கனவே பர்மிய இனக்குழுவினரை மதம் மாற்றியவன்; ஆனால் முதுவர்களை அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு காணாமல் போகிறான். முடிவில்லாத தேடலைக் கொண்ட காடு குறித்த ஆழமானப் புனைவு. ‘தாவரங்களின் உரையாடல்’ கதையிலிருந்து வேறு திசையில் பயணிப்பவை. இனக்குழுக்களின் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் அதன் உன்னதத்தோடு கூறுகிறது.

எப்போதும் தனிமையில் இருக்கும் குளம் தனக்குள் ஆயிரமாயிரம் புனைவுகளைக் கொண்டுள்ளது. சித்தார்த்தன் புத்தனாவதற்கும் உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு குளமும் காரணமாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லும் ‘புத்தன் இறங்காத குளம்’ என்ற கதை தொன்மங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறது. ‘சௌந்தரவல்லியின் மீசை’ என்ற கதை ஒரு பெண்ணின் மனவுலகுக்கும் அப்பாற்பட்ட சித்திரத்தை உருவாக்குபவை; ஒருபெண் எவற்றையெல்லாம் தாண்டி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மீசையை வைத்துச் சொன்ன கதை. இது வெறும் கதை மட்டுமல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் பத்தாவது சிறுகதைத் தொகுதி ‘அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது’. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை கதையைப்போன்று இதுவும் அவரது படைப்பின் உச்சத்தைத் தொடும் கதை. விக்டோரியா மகாராணியின் விருப்பத்திற்காக டக்ளஸ் என்ற வீரன் உண்மையான முத்துக்களைத்தேடி திரிசடைத் தீவுக்குச் செல்கிறான். ஒன்பது வருட காத்திருப்பிற்குப் பிறகு அவன் அந்த முத்துக்களை அடைகிறான். இந்தக் காலகட்டத்தில் அவன் அடைந்த அவமானங்களும் இழப்புகளும் அவனை வெறுமையடையச் செய்கின்றன. அதிகாரத்திற்கெதிராகத் தன் ஒன்பது வருட வாழ்வை வீணடித்து விட்டதை எண்ணி மனப்புழுக்கமடையும் அவன் அந்த முத்துக்களை கடலில் வீசிவிட்டு மீண்டும் அந்தத் தீவிற்கே பயணமாகிறான். இக்கதை அந்தத் தீவில் வசிக்கும் இரண்டு குடும்பங்களின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்னணியாகக் கொண்டது. எழுதப்படாத கதைப்பரப்பை எழுதியுள்ளார். காடு, கடல், இருட்டு மற்றும் வெயில் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் பல்வேறு படிமங்களை உருவாக்குகின்றன. இத்தொகுப்பில் உள்ள ‘மிருகத்தனம்’ மற்றும் ‘குதிரைகள் பேச மறுக்கின்றன’ ஆகிய இரண்டு புனைவுகளும் விலங்குகள் மனிதர்கள் மீது கொண்டிருக்கக் கூடிய அன்பை ஈரத்தின் பிசுபிசுப்போடு சொல்கிறது. ‘இந்தத் தொகுப்பில் உள்ளக் கதைகளை மறுமுறை வாசிக்கும்போது என்னை அறியாமல் கதையுலகில் நாயும் கரப்பான் பூச்சியும், பூனையும் பறவைகளும் சிறு உயிரினங்களும் அதிகம் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுரையில் குறிப்பிடுவதைப்போலத் தன்னுடைய மூன்றாவது காலகட்டக் கதைகளில் மனிதர்களைத் தாண்டி இருக்கக்கூடிய உயினங்களின் மீது அவரது கதைகள் கவனம்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

காலத்தால் புறக்கணிக்கப்பட்டுச் சிதிலமாகிப்போன கிராமங்களின் சோகம் படிந்த வாழ்கையையும் நகரங்களை நோக்கி நகவர்வதினூடாகக் கிராமங்களில் படிந்துபோயுள்ள வெறுமையும் துயரத்தையும் தொடக்கத்தில் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன், தன்னுடைய இரண்டாவது காலகட்டத்தில் கோட்பாடுகள் சார்ந்த சிறுகதைகள் எழுதினார்; இக்கால கட்டத்தில் இவரது கதைகள் சில விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. குறிப்பாக, இவர் உருவாக்கும் சொற்றொடர்கள் கதைக்குத் தேவையான உணர்வுகளைத் தருவதில்லை என்றும் கதைகளில் கவிதைக்கான மொழியைக் கொண்டுவர முயற்சிக்கிறார் என்றும் கூறினர். ஆனால் மூன்றாவது காலகட்டதில் யதார்த்தத்தையும் அதீதத் கற்பனைகளையும் ஒன்றாகச் சேர்த்ததில் கிடைத்த அ&யதார்த்தக் கதைகளை எழுதி அவரைத் தொடர்ந்த வாசகர்களை உற்சாகப்படுத்தினார். எண்பதுகளுக்குப் பிறகு உருவான நவீனத்துவம் சார்ந்த கோட்பாடுகளைப் புனைவுக்குள் கொண்டுவந்து, புனைவை அடுத்த நிலைக்கு நகர்த்தியதில் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளுக்கு விமர்சனங்களைத் தாண்டி பெரும்பங்குண்டு என்பதை அவரது சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக வாசிப்பவர்களால் எளிதில் உணரமுடியும்.

சிறுகதைத் தொகுப்புகள்

வெளியில் ஒருவன், சென்னை புக்ஸ், மு.ப.1989

காட்டின் உருவம், அன்னம், மு.ப.1993

தாவரங்களின் உரையாடல், தாமரைச் செல்வி பதிப்பகம்

வெயிலைக் கொண்டு வாருங்கள், அடையாளம், மு.ப.2007

பால்ய நதி, உயிர்மை, மு.ப.2003

நடந்து செல்லும் நீருற்று, உயிர்மை, மு.ப.2006

பெயரில்லாத ஊரின் பகல்வேளை, வாசிப்போம் சிங்கப்பூர் & உயிர்மை, மு.ப.2007

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, உயிர்மை, மு.ப.2008

நகுலன் வீட்டில் யாருமில்லை, உயிர்மை. மு.ப.2009

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது, உயிர்மை, மு.ப.2011

புத்தனாவது சுலபம், உயிர்மை, மு.ப.2011

(கட்டுரையாளர் இந்துக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர். நவீன இலக்கியத்தில் விரிவான வாசிப்பைத் தொடர்ந்து நிகழ்த்துபவர். தலித் கவிதைகள் குறித்து ஆய்வியல் நிறைஞர் ஆய்வை தமிழ் இலக்கியத் துறையில் முடித்துள்ளார்)

Pin It