அண்ணா நூற்றாண்டு நிறைவு - சிறையாளிகள் விடுவிப்பு
21-05-91 ராஜீவ்காந்தி மறைவு சம்பவத்தில் குற்றம் சாட்டப் பெற்றவர்கள் 41 பேர். இதில் முதன்மைக் குற்ற வாளிகள் எனச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், பெண் புலி அகிலா மூவர் தலைமறைவு எனச் சொல்லி 38 பேரை முன்னிறுத்தி வழக்கைத் தொடுத்தது சிறப்பு புல னாய்வுக் குழு.
இதிலும் சிவராசன், தானு, புகைப்படக் கலைஞர் அரிபாபு, கோடியக்கரை மிராசுதாரர் சண்முகம் உள்ளிட்ட 12 பேர், சம்பவ இடத்திலோ, பின் குற்றத்தாள்கள் தாக்கல் செய்த 20-05-92 ஓராண்டிற்குட்பட்ட இடைக் காலத்திலோ மரணமடைந்து விட எஞ்சிய 26 பேர் மீது வழக்கு நடை பெற்றது.
வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா சிறப்பு நீதி மன்றம் சகட்டு மேனிக்கு 26 பேருக்கும் தூக்கு என அறிவிக்க இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ததன் விளைவில் 26 பேரில் 19 பேரை எந்தவித குற்றச்சாட்டும் அல்லாதவர்கள் என முடிவு செய்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து, நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால் வருக்கும் தூக்கு, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், செயக்குமார் ஆகிய மூவருக்கும் வாழ்நாள் தண்டனை என அறிவித்தது. மேற்கண்ட நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது சரியல்ல எனவும் 7 பேருக்கும் தண்டனைக் குறைப்பு செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதி மன்றத் திலேயே மறு ஆய்வு மனு போட அது பலனின்றி ஏழு பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
நீதித்துறை சார்ந்த முயற்சிகள் இவ்வாறு முற்றுப் பெற்றுவிட்ட நிலை யில் நால்வர் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு மனு செய்து அதுவும் பயனற்றுப் போகிறது. சோனியா காந்தி சொன்னதன் பேரில் நளினுக்கு மட்டும் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு வாழ்நாள் தண் டனையாகக் குறைக்கப்படுகிறது.
இந்நிலையில் மரணதண்ட னையை எதிர் நோக்கி மூவரும், வாழ் நாள் தண்டனையில் நளினி உள்ளிட்ட நால்வரும் ஆக 7 பேரும் கிட்டத்தட்ட கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.
இந்த 18 ஆண்டுகளில் எவ்வ ளவோ சிறப்பு நாட்கள் வந்து எவ் வளவோ சிறையாளிகள் முற்றாக விடு தலை செய்யப்பட்டுள்ளனர். மேற்குறிப் பிட்ட 7 பேரும் 10 ஆண்டுகள் சிறை வாசம் முடித்த நிலையில் இந்திய சுதந்திரத்தின் 60வது ஆண்டு நிறைவு வந்தது. அப்போது மூவருடைய மரண தண்டனையையும் ரத்து செய்து வாழ் நாள் தண்டனையாக மாற்றி 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை.
அதன்பிறகு தற்போது அண்ணா நூற்றாண்டு விழா வந்தது. இப்போ தாவது இவர்கள் அனைவரையும் விடு தலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால் அரசு விடுதலை செய்யவில்லை.
இடையில் இந்த 7 பேரும் தங் களுக்கத் தண்டனைக் குறைப்பு செய்து தங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்திற்கு மனுச் செய்ய நீதிமன்றம் இதற்கு அரசிடம் விளக்கம் கேட்க, அரசு சிறை ஆலோசனைக் குழுவிடம் கேட்டு பதில் அளிப்பதாக தாமதம் செய்து வருகிறது.
இடையில் இந்தக் குழுவும் முறை யாய் இயங்கவில்லை என நளினி நீதிமன்றத்தில் முறையிட நீதிமன்றம் வேறு குழுவை நியமனம் செய்து இவர் களது கோரிக்கைகளைப் பரிசீலிக்கச் சொல்லி ஓராண்டு கடந்த நிலையிலும் இதுவரை குழு அமைக்கப்படவில்லை.
குடும்பத்தார்க்கு அமைச்சர் பதவிகள் பெற்றுத் தருவதிலும், அமைச்சர்களுக்கு உரிய துறைகளைப் பெற்று தருவதிலும் முனைப்புக் காட்டும் தமிழக முதல்வர் கருணாநிதி இதில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கணக்காகக் கழன்று கொள்ளப் பார்க்கிறார்.
இந்த நிலையில் கருணாநிதியின் இப்போக்கைக் கண்டித்தும் தங்களை விடுதலை செய்ய வேறு ‘சிறை ஆலோசனைக் குழு’வை நியமிக்கக் கோரியும், நளினி பட்டினிப் போராட்டம் மேற்கொண்டார். தினம் தினம் சிறையில் இப்படி நடைபிணமாய் வாழ்வதை விட, நான் ஒரேயடியாக செத்துத் தொலைந்து போகிறேன், என்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராபர்ட் பயசும் சிறையிலேயே பட்டினிப் போராட்டம் மேற்கொள்ள, அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்ய தற்போது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாம் கோருவது,
1. குற்றச் செயல்களுக்கு தண்டனை அளிப்பதன் நோக்கம் அவர்களைப் பழி வாங்குவதோ, வஞ்சம் தீர்ப்பதோ அல்ல. மாறாக, அவர்களும் திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே. இதுவே தண்டனையின் நோக்கம் என பல்வேறு உலக அமைப் புகளும் மனித நல ஆர்வலர்களும், ஆய் வாளர்களும் கூறியிருக்க இன்னமும் இந்த 7 பேரையும் பழி வாங்கும் நோக்கில் மூவரை மரணத்தின் வாயி லிலும், நால்வரை வாழ்நாள் நெடு கிலும் உள்ளே வைத்திருப்பது என்பது சரியல்ல.
2. கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு 11 ஆண்டுகளாக சிறையில் வாடிய 11 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக் கிறார்கள். மற்றும் 7 ஆண்டுகள் சிறை வாசம் முடித்த சிலரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களை விடுதலை செய்தது தவறு என்று நாம் சொல்ல வில்லை. ஆனால் 11 ஆண்டு கள், 7 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த இவர்களையே விடுதலை செய்யும் போது 18 ஆண்டுகளாக சிறையில் வாடும் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய மறுப்பது, விடுதலை செய்ய முயற்சிக்காதது ஏன் என்பதுதான் கேள்வி.
3. உள்ளே இருக்கும் 7 பேரும் ஏதோ சாதாரண கிரிமினல் குற்ற வாளிகள் அல்லர். சமூகத்தில் நல்ல தகு நிலையோடு கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். நல்ல படிப்பாளிகள். நளினியும், முருகனும் சிறையில் இருந்த படி இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் படித்து எம்.சி.ஏ. பட்டத் தேர்வை எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற் றிருக்கிறார்கள். இன்னும் சில நாள் களில் பட்டம் பெற இருக்கிறார்கள். சாந்தன் சிறுகதை எழுத்தாளர், படைப் பாளி. பேரறிவாளன் பட்டதாரி. இப்படியே ஒவ்வொருவரும் அவர வர்க்கே உரிய தனிச் சிறப்பு பெற்றவர் கள். இவர்கள் படித்தும் பட்டம் பெற் றதும் பல்கலைக் கழகங்கள் இவர் களுக்கு பட்டமளித்ததும் இவர்கள் சிறைக்குள்ளே கிடந்து செத்து மடியவா? வதைந்து அழியவா? எல்லாரையும் போல இயல்பு வாழ்க்கை வாழ தங் களுக்கும் வாய்க்கும் என்றுதானே இவர்கள் சிறையிலிருந்து நம்பிக்கை யாய் படித்தார்கள். பட்டம் பெற்றார் கள். இவர்களது நம்பிக்கையை பாழாக் கலாமா, பழி தீர்க்க முயலலாமா என் பதை அரசு நிர்வாகமும் சம்மந்தப் பட்டவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்போதுகூட ஒன்றும் சிக்க லில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி நினைத்தால் ஒரே நாளில் இதைச் செய்யலாம். தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரைத் தால் போதும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 161இன்படி ஆளுநர் இவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு தர லாம். இதில் எந்தச் சட்டச் சிக்கலும் கிடையாது. எந்தத் தடையும் இல்லை. செய்ய மனம்தான் வேண்டும். அந்த மனம் கருணாநிதிக்கு வந்தால் போதும். வேறு யாரும் இதைத் தடுக்க முடியாது. தூற்றுவோர், பழி சுமத்துவோர் சிலர் எப்போதும் அரற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆகவே அவற்றை யெல்லாம் பொருட் படுத்தாமல் தமிழக முதல்வர் கருணாநிதி இதைப் பரிசீலிக்க வேண்டும். உடனடியாக இவர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும்.