சோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தி மனைவியுமான சோனியாவுக்கு அக்டோபர் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் சிறைப் படுத்தப்பட்டுள்ளோரின் தண்டனை குறைப்புக்கு பரந்த உள்ளத்தோடு, சோனியா தனது சம்மத்தை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுள்ளார். அவரது கடிதத்தின் விவரம்:

“2014ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, ராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்க தமிழ்நாடு அரசு முன் வந்தபோது மத்திய அரசு எதிர்த்தது. அந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நீங்களும் ராகுல் காந்தியும், வாய்ப்பிருந்தால் பிரியங்காவும் குடியரசுத் தலைவருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்று உங்கள் சம்மதத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதுவீர்களே யானால், மத்திய அரசு, தண்டனைக் குறைப்புக்கு முன் வரக் கூடும். இவர்கள் தங்கள் வாழ்க்கையின் நீண்ட காலத்தை சிறையிலேயே கழித்து விட்டார்கள்.

நிச்சயமாக இது உங்களின் மனிதாபிமான செயலாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் கைதிகளின் தண்டனைக் குறைப்புக்கு உங்களால் மட்டுமே உதவிட முடியும். இந்த மூன்று பேருக்கும் தண்டனை விதித்த நீதிபதி என்ற முறையில், இந்த சூழலில், நான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவதன் வழியாக நீங்கள் உங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்த முடியும் என்று உணருகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் கே.டி. தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

சோனியாவுக்கு கடிதம் எழுதியதை புதுடில்லி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளரிடம் உறுதிப் படுத்திய முன்னாள் நீதிபதி தண்டிக்கப்பட்டவர் களுக்கு கருணை காட்ட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றார். சி.பி.அய். நடத்திய விசாரணை யில் கடுமையான ‘ஓட்டைகள்’ இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

மகாத்மா காந்தி கொலை வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யப்பட்டதை நீதிபதி கே.டி. தாமஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் இறுதியாக -

“இந்தக் கைதிகளுக்கு மனிதநேயம் காட்டினால் எல்லாம் வல்ல இறைவன் மகிழ்ச்சியடைவார் என்றே நான் நம்புகிறேன். இந்தத் தாழ்மையான வேண்டுகோளை தங்களிடம் சமர்ப்பித்திருப்பது தவறாக இருக்குமானால், இறைவன் என்னை மன்னிக்கட்டும்” - என்ற உருக்கமான வரிகளுடன் கடிதத்தை முடித்துள்ளார் நீதிபதி கே.டி.தாமஸ்.

“செல்வாக்கு மிக்க தலைவரின் கொலை என்பதற்காகவே நீதிமன்றம் மிகக் கடுமையாக தண்டித்திருக்கிறதோ என்று பல முறை நானே சிந்தித்ததுண்டு.

ஒருவேளை இதுவே இப்படித்தான் செல்வாக்குள்ள தலைவர் தொடர்பில்லாத வழக்காக இருந்திருக்கு மானால், தீர்ப்பு இருந்திருக்குமா? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை” என்று செய்தியாளரிடம் நீதிபதி கூறினார்.

“இவர்கள் ராஜிவ் கொலையாளிகளாகவே கருதப் படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும்கூட என்னைத் தவறாக கருதிடவேண்டாம்; நான் இந்த சூழ்நிலையில்  சோனியா அவர்களிடம் கருணை காட்ட வேண்டுகிறேன். இதை எனது கடுமையான கருத்தாக கருதி விடாதீர்கள்” என்று கடிதத்தில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உங்களிடமிருக்கும் மதிப்பைப் போலவே பண்டிட் ஜவகர்லால் நேருவிடமும் எங்களுக்கு மதிப்பு உண்டு. பண்டிட் நேரு இறந்த அடுத்த 5 மாதங்களில் 1964இல் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே 14 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டார் என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

பேரறிவாளன் வழக்கில் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. வழமையாக சாட்சிகள் சட்டப்படி ஒருவரது வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக ஏற்றுக் கொள்வதில்லை. அந்த வாக்குமூலத்தை நிரூபிப்பதற்கான சாட்சியங்களும் வேண்டும்.

இந்த வழக்கில் வாக்குமூலத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு தண்டிக்க முடியுமா என்ற கோணத்தில் வழக்கு நடந்தபோது நாங்கள் தீவிரமாக விவாதித் தோம். தடா சட்டம் அப்படிக் கூறுவதை இந்த வழக்கில் ஏற்பது சரியாக இருக்காது என்று நான் கூறினேன். ஏனைய இரண்டு நீதிபதிகளையும் எனது இல்லத்துக்கு அழைத்து பலமுறை விவாதித்தேன். அவர்கள் இருவரும் தடா சட்டப்படி ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். எனவே மெஜாரிட்டி நீதிபதிகளின் கருத்தை நான் ஏற்க வேண்டியவன் ஆனேன்.

வழக்கு விசாரணையின்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கடும் ஓட்டைகள் இருப்பதை அறிந்தேன். விசாரணையின்போதே கடுமையாகக் கேட்டேன். குறிப்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிட மிருந்து ரூ.40 இலட்சம் இந்தியப் பணம் பறிமுதல் செய்ததாக சி.பி.அய். கூறியபோது நான் அரசு வழக்கறிஞர் அல்டாஃப் அகமதுவிடம் கேட்டேன்: “சிறீலங்கா கரன்சியை கைப்பற்றியதாக நீங்கள் கூறியதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியப் பணம் ரூ.40 இலட்சத்தைக் கைப்பற்றியதாகக் கூறுகிறீர்கள். அக்காலகட்டத்தில் இது மிகப் பெரிய தொகை. அவ்வளவு பெரிய தொகை இவர்களுக்கு யாரிடமிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தீர்களா? இவர்களுக்குப் பின்னால் சக்தி வாய்ந்த பெரும் புள்ளிகள் இருந்திருக்க வேண்டுமே அதை ஏன் ஆராயவில்லை? என்று கேட்டேன். புலனாய்வுக் குழு தலைவர் டி.ஆர். கார்த்திகேயனிடம் கலந்து பேசித் தான் பதில் கூற முடியும்; அதற்கு அவகாசம் தேவை என்றார். ஆனால் அடுத்த நாளே அரசு வழக்கறிஞர் புலனாய்வுப் பிரிவினரால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார்.

நான் இந்த பதிலில் அதிர்ச்சியானேன். புலன் விசாரணையின் இந்த ஓட்டைகளை சக நீதிபதிகளிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் தீர்ப்பில் புலனாய்வு அமைப்பை நாம் குறை கூறக் கூடாது. அவர்கள் இந்த வழக்கில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றனர். சி.பி.அய்.யை தீர்ப்பில் விமர்சிக்க வேண்டாம் என்று மூன்று நீதிபதிகளும் ஒரு முடிவுக்கு வந்தோம். தீர்ப்பை தனித்தனியாக எழுதி பிறகு தீர்ப்புகளை பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொருவரும் எழுதிய தனித்தனி தீர்ப்புகளை படித்தோம். தலைமை நீதிபதி என்ற முறையில் நான் தீர்ப்பை முதலில் வாசித்தேன். அடுத்து வாசித்த நீதிபதி வாத்வாவின் தீர்ப்பில் சி.பி.அய். அதிகாரி கார்த்திகேயனை மனம் திறந்து பாராட்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். “சி.பி.அய். விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு” என்பதே பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாகியது. அமர்வில் நான் மூத்த நீதிபதி. நீதிபதி வாத்வா தீர்ப்பில் செய்த கடைசி நேர மாற்றங்களை என்னிடம் தெரிவித்திருந்தால் நான் என்னுடைய தீர்ப்பில் சி.பி.அய். குறித்த எனது குறைகளை பதிவு செய்திருக்க முடியும்” என்றார் நீதிபதி கே.டி. தாமஸ்

கல்கத்தாவில் உள்ள நீதிபதி வாத்வாவிடம் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

தொடர்ந்து நீதிபதி கே.டி.தாமஸ் கூறுகையில்: “தீர்ப்புக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் ‘தி வீக்’ வார ஏட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றைப் பார்த்தேன். அதில், “எங்களுக்கு அந்த ரூ.40 இலட்சம் இந்தியப் பணத்தைத் தந்தவர் சந்திராசாமி என்று விசாரணை அதிகாரிகளிடம் கூறினோம். அந்த அதிகாரி, ‘சந்திரசாமி ஒரு கடவுள்; அவரைப் பற்றி எதுவும் கூறக் கூடாது’ என்று எங்களை எச்சரித்தார் என்று கூறியிருந்தார். அப்போதுதான் சந்திராசாமியை விசாரிக்காமல் புலனாய்வில் பெரும் தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்” - என்று நீதிபதி கே.டி. தாமஸ் கூறினார்.

ராஜிவ் கொலை வழக்கை விசாரித்து தீர்ப்பு எழுதிய தலைமை நீதிபதியின் இந்தக் கடிதமும் ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.