தோழர் விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டு! நம்ப முடியவில்லை! ஆனால், அதுதான் உண்மை! ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று குற்றங்கள் : 1. சதி செய்தல், 2. மோசடி, 3. ஊழல்.

விஜயன் ஒரு சாதாரண மனிதரல்லர். மார்க்சிஸ்டு கட்சியின் கேரள மாநிலச் செயலாளர்; பொலிட்பீரோ உறுப்பினர்; பல்லாண்டு காலம் பயன் கருதாமல் பொதுத் தொண்டாற்றி - படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று வளர்ந்தவர். ஒரு புரட்சிக் கட்சியின் பொலிட பீரோ உறுப்பினர் மீது ஊழல் வழக்குத் தொடுக்கப்படுவது இதுவே முதல் முறை. ஊழல் சில லட்சங்கள் அல்ல; நூறு கோடி அளவில்!

ஏற்கெனவே, மக்கள் சனநாயகக் கட்சி எனும் மதவாதக் கட்சியுடன் அப்துல் நாசர் மதானியுடன் - கூட்டணி வைத்துக் கொண்டதால் ஒரு அவமானத்தை சுமக்கும் மார்க்சிஸ்டு கட்சிக்கு, இந்த ஊழல் பழி இன்னொரு அவமானமாகும்.

பிரச்சினைதான் என்ன?

1995ஆம் ஆண்டு, காங்கிரசு தலைமையிலான ஐக்கிய சனநாயக முன்னணி அரசு ஆட்சியில் இருந்தது. ஏ.கே. அந் தோணி முதலமைச்சசர். மின் பற்றாக் குறையைப் போக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது. மூன்று நீர்மின் நிலையங்களைப் புதுப்பிப்பது என்றும் நவீனப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இடுக்கி மாவட்டத் திலுள்ள பள்ளிவாசல், செங்குளம், பன்னியாறு நீர்மின் நிலையங்கள் தாம் அம்மூன்றும் - இதற்காக கேரள மின் வாரியம் கனடா நாட்டிலுள்ள எஸ்.என்.சி. லாவலின் கம்பெனியுடன் 374.5 கோடி ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது.

1996ஆம் ஆண்டு ஆட்சி மாறியது. மார்க்சிஸ்டு தலைமையிலான இடது சனயாக முன்னணி ஆட்சிக்கு வந்தது. ஈ.கே. நாயனார் முதலமைச்சர் அந்த ஆண்டில் மின்நிலையங்களைப் புதுப் பிக்கவும் நவீனப் படுத்தவும் தேவை யான இயந்திரங்களையும் தொழில் நுட்ப சேவையையும் வழங்குவதற் கான ஒப்பந்தம் லாவலின் கம்பெனி யுடன் கையெழுத்தாயிற்று. அப்போது, மின்துறை அமைச்சர் தோழர். பினாரய் விஜயனார் ஆவார்.

ஒன்பது ஆண்டுகள் கழித்து 2005ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் பற்றித் தணிக்கை செய்யப்பட்டது. இந்திய கன்ட்ரோலர் மற்றும் பொதுத் தணிக்கை அலுவலர் தனது அறிக்கை யில் 1996- ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று சுட்டிக் காட்டியுள்ளார். அறிக்கை வெளியானது 2006ல் அவை :

1. எஸ்.என்.சி. - லாவலின் ஒரு கம்பெனியே அல்ல; ஒரு இடைத்தாகுநிறுவனம் தான். அதனிடம் இயந்திரங் களோ தொழில் நுட்பமோ கிடையாது.

2. இதுவரை வழங்கப்பட்டவை யாவும் பிறகம்பெனியிடம் வாங்கி வழங்கப்பட்டவையாகும். அதுவும் மிக அதிக விலையில்.

3. மின் உற்பத்தியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அனைத்துச் செலவும் வீண்.

இவற்றைப் பற்றி சி.பி.ஐ. விசா ரணை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தனர் சி.பி.ஐ. ஏற்க மறுத்து விட்டது. பத்திரிகையாளர் டி.பி. நந்தக்குமார் இது குறித்து உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுத்தார். சி.பி.ஐ. விசாரிக்க வேண் டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் 2007ஆம் ஆண்டு விசாரணைத் தொடங்கியது. ஈராண்டு புலன்விசாரணை செய்து சனவரி 2009ல் சி.பி.ஐ. உயர்நீதி மன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. அதில் முறை கேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப் பட்டது. பதினொரு குற்றவாளிகளில் விஜயன் ஒன்பதாவது குற்றவாளி ஆவார்.

விஜயனின் பாத்திரம்

சி.பி.ஐ. கண்டுபிடித்த குற்றங்கள் :

1. மதிப்பை விடக்கூடுதலாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. நிதித் துறைக்கு இதனால் 85 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

2. இந்த மோசடி ஒப்பந்தத்தால் இதுவரை அரசுக்கு 300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

3. செலவாயிற்றே தவிர மூன்று மின்நிலையங்களிலும் சிறிதும் முன் னேற்றம் ஏற்படவில்லை.

4. அதிநவீனப் புற்றுநோய் மருத் துவமனை ஒன்றை 90 கோடி ரூபாய் செலவில் நன்கொடையாகக் கட்டித்தர லாவலின்கம்பெனி வாக்குறுதி யளித்ததில் இதுவரை 12 கோடிதான் வரப் பெற்றருக்கிறது; மீதி 86 கோடி என்ன ஆயிற்று என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

மேற்கண்ட ஊழல்கள் விஜய னுக்குத் தெரியாமலோ அவர் சம்மந்தம் இல்லாமலோ நடந்திருக்க முடியா தல்லவா. வெளிப்படையான குற்றச் சாட்டு என்னவென்றால், லாவலின் கம்பெனி புற்றுநோய் மருத்துவ மனையை கட்டித்தர சம்மதித்தது ஏன்? 98 கோடி பணம் யாருடையது? எங் கிருந்து வந்தது?

இது எதை நினைவூட்டுகிறது? இருபுடவைக்கு ஒன்று இனாம், இரு சட்டைக்கு ஒன்று இனாம் என்ற விற்பனை மோசடிதான் நினைவுக்கு வருகிறது. மருத்துவமனைக்கும் நீர்மின திட்டதிற்கும் என்ன சம்மந்தம்? விஜயன் ஏன் இதை அனுமதித்தார்? இதில் ஒரு இரசியம் புதைந்துள்ளது!

மருத்துவமனை அமையவுள்ளது கன்னூர் மாவட்டத்தில் உள்ள திருச்சூர் நகரில். இடுக்கி மாவட்ட நீர்மின் திட்டத்திற்கு கொசுரு நன்கொடை, கன்னூர் மாவட்டம் திருச்சூருக்கு அளிக்கப்படுவது ஏன்? திருச்சூர் தான் விஜயனின் பிறந்த ஊர்! விஜயன் இதில் சம்மந்தப்படாமல் இருக்கமுடியுமா, என்ன?

லாவலின்கம்பெனி மேற்படி ஒப்பந்தத்தில் சம்பாதித்த லாபத்தின் ஒருபகுதியைத்தானே மருத்துவமனை நன்கொடைக்கு ஒதுக்கியிருக்க வேண் டும். லாபத்தின் ஒரு பகுதியே 98 கோடி எனில் மொத்த லாபம் எவ்வளவு இருக்கும். கேரள மின்வாரிய அந் நாளைய செயலர் கே. மோகனச் சந்திரன் (முதல் குற்றவாளி) அந்நாள் இணைச் செயலர் எ. பிரான்சிஸ் (பத்தாவது குற்றவாளி) போன்ற அதிகாரிகளுக்கு லாவலின்கம்பெனி ஏதும் கையூட்டு கொடுத்திருக்கக் கூடும். இதெல்லாம் போக, கம்பெனிக்கு லாபம் வேறு தனி. மொத்தலாபம் ரூ. 250 கோடி இருக்க லாம் எனக் கொள்வோம்.

ஒப்பந்தத் தொகை 374.5 கோடி யில், லாபம் மட்டுமே 250 கோடி எனில், ஒப்பந்தம் எப்படி நிறைவேறி யிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். எல்லாம் கேரள மக்களின் வியர்வை அல்லவா? இதில் இதுவரை வரவு 12 கோடிதான். மீதி 86 கோடி என்ன ஆயிற்று? வாக்குறுதி நிறை வேற்றப் படவில்லையா? எந்த ஆதார மும் இல்லை என்கிறது சி.பி.ஐ. தனிநபர் பைக்குப் போயிருக்குமா? அல்லது ஸ்விஸ் வங்கிக்குப் போயிருக் குமா? அந்நாள் மின் வாரியமும் மின் துறை அமைச்சரும் தாம் பதில் சொல்ல வேண்டும்.

விஜயன் மீது இ.பி. கோ. பிரிவு 120 (பி) (கிரிமினல்சதி) மற்றும் பிரிவு 420 (மோசடி) படியும், ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13 (1) (9) படியும், சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் என்பதால் வழக்குத் தொடுக்க கவர்னர் அனுமதி கேட்டு 2009 சனவரியில் சமர்பித்தது.

பிறகு....

ஆளுநர் ஆர்.எஸ். கவாய், அமைச்ச ரவையைக் கருத்து கேட்டார். அமைச்சரவை அரசு வழக்கறிஞர் சி.பி. சுதாகரப் பிரசாத்திடம் சட்ட ஆலோ சனை கேட்டது. அதன்படி, கவர்னர் வேண்டுகோளை அமைச்சரவை நிரா கரித்தது.

இதற்கிடையே, முடிவை மூன்று மாதத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், அரசியல் நிர்பந்தங்களுக்குப் பணியாமல் அமைச்சரவையும் கவர் னரும் சுதந்திரமாக மூளையைச் செலுத்தி முடிவு எடுக்க வேண்டும் எனவும், உயர்நீதி மன்றம் வற்புறுத்தியது.

மாநிலத்திலும் டெல்லியிலும் உள்ள வல்லுநர்களைக் கலந்தாலோ சித்தப்பின் கவர்னர் சி.பி.ஐ.க்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஜூன் 7-2009 அன்று (ஞாயிற்றுக்கிழமை) கவர்னர் தன்சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்தினார். அவரது அறிக்கை 148 பக்கம் கொண்டது.

அடுத்த நாளே எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டது. கேரளாவில் கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அனைத்தை யும் இடது சனநாய முன்னணி அரசு ரத்து செய்தது. இ.ச.மு. அமைப்பாளர் வைக்கம் விஸ்வனும் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ் ணனும் (இவரும் பொலிட் பீரோ உறுப்பினர்) காங்கிரஸ் நிர்பந்தத்திற்குக் கவர்னர் பணிந்து விட்டார் என்றும் கனல் கக்கினர். மார்க்சிஸ்டு கட்சி ஊழி யர்கள் கவர்னர் படத்தைக் கொளுத் தினார்கள். வன்முறை வெறியாட்டம், தீவைத்தல் போன்றவை நிகழ்ந்தன.

கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன், “ஆளுநர் முடிவில் வியப்பொன்றும் இல்லை. இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அவற்றை உச்சநீதிமன்றமும் அங்கீகரித் திருக்கிறதுஎன்றும் விஜயன் நீதி விசாரணையை எதிர்கொள்வதே விஜய னுக்கு நல்லதுஎன்றும் வெளிப்படை யாகவே கருத்து கூறு கிறார். பொலிட் பீரோ காங்கிரஸ் செல்வாக்கு செலுத்தி விட்டதுஎன்கிறது. விஜயனைக் காப்பாற்றவே மார்க்சிஸ்டு கட்சி முயல்கிறது.

விஜயனின் தலைக்குமேல் இரு கத்திகள்; ஒன்று, நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி; இரண்டு ஊழல் விசாரணை.

சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து விஜயனுக்கு அழைப்பாணை (சம்மன்) ஜுன் - 22 அன்று அனுப்பப்பட்டுவிட்டது. பொறுத்திருந்து பார்ப்போம்!

ஊழலிலும் சமத்துவம் 

சட்டத்தின்முன், நீதியின் முன் அனைவரும் சமம் என்று சொல்லப்பட்டபோதிலும் நடப்பு அப்படியொன்றும் சமத்துவமாக இருந்து வருவதில்லை. மாறாக, சில ஆயிரம் கையூட்டு வாங்கி மாட்டும் சாதாரண ஊழியருக்கும், சில லட்சங்கள் கப்பம் பெற்று சுகிக்கும் அதிகாரிகளுக்கும் பல கோடிகளைச் சுருட்டும் அரசியல் வாதிகளுக்கும் அவரவர் செல்வாக்கு நிலைக்கேற்பவே செயல்பட்டு வருகிறது. 

தில்லி ஃபோபர்ஸ் பீரங்கி ஊழலோ, உ.பி. மாயாவதி ஊழலோ, தமிழக அதிமுக, திமுக ஆட்சிகால ஊழலோ, சமீபத்தைய ஸ்பெக்ட்ரம் ஊழலோ, எல்லாம் கோடிக்கணக்கில் நிகழ்ந்தவை என்றாலும், இதுவரை யாரும் சிக்கியதாகவோ, தண்டனை பெற்றதாகவோ வரலாறு இல்லை. மாறாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு நீர்த்துப் போகச் செய்யப்பட்ட்தே நிகழ்ந்திருக்கிறது.  

இந்த வரிசையில் இன்னொன்றாகச் சேர்ந்திருப்பதுதான் தோழர் விசயனின் புரட்சிகர ஊழல். ஊழல் என்று வந்துவிட்டால் அதில் முதலாளித்துவ ஊழல் என்ன, புரட்சிகர ஊழல் என்ன, எல்லாவற்றுக்கும் நடைமுறை ஒன்றுதானே. 

 

Pin It