mk stalin and pinarayi vijayan

அக்டோபர் 1917 ரஷ்யப் புரட்சிக்கு பின் உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகள் பரவத் தொடங்கியது. சரியாக அதே தருணத்தில் தமிழகத்தில் திராவிடப் புரட்சி ஒன்று உருவானது. திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி உருவான ஆண்டு அதுதான். பின்னர் 1926 இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அந்த நேரத்தில் நீதிக்கட்சி மதராஸ் மாகாண ஆளுங்கட்சியாக இருந்தது. மாகாண மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல முற்போக்குத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி முடித்திருந்தது நீதிக்கட்சி அமைச்சரவை.

இன்று இந்தியாவில் முதுபெரும் இயக்கங்களாக, நூறாண்டு கால இயக்க சித்தாந்தங்களாகப் பொதுவுடைமை மற்றும் திராவிடச் சித்தாந்தங்கள் திகழ்கின்றன. அதேபோல சாமானிய மக்களுக்கான தேவைகளை அறிந்து அதை வெற்றிகரமாக அவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் ஓரணியில் உள்ளன.

கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் முதலில் வெளியிட்டது திராவிட இயக்கம், வெளியிட்டவர் தந்தை பெரியார். மே 1 தொழிலாளர் தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தது திராவிட முன்னேற்றக் கழகம். தோழர்கள் என்று விளிப்பதைக் கூட இரு இயக்கங்களும் ஒன்றாகவே கருதின.

பொதுவுடைமைத் தோழர்கள் நினைப்பதைத் திராவிட இயக்கத் தோழர்கள் செயல்பாட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள். திராவிட இயக்கத் தோழர்களுக்கு உற்ற துணையாக கம்யூனிஸ்ட் தோழர்கள் இருக்கிறார்கள். இரட்டைத் தண்டவாளங்கள் என்றாலும் பயணமும், சேருமிடமும் ஒன்றுதான்.

சில தருணங்களில் எதிரெதிர் பக்கங்களில் நின்றாலும்கூட, இடதுசாரிகள் என்ற ஒற்றைப் புள்ளியில், கருத்தியல் ரீதியாக, பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றன.

ஃபாசிசம், மதவடிவம் பூண்டு மக்களை வதைத்து, பிரித்தாளும் இந்தச் சூழ்நிலையில் அதை முழுவீச்சில் எதிர்கொள்ள, இடதுசாரி இயக்கங்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டிய நேரமிது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவில் அகில இந்திய மாநாட்டைக் கண்ணூரில் கூட்டி இந்திய ஒன்றியத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

 மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநாட்டில், ஏப்ரல் 16 அன்று நடைபெற்ற மாநில உரிமைகள் கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களோடு, தமிழகத்தின் பிரதிநிதியாகத் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்றார்.

அப்போது பெரியார் வைக்கம் சென்றது, கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது குறித்துப் பேசியதோடு திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் உறவு என்பது 80 ஆண்டுகள் வரலாறு கொண்டது என்பதை எடுத்துரைத்தார்.

இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். தென்மாநிலங்களின் குழு ஒன்றை உருவாக்கி மாநிலங்களை ஒருங்கிணைத்துப் போராட வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது பண்பாடு. ஆனால், இந்த வேற்றுமையை அழித்து ஒற்றைத் தன்மையை உருவாக்கச் சிலர் நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் என்று உருவாக்க நினைக்கிறார்கள். பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மாநில உரிமையை மீட்டெடுக்க ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று விளக்கிப் பேசினார் தி.மு.கழகத் தலைவர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பேச்சென்பது ஆதிக்கபுரிக்கு அபாயச் சங்கு ஊதுவது போல இருந்தது. ஒன்றிய அரசு வீழ்வதற்கான தேவையை உணர்த்தியது. துண்டு துண்டாக சிதறிகிடக்கும் எதிர்கட்சிகளுக்கு ஒன்று கூடுவதற்கான சமிக்ஞையைக் காட்டியது.

 இந்த சூழ்நிலையில் மீதமுள்ள மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்கவும், பறிபோக உள்ள உரிமைகளைப் பாதுகாக்கவும், பறிபோன கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும், எதிர்வரும் 2024 தேர்தலை எதிர்கொள்ளவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராய் விஜயனும் இந்த மாநாட்டில் கரம் உயர்த்தி உள்ளார்கள்.

கருப்பையும், சிவப்பையும் இணைகிறது, காவியின் நிறத்தைத் கலைக்கிறது - கண்ணூர் மாநாடு!

- தமிழ் பிரபு

Pin It