கடந்த 10 ஆண்டுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்திருக்கிறது. பணமோசடியின் வரையறை மாற்றப்பட்டது. பிரிவு 19-இன் கீழ் அமலாக்கத்துறைக்கு கைது செய்வதற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு பிறகு சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடை சட்டம் ஆளும் கட்சிக்கு வேண்டாத எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் மீது அதிகம் பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சட்டத்தின் பிரிவு 45ன் கீழ் ஜாமீன் பெறுவதற்கான இரட்டை நிபந்தனைகள் என்பது பொருந்தக் கூடியதா என்று தெரிவிக்க வேண்டும் என்று ஜலந்தரை சேர்ந்த தர்சம் லால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “ஜாமீன் பெறுவதற்கு சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் பிரிவு 45ன் இரட்டை நிபந்தனைகள் பொருந்தாது. இதில் சம்மனைப் பின்பற்றி நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்குத் தொடர்பான ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம் ஆராய்ந்து அது விசாரணைக்கு உகந்தது என்று எடுத்துக் கொண்ட பிறகு பிரிவு 19-இன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளியை அமலாக்கத் துறை கைது செய்ய முடியாது. எனவே தான் சட்ட விதி 45ன் இரட்டை நிபந்தனைகள் பொருந்தாது என்பது மட்டுமில்லாமல் தேவையில்லாத ஒன்றாகும். இதில் ஒருவேளை குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத் துறை காவலில் வைக்க விரும்பினால் அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் எந்த ஒரு அதிகாரத்தையும் அமலாக்கத் துறை மேற்கொள்ள முடியாது.

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் விதி 44 (1) (பி)யின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட புகார் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே கைது செய்யப்படாமல் இருந்தால், விசாரணைக்குத்தான் அவர் வரவழைக்கப்படுவாரே தவிர அது கைது நடவடிக்கையாக இருக்காது. குற்றம் சாட்டப்பட்ட நபர் அதனை செய்திருப்பதற்கான வாய்ப்பில்லை என்றும், ஜாமீனில் வெளி வந்தால் அவர் மேலும் குற்றங்களை செய்ய மாட்டார் என்றும் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே சிறப்பு விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

ஆனால் ஒருவர் நீதிமன்றத்தின் சம்மன்களுக்கு ஆஜராகி இருந்தால் சட்ட விதி 45ன் இரட்டை நிபந்தனைகளை கருத்தில் கொள்ளத் தேவையில்லை. மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுகள் எதுவும் இல்லாமல், அமலாக்கத் துறை யாரையும் கைது செய்யக் கூடாது. அதேபோன்று சம்மன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தால், அவர் காவலில் இருப்பதாகக் கருத முடியாது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 88-வது பிரிவின் படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதற்கான அறிக்கைகளை வழங்க சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தலாம்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.