கர்நாடக மாநில அரசு ஆணவப் படுகொலை தடுப்புச்சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்து இருக்கிறது; மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க முடிவாகும். இந்த சட்டத்திற்கு "இவர் நம்மவர்'' என்ற மிக அழகான பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண் பெண்ணிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்டு பிறகு ஜாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமை என்று இந்தச் சட்டம் கூறுகிறது.

குடும்ப அழுத்தம் அல்லது ஜாதி சார்ந்த காரணங்களைக் காட்டி திருமணம் செய்ய மறுக்கும் நபருக்கு 5 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ வழங்குவதற்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது. தமிழ்நாடு அரசும் இதேபோன்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்! சமூகத்தில் ஜாதி ஒரு புற்றுநோயாக பரவி நிற்கிறது. இதை அழிப்பதற்கு சட்டங்களும் தேவை; அத்துடன் சமூகத்தில் ஜாதி எதிர்ப்புக்கான இயக்கங்கள் நடத்துவது இதைவிட முக்கியமானது! எந்த ஒரு அரசியல் கட்சியும் ஜாதி எதிர்ப்பை தனது கட்சியின் அரசியல் செயல்பாடாக ஏற்கவில்லை.

ஆனால் ஜாதி ஆணவப் படுகொலை நடக்கும்போது மட்டும் ஆளும் கட்சியின் மீது குற்றம் சாட்டுவது நேர்மையற்ற அரசியல். இந்த ஜாதிவெறி கொலைகளுக்கான பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உண்டு சமூகத்துக்கும் உண்டு. குஜராத்தில் நடக்கும் பாஜக ஆட்சி கடந்த வாரம் ஒரு சட்ட த்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது பெற்றோர்கள் ஒப்புதல் இருந்தால் தான் திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்கிறது அந்த சட்டம். இதன் வழியாக ஜாதி மறுப்பு திருமணங்கள் தடை செய்யப்படுகின்றன. பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் அவர்களை எதிர்த்துத்தான் ஜாதி மறுப்பு திருமணங்களே நடக்கின்றன. ஆக ஜாதியைப் பாதுகாக்க பாஜக ஆட்சி துடிக்கிறது.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மதமாற்ற தடை மசோதா ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதமாற்றம் செய்து கொண்டால் 10 ஆண்டு சிறை 7 லட்சம் ரூபாய் அபராதம். இதைவிட கொடுமை இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பிரிவு; பெண்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோர் அல்லது பட்டியலின ஜாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மதம் மாறினால் 7-ஆண்டு சிறை ; 5 லட்சம் அபராதம் என்று கூறுகிறது அந்தப் பிரிவு.

விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதையைப் பறித்து அவர்களை இழிவுபடுத்துகிறார்கள். மதமாற்ற தடைச் சட்டத்தில் குறிப்பாக பட்டியல் பிரிவினரை இணைக்கிறது இந்த சட்டம் . இப்படி ஒரு சட்டம் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டிலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகாரிகள் திருமணப் பதிவுக்கு பெற்றோர்கள் ஒப்புதலை கட்டாயப்படுத்துகிறார்கள் என்று இரு நாட்களுக்கு முன்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு செய்தி வெளியிட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் அப்படி எதுவும் சட்டம் இல்லை ஆனால் அதிகாரிகளின் ஜாதி மனநிலையால் இப்படி செயல்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு இந்த அதிகாரிகள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் அதிகாரிகளிடையே நிலவும் ஜாதி உணர்வு செயல்களை கண்காணிக்க குழுக்களை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டியது மட்டுமல்ல; ஜாதி உணர்வோடு செயல்படும் அமைச்சர்களும் கண்காணிக்கப்பட வேண்டும். ஆக ஜாதியைப் பாதுகாக்க பாஜக ஆட்சி துடிக்கிறது.

- விடுதலை இரோசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.