தமிழ்நாட்டுக் கிராமங்கள் இன்னும் ஜாதி ஆதிக்கப் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன. தீண்டப்படாத மக்கள் என்று சொல்லப்படுகிற தலித் மக்கள் சுடுகாட்டிற்கு கூட போக முடியாத நிலை உள்ளது. நன்னிலம் அருகே ஒரு முதியவர் (தலித்) இறந்துவிட்டார். அவர் சடலத்தை ஊர் வழியாகக் கொண்டு செல்ல முடியாமல் பாய்ந்து வருகிற முழங்கால் அளவு தண்ணீரில், சடலத்தை சுமந்து வருகிற காட்சியை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை அடுத்த ராஜாநகரம் என்ற கிராமத்தில், ஆதி திராவிட வகுப்பைச் சார்ந்த 100 குடும்பங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனைகளை வழங்கியது. ஆனால், அரசே வழங்கிய அந்த வீட்டு மனைகளை இவர்களால் பயன்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. 25 ஆண்டுகளாக அருகில் உள்ள வேறு ஜாதியினர் இவர்களை குடிவைக்க விட மாட்டோம் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே வருகின்றனர். தற்போது மனித உரிமை ஆணையம் தலையிட்டு வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டு, திருத்தணி கோட்டாட்சியர் அங்கே சென்று, நில அளவீடுகளை செய்து ஆதி திராவிட மக்களுக்கான வீட்டு மனை பட்டாக்களுக்கு ஒதுக்கீடுகளை செய்துள்ளார். அருகில் உள்ள ஜாதி வெறியர்கள் ஒன்று திரண்டு வந்து இங்கே இவர்கள் குடியிருக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்த்தனர். ஏதோ அவர்கள் வீட்டைப் பிடுங்கிக் கொண்டது போல, அரசு வழங்கிய மனைகளில் கூட குடியிருக்க விடாது மறுக்கும் அளவிற்கு ஜாதி வெறியை ‘மண்டையில்’ ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி வெறியோடு மூன்று பேர் சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீது மிக மிகக் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

ஒட்டு மொத்த கிராமத்தினுடைய ஜாதிய மனப்பான்மையைத் தடுக்க வேண்டும். அதற்காக ஒட்டு மொத்த கிராமத்திற்கு அரசு வழங்கக்கூடிய சலுகைகள், இத்தகைய தீண்டாமையில் ஈடுபட்டால் நிறுத்தப்படும் என்று அந்த உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இயக்கங்களும் களமிறங்கிப் போராட வேண்டும்.

ஒரு ஆட்சியோ, அரசு இயந்திரமோ இவைகளை முழுமையாக செய்து முடித்து விடும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. எனவே, இயக்கங்களும், ஆட்சியும் கைகோர்த்துக் கொண்டு, கிராமங்களை செல்லரித்துக் கொண்டிருக்க கூடிய ஜாதி வெறிக்கு முற்றுப் புள்ளி வைக்க முன்வர வேண்டும்.

***

நடிகர் மாதவனின் பஞ்சாங்க உளறலுக்கு விஞ்ஞானி பதிலடி

பொய்யான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்டு “ராக்கெட்ரி - நம்பி விளைவு” என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம், ஜூலை 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதையொட்டி, சென்னையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய நடிகர் மாதவன், “அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலகோடி செலவழித்து செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கைக் கோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா 2014ஆம் ஆண்டு சிறிய எஞ்சினை வைத்துக் கொண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய களம் 32ஆவது முறையில்தான் வெற்றி பெற்றது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தவும், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடையவும் நமது முன்னோர்கள் உருவாக்கிய பஞ்சாங்கத்தின்படியான நட்சத்திர மற்றும் கோள்களின் வரைபடம்தான் (Celestial Map) இந்தியக் குழுவுக்கு உதவியது” என்று கூறியிருந்தார்.

இந்தத் தகவலை “விஞ்ஞானி நம்பி நாராயணனின் மருமகனும், விஞ்ஞானியுமான அருணன் - தம்மிடம் தெரிவித்தார்” என்றும் மாதவன் குறிப்பிட்டிருந்தார். நடிகர் மாதவனின் இந்தக் கருத்துதான் சமூகவலைதளங்களில் தற்போது விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது.

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங் கத்தை வைத்துக் கொண்டு தற்போது செவ்வாய்கிரகம் செல்வது முடியாத காரியம்” என தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் ‘சந்திரயான்’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறியிருக்கும் அவர், “பஞ்சாங்கம் ஆண்டாண்டு காலமாக பொருந்தி வரக் கூடியது அல்ல. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப் பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய்க் கிரகம் செல்வது என்பது முடியாத காரியம். ஏனென்றால், அந்தந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் இடங்களை கணித்து அதற்கேற்ப உலகளவில் பயன்படுத்தப்படும் அறிவியல் அட்டவணை இருக்கிறது. அதற்குப் பெயர் ‘அல்மனாக்’ என்ற அறிவியல் அட்டவணை தான் விஞ்ஞானிகளுக்கு ‘பஞ்சாங்கம்’. அதை வைத்தே விண்வெளிக் கோள்களை அனுப்பும் நேரத்தைக் கணக்கிடுகிறோம். ஆனால் இவர்கள் சொல்லும் ‘இந்து’ பழம் பஞ்சாங்கத்தைப் பார்த்து நேரம் குறிப்பது கிடையாது” என்று பதிலடி தந்துள்ளார்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.