2014 ஆண்டிலிருந்து 2025 வரை சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி 2,533 கோடி ரூபாய் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கும் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 13 கோடி ரூபாய் மட்டுமே. சமஸ்கிருதத்தை விட 22 மடங்கு தமிழுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கும் ஒதுக்கிய நிதியை விட 17 மடங்கு கூடுதலாக சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமஸ்கிருதம் பேசும் மாநிலம் இல்லை. சமஸ்கிருதம் தெரிந்தவர்களாக பதிவு செய்தவர்கள் 24,821 பேர் தான். அவர்கள் கூட சமஸ்கிருதத்தில் உரையாடுவது இல்லை. சமஸ்கிருத மந்திரங்களை மனப்பாடம் செய்து வழிபாடுகளை நடத்தும் வேத பார்ப்பனர்கள் கூட வீடுகளில் சமஸ்கிருதம் பேசுவது இல்லை. கல்லூரிகளில் சமஸ்கிருதப் பட்டப்படிப்புகளுக்கு தொடர்பு மொழி சமஸ்கிருதம் அல்ல, ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்திற்கு தமிழைப் போல் தனி எழுத்து வடிவம் இல்லை. இந்தி உள்ளிட்ட பல வட இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் ‘தேவ நாகரி’ வரி வடிவமே பயன்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தைப் போலவே பிராகிருதம் என்பதும் ஒரு வடமொழி தான். ஆனால் அது தமிழை ஊடுருவி சிதைக்கவில்லை.

அறிவைப் பகிர்ந்து கொள்ள மறுத்த ‘பார்ப்பனியம்’ சமஸ்கிருதத்தை தனது ‘மூளையில்’ மட்டும் ஏற்றி வைத்துக் கொண்டது. எழுத்துக்கள் ஆகிவிட்டால் ‘சூத்திர, பஞ்சமர்கள்’ படித்து விடுவார்கள் என்பதற்காகவே இந்த சூழ்ச்சி. இதற்காகவே வேதங்களுக்கு ‘எழுதாக் கிளவி’ என்று பெயர் சூட்டினார்கள்.

சமண பவுத்த மதங்கள் பிராகிருத மொழி வழியாக எழுத்து வடிவங்களோடு பரவத் தொடங்கிய பிறகு, எழுதாமல் போனால் சமஸ்கிருதம் அழிந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக ‘எழுதாக் கிளவியை’ ‘எழுதும் கிளவியாக’ மாற்றிக் கொண்டார்கள்.

புத்தர் சமணர் பேசிய பிராகிருத மொழியை திருத்தி அமைத்துக் கொண்டதுதான் சமஸ்கிருதம். சொல்லப்போனால் வேதங்களிலேயே சமஸ்கிருதம் என்ற சொல் கிடையாது. வேதத்தில் ‘சந்தஸ’ என்றுதான் குறிப்பிடப்படுகிறது.

ஆதிக்க அதிகாரக் குறியீடான சமஸ்கிருத மொழியில் பேசச் சொன்ன போது அதில் பேச முடியாது என்று மறுத்தவர் புத்தர்.

சமஸ்கிருதம் என்ற சொல் ஒரு மொழியாக முதலில் ராமாயணத்தில் தான் குறிப்பிடப்படுகிறது என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். சாகுந்தலம் என்ற காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகத்தில் அரசர்களாகவும், வேத பண்டிதர்களாகவும் நடிப்போர் மட்டுமே சமஸ்கிருதத்தில் வசனம் பேசுவார்கள். பெண்கள் மற்றும் பொதுமக்கள் பிராகிருதத்தில் தான் பேசுவார்கள். பகவத்கீதையின் மனு சாஸ்திரமும் வால்மீகி ராமாயணமும் வர்ணாசிரமப் பாகுபாடுகளை வலியுறுத்துகின்றன.

இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் சமஸ்கிருதம் தான் என்று அமித் ஷா மொழி அறிஞர் போல பேசுகிறார். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதற்குக் காரணம் திராவிட உணர்வு தான்!

‘இந்தியா’ என்ற சொல்லே பார்ப்பனியத்துக்கு பகைச்சொல்! அவர்கள் பார்வையில் ‘இந்தியா’ என்பது ‘பாரதியம்’ முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இணைத்துக் குறிக்கும் சொல் ‘இந்தியா’ என்பதால் அந்த சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார் ஆர்எஸ்எஸ் கொள்கை வகுப்பாளரான கோல்வாக்கர் இந்துக்களுக்கான நாடு ‘பாரதியம்’ என்று கூறுகிறார். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் ‘பாரதியம்’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் சென்னை சமஸ்கிருத கல்லூரி விழாவில் பேசிய காஞ்சி மடத்தின் புதிய சங்கராச்சாரி மயிலாப்பூர் வேத பிராமணர்களின் அடையாளமாக இருக்கிறது என்று பேசியுள்ளார். மயிலாப்பூர் வீடுகளில் சமஸ்கிருதத்தில் பெயர்கள் இருக்கின்றன, வேதத்தோடும் ஆச்சாரத்தோடும் இங்கே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தமிழ் முதல் மொழியாக இருந்தாலும் கூட மயிலாப்பூர் நம்முடைய சமஸ்கிருத, அடையாளத்தையும் ஆச்சாரத்தையும் காப்பாற்றி வருகிறது என்று பேசி உள்ளார். (இந்த நிகழ்வில் ஆடிட்டர் குருமூர்த்தி மேலாடை இன்றி பூநூல்மேனியுடன்‌ அமர்ந்திருக்கிற காட்சி ஏடுகளில் வெளிவந்துள்ளன).

இந்தியா முழுமையும் மயிலாப்பூர் ஆக மாற்ற வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் நோக்கம். அதன் காரணமாகவே சமஸ்கிருதத்திற்கு மட்டும் கோடி கோடியாக பணத்தை வாரி இறைக்கிறார்கள், ராமராஜ்யம் நடத்துவதற்கு இவர்களுக்கு சமஸ்கிருதம் தேவைப்படுகிறது. ஆனால் இது ராமாயண காலமல்ல; சூத்திரர் சம்பூகன்கள் சுயமரியாதை வீரர்களாக களத்தில் நிற்கும் காலம் என்பதை வரலாறு உணர்த்தும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.