இதுவரை மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு அரசு நிர்வாகத்திடம் மனு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அரசு அலுவலகத்தின் ஒவ்வொரு மேசையையும் கடந்து ஒப்புதலைப் பெற்று மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று தெரியாத நிலை தான் நீடித்து வந்தது.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதில் மகத்தான புரட்சியை நிகழ்த்தி வருகிறார்.அரசு நிர்வாகத்தை மக்களிடம் கொண்டு செல்வது தான் அவர் நிகழ்த்தி வரும் நிர்வாகப் புரட்சி.'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மட்டுமல்ல; ஏற்கனவே மக்களுடன் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு நேரிடையாக கொண்டு சேர்க்கப்படுகின்றன. முதலமைச்சர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பல்லாயிரக்கணக்கில் மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி அவர்களின் மனுக்களை பெற்று வருகிறார்.

 கோப்புகளோடு மட்டும் செயல்பட்ட நிர்வாகத்தை மக்களிடம் கொண்டு வந்து இணைத்துள்ள இந்த நடைமுறை 'திராவிட மாடல்' ஆட்சியின் தனித்துவமான சிறப்பு

 இன்று (16.05.2025)   ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கையில் வந்திருக்கிற  செய்தியை சுட்டிக்காட்டவிரும்புகிறோம். ஒன்றிய அமைச்சரவை செயலாளர் டி.வி சோமநாதன், துறை செயலாளர்களுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில் "பிரச்சனைகளோடு வரும் மக்களால் உங்களை சந்திக்க முடிவதில்லை; அரசு கூட்டங்களை நட்சத்திர ஓட்டல்களில் கிளப்புகளில் மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். மக்களை சந்தித்தால் மட்டுமே, உண்மை நிலவரத்தை அறிய முடியும். தவறுகளை திருத்திக் கொள்ள முடியும்...அவர்களின் தவறான புரிதலுக்கு விளக்கம் அளிக்கவும் முடியும். உங்களைத் தேடி வரும் மக்களை சந்திக்க முடியாத நிலையை  நிறுத்துங்கள்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (Cabinet secretary asks top bureaucrats to be accessible)

 "நிர்வாகக் கட்டமைப்பை மக்களிடம் கொண்டு வருவது திராவிட மாடல்."

 "மக்களை சந்திக்காமல் நட்சத்திர ஹோட்டல்களில் நிர்வாகம் நடத்துவது மோடி மாடல்"

உ.பியில் 5000 பள்ளிகள் மூடல்

உத்தரப் பிரதேச அரசு, குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்தால், அவற்றை மூட உள்ளது. பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆறுகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கிட்டால், அந்தப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பையே மாற்றும் இந்த உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க உள்ளது. இந்த உத்தரவின் மூலம், 3 லட்சம் குழந்தைகள் வேறுபள்ளிகளுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட உள்ளன. இந்த நடவடிக்கை சுமார் 27 ஆயிரம் அரசுப் பள்ளிகளை பாதிக்கும். 35 ஆயிரம் உதவி ஆசிரியர்கள் மற்றும் 27 ஆயிரம் தலைமை ஆசிரியர்களுக்கு பணியிடக் குழப்பங்களை உருவாக்க உள்ளது. இந்த பள்ளிகளின். உதவியாளர்கள் உள்ளிட்டோரும் வேலை இழக்க உள்ளனர்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.