கைது அடக்குமுறை அரசியலின் காலம் மலையேறிவிட்டது என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது அவதூறு என்றால் அதற்காக வழக்கு ப்பதிவு செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் வழக்குப் பதிவு செய்தவர்களை எல்லாம் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் என்ன வந்திருக்கிறது?

udhayanidhi stalin 455நாளை சட்டமன்றம் கூடும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் தனது கடமையை ஆற்ற விடாமல் தடுப்பது சட்டமன்ற ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைப்பது ஆகும்! உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இதை எடுத்துள்ள நிலையில் பகல் 12 மணி வரை கைது செய்ய தடை விதித்த நிலையில் நீதிமன்ற ஆணையையும் மீறி கைது செய்வது அப்பட்டமான பழிவாங்கும் அரசியல் அல்லாமல் வேறு என்ன?

நேற்று (07-08-2026) தஞ்சை ஆர்ப்பாட்டம் முடித்து வந்தவரை மீண்டும் காலையில் கைது செய்து தஞ்சை வரை வேனில் ஏற்றிச் சென்று பழிவாங்க வேண்டும் என்ற அற்ப அரசியலைத் தவிர இதற்கு வேறு ஒரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டதைப் போல இது ஒரு நல்ல காமெடி என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. வழக்கு பதிவு செய்து விட்டதாலயே கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை; கைது செய்யவும் கூடாது என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றன.

ஜோகிந்திர குமார் எதிர் உ.பி மாநில ஆட்சி -1994

சீதாராம் எதிர் மகாராஷ்டிரா- 2021

சத்தேர் குமார் எதிர் சி.பி.அய்- 2022

அம்னீஸ்குமார் எதிர் பீகார் அரசு

இப்படி பல வழக்குகளில் வழக்கு பதிவு செய்த உடனே கைது செய்வது கூடாது என்று உச்சநீதிமன்றம் தலையில் குட்டி இருக்கிறது.

ஏழு ஆண்டு தண்டனைக்குக் குறைவான குற்றப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட எவரையும் கைது செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருப்பதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓடி விடுவார்கள் என்று கருதினால் அதற்கான சான்றுகளைக் கூற வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

கரூரில் 42 அப்பாவி மக்கள் விஜய் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தபோது முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் விஜயை நிச்சயமாக கைது செய்திருக்க முடியும். மரணம் நடந்த உடனேயே கரூரை விட்டு ஓடிப்போனவர் விஜய். ஆனால் அவர் பழிவாங்கும் அரசியலை நடத்த விரும்பவில்லை. மக்கள் இதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஏதோ முதல்வர் விஜய் பகவானாக அவதாரம் எடுத்து வந்தவர் போலவும் அவரைப் பற்றி பேசுவது தேசத் துரோகம் என்பது போலவும் கதைகள் உருவாக்கப்படுகின்றன. இது அதிகார ஆணவத்தின் உச்சம் வன்மையான கண்டனத்துக்குரியது!

சொல்லப்போனால் திமுகவை மீண்டும் உணர்வுகளோடு உயிர்ப்பித்துக் களமாட இந்தக் கைதுகள் மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையுமே வழங்கும்.

கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுகிறது!

 திராவிடர் கழகம் நடத்தும் நீட் எதிர்ப்புப் பரப்புரை ஏன் தவெக ஆட்சியைப் பதற வைக்கிறது? நீட்டைத் திணிக்காதே என்று ஒன்றிய பாஜக ஆட்சிக்கு எதிராக பரப்புரைச் செய்வதை தனது ஆட்சிக்கு எதிரான பரப்புரையாக ஏன் இந்த ஆட்சி கருதுகிறது?

ஒன்றிய ஆட்சியுடன் அனுசரித்துப் போவது என்பது அவர்கள் திணிக்கும் கொள்கைகளோடு அனுசரித்தல் தானா?

கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுவது கண்டனத்துக்குரியது!

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.