பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"ஒன்றிய அரசே! பாடத்திட்டத்தில் இந்தியைத் திணிக்காதே! தமிழ்நாடு அரசே! பி.எம். பள்ளிகளை அனுமதிக்காதே" எனும் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம், 30/5/26 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில், மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், இரண்யா ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.dvk agitation against cbseமாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் நோக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி - லதா - சத்யா குழுவினரின் பாடல்கள் உணர்வூட்டின. ராஜா தமிழ்தேச மக்கள் முன்னணி மும்மொழிக்கொள்கையின் ஆபத்துகளை படம்பிடித்துக் காட்டினார். தபசி குமரன் "தவெக அமைச்சர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளில்" அதிருப்தியை வெளிப்படுத்தினார், திமுக வழக்கறிஞர் ஆலிம் அல்புகாரி "கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பின்னுள்ள பதட்டத்தையும் எச்சரிக்கை உணர்வை உருவாக்கிய அரசியல் சூழ்நிலையையும்" எடுத்துரைத்தார்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். அவரது உரையிலிருந்து; தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது உள்ள நிலையில் அடுத்து எந்த திசை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்ற வெளிச்சத்தைத் தரும் நோக்கத்தில் தான் இந்த ஆர்ப்பாட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.

த.வெ.க பதவியேற்ற நிலையில் ஒன்றிய ஆட்சி "பி.எம். " மாடல் பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. ஏற்கனவே திராவிட மாடல் ஆட்சியில் உறுதியாக நிராகரித்த திட்டத்தை இப்போது ஏன் மீண்டும் வலியுறுத்த வேண்டும்?

கல்வி அமைச்சர் ராஜ்மோகன் மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று அறிவித்த நிலையில் பி.எம். திட்டத்தை பரிசீலிப்போம் என்று கூறியிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. ஏற்க மாட்டோம் என்ற உறுதியான குரல் வரவேண்டும் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் வழியாக வலியுறுத்துகிறோம்.

அதேபோல் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் 9-ம் வகுப்பில் மும்மொழித் திட்டத்தை திடீரென ஒன்றிய பாஜக ஆட்சி கடந்த மே-15ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பி திணித்திருக்கிறது. 9-ம் வகுப்பில் 2 இந்திய மொழிகளை தவிர மூன்றாவதாக ஒரு அந்நிய மொழியை படிக்க வேண்டும் என்பது அந்த சுற்றறிக்கை. திணிக்கப்பட்ட இந்த மூன்றாவது மொழிக்கு பாடங்கள் இல்லை; தேர்வு இல்லை; ஆனால் மொழிக் கல்வியை கட்டாயம் கற்க வேண்டும் என்கிறார்கள். அடுத்த ஆண்டு 10-ம் வகுப்புக்கு இது விரிவாக்கம் பெறுகிறது. 10-ம் பொது தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு இது மன அழுத்தத்தை உருவாக்குகிறது என்று பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இவர்கள் கூறும் 3-வது மொழிப் பாடமாக பிரஞ்சு, ஜெர்மன், உருது போன்ற மொழிகளைத் தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை. இந்த மொழிகளைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களே இல்லை.

3-வது மொழியாக சமஸ்கிருதம் படிப்பதற்கு மட்டும் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ரூ.2532 கோடி நிதி ஒதுக்கி சமஸ்கிருதம் கற்பிப்பதற்கு பார்ப்பன ஆசிரியர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்திக்குக் கூட ரூ.426 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது சமஸ்கிருதத்தை சி.பி.எஸ்சி பள்ளிகளில் அறிமுகப்படுத்திட வேண்டும் என்று ஒன்றிய பாஜக ஆட்சி துடிக்கிறது. தவெக ஆட்சி இது குறித்து எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. ஆச்சரியம் என்னவென்றால் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையையே இதை எதிர்த்திருப்பது தான். அதேபோல் நீட் தேர்வு சந்தி சிரிக்கிறது நீட் தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என்று சில அமைப்புகள் கூறுகின்றன. ராகுல்காந்தி நீட் தேர்வு முறையில் மாற்றத்தையே வலியுறுத்துகிறார். நீட் தேர்வு வேண்டாம் என்று நாம் கூறுகிறோம். இத்தகைய `வடிகட்டும்' தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது என்பதுதான் பெரியார் கருத்து; பத்தாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன் வடிகட்டும் தேர்வு முறை எதிர்த்து போராடி பெரியார் அந்த தேர்வை நிறுத்தினார்.

தொடர்ந்து பேசுகையில் பெரியார் இயக்கம் தமிழர்களின் முதன்மையான எதிரியாக முன்னிறுத்துவது பார்ப்பனியத்தையும் அதை கட்டமைத்தவர்களின் ஜாதியையும் தான். அதன் அரசியல் வடிவம் பாஜக.

திராவிட மாடல் ஆட்சியை நடத்திய நமது முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்தல் களத்தை டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தலாகவே அறிவித்து களம் கண்டார். இதுதான் பெரியார் இயக்கத்தின் குரல்! தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தாலும் நமது செயல்பாடுகள் தொடர்ந்து எதிரியை நோக்கிய எதிர்ப்புக் களமாகவே இருக்கும். அதுவே நமக்கு பெரியார் காட்டிய கொள்கை வெளிச்சம்.

 பாஜகவும் அதன் பார்ப்பனியமுமே நமது முதன்மை எதிரி!

முதன்மை எதிரிகளுடன் சமரசங்களோடு தடுமாற்றங்கள் உருவாகும் போது திராவிடர் விடுதலைக் கழகம் அதை ஏற்காது. அந்தத் திசையை நோக்கி தவெக பயணித்தால் நாம் உறுதியாக எதிர்த்து நிற்போம். திராவிடர் விடுதலைக் கழகம் தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத இயக்கம்; இதுவே நமது இயக்கத்தின் வலிமை!. முதலமைச்சர் பதவி தன்னைத் தேடிவந்த போது ஒதுக்கித் தள்ளினார் பெரியார். இந்த தனித்துவத்துடன் திராவிட மாடல் ஆட்சி ஒன்றிய இந்துத்துவ பார்ப்பனியத்துக்கு எதிரான கொள்கைப் போராட்டத்தில் உறுதியாக நின்றது. அந்தக் கொள்கை உறுதி தொடரும்; தொடர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பெரியார் தந்த அணுகுமுறையும் கொள்கை வெளிச்சமும் தான் எப்போதும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். அந்த தனித்தன்மையோடு பார்ப்பனியத்தையும் அது கட்டமைத்த ஜாதி சமூகத்துக்கும் எதிராக சமூக மாற்றத்தை நோக்கி நமது போராட்டத்தை உறுதியாக முன்னெடுப்போம் என்று கூறினார்.

- விடுதலை இராசேந்திரன்