ஓவியர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது: டிராட்ஸ்கி மருது
நேர்காணல்: மினர்வா & நந்தன்
ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு இவர்தான் முன்னோடி. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்து வருகிறார். மருதுவின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கீற்றுவுக்காக உரையாடினோம். இரண்டு மணி நேரங்கள் நீண்ட அந்த உரையாடலில் இருந்து... |
உங்க குடும்ப பிண்ணனி பற்றி சொல்லுங்களேன்...
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை கோரிப்பாளையம். என் குடும்பத்தோடு பூர்வீகம்னு சொன்னா அது அருப்புக்கோட்டை, காரியப்பட்டிக்குப் பக்கத்துலே இருக்கிற மருதங்குடிங்கிற கிராமம்தான். அங்கிருந்து எங்க தாத்தா காலத்துலே மதுரைக்குக் குடியேறினாங்க. அடிப்படையிலே விவசாயக் குடும்பம் எங்களோடது.
குடும்பத்துலே யாரும் கலை, இலக்கியத்தோட சம்பந்தம் இல்லாதவங்கன்னு சொல்லலாமா?
அப்படி சொல்ல முடியாது. அப்பாவோட தாய்மாமன்கள் எல்லாம் அந்தக் காலத்துலே என்.எஸ்.கிருஷ்னணை வைச்சி விருதுநகர்லே நாடகம் போட்டவங்க. அம்மாவோட ஒரு சித்தப்பா, பேரு எம்.எஸ்.சோலைமலை, சினிமாவுலே முக்கியமான கதை - வசனகர்த்தாவா இருந்தாரு. பதிபக்தி, பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை-ன்னு பீம்சிங் இயக்கிய ‘ப’ வரிசை படங்களுக்கு கதை, வசனம் எழுதியது எங்க தாத்தாதான். அந்தப் படங்கள்லே ராமநாதபுரம் மாவட்ட சாயல் இருந்ததுன்னா அதுக்குக் காரணம் தாத்தாவோட பங்களிப்புதான். ஏன்னா டைரக்டர் பீம்சிங் வட மாநிலத்துலே இருந்து வந்தவரு. அவர் திறமையான இயக்குநரா இருந்து, நல்ல படங்களைக் கொடுத்தாரு. ஆனா கதை தாத்தாவோடது.
அதே காலகட்டத்துலே சினிமாவுல முன்னணி நடிகரா இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்னோட பெரியப்பா பையன்தான். இப்படி எனக்கு ஒரு தலைமுறைக்கு முன்னாடியே எங்க குடும்பத்துக்கு கலைத்துறையிலே தொடர்பு இருந்தது.
எங்க தாத்தாவுக்கு அப்பா ஒரே பையன். பிரிட்டீஷ் காலத்துலே அப்பா, வார்தாவிலிருக்கிற காந்தி ஆசிரமத்தில் ஒரு வருஷம் இருந்திருக்காரு. அங்க இருந்த ஒருத்தர், அப்பா வீட்டுக்கு ஒரே வாரிசுன்னு தெரிஞ்சு வீட்டுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறாரு.
அதுக்குப் பிறகு, 1940களில் இலங்கையில் பண்டாரநாயகா காலத்திலே கொமீனா டி சில்வா, என்னம்பெரைரா என்ற இரண்டு டிராட்ஸ்கியவாதிகள் அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டுலே தஞ்சம் அடையிறாங்க. அவங்களோட அப்பாவுக்குத் தொடர்பு ஏற்படுது. அப்பாவும் டிராட்ஸ்கியவாதி ஆகிறார். எனக்கு டிராட்ஸ்கி மருதுன்னு பேரு வைக்கிறார். சின்ன வயசிலேயே எனக்கு உலக இலக்கியங்கள் படிக்கிற வாய்ப்பு கிடைக்குது.
உங்களுக்கு கலையில் ஈடுபாடு வந்தது எப்படி?
நான் வளர்ந்த சூழலே அற்புதமானது. நாங்க இருந்த ஏரியாவுலே தான் அய்யனார் சிலை மாதிரியான டெரகோட்டா சிற்பங்கள் செய்யிற கலைஞர்கள் இருந்தாங்க. அவங்க மண்ணைக் குழைச்சு சிற்பமா மாத்துறதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன். பிறகு மதுரை அழகர் கோயில், மீனாட்சி கோயில் மற்றும் நாயக்கர் மகால் ஆகிய இடங்களில் இருக்கிற சிற்பங்களை அடிக்கடி பார்க்க முடியும்.
மதுரை அழகர் கோயில் திருவிழாவும் ஒரு முக்கியமான இன்ஸ்பிரேஷன். மதுரையைச் சுத்தி 50, 60 கிலோமீட்டர் தூரத்திலே இருக்கிற எல்லா நாட்டுப்புற கலைஞர்களும் திருவிழாவுக்கு வருவாங்க. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டமா இருந்துச்சி.
அப்ப காந்தி மியூசியத்துலே வாரம் ஒரு இலவச சினிமா போடுவாங்க. அதனால் ரொம்ப சின்ன வயசிலேயே வேர்ல்டு கிளாசிக்ஸ் எல்லாம் பார்க்க வாய்ப்பு கிடைச்சது.
பிறகு எங்க அப்பா மூலமா நான் தெரிஞ்சிக்கிட்டது. அப்ப மதுரையிலே பெரிய புத்தகக் கடை பாரதி புத்தகாலயம். அதை நடத்திக்கிட்டு இருந்த சுவாமிநாதன் அப்பாவோட பால்ய நண்பர். அப்பா என்னை வாரத்துக்கு மூணு தடவையாவது அங்க கூட்டிக்கிட்டு போவாரு. அந்தக் கடைக்கு கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா மாதிரியான ஆட்கள் எல்லாம் வருவாங்க. ஒரு தடவை போனா, குறைஞ்சது மூணு மணி நேரமாவது இருப்போம். ரொம்ப சின்ன வயசிலேயே உலக இலக்கியங்களோட அறிமுகம் கிடைச்சது.
ரீகல் தியேட்டர்லே நல்ல இங்கிலீஸ் படம் வந்தா, பரீட்சை இருந்தாக் கூட, அப்பா அதைப் பார்க்கச் சொல்வாரு. ‘Bridge on the river Kiwai-னு ஒரு படம் வந்திருக்கு. புஸ்தகத்துலே படிச்ச பாலைவனத்தை அதிலே பார்க்கலாம்’ன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போவாரு. டாலி, பிக்காஸோ, டிராட்ஸ்கி இவங்களோட ஓவியங்கள் அப்பா மூலம்தான் எனக்கு அறிமுகமாச்சு. இதெல்லாம் நான் எட்டாம் வகுப்பு படிச்சபோதே கிடைச்சதுங்கிறதுதான் ரொம்ப முக்கியம். இவையெல்லாம் தான் என் கலைப்பாதையின் படிக்கட்டுகள்.
நீங்க ஓவியத்துறைக்கு வருவதற்கு மதுரையில் பார்த்த சிற்பங்கள் ஒரு முக்கிய காரணம்னு சொல்றீங்க. ஆனால், தமிழக மரபில் சிற்பங்களுக்கும், கட்டடக் கலைக்கும் இருக்கிற முக்கியத்துவம் ஓவியங்களுக்கு இல்லையே, ஏன்?
தமிழகத்தில் ஓவியம் என்பது சிற்பத்தோடு இணைந்தேதான் இருந்தது. தனி ஓவியம்னு இல்லை. கி.பி. 4ம் நூற்றாண்டில் அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் மீது ஓவியங்கள் வரையப்பட்டிருக்கு. காலப்போக்குல ஓவியங்கள் நிறமிழந்து போனது. இப்பயும் வெயில் படாம, கோயிலுக்குள் இருக்கிற சிற்பங்கள் மீது ஓவியப் பூச்சு இருப்பதைப் பார்க்க முடியும்.
இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்னு நினைக்கிறீங்க? இலக்கியத்துக்கு வரையும்போது, நீங்க எந்த மாதிரியான அணுகுமுறையை வைச்சிருக்கீங்க?
எழுத்துக்கு வரையும்போது வார்த்தைகள்தான் தூரிகையை நகர்த்துதுன்னு சொல்வாங்க. ஆனா நான் கொஞ்சம் வேற மாதிரிதான் இயங்கியிருக்கிறேன். கடந்த 20 வருஷமா பத்திரிகைகளில் வரைஞ்சிட்டு வர்றேன். எப்போதும் எழுத்தாளர்களோட வார்த்தைகளை நான் தேவவாக்காக எடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா மற்ற ஓவியர்கள் பத்திரிகைகளுக்கு வரையும்போது, அந்த எழுத்திலே இருக்கிற சம்பவங்களை வரைவாங்க. நான் அப்படி வரைஞ்சது கிடையாது. தேவைப்பட்டபோது எடுத்திருக்கேனேயொழிய அதை மட்டுமே வரைஞ்சதில்லை.
எழுத்து ஒரு விஷயத்தைச் சொல்லும். அது என்ன சொல்லுதோ, அதை நோக்கிய விஷயத்தை என் படமும் சொல்லும். அதுக்கு மேலே என் படம் எதுவும் சொல்லலைன்னும் கிடையாது. எழுத்திலிருந்து படத்தைப் பிரிச்சிட்டாக்கூட, என் படம் அதே விஷயத்தை சொல்றதை நீங்க பார்க்கலாம். ஓவியர் என்பவர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது. இன்னும் சொல்லப்போனா ஓவியங்கள்தான் எழுத்தை மக்கள் மனசுலே நிறுத்தி வைக்குது.
இராமாயணம், மகாபாரதம் எல்லாம் வெறும் வார்த்தைகளால மக்கள் மனசுலே இத்தனை வருஷமா நிக்கலை. அதுக்கு இணையா கடந்த இரண்டாயிரம் வருஷமா இருக்கிற ஓவியங்கள், சிற்பங்கள், கூத்துக்கள் மூலம்தான் நிக்குது. ராமா ராமான்னு என்னதான் எழுதுனாலும், ராமாவோட இமேஜ் கிடைக்கலைன்னா அது இந்தளவுக்குப் போய் சேர்ந்திருக்காது. வெறும் வார்த்தைகள் அனுமானிக்கதான் வைக்கும், கோடுகள்தான் மனசுலே கொண்டு வந்து சேர்க்கும். இன்னும் சொல்லப்போனா, வார்த்தைகள் பொய் சொல்லும், கோடுகள் பொய்யே சொல்லாது.
கடந்த இருபது வருஷமா தமிழ் இலக்கியத்தோட இயங்கிட்டு வர்றீங்க. அது எந்தளவுக்கு உங்களை பாதிச்சிருக்கு?
சிலரோட எழுத்துக்கள் என்னைப் பாதிச்சிருக்கு. பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பலை. சிலரோட வடிவம் நல்லா இருக்கும், சிலரோட உள்ளடக்கம் நல்லா இருக்கும். பொதுவா எழுத்து மட்டுமில்லை, எல்லா விஷயங்களும் என்னை பாதிக்குது. எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறேன். பத்திரிகைச் செய்திகள், டிவியிலே வர்ற விளம்பரங்கள், கிராமத்துலே இருந்து வர்ற உறவினர்கள், நாடங்கள் எல்லாம் என்னை influence பண்ணுது.
தமிழ் நாடகங்களை நீங்க எப்படி பார்க்கிறீங்க?
நவீன நாடகங்களில் மிகப் பெரிய முனைப்பு இருக்குது. ஆனா ஒரு ஆர்டிஸ்டா நான் என்ன நினைக்கிறேன்னா, தமிழ் நாடகத்துலே visual poverty இருக்குது. இதுக்குக் காரணமா பட்ஜெட்னு சொன்னாக்கூட, இருக்கிறதை வைச்சி இன்னும் பெட்டரா பண்ண முடியும். இயலாமையே எளிமைன்னு இங்க ஆயிடுச்சோன்னு கூட தோணுது. பின்ன அதுவே ஒரு standard ஆகி, இப்ப வரைக்கும் அதை யாரும் உடைக்க முயற்சிக்கலைன்னுதான் சொல்லணும்.
நாடகத்துலே மட்டுமில்லை, பட்ஜெட் பிரச்சினையா இல்லாத சினிமாவுலே கூட இந்தப் பிரச்சினை இருக்கு. இரண்டரை மணி நேரம் ஓடுற சினிமாவுலே இரண்டே கால் மணி நேரம் பேசிக்கிட்டே இருக்காங்க. பேசியே கதையை நகர்த்துறாங்க. இது எனக்கு அயற்சியைத்தான் தருது. பெரிய இயக்குநர்னு சொல்ற மணிரத்னம் மாதிரியான ஆட்களோட படங்கள்லே வேறவிதமான தப்பு இருக்குது. அவங்க மிகைப்படுத்தப்பட்ட visuals-யை காமிக்கிறாங்க.
பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்தும் கூட இதிலே எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா இவங்க திரைக்கதையை எழுதுறாங்க; விஷூவலா பார்க்கிறது இல்லை. இவர் வசனம் எழுதுன கதை, இவர் எழுதுன கதைன்னு காட்சி ஊடகத்துலே வசனங்களுக்கு முக்கியத்துவம் தர்ற போக்கு இங்கதான் இருக்கு. கூத்து, மேடை நாடகம் இதோட ஒரு தொடர்ச்சியாதான் சினிமா இருக்கே தவிர, அதை காட்சி ஊடகமா யாரும் இங்க பார்க்கலை.
மற்ற கலைகளும் இதோட தொடர்ச்சியாத்தான் இருக்குதா?
ஆமா. தமிழ்நாட்டை சத்தங்கள்தான் ஆளுது. அலங்காரமா பேசுறவங்கதான் இங்க கொண்டாடப்படுறாங்க. அலங்காரம் என்பது பொய்னு ஜனங்களுக்குத் தெரியறது இல்லை. அலங்காரமா பேசி ஆட்சியைப் பிடிச்சவங்க எல்லாம் அலங்காரமான கலைகளையே கொண்டாடுறாங்க. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த இந்த 40 வருஷத்துலே, அவங்க சினிமாவுலே இருந்து வந்தவங்க என்பதாலே, அவங்க கட்டுன கட்டிடங்கள் எல்லாம் ஜூபிடர் பிலிம்ஸ் செட் மாதிரிதான் இருக்கு. அந்த கட்டிடம் எல்லாம் சிமெண்ட்லே செஞ்ச செட்கள்தான்.
பெரியார் பிறந்ததாலதான் தமிழ்நாட்டுலே புதிய பாதையே கிடைச்சது. அவர் வந்த பின்னாடிதான் தமிழர் வாழ்க்கையிலே வெளிச்சமே வருது. அவருடைய முக்கிய கொள்கைகள் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு மற்றும் பெண் விடுதலை. கடவுளைத் தூக்கிப் போட்டதும், கதை சொல்றதில் இருந்த மாய மந்திரத் தன்மையும் காணாமப் போயிடுச்சி. ஏன்னா இங்க மாய மந்திரங்கிறது கடவுளோட மட்டுமே இணைச்சி வைச்சிருந்தாங்க.
அந்த மாய மந்திரத் தன்மை கதை சொல்றதில் இருந்திருந்தா தமிழ் சினிமா விஷுவல் மீடியாவா வளர்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.
ஓவியத்துறையில் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதற்கு என்ன காரணம்?
உலக அளவிலேயே இந்தத் துறையில் பெண்களோட எண்ணிக்கை ஆண்களோட ஒப்பிடும்போது மிகக் குறைவுதான். அதிலும் இந்தியாவிலே மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம் இங்க பெண்கள் படிக்க வந்ததே கடந்த 50, 60 வருஷமாத்தான். இங்க சமூகத் தடைகள் ஏராளமா இருக்கு. ஒரு கலைஞராக இருப்பது என்பது lifetime commitment. ஆனா இங்க கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்படுறாங்க. அதனாலே பிரகாசிக்க முடியாம போயிடுது.
ஆனா இந்தியாவிலே நவீன ஓவியங்கள்லே முக்கியமான பாதையைத் தொடங்கி வைத்த அமிர்தா சர்கில் ஒரு பெண்தான். ஒரு ஹங்கேரியனுக்கும், இந்திய பெண்ணுக்கும் பிறந்தவர். இவர்கிட்ட இருந்துதான் இந்திய நவீன ஓவியங்கள் தொடங்குதுன்னு சொல்லலாம்.
ஓவ்வொரு ஓவியருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. நெதர்லாந்து ஓவியர் ரெம்பரெண்ட்-னு சொன்னா, லைட்டிங்கை ரொம்பவும் வீச்சோட தன் ஓவியங்களைப் பயன்படுத்தினவர், பிரான்சில் டேவிட் தன்னோட ஓவியங்கள் மூலமா புரட்சியை மக்கள் மனதில் தூண்டி விட்டவர்னு சொல்லலாம். இந்த மாதிரி இருக்கிற ஆளுமைகளில் உங்களை ரொம்பவும் கவர்ந்தவர் யார்? யாரோட ஓவியங்களைத் திரும்பத் திரும்ப ரசிக்கிறீங்க?
அப்படி ஓரே ஒருத்தரை மட்டும் சொல்ல முடியாது. ஏன்னா என்னை பாதிச்சவங்க நிறைய பேரு இருக்காங்க. ஓவியர்கள் மட்டுமில்லாம, என்னைச் சுற்றியிருக்கிற எல்லாமே என்னை influence பண்ணுது - அது அழகர்கோயில் திருவிழாவாக இருக்கலாம், இல்லை நம்முடைய மரபுக்கலைகளாக இருக்கலாம்.
குறிப்பாக ஓவியர்கள்னு சொல்லனும்னா ஆரம்ப காலகட்டத்தில் கிளாசிக் பெயிண்டர்ஸ் எல்லோரையும் விரும்பிப் பார்த்தேன். பின்னாடி நவீன ஓவியங்களுக்கு வந்தபோது, எனக்கு உருவங்களை வரைவதில் அதிக ஆர்வம் இருப்பதால், அந்த மாதிரி வரையறவங்களை அதிகம் ரசிக்கிறேன். காமிக் புத்தக ஓவியர்கள் மீதும் எனக்குப் பெரிய ஈடுபாடு இருக்கு. அதோடு கிராபிக்ஸ் டிசைனிங்கில் முக்கியமான எல்லோரையும் க்ளோசா வாட்ச் பண்றேன். அதிலே ஜேன் லேனியான் (போலாந்து), மில்டன் கிளேசர் (அமெரிக்கா), ஹேன்ட்ஸ் எடில்மன் (ஜெர்மனி) முதலானவங்களை ரொம்பவும் ரசிக்கிறேன்.
காமிக் புத்தகங்களில் வரையாம, நவீன ஓவியம்னு சொல்லவும் முடியாத, அதே நேரத்தில் ரொம்ப பவர்புல்லா பத்திரிகைகளில் வரையற ஸால்ட் ஸ்டீபக், ரால்ட் ஸ்டீமன், ரொனால்ட் ஷெர்லி ஆகியோரையும் எனக்குப் புடிக்கும்.
இந்த வகையில்தான் ரசிக்கிறேன்னு கிடையாது. எல்லாத்தையும் ரசிக்கிறேன். ஏன்னா என்னோட வொர்க் ஸ்டைலே அப்படித்தான் இருக்குது.
எனக்குப் போட்டோகிராபி பிடிக்கும். ஓரு போட்டோ எடுத்து, அதை பிரிண்ட் பண்ணுவேன். அதுமேல manual-ஆ வரைவேன். வரைஞ்ச ஓவியத்தை கம்ப்யூட்டருக்குக் கொண்டுபோய், கிராபிக்ஸ் பண்ணுவேன். என்னோட படங்கள் எல்லாமே ஒரு mixed paintings. அதிலே போட்டோ இருக்கும், ஓவியம் இருக்கும், கிராபிக்ஸ் இருக்கும். அதனால் ரசனையும் mixed-ஆ தான் இருக்கு.
நீங்க ஐரோப்பாவில் இருக்கிற முக்கியமான ஆர்ட் கேலரி, மியூசியம் எல்லாத்துக்கும் போயிருக்கீங்க. அந்த அனுபவங்களைப் பத்தி சொல்ல முடியுமா?
சின்ன வயசிலே நான் போட்டோவில பார்த்த ஓவியங்கள் எல்லாத்தையும் நேரில் பார்க்க முடிஞ்சது. போட்டோவுல, பிக்சர்லே பார்த்துட்டு சின்னதா இருக்கும்னு நான் நினைச்ச ஓவியங்கள் எல்லாம் மிகப் பெரியதா இருந்தது. அதே மாதிரி பெரிசா இருக்கும்னு நினைச்ச பல ஓவியங்கள் ரொம்பவும் சிறிசா இருந்தது. இந்த அனுபவம் இந்தியாவிலிருந்த போன பெரும்பாலான ஓவியர்களுக்கு இருந்திருக்கும்.
டெலாய்ராய்க், டேவிட், மைக்கேல் ஆஞ்சலோ, டாவின்சி ஆகியோருடைய படங்களை நேரில், அதுவும் ஒரு அடி கிட்டத்துலே பார்க்கிறது இருக்கே, அது விவரிக்க முடியாத அனுபவம். அதில பல ஓவியங்கள் என் வாழ்நாள் முழுக்க என்னைத் துரத்திக்கிட்டே வருபவை. ஜெர்மன் நாட்டிலே இருக்கிற முன்ஸ்டர்லே ஒரு பெரிய மியூசியம் இருக்கு. அதுல எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் கிடைச்சது.
அந்த மியூசியத்துலே தெருவைப் பத்தின ஓவியம் ஒண்ணு பார்த்தேன். பார்த்துட்டு வெளியே வந்தா, அதே தெரு அப்படியே வெளியே இருக்கு. ‘ஐயோ இப்பதான் இந்தத் தெருவை ஓவியத்திலே பார்த்தேன்’ அப்படின்னு மிகப்பெரிய வியப்பு. ஏன்னா அந்த ஓவியம் 400 வருஷத்துக்கு முந்தினது. அந்த ஓவியத்திலே இருக்கிறமாதிரியே இப்பவும் அந்த தெருவை பராமரிக்கிறாங்க.
அந்த நகரத்துலே ரெண்டு முனிசிபாலிட்டி இருக்கு. பழைய நகரத்தைப் பராமரிக்க old municipality, புதிய நகரத்தைப் பராமரிக்க new municipality. பழைய நகரத்துலே இருக்கிறவங்க தன்னோட வீட்டின் வெளிப்புறத்தை கொஞ்சம்கூட மாத்த மாட்டாங்க. தாழ்ப்பாள் பழுதானக்கூட அதே கலர்லே, அதே டிசைன்லே தாழ்ப்பாள் செஞ்சுதான் மாத்துறாங்க. அதே நேரத்துலே வீட்டுக்குள்ளே என்ன வேணும்னாலும் பண்ணிக்கலாம். பழைமையைப் பாதுகாக்கிறதில் அவங்க காட்டுற ஆர்வம் என்னை மலைக்க வைச்சது.
பின்னே சிசிலி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் இருக்கிற ஓவியங்கள், சிற்பங்கள் பெரும்பாலானவற்றைப் பார்வையிட முடிஞ்சது. இத்தாலியில் ஒரு அனுபவம். 1940களில் இரண்டாவது உலகப் போர் நடந்தபோது, 4 மாடிக் கட்டிடம் ஒண்ணு குண்டு வீசித் தாக்கப்படுது. தாக்குதலுக்குப் பின்னாடி அந்தக் கட்டிடத்தோட ஓரே ஒரு சுவர் மட்டும் நான்கு மாடி அளவுக்கு இடிபடாம தப்பியிருக்கு. போருக்குப் பின்னாடி அந்த இடத்தை வாங்குனவரு, அந்த சுவரை இடிக்காம, தன்னோட புதிய கட்டிடத்துக்கு ஒரு பக்க சுவரா அதை இணைச்சுக்கிட்டாரு. பழைமைக்கு அவங்க கொடுக்கிற முக்கியத்துவம் அப்படி.
பாரீஸ்லே ஒரு இடம் இருக்கு. நம்ம லேண்ட்மார்க்கை விட மூணு மடங்கு பரப்பளவுல விஸ்தீரணமா இருக்கும். அது மாதிரி மூணு மாடி. அதுலே ஒரு மாடி முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள். எனக்கு அது ஒரு கனவுலகம்னு சொல்லணும். கடந்த 150 வருஷத்துலே வந்த முக்கியமான எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் அங்க இருக்கு.
காலையிலே 9 மணிக்கு நண்பர்கள் என்னை அங்க விட்டுட்டுப் போவாங்க. கையிலே ஒரு பேக். அதிலே கொஞ்சம் சாண்ட்விச். மதியம் வரைக்கும் சுத்துவேன். பின்னே ஒரு பார்க்கிற்கு வந்து, கொண்டு வந்த சாண்ட்விச்சை சாப்பிடுவேன். மறுபடியும் உள்ளே போயிடுவேன். ராத்திரி எட்டரை மணிக்கு நண்பர்கள் வந்து பிக்கப் பண்ணிக்கிடுவாங்க. இப்படி 4 நாள் அங்கே மட்டுமே சுத்திப் பார்த்தேன்.
காமிக்ஸ் புத்தகத்துலே ஏதாவது ஒரு பக்கம் ரொம்பவும் பிரமாதமான ஓவியமாக இருக்கும். அதை புளோ-அப் பண்ணி, வரைஞ்சவங்க கையெழுத்தோட விற்கிறாங்க. அது 10,000 டாலருக்கு விலை போகுது. ஒரு பெயிண்டிங்க்கு கொடுக்கிற விலையை காமிக் புத்தகத்தோட ஒரு பக்கத்துக்குக் கொடுக்கிறாங்க. அந்த இடத்தைப் பார்க்கிறதுக்கு எனக்கு சொர்க்கம் மாதிரி தெரியுது.
வெளிநாடுகளுக்குப் போய்விட்டு வந்த பிறகு என்னோட ஓவியங்களை ஒரு self review பண்ன முடிஞ்சது.
ஓவியர்களைக் கொண்டாடுற தேசங்களுக்குப் போயிட்டு வந்த பிறகு, ஓவியங்களுக்கு பெரிய மரியாதை இல்லாத நம்ம நாட்டு சூழலை எப்படிப் பார்க்கிறீங்க?
கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் நம் நாட்டுலே நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருந்தது. சென்னையிலே மிஞ்சிப் போனா ரெண்டு அல்லது மூணு கேலரிதான் இருக்கும். ரொம்பவும் கஷ்டப்பட்டாதான் கூட்டம் சேர்க்க முடியும். ஆனா இப்ப நிலைமை மாறியிருக்கு. நல்ல தரத்தோட 30 கேலரிகள் இருக்கு. கண்காட்சி நடத்துனா கூட்டம் வருது. ரசிக்கிறாங்க.
ஓவியம் ஒரு தொழிலா வளர்ந்துட்டு இருக்கு. ஓவியம் சார்ந்த அறிவு எல்லோருக்கும் தேவைப்படுது. ஒரு Web designerக்கு டிசைனிங் பண்ணும்போது கலர் சென்ஸ் தேவைப்படுது. முன்னே நான் காலேஜ் படிச்சிக்கிட்டு இருந்தபோது அனிமேஷன் பத்தி பேசறதுக்கு எனக்குத் துணையா யாருமே இல்லை. இப்ப நிறைய பேருக்கு அனிமேஷன் பத்தி நல்ல ஐடியா இருக்குது. இந்த நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும்னு தோணுது.
மீண்டும் மீண்டும் வரையத் தூண்டுகிற மாதிரியான ஒரு object ஒவ்வொரு ஓவியருக்கும் இருக்கும். உங்களை அது மாதிரி விடாமல் வரையத் தூண்டும் object எது?
எனக்கு அசைவுகளை வரைவதில் அலாதி ஆர்வம். என் படங்கள் எல்லாம் ஏதோ ஒரு மூவ்மெண்ட்டை பேசுறதாத்தான் இருக்கும். அதனால்தான் என்னுடைய ஓவியங்களில் மனிதர்களும், விலங்குகளும் அதிகமாக இருக்கிறார்கள். அசைவுகளின் மீது இருக்கும் ஆர்வத்தால்தான், நான் அனிமேஷனுக்குப் போனேன். அதனால்தான் ரொம்ப சீக்கிரமாவே கம்ப்யூட்டரை பயன்படுத்தவும் ஆரம்பிச்சேன்.
நீங்க சினிமாவில் அனிமேஷன், ஆர்ட் டைரக்ஷன் ஈடுபட்டு வர்றீங்க. அந்த அனுபவங்களைப் பற்றி?
சினிமாவில் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேதான் நான் வேலை பார்த்திருக்கேன். வித்தியாசமா வொர்க் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கிற படங்களில் மட்டும்தான் பண்ணியிருக்கேன். நாசரோட ‘தேவதை’, செல்வமணியோட ‘அசுரன்’ மாதிரியான படங்களில்தான் எனக்கு ஆர்வம்.
கொஞ்சம் படங்களில் அனிமேஷன் வொர்க் பண்ணியிருக்கேன். ஆர்ட் டைரக்ஷன்லேயும் கிரியேட்டிவிட்டிக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிற படங்களைத்தான் பண்ணியிருக்கேன்.
மகேந்திரனின் சாசனம் படத்திலே வேலை பார்த்ததில் நிறைய பாராட்டுக்கள் கிடைச்சது. ஆனால், உண்மை என்னன்னா, படத்தில் நான் பண்ணி வெச்சிருந்த நிறைய பொருட்கள் பயன்படுத்தப்படலை. செட்டிநாடு தொடர்பா என்கிட்ட நிறைய இருந்தது. நானும் நிறைய வொர்க் பண்ணினேன். அதெல்லாம் முழுமையா படத்திலே வரலை. இருந்தாலும் என்னால முடிஞ்சவரைக்கும் செட்டிநாட்டு சூழலை படத்திலே கொண்டு வந்தேன்.
நம்ம தமிழ்நாட்டிலே வெள்ளைக்காரன் வர்ற வரைக்கும் நாற்காலிகள் கிடையாது. வெறும் திண்டுகளைத்தான் மன்னர்கள் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. அந்த மாதிரியான நிஜமான சரித்திரப் பின்புலம் உள்ள படங்கள்லே வேலை பார்க்கணும்னு ஆசை.
நீங்க கத்துக்கிட்டதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொடுக்கறீங்க?
நான் படிக்கற காலத்துலே அனிமேஷன் பத்தி பேசறதுக்கு எனக்குத் துணையா யாருமில்லைன்னு சொன்னேன் இல்லையா? ரொம்ப நாளைக்கு அப்படித்தான் இருந்தது. அனிமேஷன் பத்தி நான் நிறைய படிச்சி தெரிஞ்சிக்கிட்டதுதான். அதுலே வொர்க் பண்றதுக்கு நான் 18 வருஷம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இப்ப அப்படியில்லை. என்கிட்டே ஜூனியரா இருந்த 40 பேர் இப்போ நல்ல அனிமேஷன் கிரியேட்டரா பீல்டுல இருக்காங்க.
அதுதவிர குழந்தைகளுக்கு அனிமேஷன் பயிற்சி வகுப்பை கடந்த 10 வருஷமா பண்ணிட்டிருக்கேன். அதிலே படிச்சவங்க இப்போ நல்ல குறும்பட இயக்குநர்களா வளர்ந்திருக்காங்க.
போட்டோகிராபியில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தபோது, மதுரை டவுன் ஹால் ரோட்டிலே பாரிலேண்ட்னு ஒரு கடை இருந்தது. அதிலே சினிமா புரொஜெக்டர் ஒண்ணை விற்பனைக்கு வைச்சிருந்தான். நான் அந்தக் கடை வழியா போகும்போதெல்லாம் அதை பார்ப்பேன். பிறகு கொஞ்சநாள்லே என்கிட்டே இருந்த பாக்கெட் மணியெல்லாம் சேர்த்து மொத்தம் 35 ரூ வந்துச்சி. அதை எடுத்துக்கிட்டு நேரே கடைக்குப் போனேன்.
கடையில் ரெண்டு மார்வாடிங்க இருந்தாங்க. புரொஜெக்டர் வேணும்னு சொன்னேன். அதிலே பெரியவரா இருந்த ஒருத்தர், இன்னொருத்தர்கிட்டே, ‘இந்த மாதிரி சின்னப் பசங்கிட்டே வியாபாரம் பண்ணாதே’ அப்படினு இந்தியிலே சொன்னார். எனக்குப் பாஷை புரியாட்டாலும் அவர் என்ன சொல்றாருன்னு புரிஞ்சது. ‘இல்லையில்லை, என்னாலே எந்தப் பிரச்சினையும் வராது’ன்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன்.
வீட்டிலே வந்து ஆபரேட் பண்ணிப் பார்த்தா நான் எதிர்பார்த்த மாதிரியான விஷூவல் அதிலே கிடைக்கலே. அம்மா ஒரே திட்டு, இப்படி காசை வேஸ்ட் பண்ணிட்டியேன்னு. மறுபடியும் கடைக்குப் போனேன். எனக்குப் புரொஜெக்டர் வேண்டாம்னு சொன்னேன்.
பெரியவர், ‘நான் சொன்னேன் கேட்டியா? இந்த மாதிரி பையங்கிட்டே பிசினஸ் பண்ணாதே’. நான் சொன்னேன், ‘நான் தப்பா எதுவும் வியாபாரம் பண்ணலை. நான் எதிர்பார்த்த எபெக்ட் கிடைக்கலை. அதனால இதைக் கொடுத்துட்டு ஒரு ஸ்டில் கேமிரா வாங்கிக்கிறேன்.’
அப்படித்தான் முதல்லே கேமிரா வாங்கினேன். அன்னையிலிருந்து என்கிட்டே அந்தந்த காலகட்டத்துலே வேற வேற கேமிராக்கள் வந்து போயிட்டிருக்கு. இப்ப டிஜிட்டல் கேமிரா யூஸ் பண்றேன். கேமிரா, கம்ப்யூட்டர் இதெல்லாம் எனக்கு ஒரு வரப்பிரசாதம். நான் முழு சுதந்திரத்தோட வேலை பார்க்க முடியாது. ஒரு பெரிய கதவு திறந்திருக்குது. நான் வேலை செய்யறதுக்கு ஒரு பெரிய ஸ்பேஸ் கிடைச்சிருக்கு. அதனால்தான் என் பெயிண்டிங்ஸ்ல ஒரு வெரைட்டி பார்க்க முடியுது.
நீங்க எப்படி அறியப்படணும்னு விரும்புறீங்க?
நான் வெறும் ஓவியர் கிடையாது. அடுத்த தலைமுறை ஆர்டிஸ்ட்களுக்கு நான் தான் முன்னோடி. ஏன்னா இனி வர்ற ஆர்டிஸ்ட்டுக்கு எல்லாம் தெரியணும். பிலிம் கிராமர், பெயிண்டிங், போட்டோகிராபி, அனிமேஷன் இதெல்லாம் தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது. அதே நேரத்தில் நான் நகர்ந்துக்கிட்டிருந்த பாதைக்கு பக்கமா காலமும் நகர்ந்து வந்தது.
ஓவியத்திலிருந்து தான் போட்டோகிராபி பிரிஞ்சுது. அதுலேயிருந்து அனிமேஷன் வந்தது. இப்போ இது எல்லாத்தையும் கம்ப்யூட்டர் ஒண்ணாக்கிருச்சு. இப்ப எல்லா ஊடகமும் கலந்து ஒரு ஊடகமா மாறிடுச்சு. இந்தப் பாதையிலே நான் முதல் ஆள்னு நான் என்னைக் கருதுறேன். அடுத்த தலைமுறை ஆர்டிஸ்ட் எப்படி தயாராகணுமோ அப்படித்தான் நான் தயாராகிக்கிட்டு வந்தேன். நான் தயாராகி வந்த இடத்துக்குத்தான் உலகம் வந்திருக்கிறதா நினைக்கிறேன்.
வாசகர் கருத்துக்கள் | |||||||||||||||||||||||||
|