தமிழில் ஓவியங்கள் குறித்த புரிதல் என்பது மிகக் குறைவு. வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் வாயிலாக பிக்காஸோ, வான்கா, லியோர்னடோ டாவின்சி என பிரபலமான ஓவியர்கள் சிலரை மட்டுமே தமிழர்கள் அறிவார்கள். இதற்குக் காரணம் அது தொடர்பான கட்டுரைகளோ, புத்தகங்களோ போதிய அளவு வெளிவராததுதான். இக்குறையை நிவர்த்திக்கும் முயற்சியாக, உலக அளவில் ஓவியத் துறையில் முத்திரை பதித்த ஓவியர்களையும், அவர்களது புகழ் பெற்ற ஓவியங்களையும் இத்தொடரில் அறிமுகம் செய்கிறோம்.


Davidநியோ-கிளாசிக் ஓவியவழியின் மிக முக்கியமான ஓவியரான ஜாக்குஸ் லூயி டேவிடின் இளம் வயது சுய உருவப் படம். அவருடைய மேத‎மையும் ஓவியமுறையும் முதல் பிரெஞ்சுப் புரட்சியிலும் பிறகு நெப்போலியனது காலகட்டத்திலும் முத‎ன்மை நிலை பெற்றிருந்தது.

ஒரு நாட்டின் புரட்சி அல்லது விடுதலைப்போரின் போது, மக்கள் மத்தியில் எழுச்சியூட்டக் கூடிய இலக்கியங்களைப் படைத்த படைப்பாளிகளையும், அத்தகைய இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சென்ற இசை, நாடகக் கலைஞர்களையும் உலக சரித்திரத்தில் பல இடங்களில் காணலாம். இதே பணியை தனது ஓவியங்கள் மூலம் நிகழ்த்திக் காட்டியவர்தான் ஜாக் லூயிஸ் டேவிட். பிரெஞ்ச் புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில், இவர் வரைந்த ஓவியங்கள் மக்களிடம் மிகப்பெரும் எழுச்சியை ஊட்டின. புரட்சியாளர்களின் அதிகாரப்பூர்வ ஓவியராகவே அறியப்பட்டார். எளிதில் உணர்ச்சிவயப்படக் கூடியவரான டேவிட், ஒவியம் வரைவதோடு மட்டும் நின்று விடாமல் அரசுக்கு எதிரான செயல்களிலும் ஈடுபட்டார். இதனால் அவர் சிறை செல்ல வேண்டியிருந்தது. கில்லட்டின் இயந்திரத்தில் சிக்கி, உயிர் துறக்கும் அபாயமும் உருவானது. புரட்சிக்குப் பின்னர், மாவீரன் நெப்போலியனின் பிரதம ஓவியராக விளங்கினார். நெப்போலியன் தோல்வியுற்றபோது, டேவிட்டுக்கு மீண்டும் ஆபத்து உருவானது. நாட்டை விட்டே வெளியேறினார். தனது இறுதிக்காலத்தை பிர்ஸ்ஸல்ஸில் கழித்தார்.

டேவிட் பிறந்தது கலைகளின் தொட்டில் என்று அழைக்கப்படும் பாரீஸில். பிறந்த தேதி ஆகஸ்ட் 30, 1748. அவரது அப்பா ஒரு வளமையான இரும்பு வியாபாரி. டேவிட்டுக்கு 9 வயது இருக்கும்போது, ஒரு தகராறில் அவரது தந்தை கொல்லப்பட்டார். அதன்பின் கட்டடக் கலை நிபுணர்களான தனது இரண்டு தாய்மாமன்களின் கட்டுப்பாட்டில் டேவிட் வளர்ந்தார். அம்மாவின் அறிவுறுத்தலின்படி, கட்டடக் கலையைப் பயில ஆரம்பித்தார். ஆனால் சிறந்த ரோகோகோ பாணி ஓவியரும், தனது தூரத்து உறவினருமான பிரான்கோஸ் பெளச்சரிடம் கொண்டிருந்த நெருக்கமான உறவு டேவிட்டிடம் ஓவிய ஆர்வத்தைத் தூண்டியது. வெகு சீக்கிரமே தனக்குத் தொழில் ஓவியம் என்று தெரிந்து கொண்டார்.

அக்காலகட்டத்தில் சிறந்த ஓவியராகவும் மட்டுமல்லாமல், சிறந்த ஆசிரியராகவும் விளங்கிய ஜோசப் மேரி வியனிடம் ஓவியக் கலையைக் கற்றுக் கொள்ளுமாறு பெளச்சர் டேவிட்டை அறிவுறுத்தினார். வியனும் டேவிட்டை தனது மாணவராக ஏற்றுக்கொண்டார். சரித்திர சம்பவங்களையும், புரதான சிற்பங்களையும் ஓவியமாக வரையுமாறு டேவிட்டை வியன் உற்சாகப்படுத்தினார். 17 வயதில் ஓவியக் கலையில் ஈடுபாடு கொள்ள ஆரபித்த டேவிட் தனது 23 வயதில், ஓவியத்துறையின் உயர்ந்த விருதாக பிரான்சில் மதிக்கப்பெறும் 'பிரிக்ஸ் டி ரோம்' விருதிற்கான போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அடுத்த வருடமும் போட்டியில் கலந்து கொண்டார். இம்முறையும் அவருக்குத் தோல்வியே கிட்டியது.

The death of Socrates
‘சாக்ரடீஸி‎ன் மரணம்’. ரபேலி‎ன் ஓவியம் போல், மைக்கேல் ஆஞ்சலோவின் சிஸ்டீன் தேவாலய ஓவியம் போல் எல்லா நிலைகளிலும் மிக சிறப்பா‎ன ஓவியமாக உலகில் கருதப்படுகிறது.‏ இந்த டேவிடி‎ன் ஓவியம் நாடகத்தன்மைமிக்க உடல்மொழியுடன் கூடிய அவர் ஓவியங்களிலேயே சிறப்பா‎னது.

மிகவும் மன உளைச்சல் அடைந்த டேவிட் தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக அதிலும் தோல்வியே அடைந்தார். நான்காவது முறை போட்டியில் கலந்துகொண்டபோது, அவருக்கு அந்த அரிய விருது கிடைத்தது. வெற்றி பெற்ற செய்தி கேட்டதும், சந்தோஷப்பெருக்கில் டேவிட் மயக்கமானார். சூழ்நிலை ஏற்படுத்தும் உணர்ச்சியில் சிக்கித் தவிக்கும் இக்குணம், ஆயுளின் இறுதிக்காலம் அவரைத் தொடர்ந்தது.

1775 ம் ஆண்டு ரோம் நகரில் இருந்த பிரெஞ்ச் அகாடமியின் இயக்குநராகப் பதவியேற்க வியன் அங்கு சென்றபோது, டேவிட்டும் உடன் சென்றார். ரோம் நகரம் பல புதிய சாளரங்களை டேவிட்டுக்குத் திறந்து வைத்தது. சரித்திரத்தை வரையுமாறு வியன் வற்புற்த்தினாலும், டேவிட்டுக்கு அதில் அவ்வளவாக விருப்பமில்லை. புராதனங்கள் என்னிடம் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்றே கூறி வந்தார்.

ஆனால் ரோம் நகர் அந்நிலையை மாற்றியது. அந்நகரத்துச் சிற்பங்களும், ரேனி, டொமினிசினோ, ரிபேரா, ரப்பேல் உள்ளிட்டோரின் ஓவியங்களும் அவரிடம் புதிய தாக்கத்தை ஏற்படுத்தின. ரோம் நகரில் தான் கண்ட காட்சிகளையும், கட்டடங்களையும் ஓவியமாக வரைய ஆரம்பித்தார். அப்போது முற்போக்கு சிந்தனை மிகுந்த இத்தாலி எழுத்தாளர்களுடனும், ஓவியக்கலைஞர்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரது பார்வை விசாலமானது. 1780 ல் ரோமில் இருந்து பாரீஸ் திரும்பியபோது, அவரது ஓவியங்களில் புதிய பாணி உருவாகியிருந்தது.

ரோம் நகரில் இருந்தபோது வரைந்த ஓவியங்களையும், பாரீஸ்ற்கு வந்தபின் வரைந்த ஓவியங்களையும் 1781ம் ஆண்டு பாரீஸ் சலோன் அரங்கில் மக்கள் பார்வைக்கு வைத்தார். அந்த ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிட்டியது. 1783ம் ஆண்டு அவரிடம் மாணவர்களாக 5 பேர் சேர்ந்தனர். அதற்கு அடுத்த வருடம் சார்லட் பெக்கோல் என்ற பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்தார்.

The Oath of the Horatii
'ஓத் ஆப் ஹொராட்டி' ஓவியம்

1784ல் வரைந்த 'ஓத் ஆப் ஹொராட்டி' ஓவியம் அவரை முற்போக்கு ஓவியராக அடையாளம் காட்டியது. தேசியக் கடமை மற்றும் குடும்பப் பாசம் தொடர்பாக ஒரு தந்தைக்கும், 3 மகன்களுக்கு இடையே நடைபெறும் வாக்குவாதத்தை மையப்படுத்தி வரையப்பட்ட இந்த ஓவியம், பிரான்சின் முன்னனி ஓவியர்களில் ஒருவராகவும் டேவிட்டை உயர்த்தியது.

இதன்பின் கடமை, தேசப்பற்று மற்றும் விடுதலைக்கான போராட்டங்களைக் கருவாகக் கொண்டு டேவிட் தீட்டிய ஓவியங்கள் அரசியல் முக்கியத்துவம் கொண்டவையாக மாறின. நாட்டைக் காக்கும் பொருட்டு, குற்றவாளிகளான தனது மகன்களுக்கு மரண தண்டனை விதித்த புரூட்டஸ் என்ற மன்னனை டேவிட் ஓவியமாக வரைந்தார்.

The death of Marat
‘மராடி‎ன் மரணம்’ டேவிடி‎ன் முக்கியமான ஓவியம். பிரெஞ்சுப் புரட்சியின் ஆரம்பக் காரணம்தா‎ன் மாரட்டின் மரணம்

அது பிரெஞ்சுப் புரட்சி முளைவிட்ட காலம். பாஸ்டில் சிறை தகர்ப்பு அப்போதுதான் தொடங்கியிருந்தது. நாட்டைப் பற்றி அக்கறை சிறிதுமில்லாது, ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த மன்னர் மீது மக்கள் அளவற்ற வெறுப்பு கொண்டு இருந்தனர். அப்போது வரையப்பட்ட புரூட்டஸ் ஓவியம் ஒரு புதிய அர்த்தத்தைத் தந்தது. சலோன் அரங்கில் இந்த ஒவியத்தைப் பார்த்த மக்கள் கூட்டம் அலைமோதியது. மன்னரால் இந்த ஓவியம் அழிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், டேவிட்டின் மாணவர்கள் அதற்கு காவல் இருந்தனர். அந்தளவிற்கு மன்னருக்கு எதிரான கோபத்தை அது அதிகப்படுத்தியது. மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பு டேவிட்டையும் தொற்றிக்கொண்டது. அதன்பின்பு, தனது ஓவியங்கள் முழுவதையும் அரசியல் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் வரையத் தொடங்கினார். தீவிர அரசியலிலும் பங்கு கொண்டார்.

1792ல் தேசிய இயக்கத்தில் இணைந்தார். தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கமிட்டிகளில் பங்கு வகித்து, புரட்சிக்கு ஆதரவாக பல சொற்பொழிவுகளை ஆற்றினார். பிரெஞ்சு மன்னருக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்ததை வரவேற்று அதற்கு ஆதரவாக வாக்களித்தார். 1794ல் தேசிய இயக்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலாளித்துவ குடும்பத்தில் பிறந்த டேவிட்டின் மனைவியால், மன்னருக்கு எதிரான டேவிட்டின் தீவிர அரசியல் போக்கை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால் டேவிட்டை விட்டுப் பிரிந்தார். இருப்பினும் தன்னுடன் இருந்த 3 பிள்ளைகளை அடிக்கடி டேவிட்டிடம் அழைத்துச் சென்று வந்தார். 1794 ஆகஸ்டில் தேசிய இயக்கம் வீழ்ச்சியடைந்தது. டேவிட் கைது செய்யப்பட்டார். ஆறு மாதம் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைச் சந்திக்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.

Garden
கைதான பிறகு 1794ல் லக்சம்பர்கில் யாரும் சந்திக்கமுடியாதபடி சிறையில் வைக்கப்பட்டார். ‏ இந்த ஓவியம் டேவிட்டி‎ன் ஜன்னல் வழியாகத் தெரியும் லக்கம்பர்கி‎ன் தோட்டத்தின் இலையுதிர் காலத்தோற்றம். யாரும் அற்ற மனித நடமாட்டம் இல்லாத வெறுமைமிக்க இந்த ஓவியம் அவருடைய வாழ்வி‎ன் கடைசிகால வெறுமையையும் சொல்வதாக உள்ளது.

டேவிட் கில்லட்டின் இயந்திரத்தில் வைத்து கொல்லப்படுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. தனது சேவை முழுமையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கத் தயாராயிருந்த டேவிட்டுக்கு, இந்த சிறைவாசம் பெரும் தடையாகத் தெரிந்தது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அவரது விடுதலைக்காக மனைவியும் மாணவர்களும் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். வழக்கு விசாரணையின்போது, தலைவர்களால் தான் ஏமாற்றப்பட்டதகாவும், இனி சித்தாந்தாங்களின் அடிப்படையில் தான் இயங்கப்போவதாகவும் டேவிட் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் அவருக்கு விடுதலை அளிக்கப்பட்டது. விடுதலையானதும் டேவிட்டின் மனைவி மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்தார்.

Napoleonபிரிட்டனின் எதிரியான நெப்போலியனி‎ன் ‏இந்த ஓவியம் ஒரு பிரிட்டனின் தனவந்தருக்காக டேவிட் வரைந்தது. படத்தில் உள்ள கடிகாரம் காலை 4.13 மணியைக் காண்பிப்பதி‎ன்படி அமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட நெப்போலிய‎‎ன் டேவிட்டிடம் தன்னை அவர் முழுமையாகப் புரிந்து கொண்டுவிட்டதாக சொ‎ன்னதுடன், பகலின் செயல்படுத்துவதற்கான தயாரிப்பிற்காக இரவிலும் நா‎ன் உழைப்பதை இவ்வோவியம் கூறுகிறது எ‎ன்றார்.

1799ல் நெப்போலியன் எழுச்சியுற்று தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்தபோது, டேவிட் இயல்பாக அவர் வசம் ஈர்க்கப்பட்டார். அதேபோல் டேவிட்டின் ஓவியங்கள் தனது புகழைப் பரப்பவும், ராணுவப் பிரசாரத்திற்கும் பயன்படும் என நெப்போலியனும் கருதினான். இதன் விளைவாக நெப்போலியனின் பிரதம ஓவியராக டேவிட் மாறினார். நெப்போலியனின் போர்க்குணத்தையும், அயராத உழைப்பையும் விளக்கும் வகையில் டேவிட் வரைந்த ஓவியங்கள் நெப்போலியனிடம் நல்ல மதிப்பை பெற்றுத் தந்ததோடு, பெருமளவு செல்வத்தையும் ஈட்டித் தந்தது.

அதே நேரத்தில் நெப்போலியனின் ராணுவப்பிரசாரத்திற்கு உதவ டேவிட் மறுத்து விட்டார். மேலும் போரின்போது இத்தாலியக் கலைச் செல்வங்களை நெப்போலியன் கொள்ளையடித்ததையும் டேவிட் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே ராணுவப் பிரச்சாரத்திற்கு டேவிட்டின் சீடர்கள் உதவியதால், நெப்போலியனின் கவனம் அவர்கள் பால் திரும்பியது. 1815ல் வாட்டலூர் போரில் நெப்போலியன் தோல்வியுற்றபோது, டேவிட் மீண்டும் ஆபத்தில் சிக்கினார். நெப்போலியனை ஆதரித்தவர் என்ற முறையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் உருவானது.

The Sabine Women
ரோம் அழிக்கப்போடும்போது பெண்கள் ‏இடையில் நுழைந்து அமைதியை ஏற்படுத்திய காட்சி. டேவிட் 1794ல் சிறைப்பட்டு இருந்தபோது ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டு முடித்த ஓவியம். ம‎ன்னர்களுக்கு எதிராக அவர்க‎ள் சிரச்சேதம் செய்யப்பட வேண்டும் எ‎ன்று வாக்களித்ததால் அவரை விட்டுச் செ‎ன்ற ம‎னைவியை மகிழ்விக்க வரைந்தது என்றும் பி‎ன்பு அவரைப் பராமரிக்க சிறைக்கு வந்துவிட்டார் அவர் மனைவி எ‎ன்றும் சொல்வர். நெப்போலியனின் எழுச்சியி‎ன்போது முடிக்கப்பட்ட இவ்வோவியம்தா‎ன் டேவிட்டை, நெப்போலியனின் அரசவை ஓவியராக பொறுப்பேற்கவைத்தது.

முதலில் சுவிட்ஸர்லாந்து சென்றவர், பின்பு பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்று தனது இறுதிக்காலத்தை அங்கு கழித்தார். அந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த ஒவியங்கள் எதையும் அவர் வரையவில்லை. சொந்த நாட்டை விட்டு வெளியேறியது மனதளவில் அவரை பெரிதும் பலவீனப்படுத்தியிருந்தது. டேவிட்டை மீண்டும் பிரான்சிற்கு அழைத்துவர அவரது மாணவர்கள் முயற்சித்தனர். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை. பிரஸ்யா மன்னர் பிரடெரிக் 3ம் வில்லியமின் நீதிமன்றத்தில் சரணடையுமாறு டேவிட்டிடம் கூறப்பட்டது. சரணடையும் அளவிற்கு தான் எந்த தப்பையும் செய்து விடவில்லை என்று அதற்கு மறுத்துவிட்டார்.

வெலிங்டன் மன்னரை ஓவியமாக வரையுமாறு டேவிட்டுக்கு அழைப்பு வந்தது. அதையும் அவர் நிராகரித்து விட்டார். அரசியல் மற்றும் சமூக நலம் சார்ந்த தேவை குறைந்த காலத்தில் டேவிட் வரைந்த ஓவியங்கள் கற்பனைக்கு எட்டாததாக அமைந்தன. அதற்கான வரவேற்பும் இல்லாமல் இருந்தது. இத்தகைய ஒரு நிலையில்தான். 1824 பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவுப் பொழுதில், ஒரு அரங்கில் இருந்து தனது வீட்டிற்குத் திரும்பியபோது காவலர் ஒருவரால் டேவிட் தாக்கப்பட்டார். அவரது உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டது. அதிலிருந்து அவர் மீளவில்லை. 1825 டிசம்பர் 29ம் தேதி அவர் உயிர் பிரிந்தது. டேவிட் மிகவும் நேசித்த, தனது சொந்த நாடான பிரான்சில் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. டேவிட் வரைந்த புகழ் பெற்ற ஒவியங்களின் எண்ணிக்கையை விட குறைவானவர்களின் முன்னிலையில், பிரஸ்ஸல்ஸ் நகர் செயின்ட் குடுலே தேவாலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.