ஈரோடு மாவட்டத்தில் அந்தியூருக்கு மேலே மேற்கு தொடர்ச்சி மலையில் இருபது கிலோமீட்டர் மலைப் பயணத்தில் பர்கூர் இருக்கிறது. இந்த பர்கூர் மலையில் வனத்திற்குள் ஆங்காங்கே சில பழங்குடி மக்களின் கிராமங்கள் உள்ளன. பர்கூர் மலைப்பகுதியினை அடுத்து கர்நாடக எல்லை ஆரம்பமாகிறது. இம்மலையிலுள்ள பழங்குடி கிராமங்களுக்கு நடந்தே செல்லவேண்டும். அடர்வனத்தில் கால் தடங்களே கிராமத்திற்கு செல்லும் பாதைகள். பாதையில் யாரையேனும் எதிர்கொண்டால் யானைகள் எவையேனும் வழியில் நிற்கின்றதா எனக் கேட்டுச் செல்லவேண்டும்.

சோளகனை இம்மலையிலுள்ள பழங்குடி கிராமம். சிலமுறை சோளகனைக்கு சென்றுள்ளேன். சோளகனையிலிருந்து மலையினைப் பார்த்தால் நாம் தலைஉலகுக்கு வந்தது போல இருக்கும். சுற்றிலும் உயர்ந்த மலை சிகரங்கள் மட்டுமே நமக்கு தெரியும். அவை நீலவர்ணத்தில் அலைகள் எழுந்து நிற்பது போல இருக்கும். உரக்க நாம் சப்தமிட்டால் எதிரொலி கேட்கும். அதேபோன்று கத்திரி மலை என்பதும் இம் மலைத் தொடரிலேயே வருகிறது. ஆனால் அது சேலம் மாவட்ட எல்லையை தொட்டுள்ளது. மேட்டூருக்கு அப்பால் உள்ள கோவிந்தப் பாடியிலிருந்து மேலே மலை ஏறலாம். மிக செங்குத்தான மலை. மலை ஏற ஆரம்பித்தவுடன் நம் உடலில் வியர்வை பெருகி உடைகளை நனைத்துவிடும். பல சமயம் கால்கள் நடுக்கம் எடுக்கும்.

ஓரிருமுறை ஏறி பழகி விட்டால் பின் இயல்பாகிவிடும். வழி முழுவதும் இளைப்பாற அடர்ந்த வனமும் சில இடங்களில் தண்ணீர் ஓடைகளும் உள்ளது. இந்த இரண்டு மலைகளுக்கும் நான் தனித்தனியே சென்று வந்துள்ளேன். ஆனால் இந்த இரண்டு வெவ்வேறு மலைகளுக்கு இடையே ஒரு நீண்ட பள்ளத்தாக்கு உள்ளது. ஒரு மலையிலிருந்து இறங்கி பள்ளத்தாக்கை கடந்து அடுத்த மலையில் ஏற முடியும். இந்த இரண்டு மலை கிராம பழங்குடிகள் திருமண உறவு வைத்துள்ளனர். பலசமயம் அவர்கள் வனத்திற்குள் பள்ளத்தாக்கை கடந்து வந்து போவது வாடிக்கையாகும். இந்த பள்ளத்தாக்கை கடந்து ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு பயணம் செய்ய நீண்ட நாட்களாகவே திட்டமிட்டிருந்தோம். ஆனால் பள்ளத்தாக்கில் யானைகள் குறுக்கிடுவதாலும் பயணம் கடினமானதாக இருக்கும் என்பதாலும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. சந்தன கடத்தல் வீரப்பன் இருந்த சமயம் இப்பள்ளத்தாக்கு அவர்கள் மறைவிடங்களாக இருந்துள்ளது. இப்பள்ளத்தாக்கில் முன்பு அதிரடிப்படையின் ஒரு தற்காலிக முகாமிருந்தது.

பர்கூர் மலையில் இருபத்தி நான்கு பகுதிகளில் அரசு ஆரம்பப் பள்ளிகளை அமைத்துள்ளது. இவைகளில் இரண்டு பள்ளிகள் பழங்குடி சங்கத்தினரால் அமைக்கப்பட்டு பின் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டவை. இந்த பள்ளிகள் ஒவ்வொன்றிலும் இரண்டு ஆசிரியர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இவை எப்போதும் முறையாக செயல்படுவதேயில்லை. பலசமயம் பூட்டியே கிடக்கும். ஆசிரியர்கள் யாரும் பணிபுரிய போவதில்லை. குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் விவசாய வேலைக்கோ அல்லது வேறு பணிகளுக்கோ குடும்பத்தாருக்கு ஒத்துழைப்பு தருவதோடு அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது. முன்பு வீரப்பன் பிரச்னையை காரணம் காட்டி ஆசிரியர்கள் அப்பகுதியில் பணிபுரிய செல்லவில்லை. அவர்களின் அலுவலக கணக்குப் படி இப்பகுதியில் பள்ளி நடப்பதாகவும் இருக்கும்.

ஆசிரியர் மாதாமாதம் முறையே ஊதியத்தை பெற்றுக் கொள்வார். ஆனால் பள்ளிக்கூடம் பக்கம் மாதம் ஒருமுறை சென்று ஒருநாள் அல்லது இரண்டுநாள் இருந்து விட்டு வந்துவிடுவார். மற்ற நாட்களில் கிராமத்தை சார்ந்த யாரேனும் அக்குழந்தைகளுக்கு உணவு சமைத்து போடுவார்கள். இதுவே அங்கு பல வருஷங்களாக நடைமுறையில் உள்ளது. அரசு கல்வி அதிகாரிகள் இக்கொடுமையை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பல போராட்டங்கள் நடத்தியும் ஆசிரியர்களை பணிபுரிய வைப்பது இங்கு பெரும்பாடாகவே உள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கு தமிழ் எழுத்துக்கூட தெரியாத அளவு கல்வியற்ற சமூகமாக பழங்குடி குழந்தைகள் உருவாகும் சூழல் இப்பொறுப்பற்ற ஆசிரியர்களால் நடைபெறுகிறது.

பழங்குடி மக்கள் சங்கம் மலைப்பகுதியில் ஆசிரியர்கள் முறையே பள்ளிக்கு செல்ல வேண்டி பெரும் போராட்டத்தை சென்ற பிப்ரவரியில் நடத்தியது. பிஞ்சுக் குழந்தைகள் தங்கள் கைகளில் ‘மாணவர்கள் இங்கே ஆசிரியர் எங்கே? என்ற வாசகத்துடன் அட்டைகளை சுமந்துவந்தனர். இப்போராட்டத்தில் சமாதானத்திற்கு வந்த ஆசிரியர்கள் தங்களுக்கு பஸ் வசதியும் மலைப்பகுதியில் வீட்டு வசதியும் செய்து கொடுத்தால் பணிக்கு போவதாக சொன்னார்கள். சிரமமாக இருந்தால் வேலையை ராஜினாமா செய்து விட்டு போங்கள். உழைக்காமல் ஊதியம் பெற உங்களுக்கு உரிமையில்லை என மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இறுதியில் இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் பள்ளிக்கூடத்தை நடத்துவது என்றும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பள்ளியை நடத்த வைப்பது என்றும் சமாதானம் செய்யப்பட்டது. இப்போராட்டத்தின் மலைமக்களின் நியாயத்திற்கு குரல் கொடுக்கவும், பழங்குடி குழந்தைகளின் கல்வியை பாதுகாக்கவும் எந்த ஆசிரியர் சங்கமும் தங்களின் சகாக்களை வற்புறுத்தவில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.

இப்போராட்டத்திற்கு இரண்டு வாரங்களுக்கு பின்பு மலை கிராமப் பள்ளிகள் சிலவற்றை பார்ப்பது என்றும் மக்களை சந்திப்பது என்றும் பழங்குடி மக்கள் சங்கத்தைச் சார்ந்த தோழர். வி.பி.குணசேகரன் மற்றும் சில நண்பர்களும் முடிவு செய்திருந்தோம். எங்களுடன் ராமய்யாவின் குடிசை விவரணப்படத்தின் ஒளிப்பதிவாளரான சிபி சரவணனும் வர சம்மதித்தார் கேமிராவுடன். பர்கூரிலிருந்து சோளகனை போக பத்து கிலோமீட்டர் வனத்தில் நடந்து போகவேண்டும். எப்போதும் பழங்குடி தோழர்கள் சிலர் உடன் வருவார்கள். அவர்களுடன் செல்வதென்பது நமக்கு தைரியத்தை தரக்கூடியது. வாசனையை முகர்ந்தே யானைகளை கண்டு கொள்வார்கள். வழியில் யானைகள் இருந்தால் மாற்றுத் தடத்தில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் நாங்கள் சென்ற அன்று பழங்குடியினர் யாரும் சோளகனை போவதாக தெரியவில்லை. நாங்கள் ஆறுபேர். சரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சோளகனைக்கு நடக்கத் துவங்கினோம்.

அப்போது மதியவேளை. வழியில் தண்ணீர் உள்ள பகுதிகளில் சற்று எச்சரிக்கை உணர்வு இருந்தது. பாதையின் அருகில் ஓரிரு மைல் தூரத்தில் யானை தண்ணீர் குடிக்க வனத்துறை கட்டியிருந்த ஒரு குட்டையில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தது. பர்கூரிலிருந்து சோளகனைக்கு மின்சாரம் செல்கிறது. யானையின் கோபத்திற்காளான இரும்பு மின் கம்பம் ஒன்று மூன்றாக வளைந்து கிடந்தது. அதற்கருகில் புதியதாக நடப்பட்டிருந்த கம்பமும் சற்று சாய்ந்திருந்தது. யானைகள் முதுகு சொறிந்து கொள்ள உரசுவதால் இவ்வாறாகிறது. வழி முழுவதும் யானைகளின் காய்ந்த லத்திகள். “திடீரென யானைகள் எதிரே வந்தால் என்ன செய்வது? என்று கேட்டேன். “யாருக்குத் தெரியும்” என்றார் வி.பி.குணசேகரன்.

வழியில் எவ்விதமான அச்சுறுத்தும் சப்தமும் கேட்காதது தெம்பைக் கொடுத்தது. பாதித் தூரம் கடந்த பின்பு வழியில் ஒரு நீரோடை இருந்தது. தெளிந்த நீர் சலசலக்கும் சப்தம் மட்டுமே அங்கு கேட்டது. தண்ணீரின் மேலே ஒரு இடத்தில் குவியலாக தண்ணீர் பூச்சிகள் புள்ளிக்கோலம் போல வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பூச்சிகள் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு ஏற்புடையது எனக் குடித்தோம். சிபி சரவணன் அந்த நீரோடையை கேமிராவில் பதிவுசெய்தார். நீரோடைக்கு மேலே நாகமரத்தின் அடியில் ஒரு கோவில் இருக்கிறது. பொதுவாக பழங்குடி மக்களின் கோவில்கள் முழுவதும் மரத்தடிக் கோவில்கள். மரங்களை வணங்கும் பண்பாட்டின் மருவலாகக் கூட நாம் கருதலாம். கன்னியாகுமரி பகுதியில் காணிக்கார பழங்குடி மக்கள் தங்களின் குடும்பத்தார் இறந்தால் தங்கள் வீட்டின் அருகிலேயே புதைத்து அங்கு ஒரு மரத்தை புதை குழிமேலே நட்டுவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நம் போன்றவர்கள் அங்கு செல்லும்போது மரங்களைக் காட்டி “இது என் தாத்தா, இது இறந்து போன என் அம்மா” என்று கூறுவதையும், இறந்தபின்னும் மரங்களாக உயிர் பெற்று குடும்பத்தாருக்கு நிழலும், கனியும் கொடுத்து பலன் தருகின்றனர் என்னும் பண்பாட்டையும் நினைவு கூர்ந்தார் வி.பி. குணசேகரன்.

நாங்கள் மாலைக்குள் சோளகனையை நெருங்கிவிட்டோம். அதற்கு அறிகுறியாக காற்றைக் கிழித்து வரும் ‘தொப்தொப்’ சப்தம். ராகி வயல்களில் அறுவடை முடிந்து காய்ந்த ராகித்தட்டுகளிலிருந்து தானியத்தை தனியே பிரிக்க - இருவர் எதிரெதிரே அமர்ந்து குவித்து வைத்த தானியப்பயிரை - வளையக்கூடிய நீண்ட மூங்கில் கழியால் மாறிமாறி அடிக்கும் சப்தம்.

அது அறுவடைக் காலம் என்பதால் பெரும்பாலானவர்கள் ராகியை அறுவடை செய்து பக்குவப்படுத்தும் பணிகளில் வயல்களில் இருந்தனர். மலையில் விவசாயம் மிகக் கடுமையானது. ஆறுமாதக் கடின உழைப்பின் பயனாகவே ராகி கிடைக்கிறது. பலநாட்கள் அவர்கள் உறங்காமல் வயல்களில் கண்காணிப்பு செய்திருப்பார்கள். அறுவடைக்குப் பின் சில நாட்கள் கழித்து மேட்டில் ராகித்தட்டுகள் காய்ந்து கிடக்கும். அந்நாட்களில் மழை பெய்துவிட்டால் அந்த வருடத்திய முழு உழைப்பும் வீணாகிவிடும்.

நாங்கள் சோளகனையை அடைந்த போது அக்குடியிருப்புகளில் இருந்து நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்கத் துவங்கியது. சோளகனையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கினோம். அச்சமயம் அங்கு பள்ளித் தலைமையாசிரியர் இருந்தார். அவர் மதியம் அங்கு வந்தததாக சொன்னார்கள். போனமாதம் வந்தவர் ஒரு மாதம் கழித்து அன்று பள்ளி வந்திருந்தார். அங்கு ஒரு சமையல்காரர் தம் மனைவியுடன் வந்து தங்கி இருந்தார். மாதத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து பள்ளிச் சிறுவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு செய்து போடுவது அவர் பணி. மற்ற சமயங்களில் சிறுவர்கள் பள்ளியை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள்.

எப்போதும் மஞ்சள் சேர்த்து சமைக்கப்பட்ட சாதம் மட்டுமே அங்கு பரிமாறப்பட்டது. ஆசிரியர் வரும்போது அரிதாகவே காய்கறி சமையல் தென்படும். சிறுவர்கள் அரிதாகவே குளிக்கச் செய்தனர். அதுவும் கிணறு, நீரோடைப் பக்கம் பெரிய பாத்திரத்தை கொண்டு சென்று தண்ணீரை சூடு செய்தே குளித்தனர். குளிர்ந்த நீரில் குளிப்பதால் பல சமயங்களில் காய்ச்சல் வந்துவிடுவதாக கூறப்படுகிறது. அன்றிரவு கேழ்வரகு களி எங்களுக்கு தயாரானது. பனிப்பொழிவு நல்ல குளிரைக் கொடுத்தது. பள்ளிக்கு அருகில் இருந்த ராகி வயலில் விறகு எரியும் வெளிச்சம் வரவே அங்கு சென்றோம். எரியும் விறகைச் சுற்றி வயல்காரரும் சிறுவர்கள் சிலரும் இருந்தனர். குளிருக்கு தீக்காய்வது பழங்குடிகளுக்கு மிகப் பிடித்தமானது. அன்று வானத்தில் விண்மீன்கள் தென்படவில்லை.

எங்கோ சிறு மின்னல் தெரிந்தது. வயலில் ராகிப்பூட்டைகள் காய்ந்து கிடந்தது. மழை வந்துவிடக்கூடாது என வயல்காரர் புலம்பினார். சோளகனையிலிருந்து இரவு வானத்தை பார்ப்பது வெகு அற்புதமான காட்சி. விண்மீன்கள் எல்லையற்றுத் தெரியும். இருள்வெளி எனக்குப் பிடித்த ஒன்று. ஆனால் அன்று மேகமூட்டத்தால் வானம் நட்சத்திரங்களற்று இருந்தது. சோளகனைக்கு மின்சாரம் போய் மூன்று நாட்களாகிவிட்டது. மின்சாரம் எப்போது வருமென யாருக்கும் தெரியவில்லை. சிபிசரவணனின் கேமரா பேட்டரி மின்அளவு குறைந்துவிட்டது. மறு மின்னேற்பு செய்ய இயலாமல் கேமரா முடங்கிவிட்டது. அன்றிரவு பள்ளியில் படுத்திருக்கும்போது ஆசிரியர் தங்களின் பணிச் சிரமங்களைப் பற்றி பேசத் துவங்கினார்.

மாதம் ஒருநாள் பள்ளிக்கு வரும் அவர் தனக்கு பெருத்த சிரமம் இருப்பதாகவும் எப்போதும் கீழ்ப்பகுதியில் நிர்வாகம் குறித்து மீட்டிங் செல்வதற்கே தனக்கு நேரம் சரியாக இருப்பதாகவும் அதனாலேயே பள்ளிக்கு முறையாக வரமுடிவதில்லை என்றும் சொன்னார். “ஒரு தலைமுறையை நீங்கள் நாசம் செய்கிறீர்கள். மக்கள் அதிக நாட்கள் இந்த அநீதியைக் கண்டு பொறுக்க மாட்டார்கள். மாதம் ஒரு நாள் நடக்கும் பள்ளிக்கு எதற்கு மீட்டிங்” என்று கேட்டேன். நான் இப்படி முகத்திலடிப்பது போல பேசுவேனென்று அந்த ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். அதன் பின்பே எனக்கு மனஅமைதியுடன் உறக்கம் வந்தது. அத்துடன் அந்த ஆசிரியர் என்னுடன் பேசுவதை முடித்துக் கொண்டார்.

அன்று காலை ஒரு புளியமரத்தின் கீழ் பழங்குடி மக்கள் சங்கத்தின் கூட்டம் நடந்தது. அப்போது பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்துவது கேட்டது. அது நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பது நம் விருப்பம். ஆனால் அன்று மதியம் ஊருக்கு திரும்பிச் செல்ல ஆசிரியர் திட்டமிட்டுள்ளது தெரிய வந்தது. நாங்கள் அங்கிருந்து கத்திரி மலை போக அவசரப்பட்டோம். மலை நெருங்க நெருங்க வனவிலங்குகள் பெரும் பிரச்னை தரும். அடர்ந்த யானைகளின் காடு அந்தப் பள்ளத்தாக்கு. சோளகனை மலையிலிருந்து சரிவில் இறங்கி பள்ளத்தாக்கில் நடந்து மீண்டும் அடுத்த மலையான கத்திரி மலை ஏறவேண்டும்.

நாங்கள் அங்கிருந்து கிளம்பும்போது எங்களுக்குத் துணையாக மகாதேவன், மாதன், பசுவன் ஆகிய பழங்குடி இளைஞர்கள் உடன் வரத் தயாராயினர். அவர்கள் வருவது எங்களுக்கு தெம்பைக் கொடுத்தது. மகா தேவனின் பூமியில் வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறி அழைத்து சென்று காட்டினார். ஜனவரி மாதத்தில் அடைமழையின் போது விவசாய பூமியிலிருந்த குடிசையில் படுத்திருந்ததாகவும் அப்போது பெரும் சப்தம் கேட்டதாகவும், பூமி குலுங்கியதாகவும் சொன்னார். பூமியில் ஐந்தடிக்கும் மேற்பட்ட பள்ளம் சுமார் ஒரு பர்லாங்கைத் தாண்டி நீண்டிருந்தது. மண்சரிவும் இருந்தது. சிறு பூகம்பம் ஏற்பட்டிருக்கும் என்று கருத முடிந்தது. அச்சமயம் பூமி வெடிப்பிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்ததாகவும் மகாதேவன் கூறினார். நாங்கள் கத்திரி மலைக்கு நடக்கத் துவங்கினோம். மலைச்சரிவில் இறங்க வேண்டியிருந்ததால் மூங்கில்களை வெட்டி ஊன்றுகோலாக பிடித்துக்கொண்டோம். ஒரு மணி பயணத்திற்குப் பின் மலையின் சரிவு முடிவுக்கு வந்தது. அங்கே மாட்டுப்பட்டி இருந்தது.

இம்மாட்டுப்பட்டிகளில் சுமார் எண்பதிலிருந்து நூறு மாடுகள் இருக்கும். காலையில் வனத்திற்குள் மேய்ச்சலுக்கு ஓட்டி விட்டு மாலைவேளையில் மீண்டும் பட்டியில் அடைப்பார்கள். ஒரு வனத்திற்குள் உள்ள இந்த மாட்டுப்பட்டியை பராமரிக்க ஆறேழு பேர் இருப்பார்கள். வருடத்திற்கு பத்து மாதம் அவர்கள் இந்த இடத்திலேயே இருந்து மாடுகளை பராமரிப்பார்கள். ராகிக்களி தவிர மாடுகளிலிருந்து கிடைக்கும் பால் மற்றும் தயிர் போன்றவற்றுடன் தங்கள் உணவுத் தேவையை முடித்துக் கொள்வார்கள். வீரப்பன் ஆட்களுக்கு ராகி மாவு கொடுத்தார்கள் என இந்த மாட்டுப்பட்டியில் இருந்த சோளகனையைச் சேர்ந்த சிலர் மீது அதிரடிப்படை சித்தரவதை நடந்ததும் உண்டு.

மூன்று மூங்கில் குடிசைகள் அங்கு இருந்தன. முறையான மேற்கூரைகள் எதுவும் இல்லை. மதியம் சாப்பாட்டு நேரம் என்பதால் நல்ல பசி. மாட்டுப்பட்டியில் ஒருவரையும் காண வில்லை. எல்லோரும் பாங்காட்டில் மாடுகளை மேய்க்க சென்றிருப்பார்கள் என அறிய முடிந்தது. மகாதேவன் அருகிலிருந்த மரத்திலேறி மண் செப்பை எடுத்து வந்தார். அது துணியால் வேடு கட்டப்பட்டிருந்தது. அதிலிருந்த புரையேற்றப்பட்ட பால் எங்களின் பசிக்கு உணவானது. மாலையில் பட்டிக்கு திரும்பும் ஆட்கள் தங்கள் ஊர்காரர்கள் வந்து சாப்பிட்டுவிட்டு போயிருப்பதை தெரிந்து கொள்வார்கள் என்றார்கள்.

மாட்டுப்பட்டியின் சரிவில் காய்ந்த மாட்டுச் சாணம் மண்போல குவிந்திருந்தது. மிகச் சிறந்த எரு. உயிர்ப்பற்ற பூமிக்குக்கூட இதனை இட்டால் உயிர் வந்துவிடும் என்று பேசியபடியே நடந்தோம். வழி முழுவதும் யானைகளின் லத்தி கிடந்தது. சில நேற்றையது. யானைகளை நாம் எதிர்கொள்ளலாம் என்றார் மாதன். வழியில் இலந்தைப்பழ மரங்களிலிருந்து அவை சிதறி கீழே விழுந்து கிடந்தன. வெகுதூரத்தில் யானையின் பிளிறல் கேட்டது. வழியில் சில இடங்களில் புற்றுக்களில் மண் பறிக்கப்பட்டிருந்தது. அது கரடியின் வேலை என்றார்கள். ஒரு சில இடங்களில் மண் தோண்டிய குழிகள் இருந்தன. அவை இருளைக் கிழங்கு தோண்டிய குழிகள் என்றார்கள். வனம் முழுவதும் அடர்ந்து மரங்களை விட உன்னிச்செடியின் புதர்களே அதிகம் மண்டிக் கிடந்தது. இந்த உண்ணிச் செடி புதர்களால் மரங்களின் வளர்ச்சி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. தொடர் நடை மற்றும் வெய்யிலின் தாக்கத்தால் வியர்வை பெருகி வழிந்திருந்தது.

வழியில் பாலக்குழி என்ற இடத்தில் முழங் கால் அளவு தண்ணீருடன் ஒரு காட்டாறு ஓடிற்று. அது தொடர்ந்து வளைந்து நெளிந்து வனத்தை சுற்றி மேட்டூர் அணையில் சென்று சேருகிறது. ஆற்றினைக் கடந்ததும் கொஞ்ச தூரத்தில் ஒரு மரத்தின் கீழே சிறிய அளவில் கற்கள் நடப்பட்ட கோயிலிருந்தது. அதனை மிகவும் சக்தி வாய்ந்த வன தெய்வமான ஏசாடப்பன் கோயில் என்றனர் பழங்குடி இளைஞர்கள். சந்தன வீரப்பன் இக்கோயிலின் பக்தர்களில் ஒருவன். அக்கோயிலின் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு வெங்கல மணியில் “வி.வீரப்பன்1992” என எழுதப்பட்டிருந்தது. சந்தன வீரப்பன் கட்டிய மணி. கர்நாடக போலீசார் இம்மணியை எடுத்துச் சென்று சில காலம் வைத்திருந்து விட்டு பின் இம்மணியை கொண்டு வந்ததால் தங்களுக்கு சில துர்நிகழ்வுகள் ஏற்படுவதாக நம்பி திரும்பவும் இங்கேயே கொண்டு வந்து கட்டி விட்டு சென்றுவிட்டார்களாம்.

இக்கோயில் அருகிலிருந்த புதரொன்றில் ஒரு சில சிலையைக் காணமுடிந்தது. அது ஒரு வீரக்கல். இரண்டு போர் வீரர்கள் இருப்பது போன்ற அச்சிலையிலும் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த அடர் வனத்தில் கிடக்கும் இச்சிலை நமக்கு வனத்தைப் பற்றி பல்வேறு புதிர்களுக்கு அழைத்துச் சென்றது. ஏறக்குறைய பனிரெண்டாம் நூற்றாண்டு சிலையாக அது இருக்கலாம் எனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் அப்பகுதியில் பல சிற்பங்கள், பண்டைய மக்கள் பயன்படுத்திய ஆட்டாங்கற்கள் போன்றவையும் இன்னமும் புதருக்குள் கிடப்பதாகவும், செல்லும் வழியை உன்னிப் புதர் போர்த்தியிருப்பதாகவும் கூறினர். ஒரு காலத்தில் பண்டைய மக்களின் வசிப்பிடம் அல்லது அரசாட்சிக்கு உட்பட்டதாக அப் பகுதி இருந்திருக்க வேண்டுமென விவாதித்தோம். தொல்பொருள் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய பகுதி அது என்பது மட்டும் தெளிவாயிற்று.

அப் பகுதியில் வீரப்பன் இருந்த சமயம் போலீசாருடன் சில மோதல்கள் நடந்துள்ளன. மேட்டூர் தண்டா பகுதியிலிருந்து டிராக்டர் போன்ற வண்டிகள் வருவதற்காக சில இடங்களில் வழி விடப்பட்டுள்ளது. வனத்தில் அதிரடிப்படையினருக்கு வழி மறக்காமல் இருக்க மரத்தில் இடப்பட்டிருந்த வழி காட்டும் குறியீடுகள் இருந்தன. சிறிது தூரம் நடந்தும் மீண்டும் காட்டாறு குறுக்கிட்டது. அந்நேரம் தண்ணீரைப் பார்த்ததும் எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் குளித்தோம். நீண்ட நடை, களைப்பிற்கு பின் ஆற்றில் குளிப்பது மிகுந்த இன்பமளிப்பதாக இருந்தது. ஆற்றின் தண்ணீர் கண்ணாடி போல தெளிவாக இருந்தது. எங்களுடன் வந்த மாதன், பசுவன் இருளைக்கிழங்கை தேடி ஆற்றின் அடுத்த கரைக்கு சென்று விட்டனர். நாங்கள் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றின் எதிர் முனையிலிருந்து சிலர் வந்தார்கள். அவர்களில் முன்னே வந்த ஆள் எனக்கு அறிமுகமானவர். அவரது உறவினரின் வழக்கு ஒன்றை நான் நடத்தினேன். என்னைப் பார்த்ததும் வக்கீல் வந்திருக்கிறார் என்றார் பின்னே வந்தவர்களிடம். அவர்கள் வனத்துறையினர்.

எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பணி இல்லாமல் போனது. நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு நடக்க இருப்பதால் அதற்காக புதர்களை சுத்தம் செய்ய வந்தோம் என்றனர். அவர்களிடம் நாங்கள் சோளகனையிலிருந்து கத்திரி மலைக்கு செல்வதை கூறினோம். இந்திய வனச்சட்டத்தில் வனத்துறையின் அனுமதியின்றி வனத்திற்கு வருவது குற்றமாகவே கருதப்படுகிறது. “இங்கே புலிகள் இருக்கிறதா? என்று கேட்டேன். நிறைய இருக்கிறது ஆனால் அவை கூச்ச சுபாவம் உள்ளவை. மனிதர்களின் சப்தம் கேட்டால் ஓடிவிடும்” என்றார்கள். பின் அவர்கள் சென்றுவிட்டார்கள். இன்னமும் செங்குத்தான கத்திரி மலை ஏற வேண்டியிருந்ததால் மீண்டும் புறப்பட தயாரானோம். அப்போது ஆற்றின் அப்பாலிருந்து கையில் இருளைக்கிழங்கை சுமந்து வந்தார்கள்.

நாங்கள் பள்ளத்தாக்கின் அடுத்த முனைக்கு வந்துவிட்டோம். தூரத்தில் மீண்டும் யானையின் பிளிறல் சப்தம். யானைகளை பார்க்கவே இயலவில்லை மீண்டும் மலையேற்றம் துவங்கியது. செங்குத்தான பாதையில் மிக அலட்சியமாக கையில் ஊன்றுகோலின்றி பழங்குடி இளைஞர்கள் ஏறினார்கள். அவர்கள் வனக்கடலின் மீன் குஞ்சுகள். மலை ஏற்றம் மிகுந்த களைப்பை தரக்கூடியதாக இருந்தது.

எங்களை முன்னே அழைத்துச் செல்லுமாறு மகாதேவனிடம் கூறிவிட்டு இருளைக் கிழங்கை சுட்டு எடுத்து வருவதாகக் கூறி மாதன், பசுவன் இருவரும் தங்கிவிட்டனர். நாங்கள் ஒரு முப்பது நிமிடம் மலை ஏறியதற்கு பின், மாதன் பசுவன் இருவரும் வருகிற சப்தம் கேட்கிறது என்றார் மகாதேவன். நகர சந்தடியில் பழக்கப்பட்ட நம் காதுகளுக்கு நுட்பமான ஒலி கேட்கும் அந்த பயிற்சியில்லாது போயிருக்கிறது. வழியில் நீளமான விலங்கு கழிவுகள் சில இருந்தன. இது சிறுத்தையின் கழிவு என்றான் மகாதேவன். ஏதோ விலங்கின் செறிக்கப்படாத எஞ்சிய மயிர்கள் அதில் மிச்சமிருந்தது. எங்களின் பின்னேயே மாதனும், பசுவனும் சுட்ட இருளைக்கிழங்குடன் வந்து சேர்ந்தார்கள். ஓரிடத்தில் அமர்ந்து இருளைக்கிழங்கை சாப்பிட்டோம். பின் மீண்டும் மலையேற்றம்.

ஏறக்குறைய இருட்டி விட்டது. இன்னமும் சிறிது தூரம்தான் என்றார்கள். முன்னே சென்ற மகாதேவன் தண்ணீர்க் குடத்துடன் எங்களை எதிர் நோக்கினார். கத்திரிமலை பள்ளியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்துள்ளார். கத்திரிமலை வந்து விட்டது என்ற நிம்மதி. சிறிது நடையில் கத்திரி மலையின் உச்சியிலிருந்தோம். நாங்கள் நடந்து வந்த பாதை அரசு உண்டு உறைவிடப் பள்ளியின் பின்புறமுள்ளது. அரசின் புதிய கட்டிடத்தில் பள்ளி நடக்கிறது. சூரிய வெளிச்சத்தில் எரியும் சோலார் விளக்குகள் பொறுத்தப்பட்டிருந்தன.

அன்றிரவு நல்லகுளிர். அப்பள்ளியின் ஆசிரியராக இருக்கும் இளைஞரை மற்ற ஆசிரியர்களோடு ஒப்பிடும்போது பரவாயில்லை எனக் கூறலாம். அவர் மாதத்தில் பாதிநாட்களாவது பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரைச் சுற்றிலும் பழங்குடி மாணவர்கள் வந்து அமர்ந்து கொள்கின்றனர். நல்ல பூக்களை தேடித்தானே தேனீக்கள் வட்டமிடும். பள்ளியின் உள்ளே இருந்த திறந்தவெளியில் குளிருக்கு தீ மூட்டி வட்டமாக உட்கார்ந்து பேசத் துவங்கினோம். பழங்குடிகள் தங்கள் சங்கத்தைப் பற்றியும் ஊர் நிலை குறித்தும் பேசினார்கள். அங்கேயே சாப்பிட்டுவிட்டு தூங்கினோம். விடிந்தவுடன் சங்கக் கூட்டம் நடத்த வி.பி.குணசேகரன் ஆயத்தம் செய்தார். கத்திரி மலையின் மங்காத்தா கோவிலின் முன்பிருக்கும் நிலத்தில் தமிழ்நாடு பழங்குடி சங்கத்தின் கொடிக்கம்பம் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தில் சங்கப்பலகை நடும் சமயம் நானும் இருந்தேன். அங்கு பழங்குடி இளைஞர்கள் சங்கத்தின் கொடி ஏற்றினார்கள். அவர்களின் சங்கக் கூட்டம் நடைபெற்றது. பழங்குடிகளுக்கு இரண்டாண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுத்த சில தொகுப்பு வீடுகளின் சுவர்கள் சரிந்து போனதை அழைத்துச் சென்று காட்டினர். சிமெண்ட் என்ற ஒன்றே இல்லாது கட்டப்பட்டிருந்தது அந்த மண் சுவர்.

மீண்டும் நண்பகல் நெருங்கும் சமயம் நாங்கள் கத்திரி மலையிலிருந்து கீழே இறங்க ஆயத்தமானோம். இம்முறை வழக்கமான மேட்டூர் கோவிந்தப்பாடி வழியில் செல்லாமல் மேட்டூர் தண்டா பகுதியில் சென்று சேரும் வழியில் செல்வது என்று முடிவானது. அந்த வழி மிக செங்குத்தான சரிவு நிறைந்தது. சற்று எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்றனர். உண்மையில் பாதை அப்படியே இருந்தது. கைகளில் ஊன்றுகோல் இருந்ததால் தான் பாதையில் இறங்க முடிந்தது. எங்கேயும் ஓய்வெடுக்காது தொடர்ந்து நடந்ததால் இரண்டு மணி நேரத்தில் அடிவாரப் பகுதிக்கு வரமுடிந்தது. பின் சமதளத்தில் ஒருமணி நேரப் பயணத்திற்கு பின் தண்டா என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கிருந்து மேட்டூர் செல்ல பேருந்துகள் இருந்தன.

இக்கத்திரி மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மருத்துவம் மற்றும் பிற தேவைகளுக்கு அவர்கள் மலையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். மலைப்பாதையோ, படிக்கட்டுகளோ கட்டித்தர வேண்டும் என்ற அவர்களது தொடர் கோரிக்கை இன்னமும் பரிசீலிக்கப்படவில்லை. இம்மலையிலுள்ள மங்காத்தா என்ற பழங்குடிக் கோயிலுக்கு வருடத்தில் சித்திரை மாதம் பெரிய கூட்டம் கூடும். ஆனால் கீழ்ப் பகுதி யிலிருக்கும் அரசு அதிகாரியான ஒரு பக்தர் தன் பக்தியை காண்பிக்கும் நோக்கில் அக்கோயிலின் அருகில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் ஒன்றை கட்டித் தந்திருப்பது பழங்குடி கடவுள்களின் அடையாளத்தை பறிக்கும் செயலாகவும், பழங்குடி கடவுள்களை இந்துத்துவ வழிபாட்டுக்குள் சேர்க்கும் விதத்திலேயே முடியும் எனவும் கருதத் தோன்றுகிறது.

அடர்வனத்தில் பயணம் செய்யும் எல்லோரும் எதிர்கொள்வது உன்னிக் கடிதான். கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறு ஒட்டுண்ணியான உன்னியானது உடலினை கடிக்கத் துவங்குகிறது. உடலில் சொறியும் இடம் தடிப்பாகிறது. இதற்கு மருந்து எதுவும் கிடையாது இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம் இக்கடியை தாங்கித் தான் தீர வேண்டும். இது கொசு போன்ற ஏதோ கடித்ததால் ஏற்படும் அலர்ஜி என்கின்றனர் மருத்துவர்கள். மொத்தத்தில் இரண்டு நாட்களில் அடர்காட்டில் நாற்பதுக்கும் மேற்பட்ட மைல்கள் நடந்திருப்போம். அது ஒரு புதிய அனுபவம். வனத்தையும் அதன் மக்களையும் நேசிப்புடன் பார்த்தால் புதிய புதிய முகங்களை அது ஒவ்வொரு முறையும் காட்டிக் கொண்டே உள்ளது.

Pin It