உலகில் பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர், பல நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பப்பட்டு வருகின்றன. உலகின் மொத்த நிலக்கரியில் பாதியை உற்பத்தி செய்யும் சீனாவில் கூட, சுரங்கங்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவின் அதானி நிறுவனம் மட்டுமே இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நிலக்கரி சுரங்கங்களை அதிக எண்ணிக்கையில் குத்தகை எடுத்து வருகிறது.
இதில் ஆஸ்திரேலியாவில் உள்ள அதானியின் கார்மைக்கல் (Carmichael coal mine) சுரங்கதிற்கு எதிராக நடந்து வரும் போராட்டம், சமீபத்திய ஆண்டுகளில் நடந்த நில உரிமைப் போராட்டங்களில் மிக முக்கியமான போராட்டமாகக் கருதப்படுகிறது.
(கார்மைக்கல் நிலக்கரிச் சுரங்கம்)
கார்மைக்கல், ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் . ஆண்டுக்கு 10 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் இந்தத் திட்டம், கடந்த 2010 ஆம் ஆண்டில் அதானியால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு சூலை 2019 இல் உற்பத்தியைத் தொடங்கியது. இதிலிருந்து உற்பத்தியாகும் நிலக்கரியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக, குயின்ஸ்லாந்து அரசிடமிருந்து அபோட் பாயிண்ட் (Abbot Point) நிலக்கரி முனையத்தையும் அதானி நிறுவனம் வாங்கியது.
பெரும் தடுப்புப் பவளத்திட்டு:
The Great Barrier Reef எனும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் தொகுதி 2,900 பவளத் திட்டுக்களையும், 900 தீவுகளையும் கொண்டுள்ளது. ஏறத்தாழ 3,44,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பவளத்திட்டு குயின்சுலாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ளது. இவை டொரெசு தீவில் வாழும் ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் ஒரே வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன. உலகப் பாரம்பரியக் களமாக (World Heritage Site ) யுனெஸ்கோவினால் பட்டியலிடப்பட்ட இதனை விண்வெளியில் இருந்தும் காணமுடியும்.
அதானியின் சுரங்கம், ஆண்டுக்கு 10 மில்லியன் டன் நிலக்கரியை வெட்டி, 200 கிலோ மீட்டர் ரயில் பாதை வழியாக குயின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள அபோட் பாயிண்ட் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யும்.
அங்கிருந்து ஏற்றுமதி செயப்படும் நிலக்கரி, கப்பல்கள் மூலம் கிரேட் பேரியர் ரீஃப் வழியாக இந்தியா மற்றும் பிற நாடுகளை சென்றடைகிறது.இதனால், பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் ஆன இந்த பவளத் திட்டுக்கள், இந்த நிலக்கரி ஏற்றுமதியால் இன்று மிகப் பெரும் அழிவை சந்தித்து உள்ளன. எரிபொருட்கள் போக்குவரத்து காரணமாக பவளக் கடலின் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் பவளப் பாறைகள் அழிந்து விட்டன. மேலும் விஞ்ஞானிகள் பவள லார்வாக்களின் (Larva) அளவும் 90 சதவிகிதம் குறைந்துவிட்டதைக் கண்டறிந்தனர்.
ஆயிரக்கணக்கான மீன்கள், சுறாக்கள் மற்றும் திமிங்கலங்களின் வாழ்விடமாக உள்ள கிரேட் பேரியர் ரீஃப் இன்று அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு கிரேட் பேரியர் ரீஃப் அளிக்கும் பங்கு சுமார் 640 கோடி டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில், இந்த சுரங்கம் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களில் ஒன்றாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் கருதப்பட்டது. ஆனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே கார்மைக்கல் சுரங்கத்தினால் பல சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படத் துவங்கின.
2019 ஆம் ஆண்டில் நடந்த ஆய்வுகளில், அதானி நிலக்கரிக்கு அருகில் இருந்த நீர்நிலைகள் கணிசமாக குறைந்து போனதும், அதிக அளவு நீர் சுரங்கத்தினால் பயன்படுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. அங்குள்ள நிலத்தடி நீர் , கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 50 மீட்டர் வரை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள்:
மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பழங்குடியினரான வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (Wangan and Jagalingou) மக்கள் வாழும் பகுதி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் வறண்ட பகுதியாகும். இயற்கையை மிகவும் நேசிக்கும் இம்மக்கள், பேரழிவு தரும் கார்மைக்கல் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக ஒன்று திரண்டு நிற்கின்றனர். அவர்களின் ஒரே நீர்ஆதாரத்தை பாதுகாக்கப் பல்வேறு வடிவங்களில் உறுதியான போராட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் தங்கள் உயிரை விட மேலாக மதிக்கும் டூங்மாபுல்லா நீரூற்றுகளிலிருந்து வரும் நீர், கார்மைக்கல் மற்றும் பெல்யாண்டோ என இரு ஆறுகளை நிரப்புகிறது.வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்களுக்கு நீரூற்றுகள் ஒரு புனிதமான இடம். வாங்கன் இனத்தவரும் பழங்குடி நிலஉரிமை ஆர்வலருமான அட்ரியன் புர்ரகுப்பா (Adrian Burragubba), "இந்த இடத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் - ஏனென்றால் இதுஎங்கள் கனவு, இது எங்கள் கடந்த காலம், இது எங்கள் நிகழ்காலம், இது எங்கள் எதிர்காலம்." என்று கூறுகிறார்.
வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்களுக்கு, அதானி சுரங்கத்தினால் பல நேரடி பாதிப்புகள் ஏற்படத் துவங்கின. சுரங்கத்தின் அதிகப்படியான நீர் பயன்பாடு (ஆண்டுக்கு 12.5 பில்லியன் லிட்டர்) அருகிலுள்ள டூங்மாபுல்லா நீரூற்றுகளை நேரடியாக பாதித்தன.
சுமார் 4.7 பில்லியன் டன் கார்பன் மாசுபாட்டை ஏற்படுத்தி, பல்வேறு காட்டு விலங்குகளையும்அழிக்கும் சுரங்கத்திற்கு எதிராக அம்மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கினர்.
மக்களின் எதிர்ப்புக்குரல் எழும்பிய உடன், அதானி நிறுவனம் முதலில் சட்ட ரீதியாக அவர்களை அணுகியது. 2012 இல் உள்நாட்டு நில பயன்பாட்டு ஒப்பந்தத்தில் (Indigenous Land Use Agreement - ILU) கையெழுத்திட பழங்குடி மக்களை அதானி நிறுவனம் நிர்ப்பந்தித்தது. ஆனால் அவர்கள் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்தனர். பின் மீண்டும் 2014 இல் அந்நிறுவனம் முயற்சி செய்தது. அப்போதும் மக்கள் நிராகரித்தனர்.
2014 க்குப் பிறகு, அதானி நிறுவனம் பழங்குடியினர் குழுவில் உள்ள சிலருக்கு பணம் கொடுத்து அவர்களை ILU-க்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்தனர். இதனால் போராட்டக் குழுவிற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. ஏப்ரல் 2016-இல் நடைபெற்ற கூட்டத்தில் சுரங்கத்திற்கு ஆதரவாக 294 வாக்குகள் (மொத்தம் 295 வாகக்குகள்) விழுந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த வாக்கெடுப்புக்குப் பின் அதானி நிறுவனம் செய்த மிகப் பெரும் திரைமறைவு வேலைகள் பின்னர் அம்பலாமாகின.
கூட்டத்தில் வாக்களித்த பலர் வாங்கன் மற்றும் ஜெகலிங்கோ மக்கள் இல்லை என்றும், சில வெளி நபர்கள்வாக்களிப்பதற்காக பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டதாகவும் புர்ரகுப்பா மற்றும் அவரின் மகன் கோடி மெக்காவோய் (Coedie McAvoy) கூறினர். உண்மையான பழங்குடி மக்களை புறந்தள்ளிவிட்டு வெளி ஆட்களை கொண்டு நடத்தப்பட்ட அந்த போலி சந்திப்பை எதிர்த்து பழங்குடி மக்கள் வழக்கு தொடர்ந்து போராடினார்கள். ஆனால் பண பலமும் அதிகார பலமும் உடைய அதானியை எதிர்த்துப் போராடியதால் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். பாசிச மனப் போக்குடையவர்களால் ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தில் தனக்கு இருந்த செல்வாக்கால் பல சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தது அதானி நிறுவனம். இதனால் புர்ரகுப்பா மற்றும் அவரின் மகன் கோடி மெக்காவோய் வங்கி திவால்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்படி பல பொருளாதார இழப்புகளையும் தனிப்பட்ட இழப்புகளையும் சந்தித்த பிறகும், போராட்டக் குழுவில் இருந்த பழங்குடி மக்கள் சற்றும் மனம் தளரவில்லை.
இதற்கிடையில், வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்களிடையே பிரிவினையை தூண்டிய அதானி நிறுவனம், அதில் வெற்றியும் பெற்றது. பூர்வீக தலைமை சட்டம் எனப்படும் Native Title Act (1993) கீழ் சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன.
பழங்குடியின மக்களின் நிலங்களுக்கு வரையறுக்கப்பட்ட உரிமைகளை இந்த சட்டங்கள் மறுத்தன. சுரங்கத்தை எதிர்க்கும் மக்களை வெளியேற்றவும், அவர்களை தனிமைப்படுத்தவும், மிகக் கவனமாக சட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. சுரங்க நிறுவனங்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்ட இந்த சட்டங்கள், பழங்குடியின மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவேற்றவும் செய்தன.
அற வழியில் போராடிய பழங்குடி மக்கள், மீண்டும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள் பலஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் நில உரிமை மீட்பை நீதிமன்றங்களின் வாயிலாக கோரியபோதும், அதானி தலையீடு காரணமாக அது இன்னும் தீர்க்கப்படவில்லை. வழக்கின் நீதிபதி கூட சட்டத்தை திருத்தி, அதானிக்கு ஆதரவான தீர்ப்பு வரும் வரை வழக்கை ஒத்தி வைத்தார்.
வழக்கு நடவடிக்கைகள் தாமதமானதால், ஆகஸ்ட் 2019-இல், குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், அதானி குத்தகைக்கு எடுத்த பகுதிகள் மீது வாங்கன் மற்றும் ஜகாலிங்கோவின் நில உரிமையை நீக்கியது. மேற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் பழங்குடி நில உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
ஆனால் பழங்குடி மக்கள் (அரசியல்வாதிகள் பணம் கொடுத்து உருவாக்கும்) தீர்ப்புகளை ஏற்கவில்லை. சுரங்கதிற்கான முதலீட்டைத் தடுப்பதற்காக முக்கிய நிதி நிறுவனங்களைச் சந்தித்தனர். தங்கள் போராட்டத்தை பல்வேறு நிலைகளில் முன்னோக்கி நகர்த்தி உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 2019-இல், பழங்குடியினர் அதானியின் சுரங்கதிற்கு எதிராக முகாம் அமைத்து, தங்கள் பண்பாட்டு விழாவைக் கொண்டாட ஆரம்பித்தனர். சுரங்கதிற்குச் செல்லும் சாலையை மறித்து, அவர்களின் பண்பாட்டு புனித நெருப்பை ஏற்றி, நான்கு நாட்களுக்கு நடனத்துடன் தங்கள் விழாவினைக் கொண்டாடினர். இது வெறுமனே ஒரு முற்றுகைப் போராட்டம் மட்டும் அல்ல, காவல்துறைக்குத் தங்கள் வலிமையை காட்டும் போராட்டமும் கூட.
நான்கு நாட்கள் முற்றுகை போராட்டத்தின் போது, காவல்துறை நீண்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். இருப்பினும், பழங்குடி மக்கள் அதானி சுரங்கத்தில் வேலைகள் நிறுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்கள். ஐந்தாவது நாள் காலையில், நாற்பதுக்கும் மேற்பட்ட குயின்ஸ்லாந்து காவல்துறையினர் அந்தக் குழுவை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அவர்களின் புனித நெருப்பைத் தள்ளி, சுரங்கத்தின் சாலையை மீண்டும் திறந்தனர்.
காவல்துறையின் இந்த அடக்குமுறையால் மக்கள் சோர்ந்து விடவில்லை. கடந்த ஆறு மாதங்களாக மீண்டும் அதானியின் சுரங்கதிற்கு எதிராக முகாம் அமைத்துள்ளனர். பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆதரவுடன் உறுதியாக நின்ற வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்களுக்கு இது ஒரு நீண்ட மற்றும் கடினமான போராட்டமாக இருந்தது. ஆனால் சில முக்கியமான வெற்றிகளும் அவர்கள் போராட்டத்திற்குக் கிடைத்துள்ளன. சுரங்கதிற்கான முதலீட்டைத் தடுப்பதற்காக முக்கிய நிதி நிறுவனங்களைச் சந்தித்ததால், கிட்டத்தட்ட நூறு நிறுவனங்கள் அதானியுடன் இணைந்து பணியாற்றுவதை நிராகரித்துள்ளன.
வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக “Standing Our Ground” (எங்கள் நிலத்தோடு நிற்பது) என்ற பரப்புரையை தொடங்கினார்கள். மே 2021 இல், ஆஸ்திரேலியா முழுவதிலுமிருந்து பழங்குடி மக்கள் ஒன்று திரண்டு, “டூர் டி கார்மைக்கேல்” என்ற சைக்கிள் பேரணி நடத்தினர். கிரிகோரி நெடுஞ்சாலையில் இருந்து அதானி சுரங்கம் வரை சென்ற இந்த விழிப்புணர்வு பேரணி பலரது கவனத்தையும் ஈர்த்தது.
சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு அழிவுத் திட்டங்களை அதானி நிறுத்தினால் மட்டுமே போராட்ட முகாமை விட்டு வெளியேறுவது என்ற குறிக்கோளை மட்டுமே கொண்டு வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
உலகில் அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியா, கார்மைக்கேல் சுரங்கத்தின் முக்கிய வாடிக்கையாளர் என்பதில் வியப்பில்லை. ஆண்டுக்கு 10 மில்லியன் டன் நிலக்கரியை அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் நோக்கிலேயே, இந்தியாவில் அதானி துறைமுகங்கள்விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.
ஜூலை 2016 இல், மத்திய அமைச்சரவை கன்னியாகுமரியில் உள்ள இணையத்தில் ஆண்டுக்கு 127 மில்லியன் டன் சரக்குகளை நிர்வகிக்க 3.78 பில்லியன் டாலர் முதலீட்டில் புதிய துறைமுகத்தை உருவாக்க அனுமதியை வழங்கியது. "கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030" ( Maritime India Vision 2030) என்ற திட்டத்தின் கீழ் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் 2030-க்குள் கன்னியாகுமரியில் டிரான்ஷிப்மென்ட் துறைமுகத்தை உருவாக்கவும் முன்மொழிந்துள்ளது. கூடுதலாக, 2030-க்குள் இந்திய துறைமுகங்களில் அனுப்பப்படும் சரக்கு கப்பல்களின் எண்ணிக்கையை 75% க்கும் அதிகமாக உயர்த்த அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது.
தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகில் முன்மொழியப்பட்ட 4,000 மெகாவாட் செய்யூர் அனல் மின் நிலையத்திற்கு ஆண்டுக்கு 12 முதல் 14 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படும். அதானியின் சுரங்கதிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காகவே, இத்தனை துறைமுகங்களும் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
கடனில் மூழ்கி தவிக்கும் காரைக்கால் துறைமுகத்தை அதானி குழுமம் கைப்பற்றத் துடிப்பதும் இதே காரணத்திற்காகத் தான். இதன் பின்னணியில் புதுச்சேரியில் நிலவும் அரசியல் குறித்து மே 17 இயக்கக் குரல் இணையதளத்தில் ஏற்கனவே கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை 'மீன்பிடி தடை மண்டலம்' என்று அறிவிக்குமாறு அதானி குழுமம் தேசிய நீர்நிலையியல் அலுவலகத்திற்கு எழுதிய கடிதம், கடல் வளம் அதானி கைகளுக்குச் சென்றால், மீனவர்களின் நிலை கேள்விக்குறி தான் என்பதற்கு ஒரு சிறு சான்றே.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேசிய பணமாக்கல் ( National Monetisation Pipeline) திட்டத்தின் மூலம் மோடி அரசால் 6 லட்சம் கோடிக்கு, பல்வேறு சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சுரங்கங்கள் மார்வாடி-பனியா கும்பலுக்கு குத்தகைக்கு விடப்படும். இனி இந்தியாவின் பொருளாதாரம் அவர்கள் கைகளில் வீழும்.
ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் தங்கள் நிலத்தை பாதுகாக்கப் போராடுகிறார்கள். அவர்களை போல், அம்பானி-அதானி போன்ற பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்கு, தமிழர்கள் நம் கடல் வளம், கனிம வளம், நீர் வளம் ஆகியவற்றை ஒருபோதும் விட்டு கொடுக்கக் கூடாது.
- மே பதினேழு இயக்கம்