‘வெளைஞ்சா வள்ளி திருமணம் வெளயாட்டி அரிச்சந்திர மயான காண்டம்’ இது வளமையோடு நாடகத்தைத் தொடர்புபடுத்திச் சொல்லப்படும் ஒரு தொடர். கிராம விழாவுக்கு இரவு முழுக்கக் கூத்து (அ) நாடகம் நடத்தினால் அவ்வருடம் நல்ல மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. மழை பொழிந்து வளம் பெருகி பால்பானை பொங்கித் திளைக்கும் காலமாக இருந்தால் அவ்வருடத் திருவிழாவுக்கு, காதற்சுவையும் இளமையும் பொங்கித் ததும்பும் வள்ளி திருமணம்! வானம் பொய்த்து வளம் பிழைப்பறிந்து வெள்ளாமை எனப்படும் விவசாயம், விளைபொருட்கள் வீடு வந்து சேரவில்லை என்றால்.... நெற்கதிர் பால் கட்டுவதற்கு முன்னமேயே வறட்சியில் கருகி ‘சாவி அறுக்கும்’ அவல நிலை ஏற்பட்டால்

துய்யதோர் முனிவருக்கு தொல்புவி அரசு தந்தேன்

கைப்பொருள்தனைப் பிரிந்து காதலி மகனை விற்றேன்

பொய்யது உரைக்க அஞ்சிப் புவிதனில் அடிமையானேன் - இந்த

வையகமெல்லாம் காத்தநான் காசி மயானம் காக்கப் போகிறேன்

சிவமே.... சிவமே....

என்று காவியுடை தரித்து பிணம் சுடுகோல் ஏந்தி பிழியப் பிழிய சோகம் பாடிடும் அரிச்சந்திர மயான காண்டம்.

தைமாதம் அறுவடை; மீறிப் போனால் மாசி. பங்குனியில் இருந்து நாடகப் பருவம் தொடங்கி விடும். புரட்டாசி வரை விழாக்கள்; நாடகங்கள் களைகட்டும்.

மழை வராத பருவத்தில்தான் நாடக நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும். அதிலும் வானியல் பற்றிய, இயற்கை பற்றிய எளிய கிராமத்து மனிதர்களின் புரிந்துணர்வும் அறிவும் தெளிவும் வியக்க வைப்பவை. ஆனாலும் நாடகம் நடக்கவிருக்கும் நாளில் மேகம் திரண்டு மழை பொழிவதற்கான ஆயத்தங்கள் நடந்தால்... நாடகம் பார்க்க வெட்டவெளியில் பாயும் தலையணையுமாய் வந்து கூடியிருக்கும் எளிய மனிதர்களின் கதி? எத்தனையோ மைல்களுக்கும் அப்பாலிருந்து வண்டிகட்டிக் கொண்டு கிராமம் கிராமமாய் வந்து கூடியிருக்கம் மக்கள் மழைக்கு ஒதுங்க ஏது இடம்? எனவே நாடகம் நடக்கும் நாட்களில் மழை பெய்யக் கூடாது என்பது கிராம மக்களின் விருப்பம்.

இரவு பத்து மணிக்குத் தொடங்கும் நாடகம் அதிகாலை ஆறு மணி வரை தொடரும். சில நாடகங்கள் ஏழு மணி வரை கூட நடப்பது உண்டு. கலைந்த தலையும் உறக்கமிழந்த விழிகளும் சுருட்டிய பாயுமாய் சனங்கள், அதிகாலை ஞாயிறு உடல் சுடுவதைக் கூட பொருட்படுத்தாமல் எழுந்து நின்றபடி நாடகம் ரசிப்பார்கள். அவ்வளவு அழுத்தமான ஆர்வமும் உற்சாகமும் மழையால் அழிந்துபடுமோ என்ற கவலை அவர்களிடம் இருப்பது இயல்புதானே?

நாடக நிகழ்வின்போது மழைவருவதற்கான அறிகுறி தோன்றினால் என்ன செய்வது? மழையை வருந்தி வருந்தி அழைப்பதற்குச் சடங்குகள் பல இருப்பது போலவே மழை வராமல் இருக்கச் செய்வதற்குச் சடங்கு ஏதேனும் உண்டா? தென்னை ஓலையால் கொடும்பாவி செய்து தெருவெங்கும் இழுத்துச் சென்று, இறுதியில் கொடும்பாவி எரிப்பது என்பது மழை வேண்டும் சடங்கு. வீடுதோறும் அரிசி சேகரித்து ‘மழைக்கஞ்சி’ செய்து வழிபடுவது மற்றொரு சடங்கு. குளக்கரை பிள்ளையார் மீது மிளகாய் அரைத்துப் பூசிவிட்டால் தம் உடலின் மீதான காந்தல் பொறுக்கமாட்டாமல் பிள்ளையார் மழை பொழிவிப்பார் என்பது நம்பிக்கை. அதைப்போல மழை வரவேண்டாம் என்பது என்ன சடங்கு உண்டு?

முற்றிய உரித்த தேங்காயைத் திருநீறுபூசி ஒரு துணியின் நடுவில் வைத்து மூடி முடிச்சிட்டு, நாடகக் கொட்டகையின் கூரை மீது போட்டுவிட்டால் மழை வராது என்ற நம்பிக்கை உள்ளது.

நாடகக்காரர்கள் ஊருக்கு வந்த பிறகு மழைபொழிய ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது? வேறு வழியில்லை மழைக்காக பரஸ்பரம் வருத்தப்பட்டு நாடகம் நடத்த முடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு வந்த வாகனத்திலேயே புறப்பட்டுப் போய்விடவேண்டியதுதான். கொடுத்த அட்வான்ஸை - முன்தொகையை - ஊரார் திருப்பிக் கேட்கமாட்டார்கள். அதுபோலவே நடத்தாத நாடகத்திற்குப் பணம் கேட்டு நடிகர்கள் நிற்பதும் மரபில்லை. “என்ன செய்யுறது விதிச்சது அவ்வளவுதான். இந்த ஊருக்காசு உனக்குக் கெடயாதுன்னு சாமி சொல்றாரு போல.... சாமியே சொன்னப்பிறகு நாம என்னங்க சாதாரண ஆசாமி...” என்பார்கள். இவர்கள் சாமி என்று குறிப்பிடுவது தவத்திரு சங்கரதாச சுவாமிகளை. அவர்தான் இவர்களுக்குப் படியளக்கும் கடவுள்.

சரி, எப்போது, மழைபெய்தாலும் சம்பளம் தருவார்கள்? கலைஞர்கள் கையில் தொட்ட அரிதாரத்தை நெற்றியில் வைத்துவிட்டாலே... முழுச் சம்பளப் பணத்தையும் எண்ணி வைத்து விடவேண்டும். அரிதாரம் பூசிய பிறகு மழையின் காரணமாக மட்டுமல்ல, எதன் காரணமாக நாடகம் நிறுத்துப்பட்டாலும் முழுச் சம்பளத்தையும் தந்து விட வேண்டும். அரிதாரம் பூசி, மேடையேற முடியாவிட்டாலும் இதுதான் நிலைமை. இந்த சட்டத்தை யார் போட்டார்கள்? யார் இதற்குக் காரணகர்த்தா? தெரியாது. ஆனால் இது காலங்காலமாகக் கலையை மதித்துப் போற்றிப் புரந்து வருகிற சாதாரண மக்களின் வழக்கம். நாலணா, எட்டணாக்களுக்காகப் பேருந்தில் நடத்துனரோடு கூச்சநாச்சமில்லாமல் சண்டை பிடிக்கிற முரட்டு மனிதர்களின் வழக்கம். அந்த எளிய மனிதர்கள் வாழ்க!

குட்டி நடிகன்

வயதிற் பெரிய நடிகர்களால் ஏற்படும் பிரச்சினைகளால் பல பாலநாடக சபாக்கள் தோன்றி வளர்ந்தமையை நாம் அறிவோம். ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்கும் பாலநாடகசபா அனுபவங்களைப் பல நாடகக்கலைஞர்கள் எழுத்தில் பகர்ந்துக்கொண்டுள்ளனர். ஒளவை டி.கே. சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ பம்மல் சம்பந்த முதலியாரின் ‘நாடகமேடை அனுபவங்கள்’ முதலானவை மிகச்சிறந்த பதிவுகளாகும்.

பெரியவர்களுக்கான பாத்திரங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை இசை நாடகமரபு தொடர்ந்து வளப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. ஆனாலும் சிறுவர் பாத்திரங்களில் வயது முதிர்ந்த நடிகர்கள் நடித்த போதிலும், அவ்வாறான நடிப்பு விதந்தோதப்பட்டுப் புகழப்பட்ட போதிலும் அது வரவேற்கப்பட்ட ஒன்றல்ல. எனவே சிறுவராக நடிக்கச் சிறுவர்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். அரிச்சந்திர மயான காண்டத்தில் அரிச்சந்திரன் - சந்திரமதி தம்பதியினரின் மைந்தனாக வரும் லோகிதாசன், பவளக்கொடி நாடகத்தில் அல்லி ராணியின் புதல்வனாக வரும் புலந்திரன் என இசைநாடகப் பிரதிவெளியெங்கும் சிறுவர் பாத்திரங்கள் நிறைய உள்ளன. எனவே இப்பாத்திரங்களை ஏற்க நடிகர்களும் தேவைப்படுகின்றனர்.

ஸ்பெஷல் நாடக அமைப்பில் பெரும்பாலும் ஸ்தீரிபார்ட் நடிகைகள் தங்களின் குழந்தைகளையே மேற்குறித்த சிறுவர் பாத்திரங்களுக்குத் தயார் செய்கின்றனர். சந்திரமதி, அல்லி போன்ற வேடமேற்கும் நடிகைகள், தமது குழந்தைகளையே பயிற்றுவித்து அழைத்துச் செல்வதில் பலவிதமான பலன்கள் உள்ளன. குட்டி நடிகர்களுக்கு அளிக்கப்படும் சிறுதொகை, கூடுதல் வருமானம் என்பதோடு அவர்களின் உடன்வருகை துணையாகவும் பாதுகாப்பாகவும் அமைகிறது.

குட்டி நடிகர்கள் பெரும்பாலும் பள்ளி செல்கின்றனர். நாடக நிகழ்வு அன்று அரைநாளும் நாடகம் முடிந்த மறுநாள் முழுநாளும் பள்ளி செல்வதிலிருந்து விலக்குப் பெற பெற்றோரிடம் உரிமையும் பெற்றவர்களாக உள்ளனர். நாடகத்தில் தங்களின் பாத்திரத்திற்கான வசனத்தையும் பாடல்களையும் கற்றுக் கொண்டு விடுகின்றனர். இனிமையால் பாடும் திறனைப் பெற்றும் இருக்கிறார்கள். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா என்ன?

திருவிழாக்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் தருபவை. திருவிழாக்களில் நடத்தப்படும் நாடகங்களில் பாத்திரமேற்று நடிக்கும் குட்டி நடிகர்களுக்கும் அதே மாதிரியான குதூகலம் இருக்குமாவெனத் தெரியவில்லை. இருக்கலாம். நடிகர்கள் ஆனாலுமென்ன அவர்களும் குழந்தைகள் தானே?

அரிச்சந்திர மயான காண்டத்தில் மன்னன் மகனாகப் பிறந்த லோகிதாசன் தன் தாயோடு கால கண்டஅய்யர் வீட்டில் அடிமையாக விற்கப்படுகிறான். அங்கே அய்யரும் அவன் மனைவியும் லோகிதாசனை விரட்டி விரட்டி வேலை வாங்குவார்கள். அவனோ புன்னகை கழியாத முறுவல் முகத்துடனே பணி செய்வான். தன் தாயிடம் சோர்ந்த முகத்தோடு ‘பசிக்குது அம்மா....’ என்பான். அய்யரின் மனைவியோ சோறு வழங்க மாட்டாள். சந்திரமதி வாடிய முகத்தோடு தன் மகனின் முகம் நோக்குவாள். அவன் ‘அம்மா... பசி தாங்க முடியாமல் இருக்கிறது... கொஞ்சம் நீராகாரமாவது கேட்டுப் பெற்றுத் தாருங்கள்....’ என்று மன்றாடுவான். லோகதாசனின் பணிவும் மெலிந்த குரலும் அப்பாவியான முகமும் கண்டு நாடகம் பார்க்கும் பெண்பார்வையாளர்கள் முந்தானையால் தம் கண்களில் வெள்ளமெனப் பெருகும் கண்ணீரைத் துடைத்தபடி இருப்பார்கள்.

நீராகாரம் மறுக்கப்பட்டதும் அல்லாமல் லோகிதாசன் மீது மற்றொரு பணியும் திணிக்கப்படும். அதாவது அய்யரின் வீட்டிற்குப் புல் அறுத்துக் கொண்டு வர வேண்டும். லோகிதாசன் முகமலர்ச்சியோடு புறப்படுவான் அவனுடன் பக்கத்து வீடுகளின் பார்ப்பனச் சிறுவர்களும் புல் அறுக்கச் செல்வார்கள். புற்களுக்கிடையே இலை தழைகளை ஒடித்து மறைத்து வைத்து வீட்டை ஏமாற்றுலாமெனப் பார்ப்பனச் சிறுவர்கள் திட்டமிட, லோகிதாசனோ அதற்கு உடன்பட மறுக்கிறான். அவ்வாறு ‘ஏமாற்றுவது பாபம்’ என்கிறான். லோகிதாசன் அறுத்துச் சேர்க்கும் புல்லிலிருந்து திருடித் திருடி தங்களின் புற்கட்டுகளை நிறைத்து விடுகிறார்கள் பார்ப்பனச் சிறுவர்கள். ஓங்கி வளர்ந்த புற்றருகே புல் அறுக்கும் லோகிதாசனை அரவு தீண்டுகிறது. பாம்பின் விடமேறி நீலம்பாரிக்கும் உடலுடன் கிடக்கம் லோகிதாசன், தன் நண்பர்களாகிய பார்ப்பனச் சிறுவர்களிடம் “எனது இந்த புல் கட்டினை எங்கள் எஜமானராகிய கால கண்ட அய்யரிடம் சேர்ப்பித்து விடுங்கள். எஜமானி அம்மாளிடம், ‘லோகிதாசன் தனக்கு இடப்பட்ட பணியைச் செய்து முடித்தபிறகே இறந்தான்’ என்று தெரிவியுங்கள். என் தாயாரிடம் அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமானால் லோகிதாசன் உங்கள் வயிற்றிலேயே மீண்டும் பிறக்க விரும்பினேனென்று தெரிவித்தான் என்று கூறுங்கள்...” என்றும் கூறிவிட்டு உயிர் துறப்பான்.

அவலச் சுவைமிகுந்த இந்நாடகத்தின் இன்றியமையாத அவல நிலைப் பாத்திரமாக வெளிப்படும் லோகிதாசன் பாத்திரம் குறிப்பிடத்தக்கது ஆகும். அவலமும் துக்கமும் பொங்கிப் பிரவாகமெடுக்க... லோகிதாசன் பாத்திரமேற்கும் குட்டி நடிகர்கள் மிகவும் அற்புதமாகத் தங்கள் நடிப்பினை வெளிப்படுத்துவார்கள்.

பவளக்கொடி நாடகத்தின் கதை அர்ச்சுனனின் திருவிளையாடல்களைச் சொல்வதுதான். அர்ச்சுனனுக்கும் அல்லிராணிக்கும் பிறந்த புலந்திரன் சண்டை செய்கிற போது, “போடா ... உன் தேர்... பெரிய பவளத்தேரோ...” என்று இகழ்ந்து பேசுகின்றனர். புலந்திரன் அரண்மனைக்குத் திரும்பி தன் தாயான அல்லியிடம் தனக்குப் பவளத்தேர் வேண்டும் என்கிறான். பவளம் பவளநாட்டில் கிடைக்கும் என்பதையும் அதை எடுத்துவர அர்ச்சுனனை பவள நாட்டிற்கு அனுப்புகிறாள். அங்கே பவளநாட்டிளவரசி பவளக்கொடியைக் கண்டு அர்ச்சுனன் காதலுறுவதும் அதற்கு கிருஷ்ணன் உதவி புரிவதும் தொடர்ந்து எழும் பிரச்சினைகளைக் கிருஷ்ணன் உதவி புரிவதும் தொடர்ந்த எழும் பிரச்சினைகளைக் கிருஷ்ணன் சமாளிப்பதுமாகக் கதை நீளும்.

நாடகத்தில் சக விளையாட்டுத் தோழர்களுடன் நட்புறவு பாராட்டுபவனாகவும் தனது தேரை உடைத்தவர்கள் மீது பகையுணர்வு பராட்டுபவனாகவும் பவளத்தேர் கேட்டு அடம்பிடிப்பவனாகவும் சமாதானங்களில் உடன்படாதவனாகவும் வெளிப்படுகிற பாத்திரம் இச்சிறுவன் பாத்திரம்.

தன் தாயுடன் நாடகத்திற்கு வந்திருக்கிறான் அந்தச் சிறுவன். அல்லியாக நடிக்கும் தனது தாய் தனக்கு ஒப்பனையிட வாகாக முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிறான். முடிந்தது ஒப்பனை. மேடையிலே பிரவேசிக்கத் தயாராக அரங்கின் பக்கவாட்டு மறைப்பில் நிற்கிறான். அரங்கில் அல்லி தர்பார். பபூன் காமிக் பெண்ணாக வேடமிட்டிருக்கிறார். “மாதம் மும்மாரி பெய்கிறதா? மக்களெல்லாம் இந்த அல்லி ராணியின் ஆட்சியிலே சுபிட்சமாக இருக்கிறார்களா?” என வினவுகிறார் அல்லி. தோழியாக வேடமிட்டிருக்கும் பபூன் காமிக் மிகவும் நகைச்சுவையாகப் பதில் கூறிக் கொண்டிருக்கிறார். அர்ச்சுனனாகிய தன் கணவன் மீது ஏற்பட்ட கோபத்தால் அல்லி, தன் அரண்மனையில் ஆண் வாசனையே இல்லாமல் வைத்திருக்கிறாள். அதைச் சுட்டிக்காட்டும் வகையில் பபூன் காமிக் “அம்மா தங்கள் அரசாட்சியில் குடிகள் யாவும் சௌக்யமே. ஆனால் எனக்குத்தான் கல்யாணம்...” என்று இழுக்க, அல்லி கோபமுற்று “என்ன கல்யாணமா?” ஏன வினவுகிறாள்.

“இல்லம்மா... அரண்மனையில் இருந்து கல்யாண முருங்கை செடி கேட்டிருந்தேன்... அதான்...” என்று சமாளிக்க பார்வையாளர்கள் ரசித்துச் சிரிக்கின்றனர். தோழி வேடமிட்டிருக்கிற பபூன்காமிக் ஏதாவது ஏடா கூடமாய் உளறுவதும் அல்லி கோபமுற்று தன் இடையிலே அணிந்திருக்கிற உடைவாளை உருவும்போது, ஏதாவது பேசி சமாளிப்பதுமாக அவை கலகலப்பாக இருக்கிறது. அல்லி, தன் கணவன் மீது கோபப்பட்டு வாளால் காயமேற்படுத்தியதாகவும் எனவே அர்ச்சுனன் உடலில் தழும்பு ஒன்று உண்டு எனவும் எனவே அர்ச்சுனனிடம் ஆணழகனுக்குரிய 32 லட்சணங்களில் ஒன்று குறைவுபட்டுவிட்டது என்றும் ஒரு கதை உண்டு. அல்லியின் கோபமும் வாள்வீச்சும் பிரசித்தி பெற்ற ஒன்று. எனவே அல்லி, பபூன் காமிக்கின் வார்த்தைகளில் கோபமுற்று வாளை உருவும் போதெல்லாம், பபூன் தனிமொழியாக “அடியாத்தீ... கட்டுன புருசனையே கத்தியால் வெட்டுன பொம்பள...” என்று பதறுவதைக் கண்டு பார்வையாளர்கள் சிரிப்பார்கள்.

தர்பார் காட்சி முடிவுற்றதும் அல்லியின் புதல்வன் புலந்தரனின் வருகைக்காட்சி.

“தாயே போற்றினேன் பாதம்

தந்தருள் ஆசீர்வாதம்

நேயமுடனே இந்த நிலத்தை ஆண்டிடும் சொந்தத் (தாயே...)

வீரம் புகழ் செல்வங்கள்

விருத்திமென் மேலுமுற்ற

விநயகுணராணியே, விருப்பமுடனென்னைப்பெற்ற” (தாயே...)

புலந்திரன் தாயை வணங்கி முடிக்க, தன் மகனை அருகே அழைத்து உச்சி முகர விரும்பிய அல்லி, புலந்திரனைத் தன்னருகே அழைக்கிறாள். அவனோ அருகில் வர மறுக்கிறான்...

புலந்திரன் : நான் கேட்கும் பொருளைத் தருவேனென்றால்

உந்தன் கிட்டே வருவேனின்று

கிட்டவருவேனின்று

அதற்கட்டி இல்லையே ஒன்று

அல்லி : நாட்டிலுள்ள பொருள் யாவுமுனக்காக

நான் வைத்திருக்கும் போது

நீ கேட்ட பொருளைத் தராமலிருப்பேனோ

கிட்டியதனை ஓது

புலந்திரன் : சொக்கர் மீனாகூஷியின் சத்தியமாக

நீ சொன்ன பொருளைத் தர

இக்கணம் சம்மதித்தேன் பொருளைத் தர

இன்னும் அருகில்வா

என்றதும் மகிழ்ந்து அருகே வருகிறான் புலந்திரன். அல்லி அவன் வேண்டுவதைக் கேட்க...

“ஆண்டவன் சொக்கர் மீனாகூஷி கிருபையினாலெனக்கு

வேண்டிய செல்வங்கள் நீ யளித்தாய் விளையாடுவதற்கு

ஈண்டும் சிறுவர்களெல்லா மென்னைப் புகழ் பேசுவதற்கு

பாண்டிய ராஜகுமாரி பவளத்தேர் வேண்டுமம்மா...

அம்மா... மீனாகூஷி சொக்கநாதருடைய கிருபையினாலே நான் விளையாடுவதற்கு வேண்டிய பொருள்களெல்லாம் சேகரித்துக்கொடுத்திருக்கிறாய். ஆனால், ஒரு கருவி குறைவுண்டு. அது இதுவரை எனக்குத் தெரியாது. என்றும் போலின்று நான் என் தோழர்களோடு சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு சிறுவனின் மரத்தேர் என் முத்துத் தேரின்மீது மோதிற்று. நீ ஏனிப்படி என் தேரின் மீது உன் தேரை மோதவிட்டாயென்று நானவனைக் கேட்டேன். அதற்கவன் உன்தேர் அருமையான பவளத்தேரோ, உடைந்தால் உடைந்து போகட்டுமே! என்ன குடிகெட்டுப் போச்சுதென்று கேட்டேன். பக்கத்தில் நின்ற மற்றுஞ் சிறுவர்கள் எல்லோரும் கைகொட்டி நகைத்தார்கள். ஆதலால் பவளத்தேர் சிறந்ததென எண்ணி, அந்த சிறுவர்களைப் பார்த்து சபதம் செய்து வந்தேன். அதாவது, இனி பவளத்தேர் கொண்டு வந்தே விளையாடுவேன்; இல்லையேல், உங்களோடு என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆதலால், எனக்கொரு பவளத்தேர் செய்து கொடுக்க வேண்டும். இதுவே என் கோரிக்கை!” என்பான்.

பவளம் பவள நாட்டில் அல்லவா கிடைக்கும்? எனவே அல்லியும் அவளது சேடிப்பெண்களும் புலந்திரனைச் சமாதானப்படுத்துவார்கள்.

அல்லி : மாணிக்கத்தால் தேரியற்றி நானுனக்குத் தாரேண்டா

புலந்திரன் : மாணிக்கத்தேர் தந்தை தந்தார் ஆதலாலது வேண்டாம்

அல்லி : பொன்னினாலே தேரியற்றி இந்நாளில் நான் தாரேண்டா

புலந்திரன் : பொற்றேரோ அனந்தமுண்டு மற்றெதற்கது வேண்டாம்

அல்லி : முத்தினாலே தேரியற்றி இத்தினம் நான் தாரேண்டா

புலந்திரன் : முத்துத்தேரோ மெத்த உண்டு மற்றெதற்கது வேண்டாம்

அல்லி : சந்தனத்தால் தேரியற்றி இந்த நாளில் தாரேண்டா

புலந்திரன் : சந்தனத்தேர் தர்மர் தந்தார் எந்தனுக்கது வேண்டாம்

அல்லி : நீலக்கல்லால் தேரியற்றிப் பாலனே தாரேண்டா

புலந்திரன் : நீலத்தேரோ கிருஷ்ணர் தந்தார் ஆதலாலது வேண்டாம்

அல்லி : வயிரத்தாலே தேரியற்றி வத்ஸனே நான் தாரேண்டா

புலந்திரன் : வயிரத்தேரோ பாட்டன் தந்தார் மற்றெதற்கது வேண்டாம்

அல்லி ராணியின் சமாதானங்கள் ஒவ்வொன்றையும் புலந்திரன் மறுத்துக் கொண்டே வருகிறான். நிஜவாழ்க்கையில் தாயும் மகனுமாக இருக்கிற இவர்கள் மேடையிலும் அவ்வாறு நடிப்பது இயல்பானதாக இருக்கிறது. சட்டைப் பொத்தான்களைக் கூடப் போடுவதற்கு அம்மாவின் உதவியை நாடுகிற இந்தச் சின்னஞ்சிறு குட்டி நடிகனுக்குள் இவ்வளவு திறமையா? மழலை மாறாத குரலில் குட்டி நடிகன் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கிறான். குழல் இனிது யாழ் இனிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதார் இல்லையா? தன் மகனின் இனிய குரலில் மயங்கி, வியந்து... மெச்சித் தன் மகனை ஊரார் புகழும்போது மேனி சிலிர்த்து... அல்லியாக நடிக்கும் நடிகை மேடையிலே நடித்துக் கொண்டிருக்கிறாள். தோழிப் பெண்கள் புலந்திரனைச் சமாதானம் செய்கிறார்கள். டான்ஸ் காமிக்கோடு, பெண் வேடம் புனைந்து கொண்டிருக்கிற பபூன் காமிக்கும் சமாதான முயற்சிகளில் இறங்குகிறார். ஓவ்வொரு அசைவிலும் நகைச்சுவை. சனங்களில் கவலைகளை மறக்க வைக்கும் சிரிப்பு வைத்தியனாகத் திகழும் அக்கலைஞரின் அங்க சேஷ்டைகள் எளிய சனங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. “தள்ளுங்க... உங்களுக்கு பச்சப்புள்ளய சமாதானப் படுத்தக்கூடத் தெரியலையேடி... புள்ளப் பெத்துருந்தாத்தானே தெரியும்...”

“ஆமா... பெரிய இவ வந்துட்டா... பத்துக் கொழந்தைகளுக்குத் தாய்க்காரி விலகுங்களடியம்மா...” பபூனைக் கிண்டல் செய்கிறார், டான்ஸ் காமிக். “அட ஏண்டி வயித்தெரிச்சலக் கௌப்புற... இன்னேரம் எனக்கு கல்யாணம் ஆகியிருந்தா...” அரங்கின் மற்றொரு கோடியில் நிற்கும் அல்லி, உருவியவாளோடு “என்ன கல்யாணமா...” என்று சீறுகிறார். “அடியாத்தீ... கட்டுன புருசனையே கத்தியால வெட்டுன பொம்பள...” எனத் தனிமொழி பேசுகிறார் பபூன். “என்ன...” என்று அல்லி உறும “ஒன்றுமில்லம்மா... அரண்மனை தோட்டத்துல இருந்து கல்யாண முருங்கைச் செடி ஒண்ணு கேட்டிருந்தேன்... அதான்...” தோழியாக உள்ள பபூன் நடிகர் குழைகிறார். புலந்திரனைச் சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்கிறது.

“இளவரசே... இளவரசே... பல்லி மிட்டாய் வாங்கித்தாரேன் பவளத்தேர் கேட்காதீங்க....” கூட்டம் சிரிக்கிறது. அல்லி “சீக்கிரம் எப்படியாவது சமாதானப்படுத்துங்களடி...” என்று சொல்கிறார். தோழிகள் புலந்திரனைச் சூழ்ந்துக்கொண்டு சமாதானப்படுத்தும் படலத்தைத் தொடருகிறார்கள். பபூன்காமிக் புலந்திரனை அருகாக இழுக்கிறார். “புள்ள பாலுக்காகத் தாண்டி இப்படி அடம் பிடிக்கிறது... இளவரசே... வாங்க பால் குடிங்க...” இழுத்து... பொய்யாகப் புனையப்பட்டுள்ள தன் மார்பகத்தில் சிறுவனின் முகத்தை வைத்து அழுத்துகிறார்; பபூன் காமிக் ஆண்தான் பெண்ணாக வேடமிட்டு இருக்கிறார் என்பதனைப் புரிந்து கொண்ட பார்வையாளர்கள் சிரிக்கின்றனர். திமிறி வெளிப்படுகிறான் புலந்திரனாக நடிக்கும் குட்டி நடிகன். கண்கள் குளமாக நிறைந்திருக்கின்றன. முகம் சினத்தில் சிவந்து கிடக்கிறது. பார்வையாளர்களில் குதூகலித்த சிரிப்பில் அவமானம் அடைந்து குட்டி நடிகனின் காதுகள் விடைத்துள்ளன. பபூனிடமிருந்து வலிந்து தன்னை விடுவித்துக் கொண்டு அல்லி வேடமிட்டிருக்கும் தன் தாயிடம் ஓடுகிறான்.

“அம்மா... அந்த மாமாவ இந்தக் கத்தியால குத்திடுமா... அம்மா... பபூன் மாமாவ கத்தியால குத்திடுமா...” நடிகை இடுப்பில் அணிந்திருக்கும் கத்தியையும் பபூன் நடிகனையும் மாறி மாறிச் சுட்டிக் காட்டியபடி அழுகிறான் குட்டி நடிகன். தாய் அணைத்து கொள்கிறாள். இதுபோல நடிப்பது சும்மா பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதற்காகத்தான் என்பது அனுபவமுள்ள ஸ்திரீபார்ட் நடிகையான அந்த நடிகைக்குத் தெரியும். என்ன செய்வது? இருந்தாலும் ஒப்புக்காக “என்னண்ணே...” என்கிறார் பெண் வேடமிட்டிருக்கும் ஆண் நடிகரான பபூனைப் பார்த்து. “என்னத்தா... ஓம் மகன் இவ்வளவு ரோசக்காரப் பயலா இருக்கானே...” சிரிக்கிறார் பபூன். ஒரு நிமிடம் அல்லி, புலந்திரன், தோழி மறைந்து மதுரை இசை நாடக நடிகர்களாக மேடையில் நிற்கிறார்கள்.

நாடகம் தொடருகிறது. பவளம் தேடி அர்ச்சுனன் பவள நாட்டிற்குப் புறப்படும் காட்சி. அல்லி வழியனுப்புகிறாள். இக்காட்சியை மேடையின் ஓலைக்கீற்று மறைப்புக்குள்ளே அமர்ந்தபடி, அல்லியாக நடிக்கும் தன் அம்மா வாங்கித் தந்த அந்த ஊர்த்திருவிழா பூந்தியை அள்ளித் தின்றபடி, கண்ணீர்க் கறைபடிந்த முகத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான், பழைய டிரௌசரும் சட்டையும் அணிந்தபடி அமர்ந்திருக்கும் ஒப்பனை கலைக்காத குட்டி நடிகன்.

பின்குறிப்பு:

இந்நிகழ்வு நடந்த அடுத்த ஓரிரு கிழமைகளில் குறிப்பிட்ட அந்த பபூன் நடிகர் மாடு குத்தி இறந்து விட்டாரென மழலை மொழியில் இக்குறிப்பை எழுதும் ஆய்வாளரிடம் தெரிவித்தான் அதே குட்டி நடிகன்.

காமம் வழியும் களம்

மேளக்கட்டு. ஆர்மோனியம் திரைக்குப் பின்னால் ரீங்கரித்தபடி இருக்கிறது. அத்தனை இசைக் கருவிகளும் ஆஜர். ஆர்மோனியத்தின் சுருதியையொட்டி மிருதங்கமும் டோலக்கும் தாளமும் சரி செய்யப்படுகின்றன. பபூன் காமிக் முதல் ராஜபார்ட் வரை எல்லோரும் வந்து கூடி நிற்கின்றனர். பபூன் பாதி ஒப்பனையில் எழுந்து வந்திருக்கிறார். மேளக்கட்டு முடிந்த சிற்சில நிமிடங்களில் அவர் மேடையில் பிரவேசித்தாக வேண்டும். ஆகவே அவர் முன்னதாகவே தயாராக வேண்டும். நிற்பவர்களில் யார் ராஜபார்ட் என்று எளிதில் கண்டுகொள்ள முடியவில்லை.

நிமிடங்கள் கடக்கின்றன. மேளக்கட்டு ஓசைதான் நாடகம் தொடங்கப் போகிறதென மக்கள் கண்டு கொள்ளும் ஒரு அறிகுறி. எனவே நாடகத்திடலுக்குள் பாய்கள் தலையணைகளுடன் வந்து இடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜபார்ட் செருமித் தன் தொண்டையை சரிப்படுத்திக் கொள்கிறார். நாடக ஏஜெண்ட் சிறுதட்டில் திருநீற்றினைக் குவித்து வைத்து நடுவில் கற்பூரத்தைப் பரப்பிப் பற்ற வைக்கிறார். தேங்காய் உடைக்கிறார். கற்பூரத்தட்டினை ஏந்துகிறார். ராஜபார்ட்டிடம் இருந்து... “ம்...” என்ற குரல். ‘தொடங்கலாமே’ என்று அதற்குப் பொருள். ஆர்மோனியக்காரர் உச்ச ஸ்தாயியில் தொடங்குகிறார்.

“பாவன மதுரானிலேயே...ஏ...ஏ...ஏ...” அனைத்து நடிகர்களின் குரலும் இணைந்து ஆலாபனை செய்கிறது.

“ஏ...ஏ...ஏ...” அடேயப்பா எத்தனை நெளிவுகள்! பிருகாக்கள்! பாடல் தொடர்கிறது.

“பாவன மதுரானிலேயே...

பாண்டிய ராஜன் தனையே

பாவராஜ தாளாதி கே

பதிரோஜத கிணததையே

இமதரனே பவானியம்பா...

ரதநீத ரமணியமனே

சுதனே ரஞ்சித மதனே

கமல சாது சுரபலனே

கணதத சுரகள தயனே

சங்கீத ராஜ தயனே

தயனே தேவி மீனாட்சி

அமிர்த அம்பா ஆ...ஆ...ஆ...”

அடேயப்பா... என்ன உச்சம்! எட்டுக்கட்டையாக இருக்கும் போலிருக்கிறது! பாடி முடித்ததும் வியர்த்த முகங்களுடன் ஒப்பனை அறைக்குள் திரும்புகின்றனர். இசைக் கலைஞர்கள் கருவிகளுடன் மேடையின் வலது பக்கத்திற்குச் செல்கிறார்கள்.

நாடகம் தொடங்கிவிட்டது. பவளக்கொடி நாடகம். சேதுராமன் ஒப்பனையிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இந்த நாடகத்தின் ராஜபார்ட். அதாவது அர்ச்சுனன். ஒப்பனையைச் சிரத்தையாகச் செய்கிறார். அர்ச்சுனன் மிகச் சிறந்த சிருங்காரன்; அழகன். எனவே ஒப்பனை நன்றாக இருக்க வேண்டும். முகக் கண்ணாடியில் ஆழமாகப் பார்க்கிறார். அர்ச்சுனன் வசீகரன்; பெண்களை மயக்குவதில் வல்லவன். திரௌபதி, சுபத்திரை, அல்லி, பவளக்கொடி, நாககன்னி, மின்னல்ராணி என... அர்ச்சுனன் மனைவியரின் பட்டியல் நீளும்... அதனால்தான் “ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவியை எண்ண முடியாது” என்ற சொலவடை வழங்கப்படுகிறது போலும். பவளக்கொடி சரித்திரத்தில் அர்ச்சுனனைத் தேட தருமன் முயலும் போது சகாதேவன் பின்வருமாறு கூறுவான்: “அண்ணா! காண்டீபரோ ஸ்திரீலோலப் பிரியர்; மனைவியர் அநேகர். எவர் வீட்டிலிருக்கிறாரோ தெரியவில்லை. வெளியேறுவதற்கு நினைத்தாலும், அவரைக் கூடிய மங்கைமார்கள் விடமாட்டார்கள்” மேற்குறித்த கூற்றே அருச்சுனனின் சிருங்காரத் தன்மைக்கு உதாரணம்.

ஒப்பனை முடிந்தாகிவிட்டது. பபூன் நாடகமேடையிலிருந்து திரையைப் பிளந்து கொண்டு எட்டிப் பார்க்கிறார். “என்னப்பா... ரெடியா?” “ஆச்சு... ஆச்சு...” சேதுராமன் பதில் தந்தபடி மேடையின் வலது பக்கம் இருக்கக்கூடிய மறைப்பில் வந்து நிற்கிறார். செருகி வைக்கப்பட்டுள்ள ஒலிவாங்கியைச் சோதனை செய்து “ஆங்...” சைகை செய்கிறார். ஆர்மோனியக்காரரும் சைகை செய்கிறார் “ஆங்”. இந்த “ஆங்”கிற்கு நாங்கள் தயார்; நீங்கள் வரலாமென்று பொருள். ராஜபார்ட் ராகத்தை... தன் குரல் அளவை மெல்லியதாகக் கோடிகாட்ட, ஆர்மோனியக்காரர் அவருடைய குரல் அளவைப் புரிந்து கொண்டு மிகச் சரியான சுருதியில் இசையைத் தொடங்குகிறார். ராஜபார்ட் வரப்போகிறார். உறக்கம் படிந்த விழிகளோடு மண்ணில் சரிந்து கிடந்தவர்கள் எழுந்து உட்காருகிறார்கள்.

“ஞான குமாரி...

நளின சிங்காரி...”

குரல் பிசிறில்லாமல் ஒலிக்கிறது. அடடா... என்ன அற்புதமான குரல்... தேன் தடவியது போல... ஆர்மோனியக்காரரே வியந்து, பின்பாட்டைத் தொடருகிறார். சேதுராமன் இசையில் துறைபோயவர். அவருக்குப் பின்பாட்டுப் பாடுவது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆர்மோனியக்காரர் பெரு முயற்சி செய்து பாடுகிறார். புதிய புதிய இடங்களில் கமகங்கள்... பிருகாக்கள்... நெளிவுகள்... சுளிவுகள்... இசையின் நுட்பங்கள் புரியாவிட்டாலும் கூட நல்ல இசை, மோசமான இசை என்பதை நுட்பமாக உணரக்கூடிய கிராமத்துக் கலாரசிகர்கள் வாய்பிளந்து கேட்கிறார்கள். வானம் பொத்துக் கொண்டு கொட்டியதைப் போல அப்படியொரு இசைப் பிரவாகம்.

சுபத்திரை வீடு. தகவலறிந்து அர்ச்சுனன் அல்லியைப் பார்க்க வருகிறான். அல்லியோ தாமதமாக வந்த அர்ச்சுனனை அலட்சியம் செய்கிறாள்.

“கால்கள் நோகுதம்மா... கருணை செய்யம்மா...

காவலாயுலகாளும் ராணியே கோபமாகுமா - உன்

ஆக்னைக்குப் பயந்து நான் அஞ்சி ஓடிவந்தேன்

ஆதலாலினிமேலும் கோபமதாமோ மேனி நொந்தேன்

ஓலை கண்டவுடன் ஓடிவந்த என்மேல்

உற்ற கோபமெதற்கு விட்டனை ரகூஷிப்பாய் நீ அன்பாய்... (கால்கள்)”

பாடுகிறார். ம்கூம்... அல்லி சமாதானமாகவில்லை. கிருஷ்ணர் வருகிறார்; சமாதானப் படுத்துகிறார். உரிய காலத்தில் பவளம் கொண்டு வருவானென்று உறுதி கூறி அனுப்பிவைக்கிறார். பவளநாடு சென்று பவளம் தேடுகையில் அந்நாட்டு ராணி பவளக்கொடி பற்றிக் கேள்விப்பட்ட அர்ச்சுனன் கிருஷ்ணனிடம்

“பவளக்கொடி மாதை நான் பார்க்க வேணுமே - அவள்

பாதாதி கேசம்வரை நோக்க வேணுமே... (பவளக்) ”

என்று கேட்க, கிருஷ்ணன் மறுக்கிறார்.

“விட்டுவிடு பார்த்தா... வீணான செய்கையிது (விட்டுவிடு)

எட்டு நாளில் வாரேனென்று

இயம்பினாய் அல்லி முன் நின்று

சட்டென அதை மறந்து

சாற்றலாமோ நீ நினைத்து... (விட்டுவிடு) ”

அர்ச்சுனன் சமாதானமடைவானோ? தன் காதலுக்கெல்லாம் கிருஷ்ணனைத் துணை கொள்ளுபவனாயிற்றே...

“பார்க்கவேணும் கண்ணால்

பாவையாள் தன்னை இன்று (பார்க்க)

கார்க்கதிக மேனி சகாயா

கண்ணே எங்கள் சகாயா

தீர்க்கமாகச் சொல்லுகிறேன்

சீக்கிரத்தில் அருள் செய்யாயா... (பார்க்க)”.

அர்ச்சுனாகிய ராஜபார்ட் கிருஷ்ணரிடம் வாதம் செய்து கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எழுந்து ஒரு பெண் அர்ச்சுனன் வேடமிட்டிருக்கும் சேதுராமனை ஓரக்கண்ணால் பார்த்துப் புன்னகைத்தப்படி, அரங்கைப் பக்கவாட்டில் கடந்து போகிறாள். ராஜபார்ட் வாதம் செய்து முடிக்கிறார். அடுத்து பவளக்கொடி வருகைக்காட்சி. இருபது நிமிடங்கள் ராஜபார்ட்டுக்கு ஓய்வு கிடைக்கும். பிறகு பவளக்கொடி சந்திப்புக் காட்சி. அரங்கின் பின் பகுதியில் உள்ள ஒப்பனையறைக்குத் திரும்புகிறார். தலையில் அணிந்திருந்த கிரீடத்தைக் கழற்றி வைத்து விட்டுத் தண்ணீர் குடிக்கிறார். மற்ற நடிகர்கள் மும்முரமாய் ஒப்பனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சேதுராமன் நாடகக் கொட்டகையின் பின்புறமாக வெளியே வந்து ஆசுவாசமாகப் பீடி ஒன்றைப் பற்ற வைக்கிறார். வானம் வெறிக்கிறார்.

இருட்டினுள் ஏதோ சிறு சலனம். கூர்ந்து பார்க்க... ஒரு பெண். தன்னை ஓரக்கண்ணால் பார்த்துப் புன்னகைத்தப்படிக் கடந்து போன பெண். “எத்து மசை..” வாய் முணுமுணுக்கின்றது. அதற்கு நாட்டுப்புற வழக்கில் “நல்ல திமிசுக் கட்டை” என்று பொருள்.

“நீ...”

“இந்த ஊருதான்... நாடகம் பார்க்க வந்தேன்...”

“நான் ... நான் ஆடுனது நல்லா இருந்துச்சா...?

“என்னை உருக்கிடுச்சு...”

யாரிவள்? மொழிப்பயன்பாடே புதியதாக இருக்கிறதே? குழப்பம் ராஜாபார்ட்டுக்கு.

“என்ன சொல்ற நீ? என்னோட பாட்டு... உனக்குப் பிடிச்சிருக்கா?”

“அர்ச்சுனா...”

சேதுராமன் நடுங்கிவிட்டார். பரவச நிலையில் அரைக்கண்களை மூடியபடி... அவள் பாவனையும் குரலும்... காமக் கடவுளின் கன்னிகை போல.

“அர்ச்சுனா...” அதே பாவனை; கிறக்கமான குரல்.

“எம்பேரு சேது... சேதுராமன்...”

“இல்லை. நீ அர்ச்சுனன்தான். திரண்ட தோள்களும், விரிந்த மார்பும் அதனுள் இருக்கிற நுரை ததும்புகிற காதலும்... நீ அர்ச்சுனன் தான்...”

“ஓஹோ... அதுவா... இந்த நாடகத்துல நான் அர்ச்சுனன்... நான் எல்லா வேஷமும் கட்டுவேன்... ஞான சௌந்தரியில பிலவேந்திரன் சத்தியவான் சாவித்திரியில சத்தியவான்... வேலன் வேடன் விருத்தன் கூடக் கட்டுகிறேன்..”

“இல்லை... நீ அர்ச்சுனன்தான். எங்கூட கொஞ்ச நேரம் பேச முடியுமா? அதோ அங்க மறைவான எடத்துல கொஞ்ச நேரம் பேசலாமா?” சேதுராமன் உடலில் ஏதோ ஒரு பரவசம். காதுகளில் கொஞ்ச... கொஞ்ச என்ற வார்த்தைகள்தான் திரும்பத் திரும்பக் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறார். பவளக்கொடி இன்னும் தன் வருகைப் பாடலை முடிக்கவில்லை. இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன. உடனே வரவேண்டுமென்ற அவசியம் இல்லை. எங்கோ வெளிக்குப் போயிருப்பார் என நினைத்து ஐந்து நிமிடம் ‘வளர்த்துக்’ கொள்வார்கள். ஒன்றும் சிரமமில்லை. ஆமோதித்து இருளில் அந்தப் பெண்ணைத் தொடருகிறார்.

“நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? உன் முகத்துல உள்ள வரிகள்... கழிந்து போன யுகங்களின் எண்ணிக்கைக் கோடுகளா? இந்தப் புள்ளிகள் காலங்காலமா பெண் குலத் திலகங்களின் வேல் கண்கள் குத்திய வடுக்களா...? இந்த உதடுகள்...”

“நீ என்ன பைத்தியம் மாதிரி உளருறே... நீ பேசுறது எனக்குப் புரியவே இல்ல...”

“உனக்கு பெண்களின் மனசு மட்டும் தானே புரியாது? பேச்சு நல்லாப் புரியுமே அர்ச்சுனா...”

என்ன இது வம்பாக இருக்கிறது? ஒரு வேளை பேயாக இருக்குமோ? கால்களைப் பார்க்கிறார். கால்கள் தரையில் பாவி நிற்கின்றன. இல்லை... இவள் பேயில்லை. பிறகு? குழப்பமாக இருக்கிறது சேதுராமனுக்கு.

“இந்தா பெண்ணே... நீ என்னத்தான் சொல்ல வர்றே... எனக்கு நேரமாச்சு... நான் உள்ள போகணும்...!”

“எனக்கு நீ வேணும் அர்ச்சுனா... காமம் சொட்டும் உனது உடல்...”

ஓஹோ... அப்படியா? சரியான நாட்டமசை! (ஆண் உறவில் விருப்பமுடைய பெண்). நல்ல விருந்துதான். சேதுராமன் உடல் முழுக்க ஆயிரம் குறிகள் மானசீகமாக முளைக்கின்றன. கேட்கிறார்:

“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஏன்... கல்யாணம் ஆகியிருந்தா என்னைச் சேர மாட்டியா? அடுத்தவன் தொட்ட உடல் உனக்கு வேணாமா? நாலு பேர் சுவைத்த எச்சில் கனியை நீ சுவைக்கலையா? நாலுபேர் கூடிய திரௌபதியை நீ கூடலையா அர்ச்சுனா...”

“தோ... பார். நீ எம்மேல ஆசைப்படுறியா?”

“ஆமா அர்ச்சுனா...”

“அய்யோ... எம்பேரு சேது... சேதுராமன்...”

“இல்லை. நீ அர்ச்சுனன்தான். அர்ச்சுனா... உன்னைக் கூடாம என் திரேகம் தீயாக எரியுது... அகோர உடல் பசிக்கு என் உடலே என் தசை தின்னுகிறது... அதுவும் போதாம காற்றை வாரித் தின்னுது... அர்ச்சுனா... என்னை உனது இயல்பான ஆவேசத்தோட கூடுவாயா?”

“அட அப்படிச் சொல்லு... எனக்கும் ஒன்னப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு... எனக்கும் உம்மேல ஆசதான்... நீ ரொம்ப அழகா...”

“அர்ச்சுனா... என்னைக் கூடுவாயா?”

“நாடகம் முடிஞ்சதும் விடியக் காலையில உன்னப் பார்க்கலாமா? நேரம் ஆயிடுச்சு... நீ இங்கேயே இரு. எங்கேயும் போயிடாத...” சேதுராமன் பவளக்கொடியோடு காதல் புரிய வேண்டும். விரைந்தோடும் ராஜபார்ட்டை வெறித்தபடி நிற்கிறாள் அந்தப் பெண்.

பவளக்கொடியை அர்ச்சுனன் மணம் முடித்தாகிவிட்டது. அல்லியிடம் இருந்து கிருஷ்ணன் கிருபையால் தப்பித்தும் விட்டாகிவிட்டது. நாடகம் முடிவுற்றது. ஏஜெண்டிடம் பணம் பெற்றுக் கொண்டு, வாகனத்தில் மற்ற கலைஞர்களோடு தான் வரவில்லை என்பதைத் தெரிவிக்கிறார். ஏஜெண்ட் விநயமாகச் சிரிக்கிறார். “என்னப்பா... மசையை ஓரங்கட்டிட்ட போலருக்கு...”

“சேச்சே... அதெல்லாம் ஒன்னுமில்ல...” மறுத்தபடி கைப்பெட்டியுடன் நாடகக் கொட்டகைக்கு வெளியே விரைகிறார் ராஜபார்ட் சேதுராமன்.

“ஓ... இங்க இருக்கியா? எங்க போயிடுவியோன்னு பயத்துலயே பவுடரை அழிச்சிட்டு ஓடிவந்தேன்...”

“நீ யாரு?”

“நான்... நான்... ராத்திரி நாடகத்துல அர்ச்சுனன் வேஷங்கட்டினேனே... ஆமாம்... ஆமாம்... நான் தான்... யாராவது பார்க்குறதுக்கு முன்னால ஒதுக்குபுறமா எங்கேயாவது போகலாம் வா... உன் ஆசைப்படியே உன்னைக் கட்டிப்பிடிச்சு... ம்... வா..”

மீண்டும் சேதுராமன் உடல் முழுக்க ஆயிரம் குறிகள் மானசீகமாய் முளைத்துவிட்டன. அவள் கரம் பற்றி இழுக்கிறார். அவள் கரங்களை வெடுக்கென உதறுகிறாள்.

“எனக்கு... எனக்கு... நீ வேணாம்...”

“நீ என்ன சொல்ற...”

“எனக்கு அர்ச்சுனன் தான் வேணும்... வேஷங்கட்டியிருக்கிற நீதான் வேணும். தலைகிரீடத்தோட... புஜக்கீர்த்திகளோட... என்னை வசீகரிக்கிற அந்த முகக்கோடுகளோட... எனக்கு நீ... அர்ச்சுனனாகத்தான் வேணும்...”

“அப்போ என்ன நாடகத்துல கட்டுன வேஷத்தோட வரச்சொல்றியா?”

“ஆமா... வேசங்கட்டியிருக்கிறபோது... அர்ச்சுனனா நீ இருக்கிற போது... உனக்கு இருந்த நளினம்... கம்பீரம்... வெற்று முகத்தோட எம் முன்னால நிக்காதே போ...”

“வேஷங் கட்டுனதோட பொம்பள சகவாசம் வச்சுக்க என்னால முடியாது...”

“ஏன்...?”

“முடியாது... ஒருவேளை அப்படி நடந்தா... நாடகம்... நாடகம்... என்னை விட்டுப் போயிடும். எனக்குப் பயமா இருக்கு... என்னால முடியாது. இப்ப எங்கிட்ட வர்றதுன்னா... நான் தாராளமா...”

அவள் முகத்தில் வெறுப்புப் படிகிறது. குரலில் கூட கொஞ்சம் கடுமையும் விஷத் தன்மையும் கூடியிருப்பதை அவதானிக்கிறார் சேதுராமன்.

“வேண்டாம்... எனக்கு உன்னைப் பிடிக்கல... எனக்கு அர்ச்சுனனா இருக்கிற நீதான் வேணும்...”

“முடியாது... நாடகத்தை எங்கிட்டேயிருந்து பிரிக்க வந்திருக்கிற பிசாசுதான் நீ... முடியாது... வேஷங்கட்டிக்கிட்டு உங்கிட்ட வரமுடியாது...”

“முடியாதா...”

“முடியவே முடியாது”

மிரட்சியுடன் சேதுராமன் சொல்ல, அவள் அவரை முறைத்துப் பார்க்கிறாள். முகத்தில் வெறுப்பு மிளிர்கிறது. கோபத்துடன் அவள் திரும்பி நடக்க எத்தனிக்கிறாள்...

“அப்போ நான் போறேன்...”

“நில்லு. என்னோட ஆசையைத் தூண்டிவிட்டுட்டு... நீ பாட்டுக்குப் போறேன்றியே... இப்பவே இந்தத் தோப்புக்குள்ள போகலாம் வா...”

“வேஷங்கட்டிக்கிட்டு வருவியா?”

“முடியாது... அதுமட்டும் என்னால முடியாது... அது நாடகத்துக்கு நான் செய்யுற துரோகம்... என்னால முடியாது...”

“அப்போ நான் போறேன்”

தவிப்பு. உடலெங்கும் பற்றி எரிகிறது தீ. என்ன இது சோதனை. பெண்ணின் கையை எட்டிப் பிடிக்கிறார் சேதுராமன்.

“ஏன் என்னை அவஸ்தைப்படுத்தறே... எனக்கு நீ வேணும்... சரி வா போகலாம். ஊருக்கு வெளியில இருக்கிற தோப்புக்குப் போகலாம்... அங்க வேஷங்கட்டிக்கிறேன். சரிதானே?”

அவள் முகத்தில் புன்னகை. ஒரு கணம் அதில் குரூரம் பொதிந்து கிடந்ததைப் போன்ற ஒரு தோற்றம். இல்லை. இப்போது இல்லை. நீருக்கு வெளியே மூச்சு வாங்க வெளிப்பட்ட திமிங்கலம் போல... ஒரு கணத்தில் வெளிப்பட்டு மறைந்து போயிற்று.

ஒப்பனையில் வேகம் கூடுகிறது. சிருங்காரம் வெளிப்படுகிறதாவெனக் கவனித்துக் கவலைப்பட நேரமில்லை. கல்விக்கு முன் இடப்படும் ஒப்பனை அளவுகூட சிரத்தை பதியவில்லை. ஒப்பனை முடிந்து அவள் முன் நிற்கிறார் ராஜபார்ட்.

“அர்ச்சுனா வந்துவிட்டாயா?”

“ஆமா... உனக்காகத்தான்... இதெல்லாம் உனக்காகத்தான்...”

“அர்ச்சுனா... திரௌபதியை நேசித்தது போலவே என்னையும் நேசிப்பாயா? அரசாணி மண்டபத்தில் கௌரவர்களின் நடுவில் அவமானப்பட்டு நின்ற திரௌபதியின் நிலைகண்டு கொதித்து, காண்டீபம் எடுத்துச் சபதம் செய்தாயே? அதேகாதலுடன் என்னைக் காதலிப்பாயா?”

“காதல் செய்கிறேன்... வா... வா... வா...”

சேதுராமன் உன்மத்த நிலையில் இருக்கிறார். ஸ்பரிசம்... ஆலிங்கனம்... ஆவேசம்... முயங்கிக் கிடக்கிறார்கள். கலவி முடிந்து கலைந்து கிடக்கிறார்கள். காமத்தை இறக்கி வைத்த அயர்ச்சி இருவருக்கும். தலைதிருப்பிக் கேட்கிறாள்.

“உன்னுடைய ஆட்டம் என் கண்களுக்குள் சுழலுகிறது. உன் தேனினும் இனிய குரல்... அதன் வசீகரம்... நீ எனக்காகப் பாடிக்காட்டு... புழுதி மண்ணை அதிர்வடையச் செய்யும் உன் பாட்டை நீ பாடிக்காட்டு...”

“இப்போ... இப்போ... வேண்டாமே...”

“இப்போதான் எனக்கு வேணும்... பாடு... பாடு...”

சேதுராமன் திகைக்கிறார். என்ன மாதிரியான பெண் இவள்? இந்த நேரத்தில் பாடச்சொல்லி உயிரை எடுக்கிறாளே? குரங்குக்கு வாழ்க்கைப் பட்டாகிவிட்டது. மரம் ஏற முடியாது என்று சொல்ல முடியுமா? வேறுவழி? பாடத்தொடங்குகிறார்.

“ஞான குமாரி... நளின சிங்காரி...”

சேதுராமனுக்குப் புகழ்பெற்றுத் தந்த பாட்டு. எளிய மனிதர்களைக் கிறங்கடித்த பாட்டு. ஆர்மோனியக்காரர்கள் பின்பாட்டுப் பாடமுடியாமல் திகைக்க வைத்த பாட்டு.

சேதுராமன் என்கிற புகழ்பெற்ற ராஜபார்ட்டின் குரல் கம்முகிறது; கமறுகிறது. தொண்டையில் ஏதோ உருளுவது போல ஒரு அவஸ்தை. செருமிக் கொண்டு முயலுகிறார். குரல் அவலட்சணமாய் கீறல் விழுந்தது போல ஒலிக்கிறது. நெலிந்த அலுமினிய டப்பாவைப்போல நெலிந்த நொறுங்கிய குரல். கண்களில் திரண்ட நீருடன் அவளைப் பார்க்கிறார். அவள் குரூரப் புன்னகையோடு சிலைபோல் அசையாது அவரையே பார்த்தபடியிருக்கிறாள். அவர் மீணடும் முயலுகிறார்.

“ஞான குமா.... ... ... ...”

குரல்... குரல் வரவில்லை. தொண்டையைக் கைகளால் பற்றியபடி மரண பீதி கண்களில் வழிய அவளை ஏறிட்டுப் பார்க்கிறார்.

“ஏகலைவனால் வாய்கட்டப்பட்ட நாய் அர்ச்சுனா நீ... குரல் இல்லாமல் வனமெங்கும் அலைந்த உன் அரண்மனை வேட்டை நாயைப் போல குரல் இழந்து தவிக்கிறாய்... இப்போது பாடு... ம்... பாடு...”

அவள் வெடித்துச் சிரிப்பது போலக் கேட்கிறது. நாவெழவில்லை சேதுராமனுக்கு.

“... .... ...”

குறிப்பு: குரல் தொலைத்த இசைநாடக ராஜபார்ட்டைக் குறித்து உடன் இருந்த சக கலைஞர் தந்த தகவலின் அடிப்படையில் இது புனையப்பட்டது. ராஜபார்ட்டின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இசை நாடகக் கலைஞனுக்குக் குரல் போவது என்பதைப் போல கொடிய தண்டனை வேறெதுவும் இல்லை. மோகினிப் பேய்தான் அப்பெண் என்றும் மோகினியை மோகித்ததும், தெய்வமாக நினைக்கிற ஒப்பனையோடு கலவி செய்ததும்தான் அவருடைய குரல் போகக் காரணம் என்றார் தகவலை அளித்த கலைஞர். தன் சக கலைஞனின் உள்ளார்ந்த வேதனையை ஆத்ம வலியோடு பகிர்ந்து கொண்ட தகவலாளிக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

Pin It