சகிப்புத்தன்மை, சாத்வீகம் மற்றும் சகோதரத்துவத்தின் பிறப்பிடம் என்று வெற்று டப்பாவை உருட்டிக் கிடக்கிறது இந்தியா.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அதன் அடைமொழிக்கு ஒரு அர்த்தமுமில்லை. பௌத்தம் சமணம் உள்ளிட்ட மாற்றுக்கருத்துக்களை வன்முறைகளாலும் புறக்கணிப்புகளாலும் ஒழித்துக்கட்டியவர்களின் இன்றைய வாரீசுகளான இந்துத்துவ தீவிரவாதிகள் சகிப்பின்மை என்ற கொடுந்தடத்தில் சமூகத்தைக் கடத்திச் செல்ல முனைகிறார்கள். இவர்களது வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் வழக்கு தொடுத்து அலைக்கழிக்கும் மலிவான தந்திரங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தளர்ந்துபோய் இந்த நாட்டைவிட்டு தன்னைத்தானே வெளியேற்றிக் கொண்டிருக்கிறார் ஓவியர் எம்.எஃப்.ஹூஸைன். தன் கோடுகளாலும் வண்ணங்களாலும் உலகெங்குமுள்ள கலைமனங்களை வென்றெடுத்த ஹூஸைனுக்குத் தன் சொந்தநாட்டு மதவெறியர்களிடம் ஏற்பட்ட தோல்வியை தங்களுக்கானதாய் பாவித்து வருந்துகிறது சர்வதேச அறிவுச்சமூகம்.

உருவங்களை வரைவது தமது மார்க்கத்திற்கு விரோதமானது என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அவரது ஓவியங்கள் தமது கடவுள்களை இழிவுபடுத்துகின்றன என்று இந்துத்துவ அடிப்படைவாதிகளும் ஒரு சேர தாக்குதல் தொடுக்கின்றனர் ஹூஸைன் மீது. மடங்களை காமக்களியாட்டக்கூடமாக மாற்றியவர்களை லோககுருவாகவும், கோயில் கருவறையை பள்ளியறையாக மாற்றியவர்களை அர்ச்சகராகவும், உலகத்தின் அத்தனை பித்தலாட்டங்களையும் ஒருசேர செய்கிற பொறுக்கிகளை அவதாரங்களாகவும், கொனார்க் சூரியக்கோவிலையும் கஜூராஹோ சிற்பங்களையும் கலை வெளிப்பாடாகக்  கொண்டாட முடிகிற இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு ஹூஸைனின் கலை ததும்பும் ஓவியங்கள் ஆபாசமாய் தெரிவதற்கு மதக்காழ்ப்பே காரணம். தேசிய நலனுக்கு திட்டவட்டமான எதிரிகள் என இஸ்லாமியர்களைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவாவினர், இந்தியாவின் தொன்மங்களை மதம் கடந்து கொண்டாடும் ஹூஸைன் போன்றவர்களை எளிதில் கடக்க முடியாமல் திணறுகின்றனர். அதன் விளைவாகவே அவர்கள்  ஹூஸைனை அப்புறப்படுத்த விரும்பினர், எப்படியோ இறுதியில் அது நிறைவேறியும் விட்டது.

இந்திய தேசத்தவர் என்ற உரிமையைத் துறந்து கத்தார் தேசத்தவர் என்ற இக்கட்டான நிலைக்கு அவரைத் தள்ளிய பின்புலம் இன்று ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தியாவின் பெருமைக்குரிய குடிமக்களில் ஒருவரான ஹூஸைன் விரைவில் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடியை கலை இலக்கியவாதி களும் மதச்சார்பின்மைவாதிகளும் ஊடகவியலாளர்களும் அரசுக்கு ஏற்படுத்தியுள்ளனர். 95 வயதாகிவிட்ட அவர் இனி நாடு திரும்புவதாயிருந்தால், அது இங்கு வந்து சாவதற்காகத்தான் இருக்கமுடியும் என்று அவரது நண்பர் ஒருவர் மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார்.

பிறந்த பூமியில்தான் உயிர் விடுவேன் என்று அடம் பிடித்து திரும்புமளவுக்கு இந்த நாடு எப்போதாவது அவரை கௌரவமாக நடத்தி இருக்கிறதா? வேண்டாம் ஹூஸைன்,  நீங்கள் நிம்மதியாகக் கத்தாரிலேயே இருந்து விடுங்கள். கட்டற்ற பெருவெளியில் அசைந்தாடும் கொடியென உங்களது தூரிகை சுதந்திரமாய் வரையட்டும்.

மும்பை நகரம் எல்லோருக்கும் சொந்தமென்று சொன்னதற்காக விளையாடுவதோடு நிறுத்திக்கொள் என்று சச்சின் டெண்டுல்கரும், ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கான வியாபாரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தமைக்காக, நடிப்பதோடு நிறுத்திக்கொள் என்று ஷாருக்கானும் சிவசேனாவால் உரிய முறையில் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியில் பேசியதற்காக ஒரு நடிகரின் குடும்பம் பால் தாக்கரேயிடம் மன்னிப்பு கோர வேண்டியிருந்தது. பதவி பிரமாண வாசகங்களை இந்தியில் சொன்னதற்காக சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டார். ரயில்வே பரிட்சை எழுதவந்த வட இந்தியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ( ஆஸ்திரேலியாவில் படிக்கப் போன இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக இவர்கள் கூப்பாடு போடுவது கேலிக்கூத்துதான் ) ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து எதன் பொருட்டு எங்கு தென்பட்டாலும் பலவந்தப் படுத்தி அவர்களுக்கு கல்யாணம் முடிக்க தாலிக்கயிற்றை மடியில் கட்டிக்கொண்டு அலைகிறது ஸ்ரீராம்சேனா.

மக்களைத் திரட்டும் பொறுமையும் ஜனநாயக வழிப்பட்ட போராட்டங்களில் நம்பிக்கையும் அற்ற இவ்வமைப்புகள் வதந்திகளையும் வன் முறையையுமே தமது வழிமுறையாகக் கொண்டுள்ளன. மக்களை வாட்டி வதைக்கும் எந்தவொரு அடிப்படைப் பிரச்னையையும் தீர்ப்பதற்காக சிறுதுரும்பைக்கூட கிள்ளிப்போடாத இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக மான அவமானப் பிரச்னைகளைக் கிளப்பிவிட்டு சமூகத்தை நிரந்தரப் பதற்றத்தில் வைத்திருக்க முயற்சிக்கின்றன. ஒருவரது அண்டை வீட்டில் மற்றொரு இனத்தவரோ மதத்தவரோ வசிப்பதை சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு மற்றமை மீதான துவேஷம் கிளப்பி விடப்படுகிறது. பிற இன, மொழி, மத, பிரதேச அடையாளமுள்ளவர்கள் தமது சொந்த நிலை பாட்டிலிருந்து தெரிவிக்கும் கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பண்பு மீறப்படுகிறது. உருட்டுக்கட்டைகளால் சமூகத்தை ஆள நினைக்கிற இந்த அழிவுச்சக்திகள் சட்டத்தின் ஆட்சி என்பதை மறுதலிக்கின்றன.

இந்த மண் எல்லோருக்குமான வாழிடம் என்கிற மிக அடிப்படையான உரிமையை உயர்த்திப் பிடிப்பதற்கான வல்லமையை இந்தியா இழந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே எனக்கும் ஒரு இடம் போட்டு வையுங்கள் ஹூஸைன் என்று சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டுணர்வும் சுயமரியாதையுமுள்ளவர்கள் சொல்ல வேண்டி வருமோ என்ற கவலை எழுகிறது.

டெய்ல் பீஸ் : அரசியல் தன்மையுள்ள போராட்டங்களில் நடிக நடிகையரை கட்டாயப்படுத்தி பங்கெடுக்க வைப்பது குறித்து பாசமிகு தலைவருக்கு நடந்த பாராட்டு விழாவில் சில கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித். தமிழ்நாட்டில் இருப்பதை மறந்துவிட்டு இந்த மலையாளி இப்படி பேசலாமா என்று பேட்டைவாதம் கிளம்பியிருக்கிறது. தன் கருத்தில் தவறேதுமில்லை என்பதால் அதற்காக யாரிடமும் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்றும் மனதிற்குச் சரியெனப்பட்டதை சொல்கிற சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சினிமாவுக்கே தலைமுழுகவும்கூட தயாராயிருப்பதாகவும் அஜீத் தெரிவித்துள்ளார். சென்னையை விட்டு வெளியேறி கேரளாவுக்கே போய்விடுவதென்ற அவரது முடிவை தமிழக தாக்கரேக்களும் தமிழ்ச்சேனாவினரும் கொண்டாடும் கேவலமும் நடந்தேறக்கூடும்.  –

- ஆசிரியர் குழு

Pin It