1

பவிக்குட்டி
Girlகதைகேட்கும் நேரங்களில்
சொல்லியிருக்கிறேன்
கல் ஒன்று
உயிர் பெற்று
சிங்கமாக மாறியதையும்
அது
ஒரு தேவதையின் காலடியில்
வீழ்ந்து கிடப்பதையும்

இது
உண்மைக்கதை
என முடிவில்
கூறுபவனைக் கேட்பாள் பவிக்குட்டி
‘இது எப்படி சாத்தியம்?’

உண்மைதான்
சந்தேகமெனில்
சித்ராவைக் கேள் என்பேன்.

2

நள்ளிரவுப் பேருந்தின்
ஜன்னலோர இருக்கையில்
அழுதபடி
பயணிக்கும் ஒருவனை
கண்டிருக்கிறீர்களா?

கூடத்தில்
கிடத்தப்பட்டிருந்த
ஷபியின் அம்மாவுக்கு
மாலை வாங்க
விரைபவனைப் பார்த்து
கையசைத்த குழந்தைக்கு
பதிலுக்கு
கையசைக்காமல் வந்தது
நினைவுக்கு வந்திருக்கலாம்.

பிற்பகல் கிடைத்த
தோழியின் விவாகரத்து
நகல்
அவன் கையில்
இருந்திருக்கலாம்.
புதரடியில்
கிடந்த சிசுவை
கண்டு
வெறுமனே திரும்பியது
உறுத்தியிருக்கலாம்.
அல்லது
இன்றைக்கும்
அவனைச் சந்திக்க
சித்ரா வராதிருந்திருக்கலாம்.

3

இன்றும் நிகழவேயில்லை
சித்ராவின் வருகை

வழக்கமாய்
சித்ரா வராத நாட்களில் அகப்படும்
ஏதோவொரு வாகனத்தில்
அடிபட்டு
முகம் சிதைந்த மனிதன்
அல்லது விலங்கு

தார்ச்சாலையில்
கால்களில் மிதிபடும்
ஒற்றைரோஜா
அல்லது மல்லிகைச்சரம்

எதுவும் இன்றில்லை

இசையால்
சொல்லிச் சென்றான்
சித்ரா வராததை
பேருந்து நிறுத்தத்திலிருக்கும் எல்லோரிடமும்
பார்வையற்ற குழல் விற்பவன்.

Pin It