இந்தியத் தத்துவச் சிந்தனைகளைப் பற்றி 1857-க்கு முற்பட்ட காலத்திலேயே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் விரிவாகவும் நுட்பமாகவும் எழுதிவிட்டனர். 1910-க்கு முன்னர் செர்பாட்ஸ்கி, ஓல்டன் பர்க் போன்ற அறிஞர்கள் பௌத்த மதத் தத்துவங்களை அலசி ஆராய்ந்துவிட்டனர். இத்தகைய சிந்தனைகளைப் பற்றி இந்தியர்கள் 1940, 1950-களில் தான் பேசவும் எழுதவும் தொடங்கினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணனும், தாஸ்குப்தாவும் ஆவர். இத்தகையவர்களின் மாணவராக விளங்கிய தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இவர்களை விமர்சித்து எழுதுபவராக வளர்ச்சி அடைகின்றார். இந்த விமர்சனப் பார்வை மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள் முதல்வாதம், இயங்கியற் பொருள் முதல்வாதம் ஆகியவற்றைப் பயின்றதால் இவருக்குக் கைவரப் பெறுகின்றது.

இந்தியத் தத்துவஞான வரலாறு என்பதே அத்வைத வேதாந்தம்தான் என்றும் இது தன்னுடைய அடிப்படையான கொள்கைகளை நான்கு வேதங்களிலிருந்தே பெற்று வளர்ந்து வந்தது என்றும் கூறி வந்தனர். இத்தகைய கூற்றுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் வேதப் பகுதிகளில் காணமுடியவில்லை என்பதைத் தன்னுடைய ஆய்வுகளில் விளக்குகிறார் சட்டோபாத்யாயா. அதுமட்டுமல்லாது வேத நூல்களில் சொல்லப்படும் பல விஷயங்களை எப்படி இவர்கள் தவறாகப் பொருள்கொண்டனர் என்பதையும் விளக்குகிறார். வேதத்தின் கருத்துகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஆதி காலங்களிலேயே அதனை ஒப்புக்கொள்ள மறுத்து அதன் புனிதத் தன்மையை நகைப்புக்கு இடமானது என்று கேலி பேசுபவர்களும் பெருமளவில் இருந்ததைக் காட்டுகின்றார்.

1. ரிக்வேதப் பாடல்களில் காணப்படும் துண்டுதுக்கானியான சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு அந்தச் சொற்களில் தத்துவ நுட்பங்கள் செறிந்து இருப்பதாகப் பிற்காலத்தவர்கள் கூறுகிறார்கள். எடுத்துக்காட்டாக உதயணர் என்ற ஆசிரியர் பதத்ர என்ற ரிக்வேதச் சொல்லை எடுத்துக் கொண்டு பிற்கால வைசேஷிகத்தின் அணுக் கொள்கையைக் குறிப்பதாகக் கூறி அதை நியாயப்படுத்தினார். அணு என்பது இயங்கக்கூடியது. எனவே தனது கொள்கைக்கு வேத அங்கீகாரம் உள்ளது என அவர் கூறினார். உண்மையில் பதத்ர என்ற சொல்லுக்குப் பறவை என்பதே பொருள். ரிக்வேதத்தின் தலைசிறந்த உரைகாரராகிய சாயணர் இதனை நடக்கும் பாதங்கள் என்று விளக்கினார். பிற்காலத்து வளர்ச்சி பெற்ற தத்துவக் கருத்துகளைப் பழங்காலத்துப் பாடல்களில் நியாயப்படுத்தப் பார்ப்பது எவ்வளவு வேடிக்கையானது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். (பக். 93-94)

2. பின்வருவது சாந்தோக்ய உபநிடத்தில் முதலாவது அதிகாரத்தில் 12-வது பகுதியாகும். இப்பொழுது நாய்களின் உட்கிதா அல்லது பக்காதால்பியா அல்லது கிளாவா மைத்ரேயா வேதம் படிக்கச் சென்றான். அவனுக்கு நேராக ஒரு வெள்ளை நாய் தோன்றியது. அதனைச் சுற்றி மற்ற நாய்கள் ஒன்று திரண்டன. பாடுவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உணவு தரமுடியுமா? நாங்கள் பசியுடன் இருக்கிறோம் என்று அவை கேட்டன. அந்த வெள்ளை நாய் அவற்றை நோக்கிக் கூறியது. நாளைக் காலை நீங்கள் எல்லோரும் இதே இடத்தில் கூடுங்கள் .. இந்தப் பகுதியை விளக்க வருகின்ற அறிஞர்கள் எல்லோருமே நாய்களை நாய்கள் என்று கூறினர். டாக்டர் ராதாகிருஷ்ணன் நாய்கள் ஒவ்வொன்றும் மற்றவற்றின் வாலைப் பிடித்துக் கொண்டு நடப்பதாகவும் கூறினார். இந்தப் பகுதியில் நாய்களுக்கு வாலே குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அப்படியென்றால் இந்த நாய்கள் தான் என்ன?

தற்கால மானிடவியல் காட்டும் வெளிச்சத்தில் சட்டோபாத்யாயா ஒரு தெளிவான நம்பக்கூடிய விளக்கத்தை அளிக்கிறார். கிருஷ்ண யஜுர்வேத சம்கிதையில் மனவா, வராகா, சகலேயா போன்ற சொற்களுக்கு மனிதன் கரடி, ஆடு என்றுதான் பொருள். அதர்வண வேதத்தில் பைப்பலதா, பிரம்மபலசா, சௌனகா என்ற பெயர்கள் வருகின்றன. முதல் பெயருக்கு ஒரு பறவை என்று அர்த்தம். கடைசி பெயருக்கு நாய் என்று பெயர். இப்படியான பெயர்களைத் தொகுத்து மக்டொனால் என்பவர் ஒரு பட்டியல் தருகின்றார். அதில் கௌசிகா என்பது ஆந்தை, மண்டுக்யா என்பது தவளை, கோதமா என்பது எருது, வத்ஸா என்பது கன்றுக்குட்டி, சுனதா என்பது நாய் என்ற விளக்கங்கள் உள்ளன. இவையெல்லாம் வேதகால ரிஷிகளின் பிறப்பு மூலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. உண்மையில் இத்தகைய பெயர்கள் எல்லாம் தமிழ்நாட்டுச் சாதிகளிடையே குலங்களின் பெயர்களாக வழங்கப் படுகின்றன. இன்றும் கொங்கு மண்டலக் கவுண்டர்களின் மத்தியில் பறவைகள், விலங்குகள் பெயரில் குலங்கள் உள்ளதைக் காணலாம். இத்தகைய குறிப்புகளைக் கொண்டு மேலே குறிப்பிடப்படும் நாய்கள் என்பன வேதகால மனிதர்களைக் குறிக்கும் குலக்குறிகள் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். (பக். 51)

வேதங்களின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டவர்களே அதன் அடிப்படைக் கோட்பாடாகிய பிரம்மம், கடவுள், ஆன்மா போன்றவற்றை எதிர்த்து வந்த தத்துவவாதிகளையும் இனம் காட்டுகின்றார். அவர்கள் மீமாம்சம், சாங்கியம், யோகம், நியாய வைசேஷிக தரிசனங்களைப் பேசியவர்கள் ஆவர். சமணம், பௌத்தம், உலகாயுதம் போன்றவற்றின் கொள்கைகள் வேதத்தின் மேலாண்மையை மறுத்துத் தங்களுக்கான தனித்துவமான கொள்கைகளை உருவாக்கிக் கொண்டவை. இந்தத் தத்துவங்களைப் பற்றி விளக்கிக் கூறிய பலரும் அவற்றின் உள்ளடக்கங்களையும் அதற்கான விவரங்களையும் தொகுத்துக் கூறுபவர்களாக மட்டும் இருந்தனர். சட்டோபாத்யாயா இவர்களிடம் இருந்து விலகி நின்று பேசிய பகுதிகள் மிகவும் முக்கியத்துவம் உடையவையாகும்.

இந்தியத் தத்துவ வரலாறு என்பது மிக நீண்டகால வாழ்க்கையைக் கொண்டது. வரலாற்றின் எல்லாக் காலங்களும் ஒன்றுபோல இருப்பது இல்லை. இந்த வேறுபாட்டை அந்தந்தக் காலகட்ட உற்பத்தி முறைகள், விநியோக அமைப்புகள், அரசியல் கோட்பாடுகள் போன்றவை விளக்கிக் காட்டும் தன்மை உடையவை. எனவே ஒரு தத்துவத்தின் தோற்றத்தையும் பரவலையும் அதனை மக்கள் ஏற்றுக்கொண்ட முறையையும் சரியாக விளக்க வேண்டுமானால் தத்துவரீதியான விளக்கங்கள் மட்டும் போதாது. தொல்லியல், மானிடவியல், மொழியியல், சமூகவியல் போன்ற மற்ற துறைகளின் துணையைக் கொண்டுதான் இவைகளை விளக்கிக் கூறமுடியும். இதனை மார்க்சியத்தைத் தன்னுடைய அணுகுமுறையாகக் கொண்டே சட்டோபாத்யாயா புரிந்துகொண்டு அந்த ஒளியில் தத்துவப் பகுதிகளை நுட்பமுடனும் எளிமையுடனும் விளக்கிக் காட்டுவதில் வெற்றி பெற்றார்.

லோகாயதா நூலை எழுதிய பின்னர்தான் இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் என்ற இந்த நூலை எழுதுகின்றார். இதற்குப் பிறகு இந்தியத் தத்துவத்தில் நிலைத்து இருப்பனவும் அழிந்தனவும் என்ற நூலை எழுதியுள்ளார். இந்த மூன்று நூல்களையும் ஒருசேரப் படிப்பவர்கள் மட்டுமே ஆசிரியரின் கருத்தோட்டங் களைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இருப்பினும் இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் என்ற இந்த நூல் சிங்க நோக்காக நின்று மற்ற இரண்டு நூல்களையும் படிக்கும் ஆர்வத்தை வாசகர்களுக்குத் தூண்டிவிடும். குறிப்பாகக் கடவுள் என்ற கருத்து தோன்றுவதற்கு முன்னிருந்த நாத்திக வாதம் என்று ஒன்று இருந்தது, அது தாமிர இரும்புக் கருவிகள் தோன்றுவதற்கு முன்னிருந்த விவசாயப் பொருளாதாரத்தின் விளைபொருள் ஆகும். இதற்கு லோகாயதா என்று பெயர். இதன் பொருள் உலகத்தை அது உள்ளவாறே புரிந்து கொள்வது என்பதாகும். இது மாய வித்தைகளையும் மந்திரங் களையும் தன்னகத்தே கொண்டு இருந்தது. இதனை ஜார்ஜ் தாம்ஸன், ஜோசப் நீடாம் போன்றவர்களின் நூல்களைக் கொண்டு ஆசிரியர் விளக்கிக் காட்டுகிறார். இந்தப் பகுதிகள் ஒரு கருத்தியல் சிந்தனை என்பது எப்படி ஒரு பொருளாதார நடவடிக்கையில் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை வாசகர் களுக்கு மிகத் தெளிவாக விளக்கு கின்றது. இந்தப் பகுதி இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் என்ற நூலில் சுருக்கமாக உள்ளது ஆகும். இதனை விரிவாகக் கூறும் பகுதி லோகாய தாவில் உள்ளது. இதுபோன்ற பல இடங்கள் இந்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

இறுதியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெற்றிநடை போட்ட பௌத்த மதம் இந்தியாவில் இருந்தே ஒழிந்துவிட்டது. இது ஏன் நிகழ்ந்தது என்ற காரணங்களை இந்த நூலின் பிற்காலப் பௌத்தம் என்ற பகுதியில் தெளிவுபடுத்துகின்றார்.

நல்ல அச்சிலும் தெளிவான மொழிபெயர்ப்பாகவும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு ஆசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தத்துவம் தொடர்பான வடமொழிச் சொற்களைத் தமிழ் மரபில் அதே பொருளில் உள்ள சொற்களைக் கொண்டு மொழிபெயர்த்து இருப்பது பாராட்டத்தக்கது. இந்தத் தன்மையிலான மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் வருவது தமிழ் மொழியின் தகுதியை உயர்த்தும் என்பது உறுதி.

(இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, வெளியீடு: படைப்பாளிகள் பதிப்பகம், பக்கம் 368, ரூ.160)

- பொ.வேல்சாமி

 

Pin It