ஒருங்கிணைந்த இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அதற்கே உரிய தனித் தன்மையுடன் வரலாற்றில் தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பிடத்தகுந்த அளவில் மாறுபாடுகளும், வேறுபாடுகளும் நிறைந்த அந்த மாநிலங்கள், இனம், மொழி, நிறம், மதம் போன்றவற்றில் தனித்தன்மையுடன் வாழ்ந்தாலும் வியக்கத்தகுந்த வகையில் அமைதியாக வளர்ந்து வருகின்றன. அதற்கு அடிப்படையாக இருப்பவை இந்தியாவின், நீர்வளமும், மண் வளமும், மனித வளமுமே என்பது வெளிப்படையான ஓர் உண்மை. இயற்கை வளங்கள் நிறைந்த இந்தியாவில், மக்கள் எளிமையாக, ஒருங்கிணைந்து மன நிறைவோடு வாழ்ந்து வருகிறார்கள்.

இயற்கையைச் சார்ந்து அதனோடு இயைந்த வாழ்க்கை வாழ்வதற்கான அடிப்படை எங்கும் நிறைந்து காணப்படுவதால் அறிவியல் வளர்ச்சிக்குத் தேவையான வாழ்க்கைச் சிக்கல்களோ, நெருக்கடிகளோ இல்லாத நிலைமை தொடர்ந்து இருந்து வருகிறது. இதுபோன்ற ஒரு புரிதலின் கண்ணோட்டத்தில் தனித்தன்மைகளை இனம் கண்டு தமிழ்நாட்டின் வரலாற்றை, பேராசிரியர் அ.இராமசாமி அடையாளம் காட்டுகிறார். தனது புரிதல்களையும், கருத்துக்களையும், மதிப்பீடுகளையும் அறிவியல் கண்ணோட்டத்தில் நிறுவுவதற்குத் தகுந்தபடி இயற்கை வடிவங்களான நிலம், மலை, நதி போன்றவை குறித்த தகுந்த புள்ளி வடிவங்களைச் சேகரித்து இந்த வரலாற்றைத் திறந்த மனத்தோடு விருப்பு, வெறுப்பு இல்லாமல் இந்த வரலாற்றை வடிவமைத்திருக்கிறார்.

a ramasamy book on tamilnadu historyஅந்த வகையில், தமிழ் நாட்டின் எல்லைகள் இனம் கண்டு மதிப்பீடுகளை முன்வைக்கிறார். “இயற்கையோடு இணங்கியும், போராடியும் அதனை வணங்கியும் வாகை சூடியும் மனிதன் நடத்திய போராட்டத்திலே பூத்த மலர்தான் நாகரிகமாகும். எனவே, இயற்கை தந்த ஆக்கபூர்வமான சவால்களுக்கு மனிதன் தந்த ஊக்கபூர்வமான பதில்களின் விளைவாகத் தோன்றியவையே நாகரிகமும், அதனைத் தொடர்ந்து எழுந்த வரலாறும் ஆகும். தமிழ்நாட்டின் இயற்கை அமைப்புக்களும், அத்தகு ஆக்கபூர்வமான சவால்களைத் தந்தமையால்தான் உலகிலேயே தொன்மைமிக்க நாகரிகத்தையும், பெருமைமிக்க வரலாற்றையும் தமிழனாக உருவாக்க முடிந்தது” என்று பேராசிரியர் அ.இராமசாமி தனது மதிப்பீட்டை முன் வைக்கிறார்.

தொடர்ந்து, “இந்தியாவை, விந்திய சாத்பூரா மலைத் தொடர்களும், அவற்றுடன் இணைந்து ஓடும் நருமதை, தபதி ஆறுகளும், தண்டகாருண்யக்காடுகளும் வட இந்தியா, தென் இந்தியா என்று இரண்டாகப் பிரிக்கின்றன. தென்னிந்தியாவில் தக்காணப் பீடபூமிக்கும், தெற்கே குமரியும், கிழக்கு, மேற்கில் கடலும் சூழ்ந்த நிலப்பரப்பே தமிழகம் என்று தொல்காப்பியச் சிறப்பும் பாயிரம் கூறுகிறது. வட இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மக்கள் இனக் கலப்பு, பொருளாதாரச் சிக்கல்கள் பண்பாட்டுக் குழப்பங்கள், சமூக மாற்றங்கள் ஆகியவை, பெரும்பாலும் விந்தியமலை மற்றும் அதனுடன் இணைந்த இயற்கைத் தடைகளைத் தாண்டித் தென்னிந்தியாவைப் பாதித்தது இல்லை. குறிப்பாகத் தமிழகத்தைத் தொடவில்லை” என்று இவர் தாம் உணர்ந்ததைப் பதிவு செய்கிறார். அதே சமயத்தில், “விந்திய, சாத்பூரா மலைத் தொடர்களுக்கு இடையில் உள்ள கணவாய்கள் வழியாகவும், வங்க அரபிக்கடல்கள் வழியாகவும் மக்கள் போக்குவரத்தும், சில சமயங்களில் அரசியல், பண்பாட்டுத் துறைகளில் தொடர்பும் இருந்திருக்கின்றன” என்றும் குறிப்பிடுகிறார்.

அடுத்து, இந்தத் ‘தமிழ்நாட்டு வரலாறு’ முறையாக எழுதத் தொடங்கிய கிறிஸ்துவ சமயப் பணியாளர்களும், காலனிய அரசு அலுவலகங்களுமே அவர்கள் தங்கள் சமயப்பரப்புத் தேவைக்கும், அரசு அலுவல் தேவைக்குமாகவே தமிழ்நாட்டின் வரலாற்றை அறியத் தலைப்பட்டனர். அவ்வாறு எழுதப்பட்ட வரலாற்று எழுத்துக்களில் ஒருதலைசார்பு - அதாவது, தம் நாகரிகமும் பண்பாடும் மேலானவை, தம் ஆட்சிக்குட்பட்ட நாகரிகமும், பண்பாடும் கீழானவை அல்லது அத்தனை உயர்வானவையல்ல என்ற கருதுகோலையே கொண்டிருந்தனர்’ என்பதை இதன் பதிப்பகத்தார் இனம் காண்கிறார்.

காலனிய ஆட்சியின் கீழ்தான் நவீனத்துவத் தமிழர்களை வந்தடைந்தது. தமிழர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களாகவே எழுதத் தொடங்கினர். கடந்த இருநூறு ஆண்டுகளாக வெளிவந்துள்ள தமிழ்நாட்டு வரலாற்று எழுத்துக்களில். தமிழ் நாட்டின் அரசியல் போக்குகள் வெகுவாகத் தாக்கம் செலுத்தியுள்ளன. அவற்றுள் முதன்மையானவை திராவிட நோக்கும் இந்திய நோக்கமுமே. இவற்றுள் பேரா, அ. இராமசாமி எழுதியுள்ள ‘தமிழ்நாட்டு வரலாறு’ திராவிட நோக்கை அடிநாதமாகக் கொண்டுள்ளது.

மக்களின் வாழ்க்கை முறைகளை வடிவமைக்கும் நிலம், மலைகள், ஆறுகளின் போக்குகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளைத் தகுந்த எடுத்துக் காட்டுக்களுடனும், தகவுகளுடனும் பேராசியர் காட்சிப்படுத்தியுள்ளார். அனைத்தும் அறிவியல் சார்ந்த ஆய்வுக்கண்ணோட்டம் உடையவையாக உள்ளன. உழவுத்தொழிலை முதன்மையான தொழிலாக அமைத்துக் கொண்டு வறண்ட நிலங்களிலும், காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆற்றுப் படுகைகளிலும் அவற்றைச் சார்ந்த நிலப்பகுதிகளிலும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமாகிய உழவுத் தொழிலைத் தொடர்ந்து வளர்த்து தமிழ்நாட்டு வரலாற்றை வளர்த்தெடுத்த முறைகளை விளாவாரியாகப் பதிவு செய்து, தமிழகத்தில் நிலவிய நிலவுடைமைச் சமுதாயத்தைப் பற்றிய குறிப்புக்களைத் தெளிவாகவும். விளக்கமாகவும் சித்தரித்துக் காட்டியுள்ளார்.

தனது, வரலாற்று நூலான இதை இரண்டு பாகங்களாகப் பிரித்து, ‘தமிழ்நாட்டு வரலாற்றுக்களை அடிப்படை ஆதாரங்களை இனம் காண்கிறார். அதற்கான ஆதாரங்களை புதைபொருட்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், புராணங்கள், கோயில்கள் மற்றும் குகைகளில் காணப்படும் சிற்பங்களள், ஓவியங்கள் போன்றவற்றிலிருந்து சேகரித்துப் பகுப்பாய்வு செய்துள்ளார் பேராசிரியர். இத்துடன், அயல்நாட்டு நிறுவனங்களில் காணப்படும் குறிப்புக்கள், ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனங்கள் அரசாங்கங்கள் ஆகியவற்றின் ஆவணங்கள், கிறித்துவப் பாதிரிமார்களின் நாட்குறிப்புகள், அறிக்கைகள், புதுச்சேரி அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புக்கள் போன்ற ஆவணங்கள், தமிழகத்திற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் நாட்குறிப்புக்கள் போன்றவற்றில் காணப்படும் செய்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தைப் பழங்கற்காலம் என்று குறிப்பிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் கால அளவை கி.மு.35,000 முதல் கி.மு.10,000 வரை செய்துள்ளதை அடையாளப் படுத்துகிறார். அதை இடைக்கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் கற்காலம் என்று வகைப்படுத்தி அவற்றின் தனித்தன்மைகளை எடுத்துக்காட்டி வரலாற்று வளர்ச்சியை விவரிக்கிறார்.

அடிப்படையில், தமிழர்கள் தங்களது நிலப்பரப்பை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்காகப் பிரித்து அவற்றின் அடிப்படையில் சமுதாய வாழ்க்கை மற்றும் உற்பத்தி முறைகளில் தனித்தனியான அடையாளங்களை நிறுவி வாழ்ந்து வந்தனர். அவைகளுக்குரிய அரசு, சமுதாயம், கலை, இலக்கியக் கலாச்சாரம் போன்றவைகளை வரையறை செய்து வகைப்படுத்தி வரலாற்றில் தொடர்ந்து வாழ்ந்தனர். அவற்றை வளர்த்தனர்.

சங்ககாலம் என்ற கருத்தாக்கத்தை மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தி முதல், இடை, கடை என்று குறிப்பிட்டு அவற்றின் மாறுபட்ட தன்மைகளை அடையாளப்படுத்துகிறார். அதைப் போலவே, தமிழர் அரசை சேர, சோழ, பாண்டியர் என்று பகுத்ததுடன் அவர்களின் தனிச்சிறப்புப் பெற்று தமிழர்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்த்த அரசர்களின் தனிப்பட்ட சிறப்பம்சங்களை இனம் காட்டுகிறார். காலப் போக்கில் அண்டை நாடுகளில் இருந்த அரசுகளுடன் தொடர்பு கொண்ட நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார். மௌரியர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள் தொடர்பு பற்றிய மதிப்பீடுகளை முன்வைக்கிறார். சாளுக்கியர்களின் படையெடுப்பு குறித்தும் விளக்குகிறார்.

தமிழகத்தில், பல்லவர் காலத்தில் இருந்து வந்த சாதி, சமயம், வேளாண்மை, தொழில், வணிகம், கல்வி, இலக்கியம், நுண்கலைகள் போன்றவற்றில் வளர்ச்சிப் போக்குகளையும் விளக்குகிறார். பல்லவர்களின் நகரமைப்பைச் சிறப்பிக்கும் பொழுது; அகன்ற தெருக்களுக்கும், அழகுக்கும் பெயர் பெற்றதனால்தான் இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த ஏழு நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் கருதப்படுகிறது என்று பேராசிரியர் குறிப்பிடுகிறார். தொடர்ந்து வளம் நிறைந்த பல்லவர் ஆட்சியின் வீழ்ச்சிக்குரிய காரணங்களே இவர் பட்டியலிடுகிறார்.

தொடர்ந்து ‘இடைக்காலப் பாண்டியர் பேரரசு’ பற்றியும், அதில் தனித்தன்மையும் செயல்பட்ட சிற்றரசர்களின் சாதிகளையும், தனிச் சிறப்புக்களையும் குறிப்பிடுகிறார்.

மேலும், சோழர்களின் எழுச்சியை தகுந்த பின்னணிகளுடன் குறிப்பிடுகிறார். விசயபாலன், முதலாம் ஆதித்தன், முதலாம் பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன் இரண்டாம் பராந்தகன், உத்தம சோழன் போன்றவர்களின் தனித் தன்மைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

சோழ மன்னர்களால் மாமன்னர்களாக விளங்கி தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்ந்த முதலாம் இராசராசன் முதலாம் இராசேந்திரன் ஆகியோரைப் பற்றியும் சாதனைகளை விளக்கிப் பட்டியலிடுகிறார். முதலாம் இராசராசன் சேரநாடு, பாண்டியநாடு, இலங்கை போன்ற நாடுகளின் மீது படையெடுத்து வெற்றிகண்டு பேரரசை நிறுவிய வரலாற்றைச் சித்திரிக்கிறார். சாளுக்கியர்களோடு போர் புரிந்த அவர் அடைந்த வெற்றியையும், சமயப்பணிகளையும் வகைப்படுத்திச் சுருக்கமாக விளக்குகிறார்.

அதன்பின், சோழர்களின் சரிவையும், வீழ்ச்சியையும் அவற்றிற்கான காரணங்களையும் விளக்குகிறார். தமிழ்நாட்டு வரலாற்றில் அவர்களின் வியக்கத் தகுந்த பங்களிப்புக்களையும் பட்டியலிட்டுக் கூறுகிறார். “இறுதியானதும், சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமானதுமான காரணம் பாண்டியர்களுடைய எழுச்சியே.” என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் பாண்டியர் பேரரசு எழுச்சி பெறக் காரணமாக இருந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் போன்றவர்களின் பங்களிப்புக்களையும் பாண்டியப் பேரரசின் வளர்ச்சியையும் இவர் விவரிக்கிறார்.

அதைத் தொடர்ந்து மதுரையை முகம்மதியர் கைப்பற்றிய விதத்தையும் அவைகளின் விளைவுகளையும் இவர் விவரிக்கிறார் அதைத் தொடர்ந்து பாண்டியர்கள் ஆட்சியையும், அக்காலத்திய மக்கள் வாழ்வும் சித்தரிக்கப்படுகின்றன. அதில் உள்ளடக்கிய அரசன், வருவாய், நீர்ப்பாசனம், நீதித்துறை, ஆட்சிப் பிரிவுகள், சாதிசமயம், தொழில் வணிகத் தன்மைகள் மற்றும் கல்வியும், கலையும் விளக்கப்படுகின்றன.

கடைசியாக, பாண்டியர்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள் பற்றிய விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன.

தொடர்ச்சியாக விஜயநகரப் பேரரசின் விரிவாக்கம் பற்றியும் நிகழ்வுகள் சித்திரிக்கப்படுகின்றன.

அதற்குப்பின், ‘சேரர் சரிவும்’, பிரிவும், முகம்மதியர் படையெடுப்பு, பக்தி இயக்கம், கடல்கடந்த தமிழர் நாகரிகம் போன்றவை விளக்கப்படுகின்றன.

இலங்கை, சுமத்ரா, சீனம், பர்மா, மலாயா, சாவா, சையாம் போன்ற நாடுகளில் இந்திய சமயங்கள் மற்றும் கலை, கலாச்சார பண்பாடுகள் பரவியமுறைகளும் தெளிவாக விவரிக்கப்படுகின்றன.

கி.பி முதலாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டு வரலாற்றில் வியக்கத்தகுந்த அளவுக்கு உள்ளும், புறமுமாக மாற்றங்கள் நிகழத் தொடங்கியதை இந்த வரலாற்றின் இரண்டாவது பாகத்தில் இவர் தொகுத்துள்ளார் தமிழகத்தில் பரவலாக அங்கங்கே சண்டைகளும், போர்களும், ஆட்சி மாற்றங்களும் நிகழத் தொடங்கின. தமிழர்களின் வாழ்க்கையில் படிப்படியான மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தன.

திருவண்ணாமலை, கொங்குநாடு, மதுரை, தென்காசி போன்ற இடங்களில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த செய்திகளைப் பேராசிரிர் விளாவாரியாகப் பதிவு செய்துள்ளார்.

அடுத்து, 1672-இல் மூன்றாம் ஸ்ரீரங்கன் இறந்தவுடன் விசயநகரப் பேரரசும் மறைந்து விட்டது. அதன்பின் முகம்மதியர் ஆதிக்கம் பெருகி விரிவடையத் தொடங்கியது.

அதே சமயத்தில், மதுரை நாயக்கர்களின் ஆட்சி முறைகளில் நிகழ்ந்த மாற்றங்களும், கிளர்ச்சிகளும், திருப்பணிகளும், போர்களும், அவற்றின் விளைவுகளும் ‘தமிழ்நாட்டு வரலாறு’ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முகலாயர் படையெடுப்பின் விளைவாக நடைபெற்ற திருவிதாங்கூர் போர், தஞ்சைப்போர், சேதுபதியுடை போர் என்ற போர்களைப் பற்றிய செய்திகளும் இதில் தெளிவுபடுத்தப்படுகின்றன. மக்கள் நல அரசாக விளங்கிய இராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தை அவருடைய அறப்பணிகளின் வாயிலாக இவர் விவரிக்கிறார்.

தொடர்ந்து தஞ்சை நாயக்கர்களின் ஆட்சிக்காலம் பற்றிய செய்திகள் பரவலாகப் பதிவாகியுள்ளன. அதன் விளைவாக நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளில் பல வகையான மாற்றங்கள் நிகழ்ந்தன. அவைகளையும் இவர் அடையாளம் காட்டுகிறார். நாயக்கர்கள் காலத்தில் நிகழ்ந்த கட்டடக்கலை வளர்ச்சியின் சிறப்புக்களையும் வியந்து பாராட்டுகிறார்.

நாயக்கர் கால ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு இராமநாதபுரத்தை மறவர்களின் எழுச்சியை நூலில் இவர் பதிவு செய்கிறார். அவர்கள் நிகழ்த்திய போர்களைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுகிறார். சேதுபதி மன்னர்களின் ஆட்சி முறைகளையும், போர்களையும் பற்றிய விவரங்களையும், மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்களையும் பட்டியலிடுகிறார்.

அதைத் தொடர்ந்து வந்த தஞ்சை மராட்டியர்கள் ஆட்சியால் நிகழ்ந்த மாற்றங்களைக் குறிப்பிடுவதுடன் சிவாசியின் படையெடுப்பு, காச்சி, சரபோச்சி, துக்காச்சி பிரதாப் சிங், துல்கார்சி, அமர்சிங் இரண்டாம் சரபோச்சி, இரண்டாம் சிவாசி போன்ற அரகர்களின் ஆட்சிக்காலம் பற்றிய விவரங்களையும் விளாவாரியாகக் குறிப்பிடுகிறார்.

அடுத்து, கர்நாடகத்தில் நிகழ்ந்த நவாபுகளின் படையெடுப்புக்கள், அதன் விளைகள் பற்றிய மாற்றங்கள் காலவரிசைப்படி பதி செய்யப் பட்டுள்ளன.

அதன்பின், ஐரோப்பியர்களின் வருகை பற்றியும் அவற்றின் விளைவுகள் பற்றியும் குறிப்பிடுகிறார். போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், டேனியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் அந்தப் பட்டியலில் அடங்குவார்கள். அங்கங்கே தொடர்ந்து நடைபெற்ற போர்கள், ஆட்சி மாற்றங்கள் மக்களுடைய வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்த்திய முறைகளையும் குறிப்பிடுகிறார்.

அந்நியர் ஆட்சிகள் 1797 - ஆம் ஆண்டுக்குப்பிறகு தென்தமிழ் நாட்டில் அங்கங்கே ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் எதிர்த்துப் போரிட்டு விடுதலைப் போரை நாட்டில் தொடங்கிவைத்த வரலாற்றுச் சூழலை இவர் அடையாளப்படுத்துகிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சிகளைச் செய்த புலித்தேவன் கட்ட பொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோர் வீழ்த்தப்பட்ட நிகழ்வுகளையும் இவர் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் தமிழ் நாட்டில் ஏற்பட்ட நவீன வாழ்க்கை முறையின் விளைவுகளால் வியக்கத்தக்க மாற்றங்கள் படிப்படியாக நிகழ்ந்தன். அவற்றையெல்லாம் விரிவாகவும், தெளிவாகவும் இவர் பதிவு செய்து விளக்குகிறார். அதன் காரணமாக நீதிக்கட்சி தோன்றி மறைந்த நிகழ்வுகளையும் இவர் குறிப்பிடுகிறார்.

விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்களிப்பு பற்றி விரிவாக விளக்கியதுடன் அதில் பங்குபெற்ற வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க போன்றோரின் பங்கேற்பு பற்றிய விவரங்களையும் தெளிவாக விளக்குகிறார்.

தொடர்ந்து விடுதலைக்குப் பின் காங்கிரசு ஆட்சியில் தமிழகம் எதிர் கொண்ட பிரச்சனைகளையும் தீர்வுகளையும், விளைவுகளையும், முக்கியமான நிகழ்வுகளையும், அரசியல் போக்குகளையும் தெளிவாக அடையாளப் படுத்துகிறார். அந்த இயக்கங்களின் தலைவர்களின் பங்கேற்புகளையும், பங்களிப்புக்களையும் தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்கிறார்.

‘தமிழ்நாட்டு வரலாறு’ குறிப்பிடத் தகுந்த நம்பகமான ஓர் ஆவணம், விருப்பு, வெறுப்பு இல்லாமல் அறிவியல் கண்ணோட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள உண்மையில் இந்த வரலாறு, ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன்படும்.

“தமிழ்நாட்டு வரலாறு” | அ.இராமசாமி

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி).லிட்., சென்னை.

விலை: ரூ.330/-

- சி.ஆர்.ரவீந்திரன்

Pin It