சி.எம். முத்துவின் எழுத்தில் விரிந்துள்ள "மிராசு" வண்டல் மண் விவசாய மக்களின் வாழ்வு அசலானது; தனித்துவமிக்கது. கரிசல் மண்ணுக்கு கி.ராஜநாராயணன் போல் டெல்டா மண்ணின் சீவனுள்ள எழுத்தாளர் முத்து. கலாப் பூர்வத்துடன் வாசிப்பின்பமும், சரளமான சொல் நடையும் இவரது சிறப்பு. தி.ஜானகிராமனின் படைப்புகள் தஞ்சை மண்ணின் செவ்வியல் இசையை ஸ்தூலமாக கட்டமைத்தது என்றால் முத்துவின் எழுத்து நாட்டார் வழக்காற்றினை மெய்ப்படுத்தியது.
நவீன பகட்டுகள் தோன்றி மறையும் இக்கால இலக்கியத் துறையில் அசலான சீவனுள்ள எழுத்து இவரது. இனவரைவியல் காரணமாகவும், அரசியல் வரலாற்றின் காரணமாகவும் "மிராசு" நாவல் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான ஆவணப் பொக்கிஷமாகியுள்ளது. நிலத்தை வைத்து தஞ்சை வட்டார மொழியில் விரியும் முத்துவின் கதை சொல்லல், பாத்திரப்படைப்பு, மொழிநடை போன்றவை அழுத்தமானவை.
முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் மடை திறந்த நீராகப் பாய்ந்து பயணிப்பவர். பயணத்தில் காட்சிப்படும் மனிதர்களும், வெளிகளும், நிகழ்வுகளும் இவருக்குள் கதாரூபங்களாக பதிவாகி விடுகின்றன. காட்சி அடுக்குகள் நாழி ஓடுகளின் அடுக்குகளாகப் பிணைந்து டெல்டா மாவட்டத்து வாழ்வாக மலர்கிறது இவரது எழுத்தில். டெல்டா மாவட்டத்து மக்கள் வாழ்வை உயிர்ப்புடன் நெய்து வாசக மனங்களில் தெளிந்த நீராகப் படரவிடுகிறார். தீர்மானகரமான முன்முடிவுகள் அற்ற நதியின் நகர்வு முத்துவின் எழுத்து.
"மிராசு" நாவலின் வெளியெங்கும் சொலவடைகள் அயிரை மீன் குஞ்சுகளாக முகம் காட்டி வாசிப்பனுபவத்தை நிறைவுள்ளதாக்குகின்றன; எழுத்தில் கலை அழகையும், மிடுக்கையும் சேர்க்கின்றன. மீன்பிடி வலையில் யதார்த்தமாக சிக்கித் தலை காட்டும் நீர்ப் பாம்புக்ளாக ஓமந்தூர் ரெட்டியார் முதல் எம்.ஜி.ராமச்சந்திரன் வரையிலான தலைவர்களின் அரசியல் வரலாறு நாவலின் பின்னணியில் முகம் காட்டி நிற்கிறது.
அவ்வப்போது வந்து போகும் சிட்டுக் குருவிகள் தஞ்சை மண்ணெங்கும் சிதறிக் கிடக்கும் நெல் மணிகளை கொத்திப் பறக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. எதைத்தான் விட்டுவைத்தார் முத்து. ரேக்ளா வண்டியின் கொடத்துக்கு, ஆரத்துக்கு, சக்கரத்துக்கு, வட்டாக்குக்கு என ஒவ்வொன்றுக்கும் எந்த மரம் நயமாகவும், வலுவாகவும் இருக்கும் என்பதெல்லாம் இவருக்கு அத்துப்படியாக இருக்கிறது.
பூவரச, வம்மார, கருவ மரங்களில் இவரது வர்ணிப்பில் ரேக்ளா வண்டி உருவாகி நம் கண்ணையும் மனசையும் ஒரு சேரக் குத்திவிடுகிறது. "நாவியா போகாத நாக்கு கறி, மீன் ருசிக்கு அலைவுற மாதிரி" மீண்டும் மீண்டும் முத்துவின் பாசாங்கற்ற எழுத்துக்குள் முங்கி எழுகிறது மனசு. மொளகு குழம்பும், சுட்ட அப்பளமும் புருஷன், பொண்டாட்டி மாதிரி நம் முன் பரிமறப்பட்டுள்ளது. வெடக்கோழி மட்டுமா ருசி; மொளகு குழம்பும் தான் இவரோட எழுத்தில் மணக்கிறது.
தஞ்சை மாவட்டத்தைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த மிராசுகளில் ஒருவரான 'சேது காளிங்கராயரின்' குடும்பத்தை ஆணிவேராகவும், தஞ்சை வண்டல் மண் வட்டார விவசாயிகளின் வாழ்வை சல்லி வேர்களாகவும் கொண்டு வனப்போடும், வசீகரத்தோடும் கிளை விரித்து நிற்கிறது 'மிராசு'.
மிராசுக்கள் குறித்து கட்டவிழ்த்து விடப்பட்ட பொய் பிம்பங்களையெல்லாம் உடைத்து அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பதை, அவர்களின் அசல் முகத்தைக் காட்டியுள்ள நாவல் இது. சமூக ரீதியிலும், கலாச்சார முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் மிராசுகளின் வாழ்க்கையிலும் எதிரொலிப்பதை கலாபூர்வமாக காட்சிப்படுத்துகிறார் முத்து.
பூசணிப் பூவின் பிரகாசத்துடன் சேது காளிங்கயராயரின் முதல் தலைமுறையின் வாழ்வு காலையாய் பூக்கிறது. மூன்றாம் தலைமுறையில் வீழ்ச்சியடையும் வாழ்வையும், தஞ்சை மாவட்ட விவசாய வாழ்வின் சிதைவையும் நுண்ணிய காட்சியடுக்குகளின் வழி பதிவு செய்துள்ளார் முத்து.
அறிவுஜீவி அழகியலுக்கு மாற்றான உழைக்கும் விவசாய மக்களின் அழகியல் பிரகாசிக்கிறது இந்நாவலில்; வட்டார கலைச்சொல் அகராதியாகவும் மிளிர்கிறது. ஊர் மனிதர்களோ, வாகனாதிகளோ அற்று வெறிச்சோடிப் போன சாலையில் பஸ்ஸுக்காக காத்திருக்கிறது வாழ்ந்து கெட்ட காளிங்கராயர் குடும்பத்து மூன்றாம் தலைமுறை.
பொங்கிப் பாய்ந்த காவிரி வற்றி விளையாட்டுத் திடல்களாகிப் போன பின் அபூர்வ பறவையினங்களும் மறைந்து போன மண்ணின் வாழ்வை கலாபூர்வமான படைப்பாக சாதீய, அரசியல் கட்டுமானத்தின் நுட்பங்களுடன் நதியின் போக்கில் பதிவாக்கியுள்ளார் முத்து.
சீவாவ வாயில வச்சு பாட்டம் பாட்டமாக உள்ளிறக்கும் காவளூரு கள்ளோட நுரையும் சுவையுமாக உள்ளிறங்கும் எழுத்து நடை. கள்ளுக்கு விரால் மீனும், போதையில் விடைத்த நரம்புகளை நீவி விட மயிலாம்பாளுமாக வாழ்ந்த மிராசுகளின் உளவியல், வனப்புடன் காட்சி பெறுகிறது நாவலில். முத்துவின் எழுத்து காவளூரு கள்ளோட மவுசாக போதையில் நெதானமாக நம்மை மிதக்க விடுகிறது.
"நல்லா இருக்குற கொளத்த கலக்கிவிட்டாத்தான் ஆரா மீனு, கொரவ மீனு புடிக்க முடியும்" என்பது போல கொளத்த கலக்கிவிட்டு மீன் பிடித்துப் போன அரசியல் கட்சிகளின் சரித்திர முகங்கள் நீரோட்டத்தில் வெகு யதார்த்தத்துடன் பதிவாக்கப்பட்டுள்ளது. கலாபூர்வமான எழுத்தும் வட்டார மொழியும் ஈரக் காத்து ஈசலாக பூத்துக் கிடக்கிறது நாவல் வெளியெங்கும்.
புதுமையான உணர்வுகளின் வெளிப்பாடு, புதுமையான நடையை கொண்டு வரும் என்ற இலக்கிய நியதிக்கெல்லாம் அடங்காமல் காவிரின் பாய்ச்சலாய் தன் எழுத்து வழி பாய்பவர் சி.எம். முத்து. தலைக்கு மேல் குடிசையின் முகட்டுக் கல்லில் ஒரு சேவலைப் பிடித்து, அதன் கால்களைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு, அதன் படபடக்கும் சிறகுகளிலிருந்து வரும் காற்றின் சொகமாய் இருப்பது இவரது எழுத்துக்கள்.
தஞ்சை வட்டார மொழி வெகு இயல்பாக இவர் எழுத்தில் பரவி புதிய குளுமையானகாற்றை நுகரச் செய்தவர்; புதிய உணர்வில் மனம் கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து வலிமை மிக்கவர். கு,அழகிரிசாமியை நினைவுபடுத்தும் எளிய வரிகள். நீராடியாய் இருக்கும் மாடுகள் நீரேத்திவிடப்பட்டு ஏரில் சளைக்காமல் போகின்றன.
குளுமையான வயல்களின் பசுமையான கதிர்களாய் குமருகளின் அசைவான எழுத்து நடை. சூழ்ந்த பனைக்குள் வயல்களின் வாசனையை இவரது கதையில் சுவாசிக்க முடிகிறது. டெல்டா மாவட்டத்து மக்களின் வாழ்வும் பேச்சும் முத்துவின் எழுத்தில் வெகு யதார்த்தத்துடன் காட்சி பெறுகிறது; நடவு நடும் லாவகமாகிறது எழுத்து மொழி. மண்வெட்டியில் மண் பாய்ந்து பாய்ந்து அழகு பெறுவதைப் போல அழகு பெறுகின்றன இவரது எழுத்துக்கள்.
கரிசல் மண்ணுக்கொரு கி.ராஜநாராயணன் என்றால் வண்டல் மண்ணின் சீவன் சுமந்த எழுத்துக்கு சி.எம்.முத்து என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். இந்திய தரத்திற்கு எழுதப்பட்டுள்ள நாவல் 'மிராசு' என சா.கந்தசாமியின் முன்மொழிதலை வாசிப்பின் வழி நாம் வழிமொழிவது இயல்பாக அமைந்து விடுகிறது.
நாவல் இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலிருந்து சமகாலம் வரையிலான வண்டல் விவசாய வாழ்வை கிளை விரித்து பேசி நிற்கிறது. கீழத்தஞ்சை கிராமத்தில் வாழ்ந்த சேது காளிங்கராயர், அவரைச் சுற்றியிருந்த மனிதர்களின் வாழ்வு சித்திரம் அசலாக நம் கண் முன் படைக்கப்பட்டுள்ளது.
சேது காளிங்கராயர் குடும்ப வரலாற்றோடு அரசியல், பண்பாடு, விவசாய வரலாறுகளும் பின்னிப்பிணைந்து உயிர் பெற்று நிற்கிறது மிராசு நாவலில். மிராசுதர்களின் வாழ்க்கையை வனப்போடும், வசீகரத்தோடும் பேசுகிறது நாவல்.
மிராசுகள் பற்றிய மாய வலையை அறுத்து அவர்களின் அசல் முகம் வடிக்கப்பட்டுள்ளது. சமூக ரீதியிலும், கலாச்சார முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் மிராசுகளின் வாழ்க்கையிலும் எதிரொலிப்பதை நேர்த்தியாக சொல்லிச் செல்கிறது நாவல். தமிழின் மகத்தான நாவல்களில் ஒன்று 'மிராசு' என்கிறார் சா.கந்தசாமி.
எழுபது ஆண்டு கால வண்டல் பூமியின் நாடித் துடிப்பும், அரசியல் நிகழ்வோட்டமும், விவசாய வாழ்வின் வளர்சிதை மாற்றமும் பதியப்பட்ட "கல்திட்டை" ஈர நிலத்தில் ஊண்டப்பட்டுள்ளது. ஐம்பது, நூறாண்டுகளுக்குப் பின்வரும் தலைமுறையோடு பேசி நிற்கும் காலத்தின் சாட்சியை கலாப்பூர்வத்துடன் ஊண்டப்பட்ட கல்திட்டை "மிராசு".
- துரை. அறிவழகன்