இந்தியாவின் ஆட்சிமொழியாகும் அந்தஸ்து இந்தி மொழிக்கு இல்லை. மற்ற மாநில மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழி அவ்வளவுதான் இப்படி ஒரு கருத்தை குஜராத் நீதிமன்றம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 35 மாநிலங்கள் உள்ளன. இவைகளில் உத்தர்காண்ட், உத்திரப்பிதேசம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், அரியானா ஆகிய 6 மாநிலங்களின் மொழி இந்தி. இவை அல்லாமல் ஏனைய 29 மாநிலங் களின் மக்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகி றார்கள்.

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குப் படி இந்தியாவின் மக்கள் தொகை 102,86,10,328. இதில் மேற்சொன்ன இந்திபேசும் 6 மாநிலங்களின் மக்கள்தொகை 30,39,59,489. இந்தி அல்லாமல் வேறுவேறு மொழிகள் பேசும் 29 மாநிலங்களில் மக்கள் தொகை 72,46,50,839. விழுக்காடு அடிப்படையில் பார்த்தால்  இந்தி பேசும் மக்கள் 29.5 விழுக்காடும், இதரமக்கள் 70.95 விழுக்காடாகவும் வருகிறார்கள்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது  இந்தியாவின்  பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற  மொழிகளை ஆளும் தகுதி சிறு பான்மை மொழியான இந்திக்குக் கிடையாது. இதை உறுதி செய்வதுபோல குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் அமைந்துள்ளது என்பது கருதத்தக்கது.

1959 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நாடாளுமன்றத்தில் அன்றைய தி.மு.கழக உறுப்பினர் ஈ.வெ.கி. சம்பத் ஆட்சி மொழி பற்றி எழுப்பிய பிரச்சினையில், அன்றைய பிரதமர் நேரு சில வாக்குறுதிகளை வழங்கினார்.

இந்தி பேசாத மக்கள் மீது ;அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இந்தி திணிக்கப்பட மாட்டாது  திணிக்கப்படக் கூடாது.

இந்தி பேசாத மக்களிடையே ஏற்பட்டி ருக்கும் அச்சத்தை நாம்  புறக்கணிப்பதற் கில்லை.

இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதால், இந்தி பேசாத மக்களுக்கு நிச்சயம் துன்பம் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. எந்த மாநிலத்தின் மீதும் இந்தி கட்டாயமாக திணிக் கப்பட மாட்டாது.

நேருவின் இந்த வாக்குறுதிகளை மீறி அரசியல் சட்டம் 17வது பிரிவின் கீழ் 1965 முதல் இந்திதான் ;ஆட்சிமொழி என்று மத்திய  அரசு 64 ஆம் ஆண்டு இறுதியில் அறிவித்தது. விளைவு...?

கொதித்தெழுந்தது தமிழகம், குறிப்பாக மாணவர்கள். தமிழ்நாடு எழுப்பிய உரிமைக் குரல்  காட்டிய கருப்புக் கொடிகள் முழங்கிய முழக்கங்கள்  நடத்திய போராட்டங்கள் ; பக்த வச்சலம் அரசின் துப்பாக்கிப் பிரயோகங்கள், கண்ணீர் குண்டு வீச்சுகள், தடியடிகள் அடக்கு முறை...அடக்குமுறை! மாணவர்களின் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்திற்கு மொத்தத் தமிழகமும் தோள்கொடுத்தது.

போராட்டத்தை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதானார் பலர் சிறை சென்றனர். துப்பாக்கிச் சூட்டிலும், தீக் குளித்தும் உயிர்தியாகம் செய்தனர் இளைஞர்கள்.

1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தப் போராட்டத்தால் தமிழக காங்கிரஸ் அரசும், அன்றைய முதல்வர் பக்தவச்சலமும் கையா லாகாத நிலைக்கு ஆட்பட்டார்கள்.

67 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மாணவர்களும் மக்களும் காங்கிரஸ் அரசை வேரோடும், வேரடி மண்ணோம் தமிழகத்தில் இருந்து அகற்றினார்கள். இன்று வரை அதற்கு உயிர் வரவில்லை தமிழ்நாட்டில்  கொஞ்சம் துடித்துத் துள்ளுகிறது அவ்வளவுதான்.

65 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போர் உச்சநிலையில் இருந்தபோது காமராசர், ஆந்திரத்து நீலம் சஞ்சீவரெட்டி, மைசூர் நிஜ லிங்கப்பா ஆகியோர்  கூடி மகாபலிபுத்தில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் 1965 க்குப் பிறகும் ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்றார்கள்.

“ அதேசமயம் யூனியன் ஆட்சி மொழியாக, இந்தி மொழி தேசநாகிரி லிபியில் இருக்கும். அரசு அலுவல் களில் பயன்படுத்தப்படும் இலக்கங்கள் சர்வதேச  முறை இந்தி இலக்கங்களாக இருக்கும் ” என்கிறது அரசியல் சட்ட 343 வது பிரிவின் முதல் விதி.

அமைதியாக இருக்கும் இந்தச் சட்டப்பிரிவு நாளை இந்தியின் ஆதிக்கத்திற்கு வழிதிறக்கும் வாய்ப்பாக அமைகிறது. அதனால் தான் அன்று மத்திய அமைச்சர்களுள் ஒருவராக இருந்த அடல்பிகாரி வாஜ்பேயி, ஐக்கிய  நாடுகள் அவையில் இந்தியைப் பேசவைக்க வேண்டும் என்றும், அந்த அவையில் இந்தி யையும் ஒரு மொழியாக ஆக்கவேண்டும் என்றும் பேசியதோடு நிற்காமல், அதற்கு ஆறுகோடி ரூபாய் செலவாகும் என்றும் சொன்னார்.

எனக்கு ஆங்கிலம் தெரியும் ஆனால் நான் ஆங்கிலத்தில் பேசமாட்டேன் இந்தியில் மட்டுமே பேசுவேன் எழுதுவேன் என்று ராஜ்நாராயணன் மத்திய அமைச்சராக இருந்த போது பேசியிருக்கிறார்.

அதேசமயம் 1959 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் செப்டம்பர் திங்களில் “அரசியல் சட்டத்தின் 347 வது விதியின் 8வது செட்யூலில் இடம் பெறாவிட்டாலும், குறிப் பிட்ட மக்கள் விரும்பினால், ஒரு மொழியை அது வழங்கும் பகுதியில் ஆட்சிமொழியாகப் பிரகடனப்படுத்த  குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு ” என்று பேசியிருக்கிறார் நேரு.

நேருவின் பேச்சு மேம்போக்காகப் பேசப்பட்டதுபோல இருக்கிறது. தொடர் ந்து மத்தியில் ஆட்சிக்கு வருகின்ற காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் எப்படியும் இந்தியை ஆட்சி மொழியாக் கிவிட வேண்டும் என்று நேரத்தை எதிர்பார்த் துக் கொண்டே இருக்கிறது.

மொழி என்ற அடிப்படையில் ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றான சமஸ்கிருதத்தின் கடிபோலி இனத்தைச் சேர்ந்த மொழி இந்தி.

இந்திமொழியில் பால் (ஆண்பால், பெண்பால்) பற்றிய குழப்பம் நிரம்ப இருக்கிறது. அம்மொழியில் செழுமையான மொழியாட்சியோ, சொல்லாட்சியோ அன்றி இலக்கிய இலக்கண வளமையோ இல்லை என்பதை உரிய சான்றுகளுடன் பன் மொழிப்புலவர் பேராசிரியர் கா. அப்பாத் துரையார் சொல்லியிருக்கிறார்.

மிகமுக்கியமாக இந்த மண்ணுக்குரிய திராவிட மொழியாக இல்லை  இந்தி. அது இங்கே நுழைந்த ஆரிய மொழி. திராவிட மொழிகளை ஆட்சி செய்யும்  இந்திக்கு இல்லை.

அதனால்தான் தொடக்கத்தில் இருந்தே இந்தியின் ஆதிக்கத்தை போராட்டங்கள் மூலமாக அடக்கி வைத்திருக்கிறது  திராவிட இயக்கம்.

நீதிக் கட்சித் தலைவர் சர்.பி.டி.இராசன், அண்ணாமலைப்பல்கலைக்கழக இளைய வேந்தர் இராஜா சர் முத்தையா செட்டியார், முன்னாள் துணைவேந்தர் எஸ்.ஜி.மணவாள இராமானுஜம், தமிழரசுக்கட்சித் தலைவர் மா.பொ.சிவஞானம், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், மறைமலை அடிகளார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, சி.பா.ஆதித்தனார், தேவநேயப்பாவாணர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்ற தலைவர்களால் இந்தியின் ஆதிக்கம் தடுக்கபட்டு இதுகாறும் அடக்கப்பட்டு இருக்கிறது.

ஆயினும் இந்தி ஆதிக்கத்திற்கான் கதவு முற்றாக அடைக்கப்படவில்லை. எப்பக்கம் வந்து புகுந்திடும் இந்தி என்ற பாவேந்தரின் வரி நினைவுகொள்ள வேண்டிய நேரம் இது.

இதற்கான எச்சரிக்கை போல குஜராத் நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது !

சிந்திக்க வேண்டிய நேரம் இது என்பது மட்டுமல்ல, தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய காலமும் இதுதான் இனியும் தான் !

(கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல் ! நன்றே சொல்!!)

-எழில்.இளங்கோவன்

Pin It