கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கோவைப் பொதுக்கூட்டத்திலும் திருச்சி ஆர்ப் பாட்டத்திலும் செயலலிதாவுக்குப் பெருங்கூட்டம் கூடியதைப் பார்த்தால், அடுத்து ஆட்சியைப் பிடிப்பவர் அவர்தாம் என்பது போல் தெரிகிறதே? 

      தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொண்ட முதல் பெருங்கட்சி அ.இ.அ.தி.மு.க., அடுத்த பெரிய கட்சி தி.மு.க. ஆனால் இவை இரண்டு கட்சியும் கூட்டணிக் கட்சிகளின் துணையில்லாமல் தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்கும் வலு இல்லாதவை.  கூட்டணி அமைவதைப் பொறுத்துத்தான் யார் ஆட்சியைப் பிடிப்பார் என்பது முடிவாகும். 

விசயகாந்த் தமது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்திருக்கிறாரே? 

      கருணாநிதி பிறந்த நாள் தமிழ் பிறந்த நாள் என்று தி.மு.க.வினர் கூறவில்லையா? திருமாவளவன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாக சிறுத்தைகள் கூறவில்லையா? அந்த பாணியில் தமக்கான ஒப்பனைச் சொல் ஒன்றை விசயகாந்த் உருவாக்கிக் கொண்டார் போல் உள்ளது.  வருங்காலத்தில் வறுமைதான் விசயகாந்த் போன்ற போலிகளை ஒழிக்கப் போகிறது. 

செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்த்தின் இந்தியக் குடியுரிமை பற்றி கபில்சிபல் தலைமையில் உள்ள மனிதவள மேம்பாட்டுத் துறை ஐயம் எழுப்பியது ஏன்? 

      பார்ப்பனராக இருந்தாலும் ஆனந்த் தமிழ்நாட்டில் பிறந்ததால் அவர் சந்தேகத்திற்குரியவர் என்று அவர்கள் கருதியிருக்கலாம். 

தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு நடத்த 20 இலட்ச ரூபாய் காப்புத் தொகை கட்ட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் நிபந்தனை விதித்திருப்பது சரியா? 

      இதே சல்லிக்கட்டு உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் மரபுவழிப்பட்ட வீர விளையாட்டாக இருந்திருந்தால் எந்த நிபந்தனையும் விதித்திருக்காது உச்சநீதிமன்றம். 

      தமிழர்களில் வரலாற்று அடையாளங்கள், கலை, பண்பாடு, மொழி ஆகியவற்றை அழித்தால்தான் இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முடியும் என தில்லி ஏகாதிபத்தியம் கருதுகிறது. அச்சிந்தனைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்களே உச்சநீதி மன்ற நீதிபதிகளாக உள்ளனர். 

      இவர்களின் இந்தப் போக்கினால் இந்திய ஒருமைப்பாடுதான் அழியும்; தமிழர் பண்பாடு அழியாது. 

      சங்க காலம் தொட்டு ஏறு தழுவுதல் என்ற இந்த வீர விளையாட்டில் விலங்கு வதை எதுவும் கிடையாது.  அதை ஒழுங்குபடுத்தத் தேவையான விதி முறைகள் வகுக்கலாம்.  உச்ச நீதி மன்றம் போட்டிருப்பது ஒழுங்கு படுத்தும் விதிமுறை அன்று; தாங்க முடியாத தண்டத் தொகை. 

      ஸ்பெயின் நாட்டில் மிகக் கொடிய முறையில் காளை விளையாட்டு இன்றும் நடைபெறுகிறது.  ஸ்பெயின் நாடு முழுவதிலும் அது தடை செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் செயராம் ரமேசு அண்மையில் நாடாளு மன்றத்தில் தவறான தகவல் தந்தார். உண்மையில் ஸ்பெயினில் ஒரு மாகாணத்தில் 2012க்குப் பிறகு காளை விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்றும், அதுகூட அம்மாகாணத்தில் உள்ள காளை விளையாட்டு சங்கத்தினரை அழைத்துப் பேசி அவர்களது இணக்கத்தோடு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உள்ளூர் நீதிமன்றம் ஒன்று ஆணையிட்டுள்ளது. அவ்வளவே. இதனைப் பெரிதுபடுத்தி, ஸ்பெயினில் தடை இப்போது வந்து விட்டதுபோல் ரமேஷ் கதைகட்டுகிறார். அந்த அளவிற்கு அவர்களுக்குத் தமிழர் மரபு மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. 

      உச்சநீதி மன்றம் விதித்த அடாத நிபந்தனைகள் நீக்கப்படவேண்டும்.  ஏறு தழுவுதல் தொடரட்டும் 

டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடப் போவது போல் ஊகிக்கும் வகையில் கருத்துச் சொன்ன கருணாநிதி அந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்துள்ளாரே? 

      சாராயக் கடைகளை மூடவேண்டும் என்று வலியுறுத்துவோரையும் பணி நிரந்தரம் கோரும் டாஸ்மாக் ஊழியர்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றுகிறார் கருணாநிதி. 

      சாராயக் கடைகளை மூடிவிட்டு, அக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் பிற அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. 

த.தே.பொ.க.வுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லையே? 

      த.தே.பொ.க. தனித்தமிழ்நாடு கோருகிறது.  தேர்தலைப் புறக்கணிக்கிறது.  நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு விடுதலை இலட்சியத்தை வைக்கவில்லை.  தேர்தலில் பங்கு கொள்வதாக அறிவித்துள்ளது.  இவை இரண்டும் அடிப்படையான வேறுபாடுகள் இல்லையா? 

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனைத்திந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு வைப்பது தேவையா? இல்லையா? 

      தேவை இல்லை.  மருத்துவக் கல்வியை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு செல்லும் ஏகாதிபத்தியச் சூழ்ச்சித் திட்டம் இது.  

      இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் போனால் தமிழக மாணவர்களுக்குரிய எண்ணிக்கை குறைக்கப்பட்டு, வெளி மாநில மாணவர்கள் அதிகமாகச் சேர்க்கப் படுவர்.  பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டைக் காவு கொடுப்பர்.  இவ்வாறு பல்வேறு இழப்புகள் ஏற்படும். 

தமிழ் நாட்டில் இனிமேல் புதிதாகத் தன்நிதிப் பொறிஇயல் கல்லூரிகள் திறக்க அனைத்திந்தியத் தொழில் நுட்பக் கழகம் அனுமதி தரக் கூடாது என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளாரே? 

      புதிதாகத் தொடங்கப்படும் பொறியியல் கல்லூரி முதலாளிகள் கொடுப்பதை வாங்கி வைக்க இடமில்லாத படி நிரம்பிவிட்டது போல் தெரிகிறது. 

      இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழ் நாட்டில்தான் 471 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. மாணவர் சேர்க்கையில் வருந்தி வருந்தி அழைத்தும் 8,172 இடங்கள் காலியாக உள்ளன. 

      ஈசல் போல் பிலுபிலுவெனப் பெருகிய கல்வி முதலாளிகளின் பொறியியல் கல்லூரிகள் பல சமூகச் சிக்கல்களை உருவாக்கிவிட்டன. 

      85 விழுக்காட்டிற்கு மேல் வெளி மாநில மாணவர்களைச் சேர்த்தன.  இட ஒதுக்கீடு வழங்க மறுத்தன.  கல்விக் கூடங்களை வழிப்பறிக் கொள்ளைக் கூடங்களாக மாற்றின. 

      இவற்றில் மிகை எண்ணிக்கையில் பட்டம்   பெற்றவர்கள் - சொத்தை அழித்துப் படித்துவிட்டு வேலையில்லாமல் அலைகின்றனர். 

      அரசு, கல்வி அளிக்கும் தனது பொறுப்பை கை கழுவிவிட்டது. 

      இந்திய அரசு வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கப் போகிறது. அதனால் மேலும் புதிய புதிய சமூகச் சிக்கல்கள் உருவாகும். 

      பொன்முடிக்கே திகட்டும் அளவிற்கு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.  நோயின் உச்சத்தைத்தான் இது காட்டுகிறது. 

இலங்கை - தமிழக மீனவர்கள் சந்திப்பு நல்ல விளைவுகளை உருவாக்குமா? 

      டக்ளஸ் தேவானந்தா அரவணைப்பில் உள்ள ஈழ மீனவர்களை இராசபட்சே அனுப்பியுள்ளார்.  இந்திய அரசு அக்குழுவை வரவேற்று சந்திப்புகளை ஒழுங்கு படுத்தியுள்ளது.  இராசபட்சே - சோனியா காந்தி கூட்டணி ஈழத்தமிழ் மீனவர்களுக்கும் எதிரானது. தமிழக மீனவர்களுக்கும் எதிரானது.  இரு தரப்பு மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.