‘பெரியார் பிறந்த பூமி’ என்று நாம் அவ்வப்போது பெருமையடித்துக் கொள்வதற்குச் சொல்லும் காரணங்களில் பிரதானமானது, ‘அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா தொடங்கி வடமாநிலங்கள் வரை பலரும் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள். மய்யநீரோட்ட இடதுசாரி அமைப்புகள் தொடங்கி புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் கூட சாதி ஒற்றைப் போட்டுக் கொள்ளும் வழக்கத்தைக் கைவிடவில்லை. ஆனால் தமிழகத்தின் பொதுவெளியில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்வது என்பது கூச்சகரமான செயலாக மாற்றப்பட்டிருக்கிறது’ என்பது. ஆனால் தமிழகத் தலைநகர் சென்னையின் மய்யப்பகுதியன்றில் ஒரு சிலை சாதிப்பெயரோடு நிற்கிறது. அந்த சிலை அமைந்த சாலையும் சாதி ஒற்றைத் தாங்கியிருக்கிறது. 

அதிர்ஷ்டவசமாக தமிழகச் சாதிகளுள் ஒன்றில் பிறக்காத எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தெருக்கள் மற்றும் பூங்காக்கள், நினைவிடங்களில் இருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. பிற்காலத்தில் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் காயிதேமில்லத் பெயரால் மாவட்டம் அமைக்கப்பட்டதையட்டி எழுந்த மதக்கலவரம், வீரன் சுந்தரலிங்கம் பெயர் அரசுப்போக்குவரத்துக் கழகமொன்றிற்கு வைக்கப்பட்டதன் விளைவாய் எழுந்த சாதிய வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தமாக தலைவர்களின் பெயர்கள் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக்கழகங்களிலிருந்து நீக்கப்பட்டன. இத்தனைக்கும் மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களின் ஒன்றில் கூட தலித் தலைவர்கள் இல்லை. ஆனால் இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் அசையாமல் அப்படியேதான் நிற்கிறது பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சிலையும் பசும்பொன் முத்துராமலிங்கத் ‘தேவர்’ சாலையும்.

முக்குலத்துச் சாதி அதிகாரத்தையும் அரசியலையும் கேள்விக்குட்படுத்தாமல் தமிழ்ச்சமூகத்தின் பல தீர்மானகரமான மய்யங்கள் ஏற்றுக்கொண்டது என்பதே இதன் அர்த்தம். இன்று வரை வெகுஜன ஆதரவு பெற்ற எந்த ஒரு சின்ன அசைவும் கூட இந்த முக்குலத்தோர் அதிகாரத்திற்கு எதிரானதாக இல்லை. மாறாக அதற்கேற்றவாறு சமூகம் ஒத்திசைந்து தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது. அதன் உச்சம் ‘தேவர் ஜெயந்தி’ என்னும் கலாச்சார அநாகரீகம், ஜெயமோகனின் வார்த்தையில் சொல்வதானால் ‘ஜனநாயகரீதியிலான மக்கள் கூடுகை’. சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் எவ்வாறு தமிழ்ச்சமூகம் பெருவாரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மூன்று விதமான தளங்களினின்றும் அணுகலாம்.

அரசியல்:

திமுகவும் கருணாநிதியும் ஒருகாலத்தில் முக்குலத்தோரால் விலக்கப்பட்ட சக்திகளாகவே இருந்தனர். காரணம், திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி போன்ற ‘எளியசாதி’ மனிதர்களை அவர்களின் சாதிய உளவியல் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தேவர் சாதிக் கருத்தியல் பிதாமகன் பசும்பொன் முத்துராமலிங்கம் திமுக முன்வைத்த தமிழின -பார்ப்பன எதிர்ப்பு & இந்துமத எதிர்ப்பு அரசியலுக்கு எதிராய் இயங்கி வந்தவர். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர் அதிமுகவிலும் அரசு அதிகாரங்களிலும் போதுமான செல்வாக்கைச் செலுத்தினர். காளிமுத்து, திருநாவுக்கரசர் போன்றவர்கள் கட்சியில் அதிகார மய்யங்கள் என்றால், பொன்.பரமகுரு போன்ற முக்குலத்துப் போலீஸ் அதிகாரிகள் அரசு எந்திரங்களின் தீர்மானகரமான சக்திகளாக இருந்தனர். முக்குலத்தோர் & அதிமுகவினர் உறவு என்பது ஜெயலலிதா தலைமைக்காலத்தில் உச்சத்தை எட்டியது என்பதும் அதற்குக் காரணம் சசிகலாவின் செல்வாக்கு என்பதும் சாதாரண தமிழ்ஜனங்களும் அறிந்ததுதான்.

ஆனால் இப்போது இழந்துபோன முக்குலத்தோர் ஆதரவைப் பெறுவதற்காக கருணாநிதியும் பல உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளார். தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக மாற்றுவது, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டுவதான அறிவிப்பு என்பதாகத் தொடர்கிறது. மேலும் இப்போது தென்மாவட்ட திமுகவில் அதிகார மய்யங்களில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் முக்குலத்தோர்தான். ஆனால், என்ன ஒரு மனத்தடையாலோ இதுவரை கருணாநிதி நேரடியாக முத்துராமலிங்கத்தின் சமாதிக்குச் சென்று மாலை அணிவித்தது இல்லை. இந்த ஆண்டு சென்னையில் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்தது மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, ஆற்காடு வீராசாமி. இதில் ஒருவர் கூட முக்குலத்தோர் அல்ல. பசும்பொன்னில் மரியாதை செலுத்தியது அழகிரி. ஆனால் அவருடன் சென்றது ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு போன்ற முக்குலத்து அமைச்சர்கள். தன்னுடைய கருத்தியல் அடிப்படைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விடுகிற திமுக சாதி ஓட்டுக்காக எந்த சமரசத்தையும் செய்துகொள்ள தயாராகத்தானிருக்கும்.

ஜெயலலிதா பொதுவாக எந்த அரசியல் முன்னோடிகளையும் மதிக்கும் பழக்கம் கொண்டவர் அல்ல. அண்ணா, பெரியார், காமராசர், காயிதேமில்லத் போன்ற அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஜெயலலிதா போவது அரிதினும் அரிது. ஜெயலலிதாவின் கைத்தடிகளை அந்த வேலையைச் செய்ய பணித்து விடுவார். அதுவும் இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாளுக்கு சிலைக்குக் கூட மாலை அணிவிக்கச் செல்லவில்லை. தான் இருந்த கொடநாடு எஸ்டேட்டிற்குப் பெரியாரின் புகைப்படத்தை வரவழைத்து ‘மரியாதை’ செய்தார். அண்ணாவுக்கும் அஃதே. கொடுமை என்னவென்றால் இத்தனைக்கும் இந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழாவும்கூட. ஆனால் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளைக்கு நேரடியாகச் சென்று மாலை அணிவிக்க ஜெயலலிதா தவறியதேயில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் நிலவிய கச்சாடாவான ஜனரஞ்சகக் கலாச்சாரத்தை அழித்து இந்துத்துவ பார்ப்பனியச் சார்பு நிலை எடுத்து வலதுசாரி அமைப்பாக மாறிப்போன ஜெ&அதிமுகவிற்கு மிகவும் இசைவானதுதான் இந்த முக்குலத்தோர் அதிகார அரசியல்.

திமுக, அதிமுக என்கிற திராவிடக் கட்சிகளைத் தாண்டிப்போனால் தென்படுபவர்கள் ‘இடதுசாரிகள்’. சென்ற ஆண்டு முத்துராமலிங்க ஜெயந்திக்கு மரியாதை செலுத்த அதே சாதியைச் சேர்ந்த நல்லகண்ணுவை அனுப்பி தன் ‘புரட்சிகரத் தன்மையை’ நிறுவிக்கொண்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் சி.பி.எம் கட்சியின் என்.வரதராஜன். ஆனால் இந்த ஆண்டு அறுவைச்சிகிச்சை முடிந்து கறுப்புக்கண்ணாடியோடு முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போட்டு அட்டகாசமாய்ச் சிரிக்கிறார் காம்ரேட் என்.வி.

இத்தகைய சீரழிவின் கடைசிக்கொழுந்து, புளுத்துப்போன சந்தர்ப்பவாத சவடால் அரசியலுக்குப் புதுவரவு பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி, பகுத்தறிவு இயக்குனர், செந்தமிழ் நாட்டு சேகுவாரா சீமான். நல்லவேளையாக நாத்திகம் பேசுவதைத் தவிர பெரியாருக்கும் சீமானுக்கும் பெரிய தொடர்புகள் இல்லை. குஷ்பு விவகாரத்தில் ஆணாதிக்கவாதியாக அம்பலப்பட்டுப் போன சீமான், பெரியார் மற்றும் பிரபாகரனின் பெயரை உச்சரித்தே தனக்கான இளைஞர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். ‘தம்பி’ திரைப்படத்தில் முத்துராமலிங்கத்தின் புகைப்படத்தைக் காட்டி மாற்று அரசியலாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின் கீற்று இணையத்தள நேர்காணலில் ‘தான் செய்தது தவறு’ என்று ஒத்துக்கொண்டார். இருந்தபோதும் சீமானின் சாதிய உளவியல் ஒழிந்தபாடில்லை. ஈழ ஆதரவு என்ற பெயரில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரக் கூட்டங்களில் "ஈனசாதிப் பயலா இருந்தா காங்கிரசுக்கு ஓட்டுப்போடு" என்று விஷத்தைக் கக்கினார். இப்போது கொஞ்சமும் வெட்கமில்லாமல் முத்துராமலிஙக்த்தின் சிலைக்கு மாலை அணிவித்து வந்திருக்கிறார்.

"இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டோமே" என்பது சீமான் தரப்பு வாதம். சுயமரியாதைக்காகப் போராடிய போராளிக்கும் மாலை, ஒடுக்குமுறையை ஏவிய கொலைகாரனுக்கும் மரியாதை. இதுதான் சீமானின் ‘தமிழ்த்தேசிய தகிடுதத்தம்’. முத்துராமலிங்கம் மீது பேரன்பும் ராஜபக்ஷே மீது பெருங்கோபமும் கொண்ட பிஸ்கோத்து தமிழர்களை உருவாக்குவதுதான் சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம். இது சீமானோடு மட்டும் நிற்பதில்லை. தமிழ்த்தேசியம் என்ற பெயரில் இங்கு முன்வைக்கப்பட்டவை அனைத்தும் ஆதிக்க சக்தி நலன் பேணும் கருத்தியல்களே.

ஈழ ஆதரவுப் போராட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத்தோடு பல தமிழின அமைப்புகள் இணைந்து போராடின. ஆனால் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளரை எதிர்த்து பெரியார் திக போராடியபோது தமிழின அமைப்புகள் கைகோர்க்கவில்லையே. தமிழினவாதம் என்பது ஆதிக்கசாதிகளின் அயோக்கியத்தனமே என்பதற்கு ஆதாரம் தேட எங்கும் போகத் தேவையில்லை. இதே கீற்று இதழில் வெளியான முனைவர் வே.பாண்டியனின் ‘மார்க்சிஸ்ட்களின் புதிய அக்கறை & ஆலய நுழைவுப் போராட்டம்’ என்னும் கட்டுரையே போதுமானது. மார்க்சிஸ்ட் கட்சியில் பார்ப்பனத் தலைமை, மலையாளிகள் தலைமை என்று காரணங்காட்டி சாதியாதிக்கத்தைக் காப்பாற்றுகிற அயோக்கியத்தனம்தான் பாண்டியனின் ‘தமிழின ஒற்றுமை’ கட்டுரை.

சினிமா:

அவ்வப்போது  சீர்திருத்தப் பூச்சாண்டி காட்டும் விவேக், எவ்வளவு மோசமான தேவர் சாதி வெறியர் என்பதை விளக்குவதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. இப்போது அதன் புதிய வரவு கருணாஸ். ‘முக்குலத்து முகவரி’ என்னும் இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கும் கருணாஸ் ‘இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என்பதுதான் முக்குலத்தோர்’ என்று ‘அறிவியல்’ விளக்கம் அளித்திருக்கிறார். இந்துமகாசபைத் தலைவனாக இருந்த முத்துராமலிங்கம் எப்படி முஸ்லீம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முகவரியாக இருப்பார் என்று நமக்கு விளங்கவில்லை. கஞ்சா கருப்பு, ஆச்சி என்று அழைக்கப்படுகிற மனோரமா என சினிமாவில் பலரும் முக்குலத்தோரே. இயக்குனர்கள், நடிகர்கள் என பலமட்டங்களிலும் சினிமாவில் முக்குலத்தோர் ஆதிக்கம் உண்டு.

உதட்டுக்கு மேலே முளைக்கிற மயிரையும் முக்குலத்தோரையும் வீரத்தின் குறியீடாக மாற்றியதில் தமிழ்ச்சினிமாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. இதை முக்குலத்தோர் மட்டும்தான் செய்தார்கள் என்றில்லை; கமல்ஹாசன் மாதிரியான பார்ப்பனர்கள் தொடங்கி பல முக்குலத்தோர் அல்லாதோரும்கூட இதைச் செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சினிமாக்களில் தேவராதிக்கம் கட்டமைக்கப்பட்டது குறித்து தனிக்கட்டுரையே எழுத வேண்டும். தேவர்சாதிப் பெண்ணைக் காதலித்ததால் சாதிய வன்முறை ஏவப்பட்டு மனநோயாளியாகும் தலித் இளைஞனைச் சித்தரிக்கும் ‘காதல்’, குறவர்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததால் அந்த குடும்பத்தையே விலக்கி வைக்கும் முக்குலத்துச் சாதிவெறியை அம்பலப்படுத்திய ‘பருத்திவீரன்’, தலித் & பள்ளர் முரண்பாட்டைச் சொன்ன ‘பாரதிகண்ணம்மா’ போன்ற சில படங்களைத் தவிர (இதனால் இந்த படங்கள் முற்றுமுழுதான & பிரச்சினைகள் எதுவுமற்ற அரசியல் சினிமாக்கள் என்று பொருளில்லை) பெரும்பாலும் தமிழ்ச்சினிமா என்பது முக்குலத்தோர் அதிகாரத்திற்கு ஒத்திசைந்தே உருவானது.

இலக்கியம்:

90களுக்குப் பிறகு உருவான கோட்பாட்டு வெளிச்சங்களில் சாதிய இழிவுகளுக்கு எதிராய்ப் பேசிய மனநிலை இன்றைய பெரும்பாலான இலக்கியவாதிகளிடம் இல்லை. தன்மய்யநோக்கு கொண்ட,  அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளே பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈழத் தமிழர்களுக்காகப் போராடத் துணிகிற கோணங்கி மாதிரியான படைப்பாளிகள் எப்போதும் சுயசாதி ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியதில்லை. தங்கள் படைப்புகளில் கூட பதிவு செய்ததில்லை.

சமீபத்தில் உயிரெழுத்து இதழில் இலக்கிய விமர்சகர் முருகேசபாண்டியனின் எதிர்வினை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. கவிஞர் கரிகாலன் காலச்சுவடு இதழ் குறித்து எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை. "சுந்தரராமசாமி பாவம், கண்ணன் பாவம், நோ நோ டாடி பாவம், மம்மி பாவம், ஆல் பேமிலி டேமேஜ்" என்று புலம்பும் முருகேசபாண்டியன் "பார்ப்பனர்களையே ஏன் திட்டுகிறீர்கள். இட ஒதுக்கீட்டினால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என்று அரற்றுகிறார். அரட்டை அரங்கத்தில் பேசிக் கைதட்டல் வாங்க வேண்டிய முருகேசபாண்டியன்தான் நம் காலத்து ‘இலக்கிய விமர்சகர்’.

இப்படியாகத்தான் சாதி குறித்த பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் உருவாகியுள்ள மொன்னைத்தனம் நிரம்பிய இலக்கியவாதிகள் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவார்களா என்ன? இதனால்தான் "தேவர் ஜெயந்தி என்பது ஜனநாயகத்திற்கான மக்கள் கூடுகை" என்று ஜெயமோகன் ‘கருத்துமுத்து’ உதிர்க்கிறார். (ஆனால் இதே ஜெமோதான் ‘புரட்சி என்பதே மாஸ் ஹிஸ்டீரியா’ என்று ஏழாம் உலகத்தில் அருள்வாக்கு சொன்னவர்.) "நீதிக்கட்சி முக்குலத்தோருக்கு எதிரான குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியது" என்று கூசாமல் பொய் சொல்கிறார். அதுசரி கமலாதாஸையே கறுப்பு என்றவருக்கு இது எம்மாத்திரம்?

ஜெயமோகனின் மொழி ஆளுமையில் பலர் சொக்கிப் போவது உண்டாம். ஆனால் ஒரு சட்டத்தை எப்படி ‘பரப்ப’ முடியும் என்று அந்த சொக்கநாதர்களிடம் தான் கேட்க வேண்டும். (ஜெயமோகனுக்கு வந்த வாசகர் கடிதமொன்றில் முதுகுளத்தூர் கலவரம் குறித்து வாசகரொருவர் சுட்டிக்காட்டுகிறார். "முதுகுளத்தூர் பிரச்சினை குறித்து தனியாக எழுத வேண்டும்" என்கிறார் ஜெமோ. "அய்யய்யோ, அது வேற‌யா?" என்று அலறத் தோன்றியது.) காலச்சுவடுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆதரவாக எழுதுகிற முருகேசபாண்டியன்கள் ஜெயமோகனின் இந்த முக்குலத்துச்சார்பு கட்டுரை குறித்து எழுதுவார்களா என்ன?

இப்படியாக அரசியல், கலை, இலக்கியம் என எல்லாமும் சாதியக்கறை படிந்து இறுக்கம் சூழ்ந்துள்ள நிலையில் இந்த அழகிய கற்பனையை நீங்களும் கற்பனை செய்து பாருங்கள். சென்னை நந்தனத்தில் உள்ளபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையிலும் முத்துராமலிங்கத்தின் சிலையில் உள்ள பீடத்திலும் உள்ளதேவர்சாதிப்பெயரைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்தை ஒரு இயக்கம் நடத்துகிறது என்று கற்பனை செய்யுங்கள். நிச்சயமாக அது இந்தியத் தேசியக்கொடியை எரிப்பதை விடவும் கடுமையான போராட்டமாகத் தானிருக்கும். அரசு ஒடுக்குமுறையையும் சாதிய வன்முறையையும் ஒருசேர சந்திக்கும் போராட்டமாகத் தானிருக்கும். ஆனால் சாதியெதிர்ப்புக் கருத்தியலின் சுயமரியாதையைக் காப்பாற்றும் போராட்டமாக நிச்சயம் அது இருக்கும். ஆனால் அதை யார் செய்வது? பெரியார் தி.? ...? ஆதித்தமிழர்பேரவை? காலம் நம் முன்வைக்கும் வரலாற்றுச் சவால் இது.

- சுகுணா திவாகர்