தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த மே மாதம் 17ஆம் நாளோடு ‘முடிந்துவிட்டது’ என்று கொண்டாடிய இந்திய - சிங்கள அரசுகளின் தேனிலவுக் காலம் இவ்வளவு ரைவில் முடிவுக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சரத்பொன்சேகாவுக்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் துவங்கியுள்ள அதிகாரப் போட்டியில் சிங்கள அரசியலின் தன்னல வெறி அம்பலமாகிவிட்டது. இன அழிப்புப் போர் முடிந்த மறு கணத்திலிருந்தே சிங்கள இராணுவத்திற்கும் அரசியல் தலைமைக்குமான பனிப் போர் துவங்கியது. இந்தப் புகைச்சல் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

· சிங்கள இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.

· கடைசிக் கட்டத்தில் தலைவர் பிரபாகரன் மற்றும் சில தளபதிகளை சிங்களக் கடற்படைப் பொறுப்பாளர்கள் சிலர் தப்ப வைத்தனர். இந்தக் குற்றச் சாட்டை வைத்து ஏராளமான சிங்கள வலைப் பதிவர்கள் மே மாத இறுதியில் எழுதித் தள்ளினர். குறிப்பிட்ட அந்தத் தளபதிகளை ‘இனத் துரோகிகள்’ என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.

· போர் வெற்றிக்குக் காரணம் இராணுவத்தின் செயல்பாடுகளே என்றும் அரசியல் தலைமையின் செயல்பாடுகளே என்றும் வாக்குவாதங்கள் எழுந்தன.

முதல் இரு குற்றச் சாட்டுகள் மீது ராஜபக்சே அரசு அவசர அவசரமாக நடவடிக்கைகள் எடுத்தது. இராணுவத் தளபதிகள் 13 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளியே அறிவிக்காமல் படைப் பொறுப்பாளர்கள் பலர் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர்.

சரத்பொன்சேகாவின் திடீர் பிணக்கிற்கும்,அவரை ராஜபக்சே சகோதரர்கள் ஓரங்கட்டத் தொடங்கியதற்கும் மூன்றாவது காரணி கூறப்படுகிறது. தமிழக ஊடகங்களும் இந்தப் போக்கிலேயே இச்சிக்கலைப் பதிவு செய்கின்றன. ஆனால் இது ஒரு கண் துடைப்புக் காரணியே அன்றி உண்மையல்ல.

எந்தப் போர்ச் சூழலிலும் அரசும் இராணுவமும் முரண்களோடுதான் செயல்படும். வெற்றி அல்லது தோல்விக்கு இவ்வமைப்புகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே பொறுப்பு என்பது போன்ற சித்தரிப்புகள் பொது மக்களிடையே முன் வைக்கப்படும். இது போர்ச் சூழல்களில் வழமையானதுதான். சரத் - ராஜபக்சே மோதலுக்கு இது மட்டுமே காரணமாயிருந்தால் இந்தச் சிக்கலை மிக எளிதாகத் தீர்த்திருக்க முடியும். சரத் பொன்சேகாவின் அதிகார வரம்பைக் குறைத்ததற்குப் பதிலாக அதிகரித்திருந்தால் இந்தச் சிக்கலகளுக்குத் தோற்றுவாய் இல்லாது போயிருக்கும்.

ஆனால் ராஜபக்சே அப்படிச் செய்யவில்லை. அவர் அப்படிச் செய்திருந்தாலும் சரத் பொன்சேகா போர்க் கொடி தூக்கியதைத் தடுத்திருக்க முடியாது என்பதே காரணம். சரத் பொன்சேகா அல்லது யாரேனும் ஒரு இராணுவ நபர் சிங்கள அரசியலில் போர்க் கொடி தூக்குவது இன்றைய சூழலின் கட்டாயம்.

எனது இந்தக் கூற்றை விளக்க, விரிவான சான்றுகளையும் உலகமயப் போர் பொருளியலையும் முன் வைக்க வேண்டியுள்ளது. புவி அரசியலும் போர்ப் பொருளாதாரமும் நாடுகளுக்கிடையிலான உறவுகள் நலன்கள் மற்றும் முரண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கோட்பாடு புவி அரசியல் எனப்படுகிறது. இந்திய - இலங்கை உறவில் இந்தியாவின் புவி அரசியல் என்பது தமிழின விரோதம் என்ற ஐயாயிரம் ஆண்டு கால ஆரியப் பகையின் தொடர்ச்சியாக உள்ளது.

ஆகவே, இந்தியாவின் புவி அரசியலைப் பொறுத்தவரையில் தனித் தமிழீழம் அமையவே கூடாது என்பதாகும். இக் கருத்து குறித்து தமிழர் கண்ணோட்டம் தொடர்ந்து எழுதி வருகிறது. போர்ப் பொருளாதாரம் குறித்த பார்வையையும், அது தமிழீழ மற்றும் சிங்கள அரசியலில் எவ்விதமான சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் பார்ப்போம்.

பெருமுதலாளிய ஏகாதிபத்தியம் வளரும்போதே, போரும் அது சார்ந்த பொருளாதாரமும் வளர்ந்தன. நாடுகளைப் பிடிக்கவும் சுரண்டவும் ஏகாதிபத்தியங்களுக்குப் போர் அவசியமானது. போர் என்றால், பொது மக்களுக்கு - உயிரிழப்பு, உறுப்புகள் இழப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு. ஆனால், பெருமுதலாளிகளுக்கு - போர் என்பது கொள்ளையடித்துக் கொழுக்கும் நல் வாய்ப்பு. ஆயுத வணிகம், மறுசீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெரும் சுரண்டல் நடப்பதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவது போர்ச் சூழல்.

ஆகவே, ஒரு நாட்டில் போர் நடப்பது அந்நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கும் அந்நாட்டின் மீதான ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் கொண்டாட்டமான சேதி. இன்றைய ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரம் பேரளவுக்குப் போர்ப் பொருளாதாரமே என்று கருதத் தூண்டும் சான்றுகள் கிடைக்கின்றன.

இன்றைய நிலவரப்படி உலகம் முழுதும் போருக்காகச் செலவிடப்படும் தொகை 45 லட்சம் கோடி ரூபாய்! (1000 பில்லியன் டாலர்)! இவ்வளவு பணமும் பெருமுதலாளிகளின் பகாசுர கொள்கலன்களைத் தொடர்ந்து நிரப்பிக்கொண்டிருக்கின்றன. இந்தத் தொகையை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெரு முதலாளிகள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். உலகம் முழுதும் போர் நடக்க வேண்டும், அதுவும் தொடர்ந்து நடக்க வேண்டும். இல்லையென்றால் இப்பெருமுதலாளிகளின் கொள்ளையில் குறைவு வந்துவிடும். ஆகவே எந்த நாட்டிலும் அமைதி திரும்புவதையோ சுமுகம் ஏற்படுவதையோ இவர்கள் விரும்புவதில்லை.

தீவிரவாதத்திற்கெதிரான போர், அமைதிக்கான போர், பிரிவினைவாதத்திற்கு எதிரான போர் என்றெல்லாம் இவர்கள் போர்களுக்குப் பெயர் சூட்டுகிறார்கள். உண்மையான பெயர் ‘ஏகாதிபத்தியர்கள் கொள்ளையடிப்பதற்கான போர்’ என்பதே.

போர்ப் பொருளாதாரத்தில் அமெரிக்காதான் முதல் குற்றவாளியாக உள்ளது. உலகின் மொத்த இராணுவச் செலவில் 48% பணம் அமெரிக்காவால் செலவிடப்படுகிறது. ஈராக், ஆப்கன், தென் அமெரிக்க நாடுகள் மீதான தனது வலிந்த இராணுவ நடவடிக்கைகளில் இப் பெரும் தொகையை அமெரிக்கா செலவிடுகிறது.

இவ்வளவு தொகையும் அமெரிக்க மக்களின் உழைப்பின் மீதான சுரண்டல் வழியேதான் அமெரிக்கா திரட்டுகிறது. சான்றாக, 2009 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க நிதி நிலை அறிக்கையில், அந் நாட்டின் மொத்த வரி வருவாயில் 44.44% தொகை இராணுவச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கென ஒதுக்கப் பட்டது வெறும் 2.2% மட்டுமே.அமெரிக்காவிலும் பிற ஏகாதிபத்திய நாடுகளிலும் உள்ள போர்ப் பொருளாதார முதலைகள் தமது ஆயுத வணிகத்திற்காக உலகெங்கும் போரைத் திணிக்கின்றனர்.

அமெரிக்கா இதன் தலைமை நாடாகச் செயல்படுகிறது. இச் சதியில் அமெரிக்கா தனது நாட்டு மக்களையும் சுரண்டுகிறது. அமெரிக்காவின் பங்காளி அரசாகச் செயல்படும் இந்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் இராணுவச் செலவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மன்மோகன்சிங்கின் இப்போதைய அமெரிக்கப் பயணத்தில் அமெரிக்காவிடமிருந்து பெருமளவிலான ஆயுதக் கொள் முதலுக்கான உடன்படிக்கை எட்டப்படுள்ளது. 'பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படுவதற்கான” ஒப்பந்தத்தில் ஒபாமா - மன்மோகன் சிங் கையெழுத்திட்டுள்ளனர். உண்மையில் ஆண்டுக்கு ஆண்டு ஆயுதக் கொள்முதல் செலவை அதிகரிக்கு மளவு எந்தப் போர்ச் சூழலும் இந்தியாவில் நிலவவில்லை. ஆயினும் இராணுவச் செலவை அதிகரிப்பதின் நோக்கம் போர்ப் பொருளாதாரச் சுரண்டலே ஆகும். இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வாரிக் கொடுத்ததன் காரணங்களில், இலங்கைப் போரில் ஆயுத விற்பனை செய்து கொழிக்கும் நோக்கமும் ஒன்றாகும்.

ஆயுத நிறுவனங்கள் எப்போதும் போர் நடப்பதையே விரும்புகின்றன என்பதைப் பல்வேறு ஆய்வாளர்கள் சான்றுகளுடன் நிறுவியுள்ளனர். அவற்றில் முகாமையான ஆய்வு இது:

1. ஒரு நாட்டில் போர் குறித்த அச்சவுணர்வை ஊட்டுவதையும் போரில் வலிந்து ஈடுபடும்படியான அரசுக் கொள்கைகளை வகுப்பதையும் ஆயுத நிறுவனங்கள் தூண்டுகின்றன.

2. அதிகார வர்க்கத்தினருக்கு பெருமளவிலான இலஞ்சத் தொகை கொடுப்பதை ஆயுத நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

3. ஒரு நாட்டின் ஆயுதச் செலவை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, பிற நாடுகளின் இராணுவம் மற்றும் கடற்படை குறித்த மிகை மதிப்பீட்டு அறிக்கைகளை ஆயுத நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன.

4. மக்களிடைய தாங்கள் விரும்பும் செய்திகளை ஆயுத நிறுவனங்கள் பரப்பி விடுகின்றன. இதற்காக செய்தி நிறுவனங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

5. ஆயுத நிறுவனங்கள் தமக்கென ஒரு சர்வதேச வளையத்தைப் பராமரிக்கின்றன.இதைக் கொண்டு ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்கும்படியான சூழலைத் தோற்றுவிக்கின்றன (I.W.Smith, The World’s wasted wealth-II-Institue for Economic Democracy, 1994 -P 224).

இந்தியா - பாகிஸ்தான் உறவில் எப்போதுமே போர்ச் சூழல் நீடித்து வருவதை மேற்கண்ட ஆய்வோடு பொருத்திப் பார்த்தால், இவ்வாய்வின் முக்கியத்துவம் விளங்கும். இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இருக்கும் பகைமைக்கான காரணம் மத முரண் மட்டும் அல்ல.

அது ஒரு அடிப்படைக் காரணி. அக் காரணியை எக் காலத்திலும் சரி செய்து சுமுகம் ஏற்படுத்திவிட முடியும். ஆனால், இந்திய, பாகிஸ்தான் அரசுகள் அப்படிப்பட்ட சுமுகத்தை விரும்புவதில்லை. இவ்விரு நாடுகளைக் கடந்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் போர் பெருமுதலாளிகள் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் போர்ச் சூழல் நீடிப்பதையே விரும்புகின்றனர்.

இந்த ஏகாதிபத்திய பெருமுதலாளியச் சுரண்டலில்தான் காஷ்மீர் தேசிய இனத்தின் விடுதலை சிக்கியுள்ளது. இதே அடிப்படைதான் இலங்கையில் நீடிக்கும் போரிலும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்குமான இனப் பகையில் இந்தியா இனவிரோதக் கண்ணோட்டத்துடன் களமிறங்கியுள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தமக்கான புவி அரசியல் நலன்களை முன் வைத்து தமிழருக்கு எதிரான நிலையை எடுத்துள்ளன. அதேவேளை, இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் ‘இலங்கையின் மீதான போர்ப் பொருளாதாரச் சுரண்டல்’ எனும் ரகசியத் திட்டமும் உள்ளது.

மேலே காட்டப்பட்ட பட்டியல் இலங்கை அரசின் இராணுவச் செலவு அதிகரித்த விதத்தைக் காட்டுகிறது. ‘இறுதிப் போர்’ என்று பெயரிட்டு சிங்கள அரசு நடத்திய போருக்கான செலவு மதிப்பீடு மட்டும் இந்தியப் பண மதிப்பில் 10 ஆயிரம் கோடி ரூபாய்! இலங்கைப் பண மதிப்பில் இது 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்!

‘விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம்’ என்று நாடு நாடாகச் சென்று சிங்கள ஆட்சியாளர்கள் கடன் வாங்கிப் போர் நடத்துவதன் பின்னணியில் பல ஆயிரம் கோடிப் பணத்தைச் சுரண்டும் கொள்ளை நோக்கமும் உள்ளது. அதேபோல் ‘தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கையின் போரை ஆதரிக்கிறோம்’ என்று ஏகாதிபத்திய நாடுகள் கடன், ஆயுத உதவி ஆகியவற்றை அள்ளிக் கொடுப்பதிலும் போர்ப் பொருளாதாரம் ஒளிந்திருக்கிறது.

மே 17 ஆம் நாள் ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று சிங்கள அரசும் இந்திய ஊடகங்களும் அறிவித்தன. ஆனாலும், அதற்குப் பிறகும் புதிதாக ஒரு லட்சம் படையினரைச் சேர்க்கப் போவதாக சிங்கள அரசு அறிவித்தது. சிங்கள - இந்திய சதிக் கூட்டணி தம்பட்டம் அடித்ததைப் போல் விடுதலைப் புலிகள் ஒழிந்துவிடவில்லை என்பதை இது உணர்த்தியது. அதேவேளை, விடுதலைப் புலிகளுடனான போரை உண்மையிலேயே ‘முடிவுக்குக் கொண்டு வர’ இச் சதிகாரக் கூட்டணி விரும்பவில்லை என்பதும் உண்மையே.

இலங்கைத் தீவு என்பது இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆயுத வணிகச் சந்தை. இந்தச் சந்தையை ஒரேயடியாக மூடிவிட இவர்களுக்கு மனமில்லை. பல்லாயிரம் கோடிகளைக் கடனாகப் பெற்றுப் போர்ப் பொருளாதாரத்தில் கொழுத்துச் சுகங்கண்ட சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ வல்லூறுகளுக்கும் போர் ‘ஒரேயடியாக முடிவதில்’ விருப்பமிருக்காது.

இனியும் இலங்கைத் தீவில் போர் நடக்கக் கூடாது என்று இவர்கள் உண்மையிலே விரும்பினால், தமிழீழ மக்களுக்குக் குறைந்தபட்ச அங்கீகாரத்தையாவது வழங்கி அமைதிக்கான முயற்சியில் இறங்கியிருப்பார்கள். ஆனால், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்து தமிழீழப் பகுதியில் கடுகளவும் இயல்பு நிலை திரும்பிவிடாமல், பதட்டத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் பராமரிக்கின்றது சிங்கள அரசு. இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் இதற்குத் துணை நிற்கின்றன.

சிங்கள அரசு மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. கடன் கடன், கடன் மேல் கடன் என வாங்கிக் குவித்து ஆயுதக் கொள்முதல் செய்து சுய ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறது ராஜபக்சே குடும்பம். சரத் பொன்சேகா உள்ளிட்ட இராμத் தளபதிகளும் அவரவர் வரம்பிற்கேற்ப போர்க் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்தான்.

கடந்த 30 ஆண்டுகளாக போர் நடந்த இடத்தில் திடீரென போர் நிறுத்தப்பட்டு ‘அமைதி’ நிலவத் தொடங்கினால், போர்ப் பொருளாதாரக் கொள்ளையர்களால் அதைச் சகித்துக் கொள்ள முடியுமா? பல ஆயிரம் கோடி ரூபாய்களும் டாலர்களும் புழங்கிய இடம் வெறும் அகதி முகாம்களால் நிரப்பப்பட்டால், ஆயுத வணிகர்கள் எப்படி அனுமதிப்பார்கள்?

விடுதலைப் புலிகள் இயக்கமோ உறங்கு நிலையில் உள்ளது. ஆகவே, இலங்கையில் போர் தொடந்து நடக்க வேண்டும் என்பது சிங்கள, இந்திய, அமெரிக்க, சீன சுரண்டல் அரசுகளின் மற்றும் சர்வதேச ஆயுத வணிகக் குழுக்களின் விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமக்கேற்ற சிங்கள தாதாக்களைத் தேர்ந்தெடுத்து இலங்கையில் அமைதியற்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவே, சரத் பொன்சேகா - ராஜபக்சே மோதல்.

சரத் பொன்சேகா அமெரிக்கக் குடியுரிமை வைத்திருப்பதாலும், அவர் மீது ஏற்கெனவே போர்க் குற்ற வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் அவர் அமெரிக்கா பக்கம் நிற்க வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது. அமெரிக்கா சரத் பொன்சேகாவை எளிதில் தன் கைப் பிடிக்குள் கொண்டு வர முடிந்ததற்கும் இவையே காரணங்கள். ஆனால், இவை அனைத்துமே ‘இலங்கையில் நிலையற்றதன்மையை நீடிக்கச் செய்தல்’ எனும் ஏகாதிபத்திய நோக்கத்தின் அடிப்படையில் தீட்டப்பட்ட சதித் திட்டங்கள். அவ்வளவே.

ராஜபக்சே சீனா பக்கம் சாய்ந்துவிட்டதாகவும் இந்தியா ராஜபக்சேவைத் தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் ஊகங்கள் செய்திகளாக உலா வருகின்றன. சரத் பொன்சேகா அமெரிக்காவின் கையாளாக மாறிவிட்டதாக ஊடகங்கள் முμமுμக்கின்றன. ஆனால், இவை அனைத்துமே வேறு சில பெரும் நகர்வுகளின் மேல் தோற்றங்கள்.

புலிகளுக்கு எதிரான போரில் இந்த நாடுகள் அனைத்துமே ஒரே அணியில் செயல்பட்டவை. போர் முடியும் வரை இவைகளுக்குள் பிளவு இல்லை. இப்போது தெரியும் விரிசல்களும் தற்காலிகமானவையே. சிங்கள தேசத்தை ராஜபக்சேவும் அவருக்கு முன் ஆண்டவர்களும் ஓட்டாண்டி நாடாக மாற்றிவிட்டார்கள். சிங்கள தேசத்தின் சகல பகுதிகளிலும் பன்னாட்டு சுரண்டல் நிறுவனங்களின் சூறையாடலை அனுமதித்து விட்டார்கள். சிங்கள தேசம் இனி ஒருபோதும் தற்சார்புடன் வாழ இயலாது. அது பல ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடு. அந்த ஏகாதிபத்தியங்கள் தத்தம் ஆதாயங்களுக்காக சிங்கள அரசத் தலைமையை இராணுவத்தை பகடை ஆடுவார்கள். சிங்களர்களுக்கு இதுவரை ஆயுதப் படியளந்த ஏகாதிபத்தியங்கள் இலங்கைத் தீவைச் சுரண்டுவதில் தமக்குள் போட்டி போடுகின்றன. அப் போட்டியில் அந்நாடுகள் தத்தமக்கான பகடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளன.

அந்தப் பகடைகளின் தொடக்கமே சரத் பொன்சேகாவும் ராஜபக்சேவும்! ஆகவே, கொழும்பு அரசியல் நிலை குறித்த நமது பார்வை ஊடகங்கள் ஏற்படுத்தும் பொதுப் புத்தியிலிருந்து மாற வேண்டும். சரத் பொன்சேகா அல்லது ராஜபக்சே இருவரில் யார் வெல்லப் போகிறார்கள் அல்லது தோற்கப் போகிறார்கள் என்பது தமிழீழத் தேசிய அரசியலுக்கு நேரடித் தொடர்பில்லாதது.

இந்தச் சூழல் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினைகள் வேறு உள்ளன. அவற்றைக் காண்போம்.

புரட்சிகர இயக்கங்களும் தற்சார்பும்!

உலகெங்கும் புரட்சிகர இயக்கங்கள் தத்தமது ஏகாதிபத்திய அரசுகளுக்கெதிராகப் போராடிக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசையும் சர்வதேச போர்ப் பொருளாதாரக் கும்பல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இன அரசியல், வர்க்க அரசியல், புவி அரசியல் ஆகியவை அடிப்படை முரண்கள் என்பதை எந்தக் கணத்திலும் மறக்கவோ மறுக்கவோ கூடாது. அதேவேளை, இந்த அடிப்படை முரண்களைச் செயற்படுத்தும் போர்ப் பொருளாதார வலைப் பின்னலையும் ஆழமாகவும் தீவிரமாகவும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இன்றைய புரட்சிகர இயக்கங்களின் முன் உள்ளது.

உலகமயம் என்பது ஆயுத வணிகத்திலும் உள்ளது. பெப்சி, கோக் உள்ளிட்ட பண்டங்கள் எப்படி உலகமயப்படுத்தப்படுகின்றனவோ அதே போல, ஆயுதங்களும் பண்டங்களாகவே உலகச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

உலகமய எதிர்ப்பு என்பது உலகமய போர்களையும் எதிர்ப்பதே! இன நலன்களை முன்னிறுத்தும் புரட்சிகர இயக்கங்கள் சர்வதேச புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும். சர்வதேச புரட்சிகர இயக்கங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இன்றியமையாததாக உள்ளது.

அதேவேளை, ஒவ்வோரு புரட்சிகர இயக்கமும் தற்சார்புடையாதாக இயங்க வேண்டும். எந்தப் புரட்சியையும் யாரும் ‘வழங்க’ இயலாது. விடுதலை என்பது பொது எதிரி அல்லது குறிப்பான எதிரியிடமிருந்து மட்டும் விடுவித்துக்கொள்வது அல்ல. மாறாக, அனைத்து விதமான சார்புத்தன்மைகளையும் அறுத்து எறிந்த பிறகு கிடைப்பதே உண்மையான விடுதலை ஆகும். க்யூபா புரட்சிகர தற்சார் புடைய நாடாகவே அறியப்பட்டது. தமிழீழ மக்களின் உயிர் காக்கும் சிக்கலில் சிங்களத்தை ஆதரித்தபோதுதான் க்யூபாவின் தற்சார்புச் சாயம் வெளுத்தது. க்யூபா, புரட்சிகரத் தலைமையின் கீழ் செயல்படத் தொடங்கியபோதிருந்தே சோவியத் யூனியனின் ஆதரவில் இயங்கியது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட பெரும் சரிவைச் சரி செய்துகொண்டு மீண்டும் நிமிர்ந்து நிற்க க்யூபாவிற்கு சீனா தேவைப்பட்டது. இன்று இந்தியாவும் அதற்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் நிலையில் நின்று பார்த்தால், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைப் பகைத்துக்கொள்ளும் நிலையில் அது இல்லை. இது தமிழ்த் தேசியர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சான்று.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த நாட்டுடனும் சமரசத்திற்கு இணங்கவில்லை. ‘சீனாவுடன் புலிகள் இணங்கவில்லை’ ‘இந்தியாவைப் பகைத்துக் கொண்டார்கள்’ ‘அமெரிக்காவுடானாவது ஒத்துப் போயிருக்கலாம்’ என்றெல்லாம் ஆதங்கப்படும் போக்கு இன்று நிலவுகிறது. இது மிகவும் தவறான போக்கு என்பதோடு, விடுதலைப் புலிகளின் கோட்பாட்டு உறுதிப்பாட்டை இழிவு செய்யும் கருத்தும் ஆகும்.

ஒருவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கண்ட நாடுகளில் ஏதாவது ஒன்றுடன் ‘ஒத்துப் போயிருந்தால்’ அது தமிழீழ தேசத்தின் தற்சார்பை - இறையாண்மையை அடகு வைக்கும் செயலாவே அமைந்திருக்கும். சிங்கள தேசம் இன்று ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக மாறியிருப்பதன் காரணம் ‘ஆயுதம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பட்டுக் கம்பளம்’ என்ற விதத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் செயல்பட்டதே ஆகும்.

சிங்களர்கள் இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மண் இன்று அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அது பன்னாட்டு பகாசுரர்களின் வேட்டைக் காடாகிவிட்டது. சிங்களர்கள் தமக்குள் சண்டையிடும் நிலை நேர்ந்துவிட்டது. பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்து நொறுங்கியுள்ளது. கடன், சலுகைகள் இலவசங்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பி சிங்கள நிர்வாகம் நடக்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கலகம் உருவாகும் நிலை விரைவில் ஏற்படும். அதன் அடையாளமாகத்தான் வரிசையாக பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். 2009 செப்டம்பர் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் சிங்களர் சிதறுவர் கட்டுரையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.

”இலங்கையில் சிங்களக் கட்சிகளிடையே முரண்பாடுகள் முற்றி மோதல்கள் அதிகரிக்கும். போர்ப் பொருளாதாரத்தில் திவாலாகிப் போன இலங்கை அரசை எதிர்த்து மக்கள் கலகம் செய்வார்கள். சிங்கள இனம் தனக்குத் தானே முரண்பட்டு சீரழியும்”

நாம் நம்பிக்கைகொள்ள வேண்டிய தருணம் இது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தமது தமிழீழ அரசு இறையாண்மை உள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காகவே, கற்பனைக்கெட்டாத நெருக்கடிகள் வந்தபோதும் எந்த ஏகாதிபத்தியத்திற்கும் வளைந்து கொடுக்காமல் போராடினார். அவரது போராட்டம் மீண்டும் வெடிக்கும். 

தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியர்களும் களமிறங்க வேண்டும். அது இன உரிமைப் போராட்டம் மட்டுமல்ல. ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமும் கூட. ஆகவே, ‘புலிகள் தவறு செய்துவிட்டனர்’, ‘அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை’ என்று அவதூறு பரப்பும் எவரையும் உதறித் தள்ளுவோம். இப்படிப் பேசுபவர்கள் இந்தியாவிடமோ அல்லது சீனாவிடமோ தமிழீழ தேசத்தை அடகு வைக்கத் துடிப்பவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்தும் தலைவர் பிரபாகரனிடமிருந்தும் தமிழ்த் தேசியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ‘இனத்தின் இறையாண்மையை இழக்காமல் போராட வேண்டும். அதுவே உண்மையான விடுதலை’ என்பதே!

- ம.செந்தமிழன்

Pin It