“தமிழ் மற்றும் சமற்கிருதத்தின் கண்ணாடி” (The Mirror Tamil and Sanscrit)என்ற தலைப்பில் தமிழக அரசின் முன்னாள் தொல்பொருள் துறை இயக்குநர் இரா. நாகசாமி எழுதிய நூல் தமிழறிஞர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நூலில், தமிழ் மொழி எழுத்து முறையைப் பிராமணர்களிடமிருந்து பெற்றது என்றும் தொல் காப்பியம், புறநானூறு, அகநானூறு சிலப்பதிகாரம் முதலியவை சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்றும் நாகசாமி கூறியுள்ளார்.

நாகசாமியின் நாச நூலைப்பற்றி விவாதிப்பதற்காகவும், கண்டிப்பதற்காகவும் சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான முனைவர் பொற்கோ அவர்கள் தலைமையில், 27.7.2012 அன்று சென்னை எழும்பூர் இக்சா நடுவத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு தமிழ்அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முதுமுனைவர் இளங்கோ, தமிழக தொல்பொருள் ஆய்வுத் துறை முன்னாள் இயக்குநர் நடன காசிநாதன், முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் அரசேந்திரன் முனைவர் பூங்குன்றன், முனைவர் இரா. மதிவாணன், கோவை ஞானி, முனைவர் ஜெயதேவன் முனைவர் மணியன், புலவர் கி.த.பச்சையப்பன், த.தே.பொ.க.தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் பேசினர். அரங்கு நிறையத் தமிழறிஞர்கள் குழுமி இருந்தனர் திரு இறை எழிலன் கூட்ட ஏற்பாடுகள் செய்தார். உரைகளிலிருந்து சில பகுதிகள்:

முனைவர் பொற்கோ:

நூலின் தலைப்பில்தான் தமிழ் இருக்கிறதே தவிர, நூலுக்குள் வடமொழியும் வைதீகமும் மிக உயர்வாகப் பேசப்பட்டுள்ளன. தமிழ், தமிழர் நாகரிகப் பெருமை எந்த இடத்திலும் பேசப்படவில்லை. தொல்காப்பியக் காலம் கி.மு. 1- ஆம் நூற்றாண்டு என்று எந்தச் சான்றும் காட்டாமல் கூறியுள்ளார். சங்க இலக்கியம் அனைத்தும் சமய சார்புடையவை என்கிறார். அசோகர் பற்றியும் புத்தமதம் பற்றியும் இவர் கூறுபவை நம்மைத் திடுக்கிட வைக்கின்றன. அசோகர் புத்தமதத்தைப் பரப்பவில்லை. தம் கருத்துகளைத்தான் பரப்பினார். அசோகர் பிராமணர்களை மதித்தார், பாராட்டினார் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். அது உண்மையெனில் அசோகரின் பேரன் பிருத்கிருதனை, பிஷ்யமித்திரசுங்கன் என்ற பிராமணன் வெட்டிக் கொன்றதேன்? இதற்கு விளக்கம் சொல்லியிருக்க வேண்டாமா?

இவை எல்லாவற்றையும் விடத் தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே இல்லை என்று எழுதியுள்ளார். நாகசாமியின் செயல் சிறிதும் நாணய மில்லாதது. கண்டனத்துக்குரியது.

நடன காசிநாதன்:

அவர்கள் எப்போதும் நம்மை அறிவில்லாதவர்கள் என்று பகிரங்கமாகச் சொல்லி வருகிறார்கள். பழந்தமிழ்க் கல்வெட்டுகள் (Old Tamil Inscriptions) என்று ஐராவதம் மகாதேவன் நூல் எழுதினார். உள்ளே தமிழ்ப்பிராமி என்றுதான் எல்லா இடங்களிலும் எழுதினார். தலைப்பைப் பார்த்தால் தமிழுக்கு ஆதரவு போல் இருக்கும். உள்ளே தமிழைக் குறைத்துக் காட்டுவார்கள்.

நாகசாமியின் நூல் ஆங்கிலத்தில் இருக்கிறது. நம்மிடையே உள்ளே ஆங்கிலப் புலமை பெற்ற தமிழறிஞர்கள் இந்நூலை மறுத்து ஆங்கிலத்தில் நூலெழுதவேண்டும். இல்லையெனில், தமிழைப்பற்றி தவறான கருத்து வெளிநாட்டவரிடம் ஏற்படும். அசோகர் காலத்தில் தமிழுக்கு எழுத்து வடிவம் இல்லை என்கிறார். இது தவறு. சமயோதயுக்த என்ற நூலில் பம்மி என்கிற எழுத்து வருகிறது. இது பிராக்கிருதம். இதுதான் சமஸ்கிருதத்தில் பிராமி ஆனாது.அதே நூலில் தமிளி என்றும் வருகிறது என்று இவரே ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

ஆதிச்ச நல்லூரில் அருமையான தடயம் கிடைத்துள்ளது. அங்கு முதுமக்கள் தாழியின் உள்பக்கம் எழுதப்பட்ட தமிழ் எழுத்து கி.மு. 400-இல் எழுதப்பட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அசோகன் காலம் கி.மு. 300.

முனைவர் ம.இராசேந்திரன்:

நிகழ்காலத் தேவைக் கேற்ப கடந்த காலத்தைக் கட்டமைக்க முயல்கிறார் முனைவர் நாகசாமி. முடிந்த போன மொழிப் பகையை மீண்டும் மூட்டிவிட இப்போது என்ன தேவை வந்திருக்கிறது? இவர்களின் ஒரு சார்புக் கருத்துகளுக்குத் தமிழறிஞர்கள் ஏற்கெனவே தக்க சான்றுகளுடன் மறுப்புகள் கொடுத்து விட்டார்கள்.

செம்மொழிக்கான தகுதிகள் எவை எவை என்று வரையறுக்கப்பட்டுள்ளனவோ அவை யாவும் தமிழுக்கு இல்லை என்று தமது நூலின் முன்னுரையிலேயே நாகசாமி கூறியுள்ளார். இவர்களின் பயணம் எதை நோக்கிப் போகிறது? அடுத்து தமிழுக்கு வழங்கப்பட்ட செம்மொழித் தகுதியைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கி இவர்கள் திட்டமிடுகிறார்கள்.

உங்களுடைய தொன்மையான நூல் தொல்காப்பியம் என்கிறீர்கள், அதில் இருப்பவை எல்லாம் உங்களுக்குரியவை அல்ல, அவை சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்கிறார்.

சமஸ்கிருதத்தை எழுதாக் கிளவி என்கிறார்கள். எழுத்து இல்லாத மொழி என்று இதன் பொருள் எழுதினால் வேதத்தின் கற்பு போய்விடுமாம். சரி, வேதத்தை எழுத வேண்டாம். இராமயணம், மகாபாரதத்தை சமஸ்கிருதத்தில் எழுதிவைத்திருக்கலாம் இல்லையா? ஏன் எழுதவில்லை? ஏனெனில் எழுத்து இல்லை. இந்தியாவில் எழுதப்பட்ட முதல் ஆவணம் தமிழ்தான் இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் இருந்திருந்தால் பல்லவர்கள் ஏன் கிரந்த எழுத்தை உருவாக்கினார்கள்?

சுருக்கமாகச் சொல்வதென்றால் நாகசாமி தன் விருப்பத்தை எழுதியிருக்கிறார். அந்த விருப்பம் தமிழுக்கு விரோதமானது, உண்மைக்கு எதிரானது.

பெ.மணியரசன்:

 “எம்முளும் உளன் ஒருவன் பொருநன்” என்று புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான சிறந்த போராளி இங்கு ஒருவர் அல்லர், அறிவாயுதம் ஏந்திய பல போராளிகள் சிறந்த கருத்துகளை வழங்கியுள்ளார்கள். இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் மிகப் பெரிய பயன் கிடைக்கும். நாகசாமி மொழியோடு நின்றுவிடவில்லை. அவருடைய அடித்தளம் இனம்தான். சிந்துச் சமவெளி காலத்திலிருந்து ஆரிய இனத்திற்கும் தமிழினத்திற்கும் இடையே நடைபெற்று வருகின்ற இனப்போரும் இனமுரண்பாடும் இந்நூலிலும் வெளிப்படுகின்றன.

கடந்த 50 ஆண்டுகளாகத்தான் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இருந்த நல்லறவு கெட்டுவிட்டது. அதற்கு முன்வரை தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கிக் கொண்டு இணக்கமாகத்தான் இருந்தன என்கிறார். ஆனால் இவர் நூலில் சமஸ்கிருதம் தமிழுக்குக் கொடுத்தவற்றை மட்டுமே அடுக்கிறார். இந்த 50 ஆண்டுகாலம் என்பது என்ன கணக்கு தி.மு.க., தி.க. கட்சிகள் இன அரசியல் பேசிய காலம். அதைத்தான் குறிப்பிடுகிறார். நாகசாமி தனிநபர் என்று கருதக் கூடாது. அவர் ஓர் இனத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறார். அந்த இன ஆதிக்கத்தை எதிர்த்து அறிவுத்தளத்தில் அரசியல் களத்தில் நாம் போராட வேண்டும். எங்களைச் சீண்டினால் திருப்பி அடிப்போம் என்பதைக் காட்ட வேண்டும்.

தமிழை ஒரு டயலக்ட் என்கிறார். பழங்குடிகளின் ஒரு கிளைமொழியாக (Dialect) இருந்த தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றுதான் செம்மொழியாக வளர்ந்தது என்கிறார். இப்படிப் பொய் சொல்வதற்கு நாகசாமி எவ்வளவு துணிச்சல் வேண்டும். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆரியம் என்பது தமிழர்களுக்கு எதிரான கருத்தியலே!

மற்றும் தமிழறிஞர்கள் பலர் பேசினர். சிறந்த ஆய்வரங்கமாக அக்கலந்துரையாடல் திகழ்ந்தது.

Pin It