தமிழ்நாட்டின் காவிரி உரிமைக் குறித்து கர்நாடகத்துக்கோ, இந்திய அரசுக்கோ வாதாடிப் புரியவைக்க முடியாது. போராடிப் பணிய வைக்கத் தான் முடியும் என்ற தெளிவு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு அதன் தொடக்க நாளிலி ருந்தே உண்டு. காவிரிச் சிக்கல் வெறும் நீர்ப் பகிர்வு சிக்கல் அல்ல, அது ஒரு இனச்சிக்கல் என்ற தெளிவோடு போராட்டக் களங்களை த.தே.பொ.க அமைத்து வருகிறது.

1991 பிப்ரவரியில் காஞ்சிபுரம் அய்யம்பேட்டையில் நடைபெற்ற முதல் மாநாட்டிலேயே “காவிரியைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நிறுத்து” என்று முழங்கியது.

• இதன் அடிப்படையில் 1991 சூலை 17 அன்று நெய்வேலி முற்றுகைப் போராட்டம் நடத்தியது. முன்னறிவிப்பின்றி நெய்வேலி நிறுவனத் தலைமை அலுவலகத்திற்குள் தோழர்.கி.வெங்கட்ராமன் தலைமையில் 35 தோழர்கள் அதிரடியாக நுழைந்து “காவிரி தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நிறுத்து” என்று முழக்கம் எழுப்பினர். இயக்குநர் அலுவலகங்கள் நிறைந்த முதல் மாடியில் தோழர்கள் அணிவகுத்து தரையில் அமர்ந்து முழக்கம் எழுப்பியது நெய்வேலி நிர்வாகத்தை அதிரவைத்தது.

அனைத்துத் தோழர்களும் கைது செய்யப்பட்டு கடலூர் நடுவண் சிறையில் வைக்கப்பட்டனர். 25 நாட்களுக்குப் பிறகு பிணையில் வந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளது.

• இதற்கு அடுத்த மாதமே காவிரிச் சிக்கலில் தமிழகத்தை வஞ்சிக்கும் இந்தியாவை எதிர்த்து களம் அமைத்தது த.தே.பொ.க. 1991 ஆகஸ்ட் 20 அன்று கல்லணைத் தொடங்கி நரிமணம் வரை ஒருவார கால மிதிவண்டி பரப்புரைப் பயணம் செய்து முடிவில் 26.08.91 அன்று நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள இந்திய அரசின் பெட்ரோலிய நிறுவனம் முன் மறியல் போராட்டம் நடத்தியது.

“காவிரி என்ற தமிழினத்தின் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத தில்லி அரசே தமிழகத்தின் காவிரிப் படுகையின் இன்னொரு இயற்கை வளமான நரிமணம் பெட்ரோலை எடுக்காதே! என்ற முழக்கத்தோடு நடை பெற்ற இப்பரப்புரை பயணத்திற்கும்,மறியல் போராட்டத்திற்கும் தோழர்.க.பழநிமாணிக்கம் தலைமை தாங்கினார். மறியல் நடந்த ஆகஸ்ட் 26ஆம் நாள் முழுவதும் ஒரு பெட்ரோல் லாரியும் வெளியே செல்லவில்லை.

இப்போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் திருவாரூர் தொடர் வண்டி நிலையத்தில் எண்ணெய் சரக்கு தொடர் வண்டியை தண்டவாளத்தில் படுத்து மறிக்கும் போராட்டமும் நடைபெற்றது. நரிமணத்திலிருந்து நிலத்தடிக் குழாய்கள் வழியாக நாகை தொடர்வண்டி நிலையத்தில் அமைந்திருந்த பெரிய கலங்களில் நிரப்பி அவற்றிலிருந்து டேங்கர்கள் மூலமாக வெளி மாநிலங்களுக்கு பெட்ரோலியம் எடுத்துச் செல்லப்பட்டு வந்தது. அந்த சரக்கு தொடர் வண்டியை 26.08.91 அன்று தோழர்.இரா. கோவிந்தசாமி தலைமையில் திருவாரூர் தண்டவாளத்தில் மறிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

• ”காவிரி தடுக்கும் கர்நாடகத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதி” என வலியுறுத்தி சத்தியமங்கலம் – மைசூர் சாலையில் சத்தியமங் கலத்தில் 1995 செப்டம்பர் 25 அன்று எழுச்சிமிக்க சாலை மறியல் போராட்டத்தை த.தே.பொ.க நடத்தியது. இப்போராட்டத்திற்கு தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். சத்தியமங்கலம் தோழர்கள் ச.அர.மணிபாரதி, நல்.சுப்பிரமணியன் ஆகியோர் முன் கைது, தட்டி சுவரொட்டி விளம்பரங்களை தடை செய்து காவல் துறையின் கெடுபிடி ஆகிய அனைத்தையும் மீறி சுவரொட்டி, தட்டி பரப்புரைகளும் அறிவித்த நாளன்று சத்திமங்கலம் சாலைமறியல் போராட்டமும் நடை பெற்றது.

அதே நாளில் அவினாசி அருகே கர்நாடக அரசுப் பேருந்து எரிந்தது. கர்நாடகப் பேருந்தை எரித்த வழக்கில் தோழர் குழ.பால்ராசு உள்ளிட்ட 11 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட நாள் நீதிமன்ற போராட்டத்திற்குப் பிறகு விடுதலையாயினர்.

• 1997 ஆகஸ்டு 15 இந்திய விடுதலை பொன்விழா நாளில் தஞ்சையில் த.தே.பொ.க கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்தியது. இப்போராட்டம் நடை பெற்ற தஞ்சையில் மட்டுமின்றி சென்னை அம்பத்தூர், சத்திமங்கலம். திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களிலும் முன்கைது , தேடுதல் வேட்டை என்று காவல்துறை செய்த கெடுபிடிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. போராட்டம் நடைபெற்ற ஆகஸ்டு 15 அன்று தஞ்சைக்கு வந்த அத்தனை பேருந்துகளிலும் காவல்துறை சோதனை நடைபெற்று, தேடுதல் வேட்டை நடந்தது.

• இத்தனையும் தாண்டி அறிவித்த நேரத்தில், அறிவித்த இடமான தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு ”இந்திய விடுதலைக்கு பொன் விழாவாம், காவிரி அன்னையோ கர்நாடகச் சிறையில்” என்ற ஆவேச முழக்கத்தோடு தோழர் பெ.மணியரசன் தலைமையில் கறுப்பு கொடி ஏந்தி திரண்ட தோழர்களை வலுவந்தமாக காவல்துறை வண்டியில் தூக்கிச் சென்று கைது செய்தது.

இது நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் இருந்து தோழர் இரா.கோவிந்தசாமி தலைமையில் ஒரு அணியினரும், தொடர் வண்டி நிலையத்திலிருந்து தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் இன்னொரு அணியினருமாக த.தே.பொ.க தோழர்கள் கறுப்புக் கொடி ஏந்தி காவிரி உரிமை முழக்கத்தோடு பழைய பேருந்து நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். ஓடிவந்த காவல் துறையினர் பாதி வழிகளில் தோழர்களைக் கைது செய்தனர். இப்போராட்டத்தை வெளியிலிருந்து ஒருங்கிணைத்து கொண்டிருந்த தோழர் இராசேந்திரசோழனும் கைது செய்யப்பட்டார்.

• த.தே.பொ.க, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், த.ஒ.வி.இ, தமிழர் தன்மானப் பேரவை ஆகியவை இணைந்து உருவான தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பில் 2002 செப்டம்பர் 4 அன்று நரிமணம் பெட்ரோலை கங்களாஞ்சேரியில் மறிக்கும் போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 113 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

• தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பில் 2003 டிசம்பரில் நடைபெற்ற காவிரி நடைப் பயணம் – நெய்வேலி முற்றுகை போராட்டம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். 2003 டிசம்பர் 13 அன்று உணர்ச்சி பெருக்கான முழக்கத்தோடு தொடங்கிய நடைப் பயணம் தமிழின உணவாளர்களின் ஆதரவு வெள்ளத்தில் 10 நாட்கள் நீந்திச்சென்று 22.12.2003 அன்று நெய்வேலியை அடைந்தது.

22.12.2003 அன்று காலை நெய்வேலி மந்தாரக்குப்பத்தைக் கடந்து இரண்டாவது அனல் மின்நிலையம் நோக்கி அணி வகுத்த 272 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் கலந்து கொள்வதற்காக சிதம்பரத்திலிருந்து புறப்பட்ட தோழர் மா.கோ.தேவராசன், தோழர் கு.சிவப்பிரகாசம் உள்ளிட்ட 16 தோழர்களை சிதம்பரத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

• தமிழ்த் தேசிய முன்னணியின் முன் முயற்சியில் நடந்த அஞ்சல் அலுவலகம் பூட்டும் போராட்டம் மிகப்பரவலாக நடந்த முக்கியமானதொரு போராட்டமாகும். “கர்நாடகம் தனி நாடா? தமிழகம் என்ன அடிமை நாடா! “ என்ற வினாவை முன்வைத்து 2004 சூலை 21 அன்று இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் அஞ்சல் அலுவலகங்களைப் பூட்டும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை, திருவாரூர், திருவெறும்பூர், புதுக்குடி, சாணுரப்பட்டி, திருக்காட்டுப் பள்ளி, வல்லம், ஒரத்தநாடு, பின்னையூர், உளூர், திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, நீடாமங்கலம் ஆகிய ஊர்களில் பெருந்திரளாகக் கூடிய மக்கள் காவிரி உரிமை முழக்கம் எழுப்பி அஞ்சல் அலுவல கங்களை இழுத்து மூடினர்.

• காவிரி தீர்ப்பாயம் (நடுவர்மன்றம்) 2007 பிப்ரவரி 5-ல் அளித்த இறுதிதீர்ப்பு தமிழினத்தின் காவிரி உரிமைக்கு வேட்டு வைத்தது. இத்தீர்ப்பைக் கண்டித்து பிப்ரவரி 6,7 ஆகிய நாட்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய த.தே.பொ.க 2007 பிப்ரவரி 23 அன்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கொளுத்தும் போராட்டம் நடத்தியது. அதே நாளில் தமிழக உழவர் முன்னணி சிதம்பரத்திலும், தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரிலும் இப்போராட்டத்தில் இறங்கியது.

இப்போராட்டத்தில் சென்னை, தஞ்சை, திருத்துறைப்பூண்டி, சிதம்பரம் உள்ளிட்ட பலபகுதிகளில் பங்கேற்ற தோழர்கள் அன்று மாலையே விடுதலையான சூழலில் திருச்செந்தூர் பகுதி தோழர்கள் மட்டும் தோழர் மு.தமிழ்மணி தலைமையில் சிறை வைக்கப்பட்டனர். நெடு நாள் வழக்காடுதலுக்குப் பிறகு இத்தோழர்கள் அனைவரும் விடுதலையாயினர்.

Pin It