இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் செயல்படுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக டில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை தொடர்பான கருத்தரங்கம் டில்லி தமிழ் மாணவர் அமைப்புகள் சார்பில், டில்லியில் நடைபெற்றது. அதில் பேசும்போது, நீதிபதி சச்சர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
நீதிபதி ராஜிந்தர் சச்சர் பேசியதாவது:
ஐ.நா. குழு இலங்கைக்கு வந்து விசாரணை நடத்த இலங்கை அரசு அனுமதி மறுப்பதன் மூலம், அது எதையோ மறைக்க முயல்கிறது.
அதே நேரத்தில், ஐ.நா. உறுப்பினர் என்ற முறையில், ஐ.நா. மன்றத்தை நிராகரிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை இலங்கை அரசுக்குப் புரிய வைக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆயுத ரீதியான தலையீடுகளுக்கு அமெரிக்க நிர்ப்பந்தத்தால் இந்தியா ஆதரவு கொடுக்கும் நிலையில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருப்பதாக ஐ.நா. குழு அறிக்கை கூறுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
“இந்த விஷயத்தில் இந்தியா மென்மையாக நடந்து கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுதம் கொடுக்கிறது என்பதற்காகவா? அப்படியே இருந்தாலும்கூட, அதைப் பற்றி கவலைப்படும் அளவுக்கு இந்தியா பலவீனமான நாடு அல்ல. அதற்கு பலம் இருக்கிறது. இந்த பிரச்சினையில், தமிழக அரசியல் கட்சிகள், குறிப்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள், தேர்தல் நேரத்தில் மத்திய அரசை நிர்ப்பந்திக்கத் தவறிவிட்டதாகக் கவலை தெரிவித்தார் நீதிபதி சச்சர்.
அந்தக் கருத்தரங்கில், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மணிவண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, லோக்ஜன சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், ஸ்டீபன் முகர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.