தொடர்புடைய படைப்புகள்

கமல்ஹாசன் தனது நாலு வயதில் திரையுலகில் அடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாலு வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் அவருக்கு சினிமாவின் சகல துறைகளும் அனைத்து அம்சங்களும் அத்துப்படியாகிவிட்டது. அதனால்தான் 50 ஆண்டுகளானாலும் தனது நட்சத்திர பீடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. அறிவுஜீவிகளின் உறவும், ஆழ்ந்த வாசிப்பும் கமலை சகலகலாவல்லவராக்கியுள்ளது. உலகசினிமா பற்றிய ஒப்பற்ற ஞானமும் அவரை மாபெரும் கலைஞராக்கியுள்ளது.

நான்கு வயதுச் சிறுவனால் துருதுரு என்று இருந்த கமலை களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைத்தனர். அந்தக்காலத்தில் குழந்தை நட்சத்திரமாய்ப் புகழ்பெற்றிருந்த டெய்சிராணியின் கால்சீட் கிடைக்காததால் கமலுக்குச் சான்ஸ் ஆகிவிட்டது. சிறுவன் கமலிடம் தயாரிப்பாளர் நடிக்க வருகிறாயா என்று கேட்ட போது "பிளைமவுத்"கார் கொடுத்தால் நடிக்கிறேன் என்று பதில் வந்தது. மறுநாள் ஒரு புதிய பிளைமவுத் கார் வந்து கமலை ஸ்டுடியோவுக்கு ஏற்றிச் சென்றது. இதுதான் கமலின் நடிப்புத் துவங்கிய விதமாகும்.

கமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பரத நாட்டியம் முழுமையாய்க் கற்றார். அதை சதங்கை ஒலி படத்தைப் பார்த்தால் புரியும். அத்துடன் கராத்தே, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களையும் பயின்றார். அதை தேவர் மகன் உள்பட பல படங்களில் அந்தப் பயிற்சியைக் காண முடியும். அவர் வளர்ச்சி பெற்று வந்த காலம் எம்.ஜி.ஆர். - சிவாஜி இருவரும் கொடி கட்டிப் பறந்த காலமாகும். அக்காலத்தில் கமல் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் காலம் கிராமங்களின் பொற்காலமானது. அவரது பதினாறு வயதினிலே படத்தில் சப்பாணியாக நடித்ததில் வேறு எவராலும் இப்படி நடிக்க முடியாது என்று கூறத்தகுந்த அளவுக்கு கமலின் நடிப்பு புகழ்பெற்றது. பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு மனநோயாளியாக நடித்து படமும் வெற்றிபெற்றது. தொடர்ந்து ஏராளமான படங்கள், வித்தியாசமான கதைகள், வித்தியாசமான கேரக்டர்கள் நடித்து தனக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டார். ஏக் துஜே கலியே என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து இந்திப் பட உலகில் நற்பெயர் பெற்றார். ஆனால் ஏனோ அவரால் இந்தியில் நீடித்து நிலைக்க முடியவில்லை.

கமல் ஒரு அறிவு ஜீவி. அதிகமாய் நூல்கள் படித்தவர்; படித்துக் கொண்டிருக்கிறவர். உலக சினிமாத் துறையினரோடு உயிரோட்டமான தொடர்பு கொண்டிருப்பவர். திரைக்கதையாக்கம், உரையாடல், எடிட்டிங் முதல் இசை வரை அனைத்துக் கலைகளையும் அறிந்த ஒரே நடிகர் கமல் என்றால் அது மிகையானது. ஹீரோ, வில்லன், பெண் வேடம், முதல் காமெடி ரோல் வரைக்கும் கலக்கியவர். அலாவுதீனும் அற்புத விளக்கிலிருந்து அவ்வை சண்முகி வரைக்கும், அபூர்வ ராகங்களிலிருந்து கல்யாணராமன் வரைக்கும் அவரது தனித்துவமான நடிப்பாற்றலை தமிழகம் கண்டது. அவரது பல படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

கமலின் ராஜபார்வை, வாழ்வே மாயம் போன்ற சில படங்கள் தோல்வியடைந்தன. கமலுக்கு வில்லனாக நடிக்க கர்னாடகத்திலிருந்து வந்த கண்டக்டர்தான் ரஜினிகாந்த். கமல் படங்கள் தோல்வியடைந்த காலத்தில் ரஜினி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. இதனால் ரஜினி சூப்பர் ஸ்டாராகி கமல் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். பயங்கரவாதத்துக்கு எதிராக கமல் எடுத்த படங்கள் கூடத் தோல்வியடைந்தன. கமலை வைத்துப் படமெடுத்தால் செலவு அதிகமாகும் என்ற கருத்தும் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு உண்டு. ஆனால் இந்தியன் போன்ற படங்கள் பெரும் வெற்றிபெற்றன.  லஞ்ச ஊழல்களுக்கெதிரான கருத்தையும், தேசபக்த உணர்வையும் ஊட்டிய படம் அதுவாகும். அவரது தேவர் மகன் தனிச்சிறப்பு வாய்ந்தது.

அவர் மிகச்சிறந்த அறிவுஜீவி என்பதற்கும் முற்போக்காளர் என்பதற்கும் எடுத்துக் காட்டான படங்கள் அன்பே சிவமும், தசாவதாரமும் ஆகும். அற்புதமான கருத்துக்களை, இடதுசாரிக் கருத்துக்களை எடுத்துக் கூறிய அன்பே சிவம் தோல்வியடைந்தது வேதனைக்குரிய விசயம். தசாவதாரம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.

தற்போது "ஒரு புதன்கிழமை" என்ற ஆங்கிலப் படத்தை "உன்னைப் போல் ஒருவன்" என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருக்கிறார். பெயர் வைப்பதற்கு பெரிய ஜாம்பவானான ஜெயகாந்தனை நாடியிருக்கிறார். தன்னை நடிக்க வைக்குமாறு இளம் டைரக்டர் மிஷ்கினைப் பணித்திருக்கிறார். அவரது மருதநாயகம் முதல் மர்மயோகி வரை லட்சியங்களாகவே நிற்கின்றன.

கமல் திரையுலகில் கால் வைத்து 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவரது அடுத்த ஐந்து பத்தாண்டுகள் முற்போக்குத் திசையில் மக்களை மகத்தான சமூக மாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் விதத்தில் அவரது பயணம் தொடரட்டும்.

- எஸ்.ஏ.பி.

Comments

4 comments

4
அ.பிரபாகரன்
//அவர் மிகச்சிறந்த அறிவுஜீவி என்பதற்கும் முற்போக்காளர் என்பதற்கும் எடுத்துக் காட்டான படங்கள் அன்பே சிவமும், தசாவதாரமும் ஆகும்.//

தசாவதாரத்தில் என்ன வெளக்கெண்ணெய் முற்போக்கு இருந்தது என்று விளங்கவில்லை.
JK
GREAT PRABHAKARAN
Tamil
kamal is half boiled and don't have in depth knowledge in any area.He act like intellectual.He is fasist
இராஜகம்பிரத்தான்
உலக நாயகன் அதிபுத்திசாலி அவர் நிஜமாகவே உலக நாயகன் தான், ஏனென்றால் அவர் படங்களில் வரும் Messages எல்லாம் உலகத்தின் அதி புத்திசாலிகளால் மட்டுமே தெரிந்து கொள்ளமுடியும் , அவர் இசுலாமிய தீவிரவாதிகளை கொல்வார் அதுவும் இசுலாமியர்களின் கரங்களாலே, முதல்வரை கிண்டலடிப்பார் ஆனால் முதல்வரின் செல்லப்பில்லை என்பார். படத்தில் குஜராத் கலவரத்தில் கற்பிணி பெண்னை கொடுரமாக கொண்டதை பற்றி உள்ளம் உருகி கண்ணீர் வடிப்பார் ஆனால் இசுலாமிய தீவிரவாதிகளை கொல்வார், நியாயமாக குஜராத் கலவர கொலைகாரர்களையும் , நரேந்திர மோடியுமையும் அல்லவா கொண்டிருக்க வேண்டும். இன்னும் திரானியுடன் மாலேகான், புனே, குண்டு வெடிப்பு இந்து தீவிரவாதிகளையும் சேர்த்து கொல்லப்பட்டு இருக்க வேண்டும். அதுதான் உலக நாயகன்.
சுப.வீ அவர்கள் கேட்டது சரி தான் ,திருவாளர் கமல் அவர்களே நீங்கள் யார்?.. என இந்த common man கள் கேட்பதில் என்ன தவறு இருகின்றது?

”தசவதாரம்” உங்களின் 10 அவதாரங்களையும் பற்றி இயக்குனர்
K.S. இரவிகுமாருக்கே தெரியவில்லை, கதையைப்பற்றி கமல் சாரிடம் தான் கேட்க்கவேண்டும் என்றார். படத்தில் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒலித்தது “பெருமாலே” ““பெருமாலே” கடைசியில் சொல்வார் ..கடவுல் இல்லைனு நான் சொல்லவில்லை ஆனால் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்பார். இந்த ஒற்றைவரி வசனத்தை கொண்டு உங்களை பெரியாரின் பேரன் என்பதா? ..இல்லை படம் முழுவதும் கூறப்படும் “பெருமாலே” கொண்டு நீங்கள் பெரியவாளின் பிள்ளை என்பதா?.. சுனாமிவந்தற்கு பின்னால் கரையில் வந்து ஒதுங்கும் பெருமாளின் சிலையின் மகத்துவத்தை பார்க்கும் எங்கள் வெகுஜனங்கள் கடவுளே என கண்ணத்தில் ஒற்றிக்கொள்வதா?..

விருமாண்டியாய் ,தேவர் மகனாய் வந்து அருவா கலாச்சாரத்தையும், ஐயா சாமியும் சொன்னீர்களே... ஒரு படத்திலாவது ஒரு தாழ்த்தப்பட்ட சமூக கதாநாயகனாய் வந்து அவன் படும் சமூக பிரச்சனைகளை சொன்னதுண்டா?..

”ஹேராம் ” உலக நாயகனின் உலகதரம் வாய்ந்த படம் .....ஒரு ஆர். எஸ். எஸ் காரணாகவே வந்து ..எப்படி எப்படியெல்லாம் இசுலாமிய ,காந்திய எதிரியானான், ஆர். எஸ். எஸ் காரர்கள் எல்லாம் சுதந்திர போராளிகள், இசுலாமியர்கள் எல்லாம் கொடுரமாணவர்கள், காந்தியை வில்லனாக்கிய படம் அது. ஆனால் சாருக்கானின் பாத்திரம் கொண்டு அழகிய முறையில் சமன் செய்யப்பட்ட படம். கமலின் திறமை என்பது ஒவ்வொரு படத்திலும் அவரின் கருத்தை பெரிய மேதாவிகளின் உதவியுடன் விவாதம் செய்து அவர் என்ன சொல்கிறார் என கண்டுபிடிக்க வேண்டும்...ஆனால் உங்களையே பூஜிக்கும் பல லட்ச்சம் ரசிகர்களுக்கு தெரிந்ததெல்லாம் ..கமல் ஒருவரே...அவரின் கருத்துக்கள் பல கோடி தமிழர்களின் மனதை திரைப்பட ஓட்டமாகவே சென்றடையும். திரைப்படங்கள் என்பது இன்றைய காலத்தின் பதிவுகள், வரும் கால தலைமுறையினர் திரைப்படங்களை கொண்டு நாம் வாழ்ந்த காலங்களை அளவிடுவர். அது அவர்களின் மனதினில் கமல் போன்றோர்களின் படங்களினால் நச்சுதன்மையை கலக்கும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.