tha.pandiyanஅமரர் ஜீவாவைப் போலவே தா.பா. எனும் பேரோசை காற்றில் கலந்துவிட்டது. தமிழக கம்யூனிஸ்ட் மேடைகளில் தோழர் தா.பா. அரசியல், எழுத்து, இலக்கியம் ஆகியவற்றை இலக்கிய மேதை ஜீவாவைப் பின்பற்றியவர்.

60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அன்றைய இளைய தலைமுறையில் தா.பா. ஈர்ப்பு மிக்க பேச்சாளராகத் திகழ்ந்தார்.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டமாக இருந்தாலும் பட்டிமன்ற பொது மேடையாக இருந்தாலும் அவரது தனி முத்திரை விழுந்து கொண்டே இருந்தது. ஜீவாவின் ரசிகராக இருந்த என் போன்றவர்கள் இவரது ரசிகர்கள் ஆனோம்.

அக்கால பட்டிமன்றங்களில் குறிப்பாக மதுரையில் பிரம்மாண்டமான கூட்டம் கூடும் நாள்களெல்லாம் விருநகரிலிருந்து அதைக் கேட்பதற்காக மதுரை வருவோம்.

பெரும்பாலும் பட்டி மண்டபங்களில் குன்றக்குடி அடிகளார் இருப்பார்.தா.பா. ஒரு அணித் தலைவராகவும் சிதம்பரம் ஒரு அணித் தலைவராகவும் இருந்து நடந்த பட்டிமன்றங்கள் நான் பார்த்துள்ளேன்.

இரவு 10 மணிக்கு துவங்கி அதிகாலை 5 மணி வரை கூட பட்டிமன்றங்கள் நடக்கும். இதிகாசம் மற்றும் இலக்கியக் கதாபாத்திரங்களை முன்வைத்து பட்டிமன்றத் தலைப்புகள் இருக்கும்.

கம்பன், இளங்கோவடிகள், பாரதியின் பாடல் வரிகள் தலைப்புகளில் பட்டிமன்றம் நடக்கும். இலக்கியத்தோடு முற்போக்கு அரசியலையும் பேச்சாளர்கள் பேசுவர். அதிலும் நடுவர் குன்றக்குடி அடிகளார் அவர்களே! அது ஒரு பொற்காலம். அதில் தா.பா.வின் பங்கு சிறப்புக்குரியதாகும்.

கட்சி பிரிந்தபின் நான் எங்கேனும் சந்தித்தால் அன்புடன் பேசுவார் “நம்ம ரெண்டு பேருக்கும் தத்துவம் ஒன்றுதானப்பா; கொள்கை தான் வேற வேற. உனக்குப் பிடிச்சது உனக்கு; எனக்குப் பிடிச்சது எனக்கு" என்பார். அரசியல் பகைமை பாராட்ட மாட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகக் கோளாறால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் தங்கியிருந்த பொழுது சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் மத்தியகுழு உறுப்பினர் சௌந்தர்ராஜன் ஆகியோருடன் சென்று பார்த்து பேசிவிட்டு வந்தேன்.

களத்தில் போராடுவதை விட நோயுடன் போராடுவதுதான் சகிக்க முடியாததாக உள்ளது என்றார். தொடர் சிசிச்சையின் மூலமாக நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்திவிட்டு வந்தேன்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒருநாள் தொலைபேசியில் என்னை அழைத்தார்.‘பொதுவுடைமையாரின் வருங்காலம்’ என்று நான் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறேன். மதுரையில் பேரா.சாலமன் பாப்பையா வெளியிடுகிறார். நீ பெற்றுக்கொண்டு உரையாற்ற வேண்டும் என்றார்.நான் மனமுவந்து ஏற்பதாகக் கூறினேன்.

அதன்பின் என்.சி.பி.எச். மண்டல மேலாளர் தோழர். அ.கிருஷ்ணமூர்த்தி `புத்தகம் உங்களுக்கு முன்கூட்டி தரமுடியவில்லை வெளியீட்டு விழா அன்றுதான் வரும். கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்' என்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப் போனார்.

அவ்விழாவிற்கு மேனாள் எம்.பி. தோழர் வெ.அழகர்சாமி என்னை நேரில் வந்து அழைத்துச் சென்றார். நீண்ட காலத்திற்குப் பிறகு பேரா.சாலமன் பாப்பையா, தா.பா. உடன் நானும் மேடையில் இருந்தேன். விழா முடிந்தபின் புத்தகத்தைப் படித்துவிட்டு உன்னுடைய கருத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டுப் போனார்.

நூலை வாசித்த பின்பு அவருடன் பேசினேன். கடந்த காலம் பற்றியும், நிகழ்காலம் வருங்காலம் பற்றியும் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டுதலைக் கூறியுள்ளீர்கள். ஆனால், சில இடங்களில் சி.பி.எம். - ஐ விமர்சனம் செய்துள்ளீர்கள்.

அதை நீக்கி விட்டால் இரண்டு கட்சி அணிகளும் மகிழ்வோடு வாசிப்பார்கள் என்று கூறினேன். அவரும் அதை ஏற்று அடுத்த பதிப்பில் சரி செய்வோம் என்று கூறிவிட்டு அந்த நூலின் இரண்டாம் பாகத்தையும் எழுதப்போகிறேன் என்று சொன்னார். தொடர்ந்து எழுதுங்கள் என்று கூறினேன்.

அவர் எழுதிய நூல்களில் ஜீவாவும் நானும், பாரதியும் சாதி ஒழிப்பும், பெரியார் என்னும் இயக்கம் போன்ற நூல்கள் என்னை மிகவும் கவர்ந்த நூல்கள். மேலும் சேகுவேரா, நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள், இயக்கத்தை இயக்கிய புலவன் பட்டுக்கோட்டை, கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும் போன்ற வரலாற்று நூல்கள், மேடைப்பேச்சு, படுகளத்தில் பாரத தேவி, காலச்சக்கரம் சுழல்கிறது, சோக வரலாற்றில் வீரகாவியம், ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும், திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம், விழி திறந்தது வழி பிறந்தது, மதமும் அரசியலும் போன்ற கட்டுரை நூல்கள் மற்றும் என் முதல் ஆசிரியர், நிலமென்னும் நல்லாள், ஒரு லாரி டிரைவரின் கதை, மோகன ராகம் முதலிய ரஷ்ய இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார்.கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட இந்தியாவில் மதங்கள், கொரோனாவா? முதலாளித்துவமா? ஆகிய கட்டுரை நூல்களை எழுதியிருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அரசியல் மாநாட்டிற்கு வீல்சேரில் மேடைக்கு வந்தபோது பார்த்து நலம் விசாரித்தேன். அவர் மேடையில் வெறும் பத்து நிமிடங்களே பேசினாலும் அவரது சிம்மக்குரல் தோழர்களை உற்சாக ஆரவாரம் செய்ய வைத்தது. இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கக்கூடாதா என்ற ஏக்கத்தையும் தோன்ற வைத்தது.

அவரது மறைவுச் செய்தி என்னைப் பெரும் சிரமத்தில் ஆழ்த்தியது. கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்த காலத்தில் கூட என்னிடம் கனிவு காட்டிய தோழர் தா.பாவின் பேரோசை குரல் என் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது...

- எஸ்.ஏ.பெருமாள்

Pin It