பூஜ்யத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள் தான் என்று வரலாறு பேசுகிறது. பூஜ்யம் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் கணித அறிவியல் இந்த அளவிற்கு விரிந்து பரந்து வளர்ந்திருக்க முடியாது. இருந்தாலும் பூஜ்யத்தின் மதிப்பு இப்போது உணரப்பட்டுள்ள அளவிற்கு முன்னெப்போதும் உணரப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலில் 80ஆயிரம் கோடி ஊழல், இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் 1லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். இஸ்ரோ தொடர்புடைய எஸ் பேண்ட் அலைக்கற்றை ஊழலில் ரூ. 2லட்சம் கோடி ஊழல் என்று தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் பூஜ்யத்தின் மதிப்பை உணர்த்துகின்றன.

அடுத்தடுத்து வந்தவர்கள் அவர்களுக்கு அண்ணனடா என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை பாடினார். ஊழல் தொடர்பாக அன்றாடம் வெளிவரும் செய்திகளை உள்வாங்கி யோசிப்பதற்கு முன்னாலேயே அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்து முந்தைய செய்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ஆ. ராசா மீது குற்றச்சாட்டு எழுந்தபோது இவ்வளவு தொகை தொடர்புடைய ஊழலை ஒருவர் செய்திருக்க முடியாது என்று கலைஞர் கூறினார். அவர் சொன்னது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் சிபிஐ சோதனை கலைஞர் டிவி வரை நீள்கிறது.

ஆ.ராசா தலித் என்பதால்தான் பழிவாங்க முயல்கிறார்கள் என்று கலைஞர் துவங்கி கி. வீரமணி, சுப. வீரபாண்டியன் வரை ஊர் ஊராக கூட்டம் பேசினார்கள். ஆ. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மாண்புமிகு மந்திரியாக இருந்தவர் மானமிகு ராசாவாகிவிட்டார் என்று விமானநிலையம் வரை சென்று வரவேற்று அழைத்துவந்த வீரமணி திகார் சிறைப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. ராசா குற்றமற்றவர் என திமுக பொதுக்குழு தீர்ப்பு வழங்கியது. குற்றமற்ற ராசாவை திமுகவினர் யாரும் உடனடியாக எட்டிப்பார்க்கவில்லை.

இந்த ஊழலில் அதிகாரத் தரகராக செயல்பட்ட நீரா ராடியா, ராசாவோடு சேர்ந்து கைதுசெய்யப்படவில்லை. இந்தியாவின் பெருமுதலாளி அம்பானி அவராகவே சென்று ஆஜராகிவிட்டு தைரியமாக சிரித்துக்கொண்டே திரும்புகிறார். நீரா ராடியாவுடன் தாம் உரையாடியது உண்மையல்ல என்று ஒருபோதும் மறுக்காத பெருமுதலாளி ரத்தன் டாட்டா அந்த உரையாடலை வெளியிடக்கூடாது என்று வழக்கு போடுகிறார். காமன்வெல்த் ஊழலில் சிக்கிய சுரேஷ் கல்மாடி கைதுசெய்யப்படவில்லை. ஆதர்ஷ் வீட்டுமனை ஊழலில் சிக்கிய அசோக் சவாண் ராஜினாமா செய்ததோடு சரி. அப்படியென்றால் இவர்களை எல்லாம் விட்டுவிட்டு ராசாவை மட்டும் பழிவாங்குவது ஏன் என்று சமூக நீதிக்காவலர்கள் யாரும் கேள்வியெழுப்பியதாகத் தெரியவில்லை.

இந்த ஊழல் விவகாரம் சூடுபிடிப்பதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசும்பொழுதெல்லாம் ஆ. ராசா பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடந்தது என்று கூறினார். இந்து பத்திரிக்கை வெளியிட்ட பிரதமர்-ஆ. ராசா கடிதப் போக்குவரத்திலும் பிரதமரிடம் எல்லா விவரங்களையும் ராசா ஏற்கனவே தெரிவித்திருந்தது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஊழல் விவகாரங்கள் குறித்து மௌன குருசாமியாக இருந்த மன்மோகன் சிங் வாய் திறக்க மறுத்தார். இனியும் மௌனம் காக்க முடியாது என்ற நிலையில் பேட்டி கொடுக்கப்போவதாக அறிவித்தார். தொலைக்காட்சி நிருபர்கள் கேமராவோடு குவிந்தார்கள். பிரதமர் அந்தப்பேட்டியில் கூறிய பிரதான விஷயம் எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான்.

ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ராசாவை ஏன் மீண்டும் அமைச்சராக்கினீர்கள் என்று கேட்டதற்கு கூட்டணி ஆட்சிதான் காரணம் என்றார். திமுக சொல்லித்தான் ஆ. ராசாவை அமைச்சராக்கினேன் என்பது இதன் பொருள். ஆனால் நீரா ராடியா மூலம் பேரம் பேசி பெரு முதலாளிகள் ரத்தன் டாடா, அம்பானி ஆகியோர்தான் ராசாவை அமைச்சராக்கியுள்ளனர். ஆ. ராசாவின், அரிய சேவையை பாராட்டி டாடா கலைஞருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மொத்தத்தில் ராசாவை கலைஞரோ, மன்மோகன் சிங்கோ மந்திரியாக்கவில்லை. இந்தியாவின் பெரு முதலாளிகள்தான் அவரை அமைச்சராக்கி அழகுபார்த்துள்ளனர். பிடித்து வைத்தால் பிள்ளையார், வழித்தெறிந்தால் சாணி என தங்களது ஆதாயத்திற்கு ராசாவை பயன்படுத்திக் கொள்வது, பிரச்சனை வந்தால் அவரை சிக்கவைத்து விடுவது முதலாளிகளின் கணக்காக இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தமக்கு தெரியாது என்று கூறிய பிரதமர் அடிமாட்டு விலையில் அலைவரிசைக் கற்றையை சூறையாடியது சரிதான் என்று வாதிடத் தயங்கவில்லை. ஏழை மக்களுக்கு உணவு மானியம் வழங்குவது போலத்தான் அலைவரிசை ஒதுக்கீடும் என்று அவர் கூறினார். இதைத்தான் திமுகவின் தெருமுனைக்கூட்டங்களில் கூறிவந்தார்கள். இந்த ஐடியாவை அவர்களுக்குக் கொடுத்ததே பிரதமர்தான் என்பது இப்போதுதான் தெரிகிறது.

பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு 2 ரூபாய் மானியம் வழங்குவதும், கொள்ளையடிக்க துடிக்கிற முதலாளிகளுக்கு 1லட்சத்து 76 ஆயிரம் கோடியை பந்தி வைப்பதும் ஒன்றுதான் என்கிறார் இந்த பொருளாதாரப் புலி.

நீரா ராடியா, கனிமொழி, தமிழக அமைச்சர் பூங்கோதை ஆகியோருடன் உரையாடியுள்ளார். பூங்கோதை- நீரா உரையாடல் குறித்து கேட்டபோது, வடநாட்டுப் பெண்மணியும், தென்நாட்டுப் பெண்மணியும் பேசியுள்ளனர் என்று பதிலளித்தார் கலைஞர்.

ஒரு காலத்தில், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று திமுகவினர் முழக்கமிட்டனர். பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி கூட்டணி வைத்த நிலையில் வடக்கு வழங்குகிறது. தெற்கு தேறுகிறது என்று வசனத்தை கலைஞர் மாற்றினார். அதன் பொருள் இப்போதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பணத்தோட்டம் நூலில் அறிஞர் அண்ணா எங்களிடம் உள்ள ஒரே பெரிய முதலாளி சுருட்டுக் கம்பெனி வைத்திருக்கும் நீலமேகம் தான் என்று எழுதியிருப்பார். திமுக பணக்காரர்கள் கட்சி என்று கூறியதற்கு அண்ணா தந்த பதில் இது. ஆனால் இன்றைக்கு திமுகவில் சுருட்டுவதற்கே கம்பெனி நடத்துபவர்கள்தான் அதிகம்.

காமன்வெல்த், 2ஜிஸ்பெக்ட்ரம், எஸ் பேண்ட் போன்ற ஊழல்கள் சில தனிநபர்கள் அடித்த கொள்ளை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. உலகமயமாக்கல் குட்டையில் ஊறிய முதலாளித்துவ மட்டையின் முடை நாற்றம் என்பதை மறந்துவிடக்கூடாது. முதலாளிகள் நடத்திய மாய விளையாட்டு இது. யானைகள் அள்ளிவிழுங்கிய போது சிந்தியது சிதறியதை சாப்பிட்ட சிற்றெறும்புகள் தான் சிக்குகின்றன. வெறிகொண்ட யானைகள் அடுத்தடுத்து கரும்புத்தோட்டங்களை நோக்கி பாய்ந்துகொண்டே இருக்கின்றன.

அதிகார வர்க்கம் இந்த ஊழலுக்கு துணை நிற்கிறது. எஸ் பேண்ட் ஊழலில் தொடர்புடைய தேவாஸ் நிறுவனத்தின் அதிபர் எம். ஜி. சந்திரசேகர் இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் துறை செயலாளராக பணியாற்றியவர். பதவியிலிருந்து விலகிய உடன் தேவாஸ் என்கிற நிறுவனத்தை துவங்கி ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கறிhர். இந்த உடன்பாடு மட்டும் செயல்படுத்தப்பட்டிருந்தால் அரசுக்கு 2லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது மத்திய தணிக்கைக் குழுவின் மதிப்பீடு. இந்த உடன்பாடு தவறு என்று இப்போது கூறுகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி. அந்த அலைவரிசைக் கற்றை தேசத்தின் சொத்து என்றும் அவர் கூறியுள்ளார். இந்த உடன்பாட்டை ரத்து செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று தேவாஸ் நிறுவனம் மிரட்டுவது தனிக்கதை.

பெங்களுரை தலைமையிடமாகக் கொண்ட தேவாஸ் நிறுவனத்தின் ஆலோசகர்கள் யார் தெரியுமா? அமெரிக்க அயல்துறை செயலாளராக பணியாற்றிய மேடரின் ஆல்பிரைட், அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முன்னாள் ஆலோசகர் சாண்டி பெர்கர், அமெரிக்க முதலாளிகள் சங்கத்தின் தலைவர் தாமஸ் டோனக் ஆகியோர். இந்த பிரகஸ்பதிகள் இஸ்ரோவின் அலைக்கற்றை உடன்பாட்டை தேவாஸ் நிறுவனத்திற்கு தருமாறு மத்திய அரசுடன் பேரம் பேசியுள்ளனர். இதனால்தான் பேரம் படிந்திருக்கிறது.

முதலாளித்துவ சமூகத்தில் அமைச்சரவை என்பது முதலாளிகளின் செயற்குழு என்று மாமேதை மார்க்ஸ் மிகச்சரியாகத்தான் கூறியிருக்கிறார் அல்லவா?

கடைசியில் ஒருவரியாக 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. வெளிவந்த கரையான்களைப் பற்றி மட்டுமன்றி, ஊழல் புற்று குறித்தும் இந்தக் குழு விசாரிக்கட்டும்.

Pin It