பொதுவாக தேர்தல் வந்துவிட்டால் நவீன தமிழ் இலக்கிய உலகில் இடதுசாரி இலக்கியவாதிகளிடம் பிற இலக்கியவாதிகள் இந்தத்தடவை யாரைப் பதவியில் அமர்த்தப் பாடுபடப்போறீங்க என்பதில் துவங்கி எவ்வளவு பெரிய புரட்சிகரமான தலைவர்களை எல்லாம் இப்படி சீட்டுக்காக அலைய வச்சீட்டிங்க என்பது வரைக்கும் பல கேள்விகளை வருத்தங்களை முன்வைப்பார்கள். புதுசாகக் கேட்பவர்களுக்கு அடடா இவ்வளவு அக்கறையாக நம்ம கட்சியைப்பத்திக் கரிசனமாப் பேசறாங்களே என்று தோன்றும். தோழர் சுர்ஜித் எல்லாம் எவ்வளவு பெரிய தியாகத்தின் அடையாளம்? அவரைப்போயி... வாசல்ல கொண்டுபோயி நிறுத்தீட்டிங்களே என்று ஒரு மூத்த அமைப்புசாரா இலக்கியவாதி ஒருமுறை என்னிடம் கேட்டபோது எங்களோடு பக்கத்தில் நின்று கொண்டிருந்த இளம் தோழர் ஒருவர் கேவிக்கேவி அழுதுவிட்டார். நாம கூட நம்ம தலைவர்களின் தியாகத்தை இப்படி மதிச்சதில்லியே என்றுகூட அச்சமயத்தில் நமக்குத் தோன்றிவிடும்.

காலம்பூராவும் இடதுசாரிகளை கேலியும் கிண்டலும் செய்வதையே தொழிலாகக்கொண்டு வாழும் இத்தகைய இலக்கியவாதிகள் இப்படித் தேர்தல் நேரத்தில் திடீர் பாசம் பொங்கப் பேசுவதும் அவர்களின் நக்கலின் ஒரு பகுதிதான் என்பதை நாம் அறிவோம். அடிப்படை மாற்றத்துக்கான அரசியல் வேலைகள் செய்யிறதை விட்டுட்டு இப்படி தேர்தல் அது இதுன்னு வெட்டி வேலை பாக்கறீங்களே என்கிற’புரட்சிகர ஆதங்கத்திலிருந்து’ இந்தக் கருத்துக்கள் வருவதாகப்’பிலிம்’ காட்டுவதும் ஒருவகை இடது எதிர்ப்பு அரசியல்தான் என்பதை இளம் தோழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. உத்தப்புரத்திலிருந்து ரெட்டணை வரை நம் தோழர்கள் அடியும் உதையும் துப்பாக்கிச் சூடும் பட்டபோதுகூட பள்ளிப்பாளையத்திலும் திருவாரூரிலும் எனப் பல இடங்களில் நம் தோழர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டபோதுகூட ஆதரவாக ஒரு வார்த்தைகூடப் பேசாத புரட்சி எழுத்தாளர்கள்தாம் இவர்கள் என்பதையும் நாம் என்றும் மறப்பதற்கில்லை.

புரட்சி என்றால் என்ன? புரட்சியின் இன்றைய கட்டம் என்ன? இந்தியாவில் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் சக்திகள் எவை? அவற்றின் பலம் என்ன பலவீனம் என்ன? பாராளுமன்றத்தில் பங்கேற்கும் இடது அரசியலின் நோக்கமென்ன?அடிப்படை மாற்றம் பற்றிய மார்க்சியப் புரிதல்க் என்ன என்கிற கேள்விகளையெல்லாம் அலசி விரிவாக ஆராய்ந்து மார்க்சிஸ்ட் கட்சி தன் ‘கட்சித் திட்டத்தை’ உருவாக்கி அதை பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு மக்களிடம் விநியோகித்து வருகிறது-கடந்த 50 ஆண்டுகாலமாக. எனக்கு விவரம் தெரிய எம் மீது புரட்சிகர அக்கறை காட்டும் தமிழ்நாட்டின் எந்த அமைப்புசாரா இலக்கியவாதியும் அதைப் படித்ததே இல்லை. அதைப் படித்துவிட்டு எந்த இலக்கிய வாதியும் உங்கள் திட்டத்தில் இந்தக் கோளாறு இருக்கிறது இன்ன தவறு இருக்கிறது இன்ன விதத்தில் இது புரட்சிகரமாக இல்லை என்று உருப்படியாக ஒரு விமர்சனத்தைக்கூட ஒருபோதும் வைத்ததில்லை. போகும்போதும் வரும்போதும் கருத்துக்களைக் கொட்டும்’கருத்து உதிர்ப்பாளர்களாகவே’அவர்கள் தங்கி விடுகிறார்கள். படிப்பு வாசனை வாய்க்கப்பெறாத மக்கள் கட்சி இலக்கியங்களைப் படித்துவிட்டு நம்மோடு விவாதிக்க முடியாது. ஆனால் பல்லாயிரம் பக்கம் படிக்கும் அன்றாடப்பழக்கம் உள்ள இவ்விலக்கியவாதிகள் கட்சியின் எழுத்துக்களைப் படிக்காமலே விமர்சனங்களை உதிர்ப்பதை எப்படி நாம் பொருட்படுத்த முடியும்?ஏன் பொருட்படுத்த வேண்டும்?

நிற்க.

இம்முறை இடதுசாரி எழுத்தாளர்கள் மட்டுமின்றி நாவலாசிரியர் இமையம் அவர்களும் மாட்டிக்கொண்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியின்போது அவர் ஒரு பிரசுரத்தை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு எல்லொரிடமும் இலவசமாக கிறித்துவப் பாதிரியார்கள் போலக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

“ஆ.ராசாவின் மீது குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை” என்பதுதான் அப்பிரசுரத்தின் தலைப்பு. அதை எழுதியவர் கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரும் நாடறிந்த வலதுசாரி அறிவுஜீவியுமான பத்ரி சேஷாத்ரி ஆவார். நாவலாசிரியர் இமையம் சமூகத்தின் அடித்தட்டில் வாழும் புதிரை வண்ணார் சமூகம் மற்றும் தலித் சமூகத்தினரின் வாழ்வை முன்வைத்துக் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல் போன்ற நுட்பமான நாவல்களைத் தமிழுக்குத் தந்த பாராட்டுதலுக்குரிய படைப்பாளி ஆவார். அவர் ஊரில் ஒரு திமுக கட்சிக்காரர். அவருடைய குடும்பமே திமுக குடும்பம். ஆனால் அவருடைய இலக்கியப்படைப்புகளில் இதற்கான அடையாளம் எதையும் நாம் காண முடியாது. திமுகவின் முக்கியக் கடமையான கலைஞர்புகழ் பாடும் புனிதப் பணியை அவர் ஒருபோதும் செய்ததில்லை. அது வேறு இது வேறு என்று தெளிவாக இருந்து வந்த இமையம் இப்படித் திடீர்னு ஒரு குண்டைத்தூக்கிப் போட்டதில் இலக்கியவாதிகள் பலருக்கும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்பட்டது. அதை ஒட்டி இலக்கியவாதிகள் மத்தியில் வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன. அவர் அந்த எல்லையைத் தாண்டி இருக்கக்கூடாது என்பது ஒரு வாதம்.

எல்லா எழுத்தாளர்களும் அறிவாளிகளும் அறிவுலக எல்லையைத் தாண்டி அரசியல் பணி செய்யும்போது அவர் தாண்டியது மட்டும் தப்பா? என்பது இன்னொரு வாதம். இந்த விவாதத்தின் போக்கில் ஒரு கட்டுரையாளர் (அம்ருதா –பிப்ரவரி இதழ்) எழுதுகிறார்:-

“கலை இலக்கியப்பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் போன்றன தமிழ்நாட்டில் இயங்கும் இடதுசாரிக் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்புகள். அவற்றிலும் படைப்பாளிகளும், அறிவாளிகளும் தீவிரமாக இயங்கவே செய்கிறாகள். ஆனால் இவர்கள் தாங்கள் இயங்கும் கட்சிகள் எடுக்கும் கூட்டணி நிலைபாட்டிற்கு எதிராக எப்போதாவது கருத்துக்களை முன்வைத்ததில்லையே ஏன்? கருத்துக்கள் கூறாதது மட்டுமல்ல. கட்சிக்கட்டளையை ஏற்று கூட்டணி தர்மத்துக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றுவதையும் கடமையாகக் கொள்கிறார்களே அவர்களுக்கு மட்டும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்ற எல்லைகள் கிடையாதா?”

அவர் சொல்ல வருவது இடதுசாரி எழுத்தாளர்கள் ஆற்றுவதும் கட்சிப்பணிதான். இப்போது நாவலாசிரியர் இமையம் ஆற்றியிருப்பதும் அவருடைய கட்சிப்பணிதானே என்பதுதான். இரண்டையும் சமப்படுத்தும் சாகசத்தை இக்கட்டுரையாளர் தன் ‘ஆய்வு நோக்கு மிக்க’ வார்த்தை ஜாலத்தால் செய்து முடிக்கிறார். நவீன கவிஞர் கனிமொழி கார்ப்பொரேட் தரகர் நீராராடியாவுடன் பேசியதும் சாதித்ததும்கூட அவருடைய கட்சிப்பணிதான். எல்லாம் ஒன்றுதான் என்று கட்டுரையாளர் பூசி மெழுகுவது பச்சையான வலதுசாரி அரசியல் அல்லவா?விட்டால் `ஹிட்லருக்கு ஆதரவாக எழுதிவந்த அன்றைய ஜெர்மானிய எழுத்தாளர்களும் சோவியத்துக்கு ஆதரவாக எழுதிய மாக்சிம் கார்க்கியும் ஒன்றுதான் என்று சொல்லி விடுவார் போல.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என்பது குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் கொள்கையைப் பேசுவதற்காக உருவான அமைப்பல்ல. அது ஒரு பொதுவான-தனக்கான தனிக் கொள்கை அறிக்கையும் கோட்பாடுகளும் கொண்டுள்ள கலை இலக்கிய அமைப்பு. அது தன் 35 ஆண்டுகால வரலாற்றில் குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போடச்சொல்லி பிரச்சாரம் செய்ததாக சரித்திரமே கிடையாது. எது சரியான அரசியல் என்று பொதுவாகத் தன் மேடைகளில் பேசும். அது தனி. அதனுடைய கொள்கை அறிக்கையிலும் அது பற்றி ஏதும் இல்லை. தன்னுடைய வெகுஜனத்தன்மையைக் கறாராகக் காத்து வரும் அமைப்பு அது. நிற்க.

மார்க்சிஸ்ட் கட்சியில் இயங்கும் நான் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் நிலை என்பது வேறு. தேர்தலில் பங்கேற்பதா கூடாதா என்கிற தந்திரம்-கொள்கை முடிவு- என்னுடைய கருத்தையும் கேட்டுக் கட்சி எடுத்த முடிவாகும். ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் அன்றைய தேச நிலைமையை- அரசியல் கட்சிகளின் பலாபலன்கள் –போன்றவற்றை ஆராய்ந்து அந்த நேரத்தி பாட்டாளி வர்க்கத்துக்கு சாதகாமான அரசியல் கூட்டணி அல்லது தொகுதி உடன்பாடு எது என்பதை கட்சி முடிவு செய்யும். அப்போதும் நான் உள்ளிட்ட எழுத்தாளர்களாக இருக்கும் ஒவ்வொரு கட்சி உறுப்பினரின் கருத்தும் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டே முடிவு எடுக்கப்படுகிறது. கட்சிக்குள் நிலவும் உட்கட்சி ஜனநாயகம் குறித்து ஏதும் அறியாமல் அல்லது அறிந்தாலும் அதைப்பற்றி மௌனம் சாதித்துக்கொண்டு ஏதோ கட்சி என்பது நாட்டாமை போல முடிவெடுப்பதாகவும் அதில் கிடந்து உழலும் அறிவாளிகள், எழுத்தாளர்கள் வேற வழியில்லாமல் வாயே தொறக்க முடியாமல் தேர்தல் வேலைகள் செய்வதாகவும் ஒரு சித்திரத்தை தொடர்ந்து இத்தகைய அறிவாளிகள் தீட்டி வருகிறார்கள். இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு கொள்வது என்கிற முடிவை நானும் சேர்ந்துதான் எடுத்தேன் என்கிறபோது கட்சியில் இயங்கும் படைப்பாளிகளாகிய நாங்கள், நாங்கள் எடுத்த முடிவை அமலாக்கப் பாடுபடுவது என்பது எங்கள் வர்க்கக்கடமையாகும். அறிவார்ந்த கேள்விகளை முன்வைப்பதான பாவனையில் எங்கள் படைப்பாளிகளின் மன உறுதியைக் குலைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எப்போதும் போல தோல்வியையே தழுவும். தேர்தல் பாதையே வேண்டாம் என்று அறிவாளிகளாகிய நீங்கள் கருதினால் மாவோயிஸ்ட்டுகளோடு அல்லது இந்தியாவில் சிதறிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான நக்சல் குழுக்களில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து வேலை செய்யப்போகலாமே. அது தற்கொலைப் பாதை மட்டுமல்ல இந்தியப் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான பாதையுமாகும்.

சமீப காலங்களில் நடந்துள்ள ஆரோக்கியமான மாற்றம் என்று நாம் பார்ப்பது -அம்ருதா, காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, தீராநதி, தமிழினி போன்ற அறியப்பட்ட இலக்கிய இதழ்கள் எல்லாமே தம் தலையங்கங்களிலும் சிறப்புக்கட்டுரைகளிலும் நேரடியான சமகால அரசியல் பிரச்னைகள் குறித்துத் தவறாமல் எழுதி வருவதுதான். தூய இலக்கியம் பேசிவந்த சுந்தரராமசாமி, க. நா. சு. காலம் காலாவதியாகி விட்டது. சமீபத்தில் உயிர்மையில் வந்த விலைவாசி உயர்வு குறித்த ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்’ என்கிற தலையங்கக்கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். வெங்காய அரசியல் குறித்து அம்ருதாவும் தமிழினியும் விரிவான கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. அவர்கள் முன்வைக்கும் தீர்வுகல்/பார்வைகளில் முழுமையான உடன்பாடு நமக்கு இல்லாது போனாலும் சமகால மக்கள் பிரச்னைகள் குறித்து இலக்கியவாதிகள் பேசவேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக இடதுசாரிப் படைப்பாளிகள் மட்டுமே பேசிவந்த ஒரு பாதைக்கு இவர்களெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம்.

அதே சமயம் இவர்களின் ஆதரவும் எதிர்ப்பும் நூறுசதம் மக்கள் நலன் சார்ந்ததுதான் என்று மகிழவும் முடியவில்லை. கனிமொழியும் காலச்சுவடும் ஒரு கட்டத்தில் ஒன்றாக நின்றவர்கள். என்ன அரசியல் மாற்றமோ தெரியவில்லை. இப்போது ஜன்மப்பகை. ஆகவே திமுக எதிர்ப்புக் கட்டுரைகள் முன்பைவிட வலுவாக இப்போது வரும். காலச்சுவடுக்கு யாரெல்லாம் எதிரியோ அவர்களெல்லாம் உயிர்மைக்கு நண்பர்களாக இருந்தாக வேண்டும். உயிர் எழுத்தும் உயிர்மையும் கொடும்பகையோடு இருந்தார்கள். இந்த ஜனவரியில் பகை முடிந்து நட்பாகிவிட்டது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்பது போலவும் அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது நிரந்தரப் பகைவரும் கிடையாது என்பது போலவும்தான் இன்று இலக்கிய உலகமும் இருக்கிறது.

கீற்று.காம் இணைய இதழில் இப்போது கொட்டப்பட்டு வரும் குமட்டும் வக்கிரமான அருவருப்பான குப்பைகள் இன்றைய கருத்துலகின் இன்னொரு முகத்தைக் காட்டுகின்றன. இயக்குநர் மிஷ்கினை ‘நண்பேண்டா..’ என்று கொண்டாடிக்கொண்டிருந்த சாருநிவேதிதா அவருடைய புத்தகம் ஒரு மஞ்சள் புத்தக லெவல்லதான் இருக்கு மிஷ்கின் சொன்னதிலிருந்து அவரைப் பகைவன் என்று அறிவித்துக் காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். நான் முன்பு பாராட்டியதெல்லாம் கேன்சல் என்று எழுதுகிறார். இதே சாரு நிவேதிதா நித்யானந்தா சாமியாரின் தொண்டரடிப்பொடியாழ்வாராக இருந்து எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறார். இப்போது அவன் ஒரு அயோக்கியன் என்று எழுதுவது மட்டுமல்ல. ஏற்கனவே எழுதியதையெல்லாம் அழித்தும் விட்டார். ஆகவே அரசியல் அமைப்பு சார்ந்த எழுத்தாளர்கள் சாரா எழுத்தாளர்கள் என்றெல்லாம் பேதம் பாராட்டுவதும் அது மகத்துவமானது இது மட்டமானது என்கிற ஊத்தை வாதங்களை முன் வைப்பதையும் இனியாவது நிறுத்துங்கள்.

என்றென்றும் உழைப்பாளி மக்களுக்காகத் தன்னலம் ஏதுமின்றிக் களத்திலும் கருத்திலும் படைப்பிலும் பாடுபட்டு வரும் இடதுசாரி எழுத்தாளர்களின் நேர்மையான நிதானமான சமூக அக்கறையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாதையை இனியேனும் அக்கறையோடும் பொறுப்போடும் பாருங்கள் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி முடிப்போம்.

Pin It