காவல்துறையையும், அரசையும், ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச அமைப்புகளையும் எதிர்த்து வந்தவர்கள் சமீப காலமாகக் கருத்துரிமை வேண்டி அடித்தள அரசியல் தலைவர்களையும், இதுகாறும் சிறு பத்திரிகைக்காரர்களாக இருந்தவர்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் எதிர்த்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

லிங்குசாமி - எஸ். ராமகிருஷ்ணனின் ‘சண்டைக் கோழி’ படம் தொடர்பான சர்ச்சை பற்றி பா. செயப்பிரகாசம் உட்படப் (தீராநதி, பிப்ரவரி 2006) பலரும் எழுதிவிட்டனர். சண்டைக்கோழி வசனம் தன்னைப் புண்படுத்தி விட்டதாக குட்டி ரேவதி கருதுகிறார். ஒரு கவிஞர், பெண், எழுத்தாளர் அப்படிக் கருதும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்து அவ்வரிகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். குட்டி ரேவதி போன்ற பெரிய படைபலம், பணபலம் இல்லாத ஒரு நபராகவன்றி ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால் இன்று திமிரடியாகப் பேசம் லிங்குசாமியும் திரு ராமகிருஷ்ணனும் அவரது வீடு தேடி ஓடிக்காலடியில் வீழ்ந்திருக்க மாட்டார்களா? ரஜனி சார் என வாய் கூசாமல் பேச முற்படும் இந்தப்பிறவிகள் ரேவதி விஷயத்தில் நடந்து கொள்வதை நாம் கவனிக்க வேண்டும்.

மனுஷ்ய புத்திரன் கேட்கிற ஒரு கேள்வி நியாயமானது தான். இவ்வளவு செலவு பண்ணி நாங்கள் ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டத்தில் குழப்பம் விளைவிப்பது சரியா? நாங்களும் பல கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் நூல் வெளியீடுகள் தவிர வேறு பல பொது விஷயங்களுக்காகவும் கூட்டங்கள் நடத்துகிறோம். அதில் இப்படி ஒரு குழப்பம் நேர்ந்தால் வருத்தமாகத்தான் இருக்கும். அதைத் தவிர்க்கத்தான் முயற்சிப்போம்.

ஆனால் அந்த முயற்சி மனுஷ்யபுத்ரன், யுவன், ராமகிருஷ்ணன் பாணியிலான எதிர்வினை வடிவில் அமைந்திருக்காது என்பது நிச்சயம். முதலில் கூட்டத்தைக் குழப்புபவர்கள் யார் என்பது முக்கியம். நம்மைவிட வலுவான, அதிகார மையங்கள் திட்டமிட்ட அரசியல் நோக்குடன் கூட்டத்தை நிறுத்துவதற்காகவே வரும் போது அவர்களை எதிர்கொள்வது வேறு, குட்டி ரேவதி போன்ற பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படிக் குரல் எழுப்பியிருந்தால் எங்கள் குரலும் அவருடன் சேர்ந்து ஒலித்திருக்கும். பாதிப்புக்குக் காரணமானவரை அந்தக் கூட்டமும் கண்டித்திருக்கும். “பொம்மணாட்டிகள் இப்படிக் கத்தறா. ஆம்பிளைகள் என்ன பண்றேள்” என யாரும் மேடை ஏறிக்கத்தியிருக்க மாட்டார்கள்.

தொடர்ந்து குட்டி ரேவதிக்கு எதிராக ஒரு இயக்கத்தையே நடத்திவருகிற மனுஷ்யபுத்ரன் கும்பலின் ஆதங்கத்தில் எந்த நியாயமுமில்லை. ‘சுஜாதா’ போன்ற பாப்புலர் எழுத்தாளர்களின் எழுத்துக்களை வெளியிட்டு லாபம் கொட்டும் பெருநிறுவனமாக இன்று உயிர்மை உருப்பெற்றுள்ளது. வெகுசன இதழ்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த பார்ப்பன சங்க உறுப்பினன் சுஜாதாவை சிறுபத்திரிகை தளத்தில் கொண்டு வந்து நல்லகண்ணு போன்றவர்களை முன் நிறுத்தி தொழில் செய்கிற நிறுவனம் அது. ‘உயிர்மை’ இதழையும் அதன் மூலம் அது சம்பாதித்துள்ள அதிகாரத்தையும் இன்று குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றோருக்கு எதிராக பயன்படுத்துகிறார் மனுஷ்யபுத்ரன். அவரும் அவரது அடிப்பொடிகளுமாக உயிர்மை இதழின் (பிப்ரவரி 2006) ஆறு பக்கங்களை இதற்கெனச் செலவிட்டுள்ளனர். சுகிர்த ராணியைப் பற்றி ஆபாசமாக எழுதிய ‘தமிழ் முரசு’ இதழை ஒருவர் பாராட்டியுள்ளார். குஷ்பு பிரச்சினையில் ‘தமிழ் முரசு’ இதழைக் கண்டித்து கருத்துரிமை வீரம் கக்கிய மனுஷ்யபுத்ரன் அந்தப் புகழ்ச்சியை அப்படியே வெளியிட்டுள்ளார்.

‘காலச்சுவடி’ல் தான் இருக்கும் போது கற்றுக்கொண்ட மோசமான அரசியலைத் தொடர்ந்து ‘உயிர்மை’ இதழில் செய்து வருகிறார் மனுஷ்யபுத்ரன். என்னுடைய கட்டுரை வரிகள் நீக்கப்பட்டதைச் சென்ற இதழில் சுட்டிக் காட்டியிருந்தேன். சுந்தரராமசாமி மரணம் குறித்து உயிர்மை சிறப்பிதழில் எழுதப்பட்ட அபத்தக் கட்டுரைகளை விமர்சித்து எழுதப்பட்ட கடிதங்கள் வாசகர் கடிதப் பகுதியில் போடப்படவில்லை. சுஜாதா வின் புறநானூறு உரையின் அபத்தங்களைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் ‘சமயங்களின் அரசியல்’ நூலை அவரது விரோதியான அ. ராமசாமியிடம் கொடுத்து விமர்சனம் எழுதச்சொல்லி வெளியிட்டது ‘உயிர்மை’ . மோசமான அந்த விமர்சனத்தில் தனக்குத் தெரியாமல் சிலவரிகள் மாற்றப் பட்டதாகக்கூறி அ. ராமசாமி ஒரு ‘செராக்ஸ்’ பிரதியை தொ.ப. விடம் காட்டி சமாதானம் பேசியுள்ளார். எனினும் அடுத்த இதழில் இது குறித்து அ.இராமசாமி, மனுஷ்யபுத்ரன் இரு வரும் கப்சிப். இப்படியான பலவேலைகளின் ஓரங்கமாகத்தான் இந்த இதழில் மூன்று பக்கத் தலையங்கம் ஒன்றை ஆத்திரமும் வெறியும் வெளிப்பட எழுதியுள்ளார் ம.பு.

உயிர்மை கூட்டத்தில் ரேவதிக்குத் துணையாக வந்திருந்தவர்களில் காலச்சுவடு தேவிபாரதியும் கருப்புப்பிரதிகள் நீலகண்டனும் உள்ளிட்ட சிலர் இருந்தார்கள் என புத்ரன் எழுதுகிறார். அதாவது இந்த இரு பதிப்பகத்தார்களும் உயிர்மைக்கு எதிரான தொழிற்போட்டி காரணமாக திட்டமிட்டு கலாட்டா செய்ய ‘வந்திருந்ததாக’ அர்த்தம். அரசியல் நோக்குள்ள மிகச் சில நூற்களை அச்சகத்திற்கும், பேப்பர்கடைக்கும் கடன் சொல்லி வெளியிட்டு, அதைத்தோளில் சுமந்து விற்று வருபவன் நீலகண்டன். சுஜாதா வெளித்தள்ளுபவற்றை விற்று லாபம் கொழிக்கும் உன்னுடன் அவனுக்கென்ன போட்டி? உயிர்மையை விட ஆபாசமான, அதிகார வெறி பிடித்த காலச்சுவடுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? நீலகண்டனை அறிந்தவர்களுக்குத் தெரியும். அவன் போகாத கூட்டங்கள் சென்னையில் கிடையாது வழக்கம் போலக்கூட்டத்திற்கு வந்திருந்தவன் அங்கு நடைபெற்ற பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் துணையாக நின்றது ரொம்பவும் தற்செயலானது, நியாயமானது, பெருமைக்குரியது.

ஜனவரி 16 அன்று குட்டி ரேவதி முயற்சியில் பலரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இந்தப் புதிய அதிகார மய்யத்திற்கு எதிராக இயல்பான கோபம் வெளிப் பட்டது. குறிப்பாக மாலதி மைத்ரி, சுகிர்தராணி ஆகியோரது பேச்சுக்கள் அமைந்தன. குட்டி ரேவதி பிரச்சினை தவிர லிங்குசாமி ராமகிருஷ்ணனின் சண்டைக்கோழி படமே அதன் உள்ள டக்கத்திற்காகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனை அங்கே, அம்பேத்கர் இயக்கம் ஒன்றைச் சேர்ந்த இளம்பரிதியும் ‘தீம்தரிகிட’ ஞாநியும் சுட்டிக்காட்டினார்கள். ஞாநியின் பேச்சு அன்று குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

இந்தப் பிரச்சினையில் ரேவதிக்கு எதிரான கருத்துக்களை உமிழ்ந்துள்ளவர்களில் ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்ற உயிர்மை எழுத்தாளர்களும் அடக்கம். பெண்ணுரிமையாளர் களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் கொஞ்சம் பாப்புலர் ஆகும்போது முதலில் ஏறுகிற கொழுப்பு ஆணாதிக்கக் கொழுப்புத்தான்.

Pin It