கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடந்து முடிந்துள்ள 3 வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத் தம் 60 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. மாணவர்களுக்கு தேர்வு இருந்ததை பலர் சொல்லியும் ஐ.பி.எல் நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை. அதுசரி இந்த நாட்டின் தேர்தல் நடக்கிறது கொஞ்சம் கிரிக்கெட்டை தள்ளிவைக்கக் கூடாதா? என அரசாங்கமே கெஞ்சிய போதும் கேட்காத வர்கள்தானே! "இந்தியா இல்லை என்றால் வெளிநாட்டில் நடத்த முடியும் போய்யா" என தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு போட்டியை நடத்தியவர்கள் மாணவர்களின் தேர்வை கணக்கில் எடுக்கவாப் போகின்றனர். ஒருவழியாக விளம்பர இடைவெளிகளுக்கு மத்தியில் கிரிக்கெட்டையும் நமது ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்

நமக்கு ஊடகங்கள் கணக்கை காட்டிக்கொண்டே இருக்கின்றன. 60 ஆட்டங்களிலும் மொத்தம் 585 சிக்சர்கள், 1708 பவுண்டரிகள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, பஞ்சாப்புக்கு எதிரான லீக்கில் 108 மீட்டர் தூரத்திற்கு பந்தை பறக்க விட்டதே, அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்சராகும். இந்த ஐ.பி.எல் லில் ஒவ்வொரு அணியும் அடித்த சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் விவரம் வருமாறு: சென்னை 97 மற்றும் 212, பெங்களூர் 77 மற்றும் 214, டெக்கான் 84 மற்றும் 197, டெல்லி 58 மற்றும் 190, மும்பை 75 மற்றும் 261, கொல் கத்தா 63 மற்றும் 199, ராஜஸ்தான் ராயல்ஸ் 74 மற்றும் 202, பஞ்சாப் 57 மற்றும் 233. ஆக மொத் தம் 10,342 ரன்களை சிக்சர் மற்றும் பவுண்டரிகளில் பார்த்து நமது ரசிகர்களும் புளகாங்கிதம் அடைந்துள் ளனர். அதிகம் பவுண்டரிகளை அடித்த பட்டியலில், அதிகம் ரன் அடித்த பட்டியலில் டென்டுல்கரே முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் 4 வது ஐ.பி.எல் போட்டியில் புனே, கொச்சி ஆகிய இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன. இதனால் ஆட்டங்களின் எண்ணிக்கை 94 ஆக உயரும். இப்படியெல்லாம் ரசிகர்கள் கணக்கு பார்க்க இவர்களுக்கு தெரியாமல் வேறு ஆட்டமும் நடந்துகொண்டிருந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் 27 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதை வருமானவரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதோ, ஐ.பி.எல். அமைப்பின் ஊழல் குறித்தோ யாருக்கும் தெரியவில்லை. தனது காஷ்மீர் காதலி சுனந்தா புஷ்கருக்காக கொச்சி அணியில் ரூ.70 கோடிக்கு இலவசப் பங்கு களை பெற்றுக் கொடுத்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி சசிதரூர் சமீபத்தில் பதவி இழந்தார். அதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் ஐ.பி.எல். விவகாரம் விசுவரூபம் எடுத்து வரு கிறது. சசிதரூர் விவகாரத்தை அம்பலப்படுத்திய ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் லலித்மோடியை ஐ.பி.எல். தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சசிதரூர் மந்திரி பதவி விலகியதை தொடர்ந்து, ஐ.பி.எல். விவகாரம் பற்றி வருமான வரித்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்பிறகு 11 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வருமான வரித் துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர். அந்த அறிக்கையின் ஒரு பக்கத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்ற பரபரப்பான தகவலும் இடம் பெற்றுள்ளது. ஆனால், வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இந்த மோசடியை உறுதிப்படுத்துவதற்காக, கிரிக்கெட் வீரர்களின் செல்போன் பேச்சுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுவல்லாமல் ஊடக விளம்பரத்தில் அவர்கள் செய்த மோசடிகள் தனி. பணம் மட்டுமே லட்சியம் என்றாகிவிட்ட ஐ.பி.எல் போட்டிகளில் இனி ஊழலைத் தவிர எதை எதிர்பார்த்தாலும் அது நகைப்பிற்குரியதாய் மாறும்.

ஐ.பி.எல். விவகாரத்தில் பல கோடி ரூபாய் மோசடி என லலித்மோடி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டு உள்ளது. அமைப்பின் தலைவர் லலித்மோடி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஐ.பி.எல். ஆட்சி மன்றக் குழுவின் அவசரக் கூட்டத்தில், புதிய இடைக்காலத் தலைவராக, சரத்பவாரின் நெருங்கிய ஆதரவாளரும், தொழில் அதிபருமான சிரயு அமீன் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணி ஏலம் மற்றும் போட்டிகளை டெலிவி ஷனில் ஒளிபரப்ப உரிமம் வழங்கியது, சமீபத்தில் நடைபெற்ற கொச்சி மற்றும் புனே அணிகள் ஏல விவகாரம், இணையதள ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் மோடியின் நடத்தை சம்பந்தமான புகார்களை கூறி உள்ளனர்.

இதெல்லாம் இருக்கட்டும் இந்த விபரங்கள் நமது ஆட்சியாளர்களுக்கு இப்போதுதான் தெரி யுமா? என்ற கேள்வியும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்தே இருக்கும். அதிகார வர்க்கத்தை அசைக்காதவரை. அங்கு அசையும் போதுதான் பிரச்சனை வெளியே வருகிறது. ஆனால் பாவம் நமது ரசிகர்கள்தான் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அது விளையாட்டு என்று. இந்திய நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள் பின் தள்ளப்பட்டு கிரிக்கெட் மட்டும் ஏன் முன் நிறுத்தப்பட்டது என்பது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களுக்கு விடை இப்போது கிடைத்திருக்கும்.

Pin It