ஐபிஎல் பந்துகள் தங்களது சொந்த சாம்பியன்களின் கூட்டத்தை குறிவைத்து பறந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் கேபினட் அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள், முதலமைச்சர்கள் என பலரின் பெயர்களும், ஐபிஎல் அணிகளுக்கான ஏலங்களில் தங்களது செல்வாக்கை பயன்படுத்த முயன்றதாக அடிபடுகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பாக இருக்கின்றன. வரி செலுத்தும் மக்கள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.

ஊடகம் மற்றும் அரசியலில் இருக்கும் பலரும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் கைவிட்டு, இந்தப் பிரச்சனை பிரதானப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காங்கிரசும், பாஜகவும் தங்களது கடுமையான மோதல்களை குறைத்துக் கொண்டு இயல்பான நிலைமையை பேணுவதற்கான ஒரு பொது தளமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ)  இந்திய பிரிமியர் லீக்கும் (ஐபிஎல்) இருக்கின்றன. இரு தரப்புக்கும் சமமான ஆடுகளமாக இந்த பெரும் பணப்புழக்கம் இருக்கிறது. (மூன்று தரப்பு என்று கூட சொல்லலாம்: தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி)யும், இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை) மற்றொரு ஆர்வம் தரத்தக்க விஷயம் என்னவென்றால் ஊடகங்கள் வேறு வழியின்றி ஐபிஎல்லின் பெருத்துப் போயிருக்கிற தொந்தியை பற்றி கொஞ்சம் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது; என்ற போதிலும் இது தொடர்பாக இன்னும் மிகப் பெரிய கேள்விகளை, கடினமான கேள்விகளை கேட்பதற்கு தயங்குகின்றன. லலித் மோடியைப் பற்றியும், சசிதரூரைப் பற்றியும் எழுதுவதையும் தாண்டி இன்னும் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், அவற்றை தவிர்க்க முயற்சிக்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன் செல்வோம். வரலாறு காணாத அளவிற்கு 'மேட்ச் பிக்ஸிங்' எனும் மிகப் பெரிய சூதாட்ட ஊழலில் சிக்கிச் சீரழிந்தது கிரிக்கெட். இந்த சூதாட்டப் புயல் இந்திய பெருநகரங்களில் மையம் கொண்டிருந்தது. இந்திய நட்சத்திரங்கள் அதில் ஈடுபட்டிருந்தார்கள். இந்திய பெரும் வர்த்தகர்கள்  தொழில் அதிபர்கள் அதில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால், இவை அனைத்தையும் உள்ளடக்கி ஒரு புதிய வடிவத்திலான  முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட விளையாட்டைத்தான் தற்போது நாம் பார்க்கிறோம். மிகப் பெரும் சூதாட்டமும், மோசடியும் நடக்கப் போகிறது என்பது தெரிந்தே அதற்காக காத்திருக்கும் ஊடகங்கள், "வாவ்! எவ்வளவு அற்புதமாக இருக்கிறது" என்று வியந்து போய் பாராட்டி எழுதுகின்றன. விரும்பியே இந்தச் சூதாட்டத்தை ஏற்றுக் கொள்ள எல்லோரும் தயாராக இருக்கிறார்கள் என்ற விதத்தில் இவை கருத்துக்களை உருவாக்குகின்றன.

இந்த மிகப் பெரும் வியாபாரம் ரசிகர்களை ஈர்க்கிற பெயர்களோடு நடக்கிறது; கவர்ச்சி கண்களை பறிக்கிறது; எல்லாவற்றுக்கும் மேலாக எங்கு திரும்பினாலும் கண்ணை கவரும் விளம்பரங்கள்; கார்ப்பரேட் சக்தி இதுதான். ஆனால், இத்தகைய போட்டிகள் உருவான முதல் நாளிலிருந்தே அதில் ஏராளமான முரண்பாடுகள் நீடிக்கின்றன. (இந்தப் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு என்ன நன்மையை விளைவித்தது என்பது தனி கேள்வி). இங்கே நடப்பது தங்களது அரசியல் புரவலர்களின் ஆரத்தழுவலோடு நடக்கும் பெரும் வியாபாரம். இந்த அரசியல் புரவலர்கள் தாங்கள் வகிக்கும் பொது மக்களுக்கான பதவிகளின்பால் பணிகள் மேற்கொள்ள தங்களது அலுவலகங்களில் ஒரு வினாடிகூட ஒதுக்குவதற்கு நேரமில்லாதவர்கள்; ஆனால், பிசிசிஐ  ஐபிஎல் நடவடிக்கைகளுக்கு அதிமுக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், ஊடகங்கள் சிற்சில கேள்விகளை மட்டுமே எழுப்புகின்றன.

தற்போது கடும் நிர்பந்தத்தின்பேரில் இந்த முறைகேடான பேரங்கள், லஞ்சங்கள், "உன்னை எப்படி பார்த்துக் கொள்வது என்று எனக்கு தெரியும்" என்கிற ரீதியிலான அச்சுறுத்தல்கள் போன்றவை பற்றி விவாதம் எழுந்துள்ளது. பினாமி முதலீட்டாளர்கள், இழிவான பேரங்கள், மிகப் பெரும் அளவிலான வரி ஏய்ப்பு போன்றவை பற்றியெல்லாம் தற்போது விவாதம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட அணிகள் வெளியேறிக் கொள்வதற்கு 50 மில்லியன் டாலர் அளவிற்கு கூட லஞ்சம் தருவதாக பேரம் பேசிய அணி நிர்வாகிகள், ஏலதாரர்கள் பற்றியெல்லாம் விவாதம் எழுந்திருக்கிறது. குறிப்பிட்ட ஏலதாரர்களை விலகிக் கொள்ளுமாறு கூறி தனது பதவியை பயன்படுத்தி அச்சுறுத்தல்களை செய்த மத்திய அமைச்சரை பற்றியெல்லாம் விவாதங்கள் எழுந்துள்ளது.

இந்த அனைத்துமே, ஐபிஎல் விவகாரத்தில் மோடிக்கும், தரூருக்கும் நடந்த மோதல்களையெல்லாம் விட மிக மிக பெரிய விவகாரங்கள். குறைந்த அளவிலான பணம் புழங்கியது குறித்த விபரங்களை அல்லது சில அணிகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சில பத்து கோடிகளை இழந்தது தொடர்பான கணக்குகளையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். இந்த இழப்புகள் இருந்த போதிலும் கூட, இரண்டு குறிப்பிட்ட அணிகளுக்காக தங்களுக்கிடையே மோதிக்கொண்ட புதிய நிறுவனங்கள் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு பேரம் நடத்தியதை கூட விட்டுத் தள்ளுங்கள். இந்த விவரங்களையெல்லாம் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்களே தங்களது தொழில் தர்மத்தின் காரணமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வெகுசிலரும் கூட அந்தப்பணியில் தாங்கள் தனிமைப் படுத்தப்பட்டதாக பின்னர் உணர்ந்தார்கள். அதில் சிலர் மிரட்டல் இமெயில்களும், வசவு வார்த்தைகளும் கிடைக்கப்பெற்றார்கள்.

இந்த உலகில் சில குறிப்பிட்ட பெரும் பணக்காரர்களுக்காக பொதுமக்களின் மானியம் எப்படி திருப்பி விடப்படுகிறது என்ற கேள்விகள் எழுகின்றனவா? பிசிசிஐ  ஐபிஎல் அமைப்புகள் இந்த நாட்டின் சாதாரண மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் பலவிதமான வழிகளில் செலவழித்துக் கொண்டிருக்கின்றன. மகாராஷ்ட்ராவில் மட்டும் ஐபிஎல் அமைப்பிற்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரையில் பொழுதுபோக்கு வரியில் விலக்கு அளிக்கலாம் என்று அம்மாநில சட்டமன்றத்தில் விவாதம் நடந்திருக்கிறது. இந்த தகவல் ஊடகங்களில் வெளிவரவில்லை. இதுதவிர, ஐபிஎல்லுக்கு மேலும் பலவிதமான உதவிகளை செய்வது என்றும் மகாராஷ்ட்ர அரசு முடிவெடுத்தது. வரும் ஆண்டில் மகாராஷ்ட்ர மாநில அரசின் கடன்கள் ரூ.2 லட்சம் கோடியை தாண்டப்போகும் சூழலிலும், இத்தகைய அறிவிப்புகளை அந்த அரசு செய்தது. இதர பல மாநிலங்களிலும், பல்வேறு அரசுத்துறைகளிலும் இதே போன்ற மானியங்களும், வரிவிலக்குகளும் பிசிசிஐ  ஐபிஎல் அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டது.

நாட்டின் பொதுச் சொத்து ஆதாரங்களிலிருந்து பிசிசிஐ  ஐபில் அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஏராளமான சேவைகள் வெளி உலகில் விவாதிக்கப் படாதவை. இவைபற்றி முழுமையாக எடுத்துரைக்க நமக்கு இடம் போதாது. இந்தப் பூவுலகிலேயே நான்காவது மிகப் பெரிய பணக்காரர் தனக்கு சொந்தமாக வாங்கியிருக்கிற ஒரு கிரிக்கெட் அணிக்கு "ஸ்பான்சர்" என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்து அந்தச் செலவை ஒரு பொதுத்துறை கம்பெனி தனது கணக்கில் ஏற்றிக் கொண்டிருப்பது குறித்து எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. இந்தப்போட்டிகளுக்காக, அதில் ஈடுபடும் அணிகளுக்காக மிக மிக குறைவான விலைக்கு நிலங்களின் உரிமம் வழங்கப்பட்டதும், போட்டி நடக்கும் ஸ்டேடியங்கள் மிக மிக குறைவான வாடகைக்கு விடப்பட்டதும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மிக மிக குறைவான தொகை வசூலிக்கப்பட்டதும் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் நமது மக்கள் தலையில் ஏற்றப்பட்ட செலவு எவ்வளவு என்பது குறித்த விபரங்கள் இதுவரையிலும் இல்லை. தோராயமாக ஆய்வு செய்தால் அது பல நூறு கோடிகள் என்று தெரியவரும்.

பொதுமக்களின் பணத்திலிருந்து ஐபிஎல்லுக்கு இத்தனை விதமான ஆதரவும், சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கிற அதே நேரத்தில் இந்த நாட்டின் ஏழைகளுக்கு வழங்கப்படவேண்டிய நியாயமான மானியம் மிகக் கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். ஆனால், நாம் பொதுவாக அந்தச்சாலையில் பயணிக்க விரும்புவதில்லை. ஐபிஎல் தொடர்பாக ஒரு விசாரணை நடத்தப்படுமானால், அது அவசியம் பிசிசிஐயின் அனைத்து நடவடிக்கைகள் குறித்துமான விசாரணையாக, அதன் பகிரங்கமான, மறைமுகமான நடவடிக்கைகள் குறித்த விசாரணையாக, இரண்டு அமைப்புகளும் பெற்றிருக்கிற நேரடி மற்றும் மறைமுக வரிச் சலுகைகள், மானியங்கள் குறித்த விசாரணையாக அமைய வேண்டும்.

இப்படி பொதுப்பணத்திலிருந்து ஐபிஎல்லுக்கு செலவழிக்கப்பட்ட தொகையால் லாபம் அடைந்தவர்கள் யார்? லாபம் அடைந்தவர்களில் நான்கு ஜென்டில்மேன்கள் உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர்கள். 2010ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்களில் இடம் பெற்றிருப்பவர்கள். இவர்களில் மூன்று பேர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள். மற்றொருவர் அணியின் பெயருக்கு ஸ்பான்சர் வழங்குபவர். கோடிக்கணக்கான டாலர்களைப் பெற்றுள்ள இந்த மகா கோடீஸ்வரர்கள் மேற்படி போர்ப்ஸ் பட்டியலில் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள். மேலும், பல்லாயிரம் கோடிகளைக் கொண்டிருக்கிற பாலிவுட் நட்சத்திரங்களும் இதில் இருக்கிறார்கள். இந்த மகா பணக்காரர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் அரசுகள் முதுகு வளைந்து சலுகைகளை அள்ளித் தருகின்றன. ஏழை மக்களிடையே பசிக்கும் வயிறுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், உணவு மானியத்தை கடுமையாக வெட்டிக் குறைக்கிறது அரசு. ஆனால், ஐபிஎல் காட்சிகளுக்காக ஒருங்கிணைந்த விருந்துகள் பெரிய அளவில் நடக்கின்றன. இதற்கு யார் பணம் செலுத்துகிறார்கள் என்பதே கேள்வி. இதே இப்போது வீதிகளில் பேசப்படுகிறது. ஐபிஎல் என்பது இந்திய பைசா லீக் என்று. அதைவிட இன்னும் நேரடியாக ஐபிஎல் என்பது இந்திய பைசா லூட்டிங் (சூறை) என்று.

ஆனால், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அமைப்புகள் தங்களை விளம்பரம் செய்து கொள்வதற்கு மிகப்பெரும் தொகையை செலவழிக்கின்றன. கோபங்களை வெளிப்படுத்த வேண்டிய ஊடகங்களை விலைக்கு வாங்குகின்றன. இதனால் மிக நீண்ட மவுனம் தொடர்கிறது. கொச்சி அணி தொடர்பான பிரச்சனை ஏற்படும் வரை, பழைய நாகரிக கிரிக்கெட் ஆர்வலரான நமது விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மட்டுமே இந்த புதிய விளையாட்டைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். ஐபிஎல் போட்டிகளை கவர் செய்கிற ஊடகங்களிடமிருந்து அந்தக் கவலை எழவில்லை. வரிச்சலுகைகளையும், பாதுகாப்புக்கான மானியங்களையும் அவர் விமர்சித்தார் என்பது உண்மையே.

இன்றைக்கு உங்கள் டி.வி. திரைகளில் ஓடும் ஐபிஎல் நாடகத்தில் நான்கு அமைச்சர்களின் முகங்கள் தெரிகின்றன. இந்நிலையில் உண்மையில் விளையாட்டோடு தொடர்புடைய அமைச்சரான எம்.எஸ்.கில், கூறிய வார்த்தைகள் மதிப்பு வாய்ந்தவை. ஆனால், அவற்றுக்கு மரியாதை இல்லை. இது இயல்பானதே. ஏனென்றால், ஐபிஎல் என்பது விளையாட்டோடு தொடர்புடையதல்ல.

விளையாட்டுத்துறை அமைச்சர் நீண்ட காலத்திற்கு முன்பே பிசிசிஐ ஐபிஎல் உயர்மட்டத்தில் நலன்களுக்காக நடக்கும் மோதல்களின் ஆபத்தை சுட்டிக் காட்டினார். கரன்தாப்பர் நேர்காணல் நிகழ்ச்சியிலும் கூட ஐபிஎல் போட்டிகளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறினார். ``இது ஒரு ஏழை நாடு. அதை நான் என்றும் மறவேன். இதற்கு அளிக்கும் வரிச்சலுகை கூட நமது பட்ஜெட்டில் பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும். இந்த அணிகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகளை விட அந்தப் பணத்தை நாட்டின் விளையாட்டுத்துறைக்கு, இதர விளையாட்டுக்களுக்கு பயன்படுத்தலாம் என்பதே என் எண்ணம்'' என்றெல்லாம் அவர் கூறினார். ஆனால் அவர் கூறியதற்கு நேர்மாறாக, நாம், நமது பொதுப்பணத்தை எடுத்து உலக மகா கோடீஸ்வரர்களின் கைகளில் கொடுத்திருக்கிறோம்.

போட்டிகள் நடக்கும் மாநகரங்களில் ஐபிஎல்லின் விருந்தோம்பல் குழுக்கள் என்ற பெயரில், ஒவ்வொரு நாளும் இரவு பார்ட்டிகள் நடக்கின்றன. இதில் ஒரு இடத்தைப் பெற வேண்டுமானால், அதற்கு நீங்கள் ரூ.40 ஆயிரம் விலை கொடுக்க வேண்டும். நள்ளிரவில் ஐபிஎல் நட்சத்திரங்களோடு அந்த பார்ட்டிகளில் நீங்கள் பங்கேற்கலாம். நமது கேள்வி என்னவென்றால், இந்த பார்ட்டிகள், அடுத்த நாள் அந்த வீரர்களின் விளையாட்டுத் திறனை எந்த அளவுக்கு மேம்படுத்தி விடும் என்பதுதான். ஆனால், பார்ட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஈடுபாடுமிக்க நமது பொதுப்புத்தியிலிருந்து கிரிக்கெட்டை நீக்க முடியாத நிலையில் யாருடைய நலன்களை குறிவைத்து இந்த விளையாட்டில் ஒவ்வொரு சுழற்பந்தும் வீசப்படுகிறது?

மும்பையின் பெரும் பணக்கார வர்க்கம், சமீபத்தில் புவி நேரம் என்ற பெயரில் மாநகரில் மின்சாரத்தைப் பாதுகாக்க 60 நிமிடங்கள் விளக்குகளை அணைக்கும் அந்த இயக்கத்தில் பங்கேற்றனர். ஐபிஎல் போட்டிகள் அனைத்துமே இரவு வெளிச்சத்தில் நடக்கின்றன. இதை பகலுக்கு மாற்றியிருந்தால் உண்மையிலேயே மிகப்பெரும் அளவில் மின்சாரம் மிச்சப்பட்டிருக்கும். மகாராஷ்ட்ராவின் மரத்வாடாவிலும் விதர்பாவிலும் 12 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை மின்வெட்டால் மக்களும் விவசாயிகளும் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் லாபவெறி கொண்ட ஒரு தனியார் அமைப்பு இப்படி பொதுப்பணத்தை செலவிட்டு பெருமளவில் மின்சாரத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பது இவர்களுக்கு அசிங்கமாகத் தெரியவில்லையா? ஏழைக்குழந்தைகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் மின்சாரமின்றி அவஸ்தைப்படுகிறார்கள். அவர்களுக்கு கல்வி உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மின்சார உரிமை இல்லை.

ஐபிஎல்லின் வருகைக்குப்பிறகு, ஊடகங்களின் போக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதாவது விளம்பரம், பாலிவுட் நட்சத்திரங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் ஆகிய மூன்று நலன்கள் முக்கியத்துவம் அடைந்துள்ளன. கார்ப்பரேட் பெருமுதலாளிகளும், பாலிவுட் நட்சத்திரங்களும் கிரிக்கெட் அணிகளையே சொந்தமாக விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள். ஒரு ஐபிஎல் அணி ஒரு செய்தித்தாள் நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. இதர பல்வேறு தினசரி ஏடுகள் ஐபிஎல் அணிகளின் மீடியா பார்ட்னர்கள் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. சில பாலிவுட் நட்சத்திரங்கள் டி.வி. சேனல்களில் தங்களது திரைப்படங்களை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த அணிகளுக்கு தூதர்களாக செயல்படுகிறார்கள். ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் தேசிய கதாநாயகர்களாக விளங்கிய வீரர்கள் இன்றைக்கு கிரிக்கெட் அணி ஏலதாரர்களின் மூலதன சொத்துக்களாக திகழ்கிறார்கள். ஒரு காலத்தில் புகையிலைக்கும் மதுவுக்கும் எதிரான விளம்பரங்களில் நடிப்பதில் பெருமை கொண்ட அந்த கதாநாயகர்கள் இன்றைக்கு இவர்களுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் மிகப்பெரிய விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மக்களுக்கு உரிமையான இதயப்பகுதியில் கைவைத்து உறிஞ்சி எடுத்து தனியாரின் பாக்கெட்டுகளை நிரப்பும் விளையாட்டு; ஒரு தேசிய உணர்வை அப்பட்டமாக வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வீர விளையாட்டு.

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

Pin It