bsnl 350TRAI (Telephone Regulatory Authority of India) அளித்திருக்கும் புள்ளி விவரத்தின் படி தற்போது இந்தியாவில் 117 கோடி அலைப்பேசி சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, அதனுடைய 1.76 இலட்சம் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்காமல், அது நாடு முழுதும் பேசப்பட்டு, தற்போது எப்படியோ சமாளித்து ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு அடுக்கடுக்காகச் சரிந்தன பொதுத்துறை நிறுவனங்கள். அதில் BSNL தற்போது பேசு பொருள் ஆகியிருக்கிறது.

நவம்பர் 2018 இல் BSNL தொழிற்சங்கங்கள் பல குற்றச்சாற்றுகளை முன்வைத்தன. ஆட்சியாளர்கள் செய்த குற்றங்கள் அரையும்குறையுமாக வெளிவந்தன. ரிலையன்ஸ் (JIO) நிறுவனத்திற்குத் தனிச்சலுகைகள் வழங்கப்படுகிறதென்றும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காக 4G ஸ்பெக்ட்ரம் BSNL நிறுவனத்திற்குக் கொடுக்கப்படவில்லையென்றும் அந்த தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டின. “ரிலையன்ஸ் (JIO) நிறுவனத்தின் திட்டம் சந்தையில் இருக்கும் போட்டியாளர்களைத் துடைத்து எறிவதே. அந்தப் போட்டியாளர்களில் BSNLலும் அடங்கியிருக்கிறது என்றும் அந்தத் தொழிற்சங்கங்கள் அறிவித்ததோடு அதனால் தங்களுடைய வேலைகளும் ஆபத்தில் இருக்கின்றன என்கிற அபாயத்தையும் வெளிப்படுத்தினர்.

பிரதமர் அலுவலகம் (PMO), தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications), TRAI, நீதிமன்றங்கள் என நான்கு சுவர்களுக்குள் நடந்த நாடகங்களைப் பார்த்தால் BSNL தொழிற்சங்கங்கள் சொன்னது பத்தில் ஒன்றே என்பது விளங்குகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் நாட்டின் தொலைத்தொடர்புக் கொள்கை முடிவுகளை எடுத்தது தொலைத்தொடர்புத் துறையா ரிலையன்ஸ் நிறுவனமா என்கிற சந்தேகம் எழுகிறது. சற்று கவனித்துப் பார்த்தால் ரிலையன்ஸ் நிறுவன வளர்ச்சிக்காகப் பிரதமர் அலுவலகம் தொலைத்தொடர்புத் துறையை தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் என்பது தெளிவாகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருப்பவர்களின் உறவினர்கள் பிரதமர் அலுவலகத்தில் இருக்கிறார்கள். பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்களின் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸின் உறவு நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. உறவினர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வது இயல்பு தானே. இப்படிப்பட்ட பாசப் பிணைப்பு கொண்டது தான் ரிலையன்ஸ் நிறுவனமும் பிரதமர் அலுவலகமும்.

நமக்குத் தெரிந்த ஊழல் எல்லாம் ஒரு அரசு அதிகாரியோ அமைச்சரோ ஒருவரிடம் பணமோ அன்பளிப்போ பெற்றுக்கொண்டு அதிகாரத்தை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது. ஆனால் மோடியோ அதிகாரத்தையே அம்பானியிடம் கொடுத்திருக்கிறார். எதற்காக ஒவ்வொன்றிற்காக அம்பானி அலைய வேண்டும். அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிடுங்கள் அவருக்கு எப்போதெல்லாம் என்ன தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவரே தேவைப்படுகிற கொள்கை முடிவுகளை எடுத்துக் கொள்வார். அவ்வளவுதான். அதிகமாக ஒன்றும் அவர் ஆசைப்பட மாட்டார். அவருக்கு எந்தப் பேராசையும் கிடையாது. Jio நிறுவனம் சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் இந்தியா என்னும் கனவு நனவாக வேண்டுமல்லவா? அந்தச் சேவையை இந்தியாவிற்குச் செய்ய அம்பானியைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? நாட்டிற்கு செய்த சேவையால், Jio என்றொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்கிற யோசனையைக் கொடுத்த அவருடைய மகள் இஷாவின் திருமணத்தைக் கூட எளிமையாக 700 கோடி செலவில் தான் அம்பானியால் நடத்த முடிந்தது.

இந்த மாபெரும் பணியில் என்ன பெரிய இழப்பு நேர்ந்து விட்டது. சில இலட்சம் கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம், சில இலட்சம் கோடிகள் கடன் சுமை ஏற்பட்டிருக்கலாம். BSNL என்னும் நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் தடுமாறலாம். CAG இழப்புகளைக் கணக்கெடுக்கமாட்டார். அப்படியே எடுத்தாலும் நாட்டிற்காக ரிலையன்ஸ் நிறுவனம் வருவாய் இழப்பைச் சந்தித்திருக்கிறது என்று உண்மையைப் போட்டு உடைத்துவிடுவார். CAGக்கு உண்மையைத் தவிர் வேறொன்றும் தெரியாது.

 Jio சந்தைக்கு வருவதற்கு முன் 9 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தன. இப்போது Jioவைத் தவிர இன்னும் 2 நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவிற்குச் சேவை செய்யும் முழுத்தகுதியும் அம்பானியின் Jio நிறுவனத்திற்கே உண்டு. ஆகையால் இப்போது இருக்கும் இரண்டு நிறுவனங்களும் ஓழிந்து இப்போதைக்கு தொலைத்தொடர்புத் துறையில் One India One Jio என்பதும், சில நாட்களில் எல்லாத் துறைகளையும் சேர்த்து One India One Reliance என்பதும் ஒரு ஏழையின் கனவு. ஓரளவுக்கு அந்தக் கனவு நனவாகிவிட்டது. ரிலையன்ஸின் கனவு முழுமையாக நனவாக சங் பரிவாரின் ஓரே தேசம் என்னும் கனவு நனவாக வேண்டும். சங் பரிவாரின் கனவு நனவாக ரிலையன்ஸ் பாடுபடும், ரிலையன்ஸின் கனவு நனவாக் சங் பரிவார் பாடுபடும்.

Pin It