அப்பா மருத்துவர், தரம் வாய்ந்த பள்ளிக் கல்வி, வசதியான குடும்பச் சூழல், லண்டனில் உயர் கல்வி, அன்றைக்கு சட்டம் பயின்றவர் பெரும் பதவிக்கு வந்திருக்க முடியும். ஆனால் உழைப்பாளிகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட் ஆனார். ஏகாதிபத்தியத்தை அதன் கருவறையிலேயே எதிர்த்து நிற்கப் பழகியவர். “இந்தியா திரும்பிய உடன் காங்கிரஸ் அமைப்பில் சேர்வீர்கள் தானே’’ என பண்டிட் நேரு கேட்ட போது, “நான் சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்,’’ என முகத்திற்கு நேராக, நேர்படப் பேசியவர்.

தனக்கென்று கருத்து இருந்தாலும், கட்சியின் கருத்தை மட்டுமே பின்பற்றியவர். இப்படி பெருமைகள் பல கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி, தோழர். ஜோதிபாசு தனது 96வயதில் ஜன 17, 2010 அன்று, உழைப்பாளிகளின் முன்னேற்றம், சமூக மாற்றம் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த, தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.

உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் இயக்கங்களும், இந்தியாவின் பெரும் தலைவர்களும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் அளவில், கொள்கை காரணமாக உயர்ந்து நின்ற மனிதர் என்பதைப் பார்க்க முடிந்தது. பெங்களூரில் உள்ள நிம்மன்ஸ் மருத்துவம் மற்றும் ஆய்வு நிறுவனம் தோழர். ஜோதிபாசுவின் மூளையை ஆய்வு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது.

இளம் வயதில், செயின்ட் சேவியர் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உரையை கேட்கப் போய், காவலர்களிடம் பிரம்படி பெற்ற காலம் துவங்கி, 2010ஆம் ஆண்டு ஜன 17 அன்று கல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை நிறுத்தும் வரை, தாக்குதலுக்கு எதிரான போராட்டம் குறித்தும், சமூக மாற்றம் குறித்தும் சிந்தித்த மூளை, பிரத்யேகமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றே.

கம்யூனிஸ்ட் இயக்கவரலாறு அறிந்து கொள்ளப்படும் போது, போராட்டங்களையும், எண்ணற்ற அடக்குமுறைகளையும், கைதுகளையும் எதிர்கொள்கிற இயக்கம் என்பதை புரிந்து கொள்ள முடியும். தோழர். ஜோதிபாசு 1940இல் இந்தியாவுக்கு திரும்பிய உடன், நேதாஜியை சந்திக்கிற தருணத்தில்,  நடைபெற்ற உரையாடலில் “நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுநேர ஊழியராக விரும்புகிறேன்’’ என குறிப்பிடுகிறார். அதற்கு நேதாஜி, “கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது பஞ்சு மெத்தை அல்ல, அது முள் படுக்கை,’’ என்று குறிப்பிடுகிறார். அதாவது கடினமான வாழ்க்கையை வசதியான ஜோதிபாசு எதிர்கொள்ள முடியுமா? என்கிற ஆதங்கத்தில் இருந்தே நேதாஜி அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறார்.

ஜோதிபாசு தன் வாழ்நாளில் அதுபோன்ற அடக்கு முறைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர் கொண்டிருக்கிறார். “இழப்பதற்கு எதுவும் இல்லை அடிமை விலங்கைத் தவிர’’ என்ற மார்க்சின் பெருமை மிகு வரிகள் ஜோதிபாசுவின் குடும்பச் சூழலில் பொருந்துவதில்லை. ஆனால் பாசு அவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்ட நிலையில், இ.எம்.எஸ், சுர்ஜித், பி. சுந்தரய்யா, பி. ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அனைவருமே அது போன்ற வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு வந்தவர்களே, தேசிய இயக்கத்தின் ஈர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், நேதாஜி குறிப்பிட்ட முள் படுக்கையை தேர்ந்தெடுக்க இத்தகையத் தலைவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு இளம் தலைமுறை கற்றுத்தேற வேண்டிய ஒன்று.

தோழர். பாசுவிடம் கற்றுக் கொள்ளத்தக்க குணாம்சங்கள் நிறைந்து இருந்தாலும், உறுதியாக நின்று, விடாப்பிடியாக போராடும் குணாம்சம் ஒவ்வொரு முற்போக்கு சிந்தனையாளரும் பின்பற்ற வேண்டியது ஆகும். 1946ஆம் ஆண்டு நடைபெற்ற கல்கத்தா ராஜதானிக்கான மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று, அன்றைய முஸ்லிம் லீக் கட்சியின் முதலமைச்சர் சுராவதியை எதிர் கொள்ளத் துவங்கியதில் இருந்து சந்திர புரபுல்ல சென், பி.சி ராய், எஸ்.எஸ்.ரே உள்ளிட்டபலரை எதிர்த்து நின்று அரசியல் நடத்திய விதமும், மக்களைத் திரட்டி ஆள்வோரை நிர்பந்தித்த விதமும் மிக முக்கியமானது.

விலைவாசி உயர்வு, பஞ்சத்திற்கு எதிரான தொடர் போராட்டங்கள், ஆசிரியர், தபால்_தந்தி, ஊழியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள், பெண்கள், மாணவர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்திய போராட்டங்கள் போன்ற அனைத்திலும் நீண்டநாள் போராட வேண்டி இருந்த நிலைமையை, அவருடைய வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ள முடியும். எந்தப் போராட்டமும் ஒரு சில நாள்களில் முடியவில்லை. பல நாள்கள் பல மாதங்கள் போராடி அரசை வெற்றி பெற்ற வரலாறு, இளம் தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு, ஜோதிபாசு பற்றி சொல்லப்படுவனவற்றில் பிரதானமானது. 23 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். பிரதமர் பதவியை, கட்சி முடிவுக்கு கட்டுப்பட்டு ஏற்க மறுத்தவர் என்பதாகும். இந்தியாவில் வேறுயாருக்கும் நிலைபாட்டை எடுத்துவிட முடியமா? கொள்கை, இயக்கம் ஆகியவற்றின் மீதான மிக ஆழமான நேசம் இல்லாதவர்களால் நிச்சயம் முடியாது.

ஜோதிபாசு அத்தகைய உறுதிக்கும், நேசத்திற்கும் சொந்தக்காரர். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், ஏகாதிபத்தியத்தின் குரு பீடத்தில் கம்யூனிசத் தத்துவத்தை முழுமையாக உள்வாங்கி, தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றியவர். முதலமைச்சர் என்ற முறையில் நிறைய பணிகள் இருக்கும் என்பதை எல்லோரும் அறிவர். ஆனாலும், கட்சியின் மாநிலக்குழு, மத்தியக்குழு கூட்டங்களில் தவறாமல் பங்கெடுக்கும் ஸ்தாபன ஒழுக்கம் கொண்டவர் என்பதைமேற்குவங்கத் தோழர்கள் கூறுகிறார்கள்.

அவர் தனது சுயசரிதையில் குறிப்பிடுகிற போதும், அவர் குறித்து மற்றவர்கள் கூறுகிற போதும், கூட்டுத் தலைமைக்கும், கூட்டு முயற்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பணியாற்றியதை அறிய முடிகிறது. இவை அனைத்திற்கும் காரணம் அவர் கொண்ட கொள்கை மற்றும் தத்துவத்தில் நிறைகுடமாக விளங்கியதே ஆகும். வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் முக்கியமானது என்றாலும், கற்றுத்தேர்ந்த முதிர்ச்சி உருவாகிற போதும் எண்ணற்றோரை ஊழியராகக் கண்டறிந்து வளர அனுமதிக்கிற போதும் மாத்திரமே, தனிநபரின் பாத்திரம் வெளிப்படும்.

ஜோதிபாசு தன் 86 வயதில், 2000ஆம் ஆண்டு தன்னை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிந்தைய ஆண்டுகளில், கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்க கேட்டுக்கொண்டார். பொறுப்புகளை மிக இயல்பாக அடுத்தவரிடம் கொடுத்து விட்டு வெளியேறும் முதிர்ச்சி, அனைவரும் பின்பற்ற வேண்டிய கோட்பாடு என்றால் மிகையல்ல.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு ஊழியர் பல வேலைகளை செய்யும் நிலை துவக்க காலத்தில் இருந்தே உருவாகியிருக்கிறது. தோழர். ஜோதிபாசு அவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய தலைமுறை அவரின் அரசு நிர்வாகம், மாற்றுக் கட்சியினரை அணுகும் சாணக்கியத் தனம் ஆகியவற்றை மட்டுமே கேள்வியுற வாய்ப்புகள் உண்டு.

ஆனால், பாசு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், ஸ்வாதினதா பத்திரிகையின் ஆசிரியர், கட்சியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை ஒருங்கே நிறைவேற்றியவர். 1955இல் ஸ்வாதினதா ஆசிரியர் பொறுப்பையும், 1964 இல் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பையும், மற்ற தோழர்களிடம் பகிர்ந்து கொண்டவர். மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின் பீப்பிள்ஸ் டெமாக்ரசி பத்திரிகையின் முதல் ஆசிரியர் இப்படி பல்வேறு கட்சி ஸ்தாபனப் பணிகளை செவ்வனே நிறைவேற்றிய பெருமைகளைக் கொண்டவர்.

இவை அனைத்தையும் கடந்த பின்னரே ஒரு மாநில அரசின் முதலமைச்சர் என்கிற பொறுப்பை அவர் சிறப்பாக நிர்வகிக்க முன் வந்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் என்ற முறையில் சாதனைகள் பல நிகழ்த்தியவர் என்ற போதிலும், இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானது. ஒன்று இந்தியாவில் மிகக் கொடுமையான உணவுப் பஞ்சத்தை சந்தித்த மாநிலம் மேற்கு வங்கம்.

இரண்டு மிகக் கொடுமையான மதக்கலவரத்தையும், படுகொலைகளையும் சந்தித்த மாநிலம். இந்த இரண்டு துயரங்களில் இருந்தும் மக்களை மீட்க நேரடியாக பங்கேற்று பணியாற்றிவர் ஜோதிபாசு. 1946 ஆகஸ்ட் 16ஆம் நாள் இந்தியாவின் வரலாற்றில் கறுப்பு நாள் என குறிப்பிடும் அளவிற்கு இந்து, முஸ்லிம் கலவரம் வெடித்து சிதறியது.

விடுதலை பெற்ற நாளான 1947ஆகஸ்ட் 15 அன்றும் கூட மகாத்மா காந்தி கலவரங்களை கட்டுப்படுத்துவதற்காக நவகாளியில், அமைதி யாத்திரை நடத்திக் கொண்டிருந்தார். அதே போல் தான் உணவுப் பஞ்சமும், வங்கப் பஞ்சம் என்றால், இந்தியாவில் அனைவரும் அறிகிற அளவிற்கு பின் நாற்றத்தை விளைவித்த ஒன்று.

1977இல் ஜோதிபாசு தலைமையில் அமைந்த இடது முன்னணியின் ஆட்சி மேற்படி இரண்டையும், கலவரத்தையும் வென்ற பெருமை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லை. இன்று உணவு உற்பத்தி உபரியாகி விட்டது. 12 லட்சம் ஏக்கர் நிலம், சுமார் 22 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டதால், ஏற்பட்ட மாற்றம். இவை அனைத்தும், ஜோதிபாசு எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

டி.ஒய்.எப்.ஐ அமைப்பை வங்கத்திலும், தேசம் முழுவதிலும் வசீகரித்த மக்கள் தலைவர். மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து மாநில அரசுகளின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய முன்வரவில்லை. குறிப்பாக வங்கத்தில், மின் பற்றாக்குறை சவாலாக விளங்கியது.பக்ரேஷ்வர் மின் திட்டம் குறித்த ஆலோசனைக்கு மத்திய அரசு உதவ முன்வரவில்லை. இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. டி.ஒய்.எப்.ஐ தலைமையேற்றது.

லட்சக்கணக்கான இளைஞர்கள் குருதிக் கொடை அளித்து மின்திட்டத்திற்கான நிதியை உருவாக்குவதில் பங்களித்தனர். மக்களையே திட்டங்களுக்கு துணை நிற்கச் செய்வதில் அக்கறை செலுத்தியவர் ஜோதிபாசு. அவர் தோற்றார் என்றால், மரணம் என்கிற இயற்கையிடம் மட்டுமே. வாழ்க்கைப் போராட்டத்தில், இயக்க வரலாற்றில் எப்போதுமே தோற்காத தோழர் ஜோதிபாசு தனிநபரல்ல அவர் ஒரு சகாப்தம், வரலாறு, உலகின் இளைய தலைமுறை கற்றுத்தேர அவர் பின்பற்றிய மார்க்சியப் பாதை வழிகாட்டும்.

- எஸ்.கண்ணன் 

Pin It