தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்துக்கொண்டே இருக்கிறது. நிதியாதாரம் ஏது?  உலக வங்கி உள்ளிட்ட பல இடங்களில் ரூபாய் 80 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழக அரசு கடன் வாங்கி உள்ளது. அரசின் இந்த கடன் தமிழக மக்கள் சார்பில், அவர்களது உழைப்பை நம்பி வாங்கப்பட்ட கடன் ஆனால் அவர்களுக்கு தெரியாமல் வாங்கப்பட்ட கடன். அரசு எந்திரத்தை புரட்டிப் பார்த்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் வாங்கப்பட்ட கடன்.

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிகள்” சாராயம் குடிக்க ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி அரசுக்கு கொட்டிக்கொடுக்கின்றனர், நமது மக்கள் அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டியில் மானாட மயிலாட கண்டு களிக்கின்றனர். தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் காட்டும் காட்சி பிம்பங்கள் யதார்த்த வாழ்க்கையை மூடி மறைத்து கொலைகளை, கற்பழிப்புகளை, காமலீலைகளை, நடிகர்களின் அந்தரங்கங்களை முக்கியச் செய்தியாக காட்சிப்படுத்துகின்றன.

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் சீரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது, அரசு காப்பீட்டு துறையை நம்பாமல் தனியார் காப்பீடு கம்பெனியிடம் கலைஞர் காப்பீடு திட்டம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதாரமும், பொது சுகாதாரமும் சீரழிந்ததன் விளைவுதான் புதிய புதிய நோய்கள் படையெடுப்பது.

சமச்சீர் கல்விக்கு போராடினால் இரண்டு வகுப்புகளுக்கு மட்டும் ஒரே மாதிரி பாடதிட்டத்தை வைத்து சமச்சீர் கல ்வி என்கிறார்கள். தனியார் பள்ளி உரிமையாளர்கள் மாநாட்டிற்கு சென்ற கல்வி அமைச்சர், அவர்கள் சொன்ன “நிபந்தனைகளுக்கு” தலையசைத்து திரும்பி வருகிறார்.

 ஆட்சிக்கு வருவதற்குமுன் தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும், தான் ஆட்சிக்கு வந்தால் நிலமற்ற குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக சொன்ன கலைஞர், தற்போது அவ்வுளவு ஏக்கர் நிலம் இல்லை என்று கூறுகிறார். காலங்காலமாக மக்கள் வசித்து வந்த இடங்களுக்கு வீட்டுமனை பட்டா வகைமாற்றம் செய்து வழங்கி அதை தற்போது புதிதாக வழங்குவது போல் படம் காட்டப்படுகிறது.

புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமல் இருக்கின்ற வேலைகளுக்கும் உலைவைக்கப்படுகிறது. இத்துணை ஆயிரம் கோடி கடன் பெற்றும் தமிழகத்தில் அரசின் சார்பில் எந்தவித புதிய தொழிற்சாலைகளும் துவக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, தனியார் மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கோடி கோடியாய் சலுகைகள் வழங்கப்படுகிறது. காரணம் கேட்டால் தமிழக தொழிற்துறை வளர்ச்சிய டைவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த தொழிற்சாலைகளில் எந்தவித சமூக பாதுகாப்புமில்லை. மற்றொருபுறம் கிராமப்புற மக்கள் வாழ்க்கை சொல்லொண்ணா துயரை அடைந்தாலும் அவர்கள் ஒரு சிறப்பான ஆட்சியின் கீழ் இருப்பதாக நம்பவைக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் தினமும் செய்தித்தாள்களை படிப்பவர்கள் ஆச்சரியம் அடையாமல் இருக்க முடியாது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர் பெருமக்களும், ஆளும் கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசும் பேச்சுக்கள் அதிசயமாய்தான் இருக்கிறது. உலகிலேயே எவ்வித பிரச்சனைகளும் இல்லாத சொர்க்க பூமியாய் தமிழகம் திகழ்கிறது என்ற பிரம்மையை உருவாக்குகின்றனர். அவர்களது ஆதரவு ஊடகங்கள் முழுமூச்சுடன் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன.

ஒரு ரூபாய் அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 21 லட்சம் வீடுகளுக்கான அறிவிப்பு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுத்ததாக அறிவிப்பு, மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள், சமச்சீர் கல்வி, இலவச பட்டா, இரண்டு ஏக்கர் நிலம், கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச 108 ஆம்புலன்ஸ் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல சலுகைகள்என பட்டியல் நீளுகிறது. இவையெல்லாம் வருகின்ற தேர்தலை கவனத்தில் கொண்ட அறிவிப்புகள் என்பது யாருக்கும் புரியாமல் இல்லை.

தமிழக அரசுக்கு உள்ள 80 ஆயிரம் கோடிக்கு மேலான கடன் எப்படி அடைக்கப்படும் என்பது ஆட்சியாளர்களுக்கு மட்டும் சம்பந்தபட்ட கேள்வி அல்ல. நிச்சயம் அது மக்கள் தலையில் தான் கட்டப்பட இருக்கிறது. ஆனால் இப்போது அல்ல, அதற்கு வருகின்ற தேர்தல் வரை காலம் இருக்கிறது. வருகின்ற தேர்தல் முடிந்த பிறகு இந்த கடனுக்கு வட்டியும் முதலும் சேர்த்து பொதுமக்களிடம் வசூல் செய்யாமல் அரசு விடாது. தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு தப்பிக்க முயல்வதைவிட வரும் முன் காப்பதுதான் அறிவுடைய செயலாகும். இன்று கிடைக்கும் இலவசங்களில் மகிழ்ந்து கிடந்தால் நாளை உள்ளதும் பறிபோகும் நிலை உருவாகும். எனவே இருப்பதை காக்க, இழந்ததை மீட்க போராட வேண்டியது தமிழக மக்கள் முன் உள்ள கடமையாய் நிற்கிறது.

- இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு 

Pin It