அதாவதுங்க நம் ஊர்ல அரசியலு எப்பவுமே இந்த சினிமா மாதிரிதாங்க, மசாலா கொஞ்சம், சென்டிமென்டு கொஞ்சம் (உபயம்: வைகோ), சண்டை கொஞ்சம், சிரிப்பு கொஞ்சம்னு நம்ம விஜய், ரஜினி படம் மாதிரி விட்டா 200 நாள் நிக்காம ஓடுற கண்டிசனுல இருக்குது. இநத வருசமும் அதுக்கு கொறவு இல்லாம ஊரே களை கட்டுது. கதாநாயகர்களோ கதநாயகிகளோ பபூன் காமிக்கோ ஒரே கூத்துதான் போங்க !
சரி இன்னையில இருந்து இந்த திருவிழாவில என்ன கூத்துதான் நடக்குதுன்னு பார்க்கலாம்னு முடிவு பண்ணி காலைல 3 ரூவா சாம்புக்கு பதில 2 ரூவா சாம்பூ வாங்கிட்டு மீதி 1 ரூவாய்க்கு 1ரூவா பேப்பர் (எங்க ஊரு பக்கம் இப்ப தினகரனின் பெயர் 1 ரூவா பேப்பர்) வாங்கிட்டு வரும்போது சுன.பன.வைப் பார்த்தேன். "என்னடா புதுசா தமிழ் பேப்பர வாங்கிட்டு அலையற அப்படின்னான். சும்மாதாம்ப தேர்தல்வருதுல. சரி ஒரு மாசத்துக்கு வாங்கிப் பாப்பமினுதான்ணேன். "அப்ப முடிவு பண்ணிட்ட சூரியனுக்கு குத்தறதுனு" என்றான். என்னடா சொல்லுறன்னு கேட்டேன். சிரிச்சுக்கிட்டே போயிட்டான். நம்ம ஊரு அரசியல்வாதிகள்ளேயே வைகோ கொஞ்சம் வித்தியாசமானவர் மாதிரி ரொம்ப வருசத்துக்கு முன்னாடி தெரிஞ்சாரு.
மாநாடுகள்ல அவர் மேடைக்கு வாரதும், தமிழ்நாடு முழுக்க இருக்கிற 368 ஒன்றிய செயலாளர்களையும் 150 நிர்வாகிகளையும் எடுத்த எடுப்புல மைக்குல பேச ஆரம்பிச்சவுடனே ஒருத்தர விடாம அவர்களே, இவர்களேன்னு சொன்னா நமக்கே தல சுத்தும், உர மூட்டைக்கு காசு கொடுத்தோமே அதுல நூறு ருவா சேர்த்து கொடுத்தமாதிரி இருக்கேன்னு வீட்டுக்கு வார வரைக்கும் கணக்கு பார்க்குற என்னை மாதிரி ஆளுக்கெல்லாம் இதுலாம் என்னமோ ஜாலக்கு வித்த மாதிரி தெரியும். அப்படியே ஒலக வரலாறுல இருந்து உள்ளுர் தகராறு வரைக்கும் பொளந்துகட்டுவாரு. இந்திரா காந்திய கேள்வியாக்கேட்டு கொடஞ்சது, ராசீவ்காந்திய இங்குலிசுலேயே ராவுனதுன்னு பட்டைய கெளப்புவாரு. கூட்டம் முடிஞ்சி வரும்போது ஓல்டுமங்கு கோட்டர ராவா (யாராவது இழுத்துப் பார்த்திருக்கீர்களா) இழுத்த மாதிரி இருக்கும். ஒழுங்க இருந்த மனுசன ஒரு நா கலைஞரு கச்சிய விட்டு விரட்டிடாருனாய்ங்க. அடப்பாவமே இப்படியெல்லாம் பண்ணலாமா? கச்சி- கச்சி தானே கெடந்தான் அந்த மனுசன்னு கவலப்பட்டேன். சரி அதுலாம் பழய கத. அது நடந்தும் ஆயிடுச்சி 13 வருசம். இப்ப பேப்பரப் பாத்தா இவரு அந்தம்மா பக்கம் இருந்துகிட்டு பழைய மாதிரியே "ரிட்டையரான ராஜபார்ட்டு" போல ஜங்கு ஜங்குனு குதிக்கிறாரு.
"என்னை சன் டீவில காட்டல, முரசொலி மாறன் குடும்பம் கொள்ளையடிக்குது, என்னை பெயிலில் வரவச்சசுது ஒரு அரசியல் சதி. நான் சிறையில் நல்லாத்தான் இருந்தேன்" என்னாடா இந்த மனுசன் இப்படி ஆகிப் போய்ட்டாரேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்பதான், எங்க ஊருக்கு பிரச்சாரத்திற்கு வந்தாரு. சரி சினிமாக்கு போயியும் ரொம்ப நாளாச்சே, வைகோ மீட்டிங்காவது பார்க்கப்போகலாம்னு போனா, அடக்கழுத ஒரு வாரம் ஊர் முழுக்க புலம்புனததாம்பா இப்பவும் புலம்புறாரு. முந்தீ கச்சியை விட்டு துரத்துனபோது நீதி கேட்கிறேன்னு சொல்லி ஊர் ஊராய் வந்தாரு. நாங்களாம் அப்போ அவரு பக்கம் தான். அப்பவும் இப்படித்தான் பேசுவாரு அப்போ சொல்லுவாரு "மகாபாரதத்திலே மாமன் சகுனி ,கோபாலபுரத்திலே மருமகன் சகுனின்னு". நல்லா இருக்கும் பேச்சு அப்போ, வெள்ளோட்டுச்சாராயத்தை சுடச்சுட குடிச்ச மாதிரி. அதல்லான் ஒரு காலம்.
அப்புறோம் ஒரு நா எந்த மாறன "சகுனி சண்டாளப்பாவி"ன்னு திட்டினாரோ அந்த மாறன் செத்தன்னைக்கு டீவில பார்த்தா உடம்பங்காளி சின்னவயசுலெயே பிள்ளை குட்டியேல்லாம் விட்டிட்டு திடீருனு செத்த மாதிரி எழவுவீடே பொணத்த கவனிக்கறத விட்டிட்டு இவரா தூக்கிற மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனாரு. இப்ப பழைய படி "தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா" ன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு. இப்படியே பேசிட்டே போயி கடைசில சொல்லுவாரு பாருங்க. நான் சூரியன் FM க்கு போன் பண்ணி எம்ஜிஆர் பாட்டு கேட்டேன் அவுங்க போடல. இது எனக்கு எதிரான சதின்னு......... . இதுல இன்னோரு புதிய புத்தர் சரத்குமார், அது ஒரு தனிக்கத, அவரு ஏன் விலகனேன்னு சொல்லுற காரணத்தக் கேட்ட எவனும் வாய்ல சிரிக்கமாட்டான், மெர்க்கன்டைல் பேங்கு பிரச்சினைல அவரு சரியா நடந்துக்கல, ராதிகாவுக்கு பாதுகாப்புபில்லைனு விடுராருப்பா ரீலு.
நீங்களே சொல்லுங்க நம்ம நெலம சிரிக்கிறதா அழுவுறதா. ராதிகாவுக்கு பாதுகாப்பிலைங்கற மேட்டருக்காவே ஒரு நாள் லாட்ஜ்ல ரூம் போட்டு சிரிக்கணும், இது போக அந்த பேங்கு பிரச்சினை முடிஞ்சி 5 வருசமாக போகுது இப்ப சொல்லுறாருப்பா, அதுல எனக்கு மனவருத்தம்னு. ஏப்பா வுட்டா கலைஞரு சின்னப்புள்ளையா இருக்கும்போது செஞ்ச தப்பகூட காரணம் சொல்லுவீங்க போல. ரெண்டு பேரும் உக்காந்து யோசிச்சிருக்காய்ங்க போல........................ காரணத்த.
இது கெடக்க, முந்தாநா சாயங்காலமா காந்தி மார்க்கட்டு பக்கம் போயிருந்தேன், தக்காளில்லாம் இப்போ நல்ல வெலைக்கு போகுது சரி கமிசங்கடையில காச வாங்கிட்டு வரலாம்னு கெளம்பனேன். எம்பொண்டாட்டி பஸ்டாப்புக்கே வந்து "காச வாங்கீட்டு ஒழுங்க வீட்டுக்கு வந்து சேரு. எவய்ன் கூடவாவது சுத்துனேனு தெரிஞ்சுச்சு அவனுக்கும் வெளக்கமாத்து அடிதான்". அம்பா சொல்லிட்டு போனா. தெக்கதானே போற நானு வாரேன்னு எங்கூட நிண்டுக்கிட்டிருந்த பெருமாளு இதக்கேட்டதும் எதித்த பஸ்ஸ்டாப்புக்கு போயி வந்த வண்டில ஏறி வடக்க போயிட்டான். சும்மாயிர்ந்தத ஏதோ செஞ்சு கெடுத்த கணக்க இவ வேற ஞாபகப் படுத்துறாளென்னு நொந்து போயி பஸ் ஏறுனேன். அங்க போயி எறங்கனா எம் மகனும் அவன் கூட ஒரு நாலு பயலுகளும் காசு வாங்க நிக்கிறாய்ங்க. எப்போய் அம்மா தாம்பா காச என்னைய வாங்கிட்டு வர சொல்லுச்சு நாந்தான் வாங்கீட்டு போவேனு கடக்காரய்ன் முன்னாடியே நம்மள கேவலப்படுத்துராய்ங்க. செரிடா இருந்து வாங்கீட்டு போன்னு சொல்லிட்டு அவய்ன் கிட்டேயே 100 கடனா வாங்கீட்டு, டீ குடிக்கலாம்னு போனேன் - கொரங்க நெனச்சுகிட்டு மருந்த குடிக்காதங்கற கதையா நூற வாங்குனொனே காலு நேரா முனியான்டி மெடிக்கலுக்கு (டாஸ்மார்க்) தாம்பா போவேங்குது. அங்கெ போயிதான் ஆரம்பிச்சது பாரு ஒரு இசும -
எப்பா இந்த கருமத்த எப்படிப்பா குடிக்கறாய்ங்க! சை, ஒரு கட்டிங்க போடுருதக்கே கால் கிலோ மிச்சர திங்கணும்போல, கருணாநிதி சொல்லுறது நாயந்தான்யா. இந்த பொம்பள நமக்கு புடிச்ச அயிட்டத்த பூரா நிப்பாட்டிட்டு அது சரக்கா அனுப்புதுய்யா. ஊரு பூர தேடுனாலும் ஓல்டு மங்கு கிடைக்கிறதுல்ல, எவய்ன்ட போ பவரு ,கேப்புடனு தான் இருக்குங்குறான். அத வாங்கி குடிக்கறதுக்கு குருனை மருந்த குடிச்சிட்டு படுத்தரலாம் ஒரேடியா போயிரலாம். செரி வேர வழி, சாராயத்த குடிச்சா எட்டுரூக்கு முன்னாடி வரும்போதே வாசன வீட்டுல போயி நிக்குது. கண்ட எழவ குடிச்சு கண்னு காது போயி தடவியீட்டு திரியப்போறன்னு அப்பப்ப திகில கெளப்புரா ஏய்ன் பொண்டாட்டி. அட அந்த இசும என்னானு சொல்ல மறந்துட்டேன் பாத்திங்களா.
அன்னைக்கி பாருக்குள்ள போனேனா மொத ரவுண்ட போட்டுட்டு நிமுந்து பாக்கறேன் எதுத்த டேபிளுல முருகனும், சீனியும் வந்து உக்காராய்ங்க, அப்பவே அடிவவுத்த கலக்குச்சு. எங்கிட்டோ போற மாரியாத்த எம்மேல வந்து ஏறாத்தாங்குர மாதிரி நம்ம எந்த கடைக்கு போனாலும் மை வைச்சு விட்ட மாதிரி பின்னாடியே திரியிராய்ங்கப்பான்னு நெனச்சேன். இவங்க கத உலக கத, மொத்தமே டவுனுல இவங்க கூட்டாளிக 10 பேர தாண்டுனா அதிகம். ஆனா அவிய்ங்க அடிகிற கூத்திருக்கே ஒவ்வொருத்தனும் தன்னை பின்னவினத்துவவாதிய்ம்பாய்ங்க. ராத்திரில பிள்ளையாரு கோயிலுமேல மொன்டு வைக்கிறது, ஜிப்பு போடாம பிரண்டு கல்யாணத்துக்கு போயி அதிர்ச்சிய கொடுக்குறதுனு இவய்ங்க அட்டகாசம் தாங்காது. அவைங்க போதைல இருக்குறப்ப சிக்குனோம் செத்தோம். நம்மல ஒன்னுன் செய்யமாட்டாய்ங்க. ஆனா வேற எவனாவது மாட்டுனா அவெ அன்னைக்கு பார்த்திபன்ட மாட்டுன வடிவேலு கததான்.
அதிலேயும் இந்த கம்னுஸ்டு கச்சிக்காரனுங்க சிக்கினா அன்னைக்கு ராத்திரி அவன் தென்னமர மாத்திரைய திங்க வேண்டியதுதான். "தோழர் எங்க நிலைப்பாடு என்னனா" அப்படின்னு எவனாச்சும் கேனத்தனமா மாட்டினா அவ்வளவுதான். "லெனினை உடுங்க, மார்க்ஸ் மருமகன் ஒரு புத்தகம் எழுதிருக்காரு தெரியுமா? பெயரு - உழைப்பை ஒழிப்போம் அத படிங்க தோழர்" அப்படின்னு அந்த புத்தகத்த கையில கொடுத்தனுப்பிட்டு குண்டிக்கு பின்னாடி கொல்லுன்னு சிரிப்பாய்ங்க. அடுத்த வாரம் அந்த "தோழர்" இவய்ங்களோட பாருல உக்காந்து "தத்துவங்கள் செத்துவிட்டன" அப்படினு புலம்பிகிட்டு இருப்பாரு, இன்னைக்கும் எங்க ஊரு கம்னுஸ்டு கச்சில உள்ளவய்ங்க இவிங்க கூட நின்னு பேசினாக்கூட பேசுனவனை ஒரு மணிநெரம் வெசாரிச்சு இனிமே அவ்ங்க கூடசேரக்கூடாதுன்னு சொல்லி அனுப்புவாய்ங்க. நா கெடந்து சிரிச்சுக்கிறது. வக்காலி வர வர இவங்களுக்கு மொத எதிரி அமெரிக்காகாரன் கெடையாது போல இவனுங்கதான்னு. ஆனா இவங்களும் அப்படித்தான் பண்ணுறாய்ங்க பாருங்க.
போன மாசம் கம்மினுஸ்டு கச்சி கக்கூஸ்ல "தோழர்களே ஜாமயுங்கள் - ஜபர்ஜஸ்து ஜிங்காரோ பீர்" இந்த வெளம்பர ஸ்டிக்கர போயி ஒட்டிட்டு வந்துட்டாய்ங்க. செத்தவேன் ******* சொமந்தவேன் தலையிலங்கற கதையா அவய்ங்க கணேசன கூப்பிட்டு லெப்டு, ரைட்டு மன்னிச்சுக்கோங்க லெப்டு- லெப்டு வாங்கிட்டாய்ங்க. (கணேசன் புரட்சி வரும்னு இன்னமும் நம்புற விளிம்பு*) அடச்சை, என்னவோ சொல்ல வந்திட்டு எங்கையோ போயிட்டுருக்கேன் பாருங்க. அப்புறம் என்னாச்சுனா, முருகேன் என்னைய பாத்துபுட்டு என்னப்ப ரொம்ப நாளா ஆள காணோம்னான். நா எங்கப்ப போப்போறேன் இங்கிட்டுதான் திரியுறேனு சொன்னேன். அப்பறொம் அவிய்ங்களுக்குள்ளையே பேசி கெக்கெ பிக்கேன்னு சிரிச்சுக்கிருந்தாய்ங்களா, நானு வாயிருக்க மாட்டாமெ ஏப்ப என்னான்னு சொல்லு நானும் சிரிப்போமுல்ல அப்படினேன் அப்பதாய்ன்யா சொன்னான் ஒரு ஜோக்க, அவன் பிரண்டு ஒருத்தேன் ஒரு தோழர்கூட வழக்கம்போல பேசிக்கிருந்திருக்கான். தோழர் வழக்கமான தயிர்சாத தோழர் இல்ல அவுரு மொளக பஜ்ஜி (மார்க்சிய லெனிஸ்டு) தோழர். இவேன் பேசப் பேச கடுப்பாகி அவுரு சொல்லிருக்காரு புரட்சி வந்தா மொதல்ல உங்களத்தான் கழுவுல ஏத்துவோம்னு அதுக்கு அவய்ன் சொன்னானாம். புரட்சி வராது அப்படியே வந்தாலும் நான் அண்ணா திமுகவுக்கு போயிருவேன், அப்பவும் அந்த கட்சியிருக்கும்னு. எனக்கு சிரிச்சு பொற ஏறிக்கிச்சு உங்களுக்கு.........
- வரவனையான்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சூரியன் FM நேயர் விருப்பமும் - பின்நவீனத்துவ கிண்டல்களும் !!!!!
- விவரங்கள்
- வரவனையான்
- பிரிவு: கட்டுரைகள்