பூமியின் இறுதிப் பயணம்?

டக் டக் டக்

யாரது?

நான் ஒரு வெடிகுண்டு

வெடிகுண்டு என்றால்?

அனைத்தையும் அழிப்பவன்

எந்த வகையில் நீ அழிப்பாய்?

சாதாரணமானது என்றால் இலக்கைத் தாக்கும் அல்லது உயிரியல் ஆயுதமென்றால் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும் அல்லது அணுஆயுதம் என்றாலோ உலகிலுள்ள அனைத்தையும் புல், பூண்டுகூட மிச்சமில்லாமல் எக்காலத்துக்கும் எதுவும் உயிர்த்திருக்க முடியாமல் முற்றிலும் அழிப்பவன் எவனோ அவனே நான், என் பெயர் அணுகுண்டு.

 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் விண்வெளியில் ஓர் அழகான கப்பல் அமைதியாக சுற்றி வந்து கொண்டிருந்தது சூரியனை.  அது நமது பூமி, நிலவை விடவும் நமக்கெல்லாம் பிடித்தமான பூமி. இந்த மென்மையான கப்பல் ஒரு மணி நேரத்துக்கு நூற்றி அறுபது ஆயிரம் கி.மீ. பயணம் செய்கிறது. 

விண்வெளியில் இதுபோன்ற எண்ணற்ற கப்பல்கள் நீந்திக் கொண்டுள்ளன. ஆனால் அவை எல்லாவற்றையும்விட நமது பூமி தனித்துவம் கொண்டதாயிற்றே ஏனென்றால், வேறு எந்தக் கப்பலிலும் படபடவென்று இதயம் துடிதுடித்துக் கொண்டிருக்கும் உயிர் இல்லை. பயணிகளைச் சுமந்த ஒரே கப்பல் நமது பூமி மட்டுமே.

 நான்கு லட்சம் வேறுபட்ட உயிரினங்கள் இந்த பூமியை தங்கள் தாய்வீடாகக் கொண்டுள்ளன. ஒரு காலத்தில் தளதளவென்று கொதித்துக் கொண்டிருந்த பந்தாக இருந்தது இந்த பூமி பிறகு கொஞ்சம் கொஞ்சமாகவே குளிர்ந்தது.

 முதல் பயணி வருவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்தன. கடலில்தான் முதல் உயிர் தோன்றியது. அது ஒற்றை செல் கொண்ட நுண்ணிய உயிர். காலங்கள் செல்லச்செல்ல அந்த உயிர் புதிய உருவங்களையும் வடிவங்களையும் அடைந்தது. புதியபுதிய பயணிகள் பூமிக்கு வந்து கொண்டே இருந்தார்கள். இந்தப் பயணிகளில் கடைசியாக வந்தவர்கள் மனிதர்களான நாம்தான். 

இந்தக் கப்பலின் ஆயுள், அதாவது பூமியின் ஆயுளை ஓராண்டு என்று வைத்து கணக்கிட்டால் மனித இனம் 48 நிமிடங்களுக்கு முன்னர்தான் தோன்றியது. நமது அனைத்து நாகரிகங்கள், அறிவியல், கலைகள், வரலாறு எல்லாமே வெறும் இருபத்தியெட்டு விநாடிகளுக்கு முன்னர் தோன்றியவை.  இந்த 28 விநாடிகளில் நமது மனித இனம் பூமியை கொழிக்க வைத்திருப்பது மட்டுமின்றி, மேலும்மேலும் அழகாக்கியுள்ளது. நாம் பல மலைகளின் உச்சியைத் தொட்டுள்ளோம். அதேபோல ஆழ்கடலின் மர்மங்களை ஆராய்ந்துள்ளோம். நதிகளின் பாதையைத் திருப்பியுள்ளோம். இருளுக்கு ஒளி பாய்ச்சியுள்ளோம். பாலைவனங்களை பசுமையாக்கி, நெல் அறுவடை செய்துள்ளோம். 

ஆனால் நம்மில் சிலர், அழிவை உற்பத்தி செய்பவர்களாகவும் இருந்துவிட்டார்கள். அவர்களால்தான், அழகு கொஞ்சும் பூமியின் பயணத்தில் கடைசியாக வந்து ஒட்டிக் கொண்ட பயணியான மனிதஇனம், இந்தக் கப்பலின் இருப்புக்கே தற்போது உலை வைப்பவராக மாறிவிட்டது. 

கடந்த 40 ஆண்டுகளில், பூமியின் ஆயுளுடன் ஒப்பிடும்போது விரலைச் சொடுக்கும் ஒரு கணமாகக்கூட கருதமுடியாத இந்த காலப் பகுதியில் நாம் அணுகுண்டுகளை விதைத்துள்ளோம். ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரக்கணக்கில். இந்த பூமியை ஒரு முறையல்ல, இரண்டு முறையல்ல, ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை அழிக்கப் போதுமானவை இவை. 

நாம் கடைந்தெடுத்த முட்டாள்கள் ஆகிவிட்டோமா? மண்ணில் கொட்டிய கடுகை அள்ள முடியுமா? ஒரு முறை அழித்த பூமியைத் தான் மறுமுறை அழிக்க முடியுமா? 

பயங்கரத்தின் சில துளிகள்

1945ஆம் ஆண்டு 

இரண்டாம் உலகப் போரின் போர் மேகங்கள் மெதுவாக மறைவதற்கான சுவடுகள் தெரிய ஆரம்பித்தன. அச்சுறுத்தலுக்கு உள்ளாகி பயத்தில் உறைந்து கிடந்த, மக்கள் அமைதியின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடந்தனர். ஆனால், அப்போது எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாமல், ஜப்பானின் இரண்டு அழகிய நகரங்கள் அழிவின் கொடூரக் கரங்களால் கொள்ளையடிக்கப்பட்டன. 

1945 ஆகஸ்ட் 6ந் தேதி ஹிரோஷிமா, ஓஹட்டா நதியின் கரையில் அமைந்திருந்த ஓர் அழகிய நகரம் நிர்மலமான, அமைதியான காலையை எதிர்நோக்கி அந்த நகரம் விழித்தெழுந்தது. ஆனால் அதேநேரம் இலக்கை சரியாகக் குறி பார்ப்பதில் ஓர் விமானிக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை.

திடீரென்று, உலகம் குலுங்கியது

அய்யோ... 

1945, ஆகஸ்ட் 9ந் தேதி பூமி மீண்டும் ஒரு முறை உலுக்கியெடுக்கப்பட்டது இந்த முறை நாகசாகியில், அதே ஜப்பானில். 

இந்த இரண்டு நகரங்களையும் அழித்த குண்டுகளின் பெயர் சின்னப் பையன், குண்டு மனிதன். சின்னப் பையனின் சக்தி 12.5 கிலோ டன் டி.என்.டிக்குச் சமம். குண்டு மனிதனின் சக்தி 22 கிலோ டன் டி.என்.டிக்குச் சமம். 

சின்னப் பையன்

பூமியில் இருந்து 1850 மீட்டர் மேலேயே வெடிக்கச் செய்யப்பட்டது. அது பெரும் நெருப்புப் பந்தை உருவாக்கியது.  

அந்த அக்னிப் பந்தின் மையத்தில் இருந்த வெப்பநிலை 1 கோடி டிகிரி செல்சியஸ். அந்த அக்னிப் பந்து பூமியைத் தொட்டபோது அதன் வெப்பநிலை 4,000 டிகிரி செல்சியஸாக குறைந்திருந்தது. 

100 டிகிரி செல்சியஸிலேயே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். கொதிக்கும் நீரை நம் உடல் மீது கொட்டினால் என்ன நடக்கும்? அது நமக்குத் தெரியும்.1,400 டிகிரி செல்சியஸில் இரும்பு உருகி குழம்பாக ஓடும். 3,200 டிகிரி செல்சியஸில் டங்க்ஸ்டன் உருகும். இந்த இரண்டு நகரங்களின் வெப்பநிலை கண் இமைப்பதற்குள் 4000 டிகிரி செல்சியஸ் உயர்ந்தபோது என்னவாகியிருக்கும். சற்று கற்பனை செய்து பார்ப்போம்.

 இந்த குண்டு வெடிப்பின் மையத்திலிருந்து 13 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்த 92 சதவீத கட்டடங்கள் அழிந்து உருத்தெரியாமல் போயின. வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் - எல்லாவற்றையுமே தீயின் நாக்கு தீண்டி எல்லாவற்றையும் சாம்பலாக்கிச் சரித்திருந்தது.

சுடுகாடாக மாறிய அந்த இரண்டு நகரங்களுக்குள் மூன்று நாட்களுக்கு யாரும் காலைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை. மருந்து, உணவு, மருத்துவர்கள் - எதுவுமில்லை.

 இந்த நிகழ்வைப் பற்றி சில ஒளிப்படங்கள் உள்ளன. ஆனால் அவை நம்மை அதிர்ச்சியடைய வைக்கக் கூடியவை. 

இரவு முழுவதும் ஊரை ரோந்து சுற்றிவிட்டு காவல் நிலையத்துக்குள் நுழைந்தார் ஒரு காவலர். கண்இமைப்பதைவிடவும் குறைவான நேரமே ஆகியிருக்கும் எல்லாமே மாயமாய் மறைந்தன. எஞ்சியிருந்தது எல்லாமே வெறும் தீயின் நிழல்கள் மட்டுமே. ஒரு காவலரின் நிழல், அவருக்கு அருகே சுவரில் சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த ஏணியின் நிழல்... இவை மட்டும்தான் எஞ்சியிருந்தன.

 இந்த குண்டுவெடிப்பின் மையப்பகுதியில் இருந்து தொலைவாக விலகியிருந்தவர்களில் சிலர் மட்டுமே பிழைத்தார்கள். அவர்கள் ஹிபாகுஷா என்று அழைக்கப்படுகின்றனர். அந்த கொடூர நாளில், என்னவெல்லாம் நேர்ந்தது என்பதை எந்த வகையிலும் நம்ப முடியாத அந்த பயங்கரத்தின் சில துளிகளை அவர்கள் ஓவியங்களாக வடித்திருக்கிறார்கள். 

தகிக்கும் வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒஹாட்டா நதியில் கூட்டங்கூட்டமாக மக்கள் குதித்தனர். ஆனால் ஏற்கனவே தண்ணீர் தளதளவென கொதித்துக் கொண்டிருந்தது. அவர்கள் தப்புவதற்கு எந்த ஒரு வழியும் எஞ்சியிருக்கவில்லை. அவ்வளவு காலம் தண்ணீரைச் சுமந்து வந்த ஒஹாட்டா மரண நதியாக சடலங்களைச் சுமந்து கிடந்தது. 

தன் மாணவர்களை வெளியே அழைத்து வந்த ஒரு ஆசிரியை அவரவர் பெயரைச் சொல்லி சப்தமாகக் கத்தும்படி கூறிக் கொண்டிருந்தாள் ஏனென்றால், இந்த நிலையில் உங்கள் பெற்றோரால்கூட உங்களை அடையாளம் காண முடியாது என்று அவள் கூறினாள். அவள், அவர்களுக்குச் சொல்லித் தந்த கடைசி பாடம் இது.

 ஹிரோஷிமாவில் குண்டுவெடித்த இடத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு தாய் தன் குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய விறகைத் தேடிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு கடைசி வரை ஒன்றும் கிடைக்கவேயில்லை. எல்லாம்தான் சாம்பலாகி குவிந்திருந்தனவே.

 ஒரு குழந்தை வானில் பறக்கும் விமானத்தைப் பார்த்து ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் குதூகலித்தது. அது ஒரு மரண வாகனம் என்று அதற்குத் தெரியாது. சரேலென்று வந்தது மரணம், மிஞ்சியது வெறும் சாம்பல். 

இந்த பயங்கரம், அழிவுக்கு மத்தியிலும் மனிதநேயம் மெலிதாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. உதவியை எதிர்நோக்கி இருந்தவர்களே மற்றவர்களுக்கு தங்களால் இயன்றதைச் செய்து கொண்டிருந்தார்கள். அதுதானே மனிதப் பண்பு.

 ஹிரோஷிமா நாகசாகியை அழிக்க வேண்டியது அவசியந்தானா? முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ருமேன் எழுதினார். 

போர் என்றைக்கோ முடிந்துவிட்டது. ஆனால் போரின் இறுதியில் எங்கள் அதிகாரத்தை நிலைநாட்டத்தான் அணுகுண்டை வீசினோம்.

இந்தச் செயல்பாட்டின் பலன் - 3.4 லட்சம் மனிதர்களின் உயிர் பறிக்கப்பட்டது. அதேநேரம் ஹிரோஷிமா, நாகசாகியில் வெடிக்கப்பட்ட அணுகுண்டுகளை பார்க்கும்போது இப்போது நாம் வைத்திருக்கும் அணுகுண்டுகளின் அளவைப் பார்த்தால், அவை வெறும் பட்டாசுகள் போல சாதாரணமாகத் தெரிகின்றன. 

பெரும் அழிவை ஏற்படுத்தும் பல மெகா டன் அளவும் பல மடங்கு டி.என்.டி சக்தியும் கொண்ட அணுகுண்டுகள் பலப்பல இடங்களில் இருக்கின்றன. 

டி.என்.டி என்றால் என்ன? 

டி.என்.டி என்பது டிரை நைட்ரோ டொலூவின். ஒரு வெடிபொருள். அனைத்து வெடிகுண்டுகளின் அழிவு சக்தியையும் அளக்க ஒரு கிராம் டி.என்.டி அடிப்படை அலகாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு மெகா டன் டி.என்.டிக்கு இணையான வெடிகுண்டு மருந்தை ஒரு ரயிலில் வைத்தோம் என்றால், அந்த ரயில் 400 கி.மீ. அளவு நீண்டிருக்கும்.

ஆனால் அணுக்கரு பிளவு, அணுக்கரு இணைவு ஆகிய செயல்பாடுகளின் காரணமாக பல லட்சம் மடங்கு சக்தி கொண்ட டி.என்.டியை ஒரு சிறிய வெடிகுண்டுக்குள் அடைத்துவிட முடிகிறது.  

பூமி - விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த அழகான, அமைதியான கப்பல் இன்றைக்கு வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போல அணுகுண்டுகளை கட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது 20,000 மெகா டன் அளவு டி.என்.டியை இந்த எடையை நாம் ஒவ்வொருவரும் தாங்கிக் கொள்ள நேர்ந்தால் நம் ஒவ்வொருவர் தலையிலும் 4 டன் டி.என்.டி விழும். 

1945ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக மக்கள்தொகை இரட்டிப்பாகிவிட்டது. ஆனால் அணுஆயுதங்கள் அதிகரித்த அளவு என்ன தெரியுமா? 50,000 மடங்குக்கு மேல்

 துப்பாக்கி ரவை மருந்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கண்டறியப்பட்டது. அதேநேரம் இன்றைக்கு ஏதாவது ஒன்றிரண்டு அணுகுண்டுகள் வெடிக்கின்றன என்று வைத்துக் கொண்டால் அவை வெளிப்படுத்தும் சக்தி எவ்வளவு இருக்கும் தெரியுமா?

கடந்த 600 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட அத்தனை வெடிபொருள்களின் சக்தியை சேர்த்தாலும்கூட அதற்கு இந்த ஒன்றிரண்டு அணுகுண்டுகள் ஈடாகாது.

 இது எல்லாமே நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் கடந்த 50 ஆண்டுகளில் நாம் அனைவரும் சுயஅழிப்பை நோக்கி மேலும்மேலும் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 

உலகின் முதல் உயிர்தோன்றிய தாயகமான கடல் இன்றைக்கு இறப்பின் விளைநிலமாக இருக்கிறது. இந்த ஆயுத முட்டாள்தனத்தை விண்வெளிக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சி தொடங்கிவிட்டது. விண்வெளியில் ஆய்வகங்கள் வந்துவிட்டன. லேசர் துப்பாக்கிகளும்கூட பொருத்தப்பட்டுவிட்டன. இவை அனைத்துமே கணினிகளால் கண்காணிக்கப்பட்டு, அவற்றாலேயே கட்டுப்படுத்தவும் படுகின்றன.

எல்லாமே விலைமதிப்புமிக்க கணினிகள். ஆனால் கணினிகள் தவறு செய்யக் கூடியவை, செய்துகொண்டும் இருக்கின்றன. ஒரு நாட்டின் எல்லையைக் கடந்த பறவைக் கூட்டத்தை ஏவுகணைகளின் வீச்சு என்று தவறாகக் கணித்த கணினிகளும்கூட உண்டு. இதன் காரணமாக அண்டை நாட்டின் மீது தானியங்கியாக பதிலடி கொடுக்க எல்லாம் தயார் செய்யப்பட்டது. 

கணினிகள் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடியவைதான் என்பதை அறிவியலாளர்கள் ஏற்கின்றனர். கணினி அமைப்புகள் தோல்வியடையவும்கூடும். ஆனால் இதுபோன்ற தோல்விகள் ஏற்படுத்தும் விளைவுகள் என்பவை சிறிய தவறுகள் ஏற்படுத்தும் பின்விளைவுகளைவிட பெரிதும் பயங்கரமானவை. அதேபோல கணினிகளால் கட்டுப்படுத்தப்படும் அணுகுண்டுகள் தவறான வகையில் வீசப்பட்டுவிட்டால், வெடித்துவிட்டால் என்ன நடக்கும்? யோசித்திருக்கிறோமா? 

எல்லாமே வெடித்துச் சிதறும். வானத்தை அடர்மேகக் கூட்டம் திரையாய் இழுத்து மூடும். அந்த மேகம் ஒரு காளாண் வடிவத்தைப் பெறும் மேகக் கூட்டம் வானத்தில் 24 கி.மீ. தொலைவுக்கு மேலெழும். அதாவது எவரெஸ்ட் சிகரத்தைப் போல் மூன்று மடங்கு உயரத்துக்கு இந்த காளாண் மேகம் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்புவதற்காக பல நூறு கி.மீ. வேகம் கொண்ட காற்று அதிவேகமாக அந்த இடத்தை வந்தடையும். 

கடும் வெப்பத்தை உமிழும் இந்தப் புயலின் வழியில் எது குறுக்கிட்டாலும் அவை எல்லாமே கண்மூடித் திறப்பதற்குள் சாம்பலாகிவிடும். 

மெதுவாக, காற்றிலுள்ள கதிரியக்க மாசு குளிர்ந்து நிலத்தில் படிய ஆரம்பிக்கும் 

கதிரியக்கம் தண்ணீரை, மண்ணை, தாவரத்தை, மரத்தை நெரித்துக் கொல்லும்

தப்பிப் பிழைத்து எஞ்சியுள்ள மனிதர்களின் உடலில் புகுந்து அவர்களது முன்னோர் செய்த குற்றங்களுக்காக அடுத்து வரும் ஏழேழு கோடித் தலைமுறைகளையும் பழிவாங்கும்

ஆயுதங்களின் மீதான கண்மூடித்தனமான மோகத்தால் நாம் எதை இழந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?

உலகில் ஒவ்வொரு நாளும் செய்யப்படும் ராணுவச் செலவைக் கொண்டு மட்டும் பூமியில் இருந்து மலேரியா காய்ச்சலை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடலாம்.

ஒரு நவீன பீரங்கியை தயாரிக்கும் செலவில் 1,00,000 பேருக்கு எட்டு நாட்களுக்கு உணவு வழங்க முடியும்

ஒரு பீரங்கி உற்பத்தி செய்யும் செலவில் 30,000 குழந்தைகள் படிக்கக் கூடிய 500 பள்ளிகளை உருவாக்க முடியும்

ஒரு போர் விமானம் உற்பத்தி செய்யும் செலவில் 30,000 கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை நடத்த முடியும்

ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கட்டும் செலவில் 23 பரம ஏழையான வளரும் நாடுகளில் உள்ள 1,30,000 குழந்தைகளுக்கு கல்வி வழங்க முடியும்.

 உலகிலுள்ள 20 சதவீத விஞ்ஞானிகள் ஆயுத மேம்பாடு தொடர்பாகவே ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் மற்ற விஞ்ஞானிகள் இவர்களை எதிர்க்கவில்லை என்று அர்த்தமல்ல. அறிவியலை தவறான நோக்கங்களுக்கும், அழிவுக்கும் பயன்படுத்துவது கண்டனம் செய்யப்பட்டே வந்துள்ளது. மான்ஹாட்டன் திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள் உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கியபோது, அதை முதன்முறையாகப் பயன்படுத்துவதையும் அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். 

அப்பொழுது முதல் ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் சாபமான ஆயுதப் போட்டிக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்களை ஓங்கி ஒலித்து வருகின்றனர். அணுகுண்டுகளுக்கு பலியானவர்களுக்காக ஹிரோசிமாவில் கட்டப்பட்ட கல்லறை கல்வெட்டில் கீழ்க்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. 

எக்காலத்திலும் மீண்டும் செய்யக்கூடாத தவறுக்காக

இவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்கள்

 அவர்களுக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நாம் காப்பாற்றியுள்ளோமா?

இதைப் படிக்க உங்களுக்கு 20 நிமிடம் ஆகியிருக்கலாம். பூமி என்ற அழகிய கப்பல், இந்த நேரத்தில் சராசரியாக 35,000 கி.மீ. பயணித்திருக்கும் இந்தப் பயணம் காலாகாலத்துக்கும் தொடருமா? முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது. 

தமிழில் – ஆதி 

Pin It