அரசியல்வாதிகளுக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நீதிபதிகள் அவ்வப்போது நிரூபிப் பார்கள். அது விநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

ஒருவர் உங்களை “தோழர்” என்று குறிப்பிட்டிருந்தாலோ, அல்லது ஒரு கடிதத்தை நீங்கள் கொண்டு சென்று கொடுப்பதோ தேசத் துரோகம். அதற்கு நீங்கள் ஆயுள்காலமும் சிறையில் கழிக்க வேண்டும். ஆனால், ரூ. 1,76,0000000000 கோடியைச் சுருட்டிய அரசியல்வாதிகளிடமும் அதை பங்குபோட்டுக் கொண்டவர்களிடமும் சாவகாசமாக விசாரணைகள் நடைபெறும். அதேநேரம், அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழத் தககுதியற்ற நிலையிலுள்ள சாதாரண மக்களுக்கு மருத்துவ சேவை செய்வது குற்றம். அவர்களது உரிமைகள் பற்றி ஜனநாயகரீதியில் அகிம்சை முறையில் குரல் கொடுப்பது தேசத் துரோகம். இதுதான், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற அழைக்கப்படும் இந்தியத் திருநாட்டில் மக்களுக்கு வழங்கப்படும் நீதி.

பி.யு.சி.எல் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்ட சென் 2007ஆம் ஆண்டு தொடங்கி, எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாமல் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பல நேரம் ஏதோ கொலைக் குற்றவாளி போல தனிமைச்சிறையில் இடப்பட்டு, அவர் வதைக்கப்பட்டார். அவர் மீதான குற்றத்தை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று 2009ல் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு புதிய ஆதாரங்கள் ஏதும் இல்லாத சூழ்நிலையில் அவருக்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டுள்ளது. இடையில் காவல்துறை ஆதாரத்தை “தயார்” செய்து விட்டது. இதற்கெல்லாம் அவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும். மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவர் என்று கருதப்படும் நாராயண் சன்யால், பிஜீஷ் குகா ஆகியோருடன் தொடர்புபடுத்தி விநாயக் சென்னுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள், அவற்றுக்கு ஏவல் செய்யும் நீதித் துறையின் நோக்கம் எப்படியாவது விநாயக் சென்னை ஆயுள் காலமும் சிறையில் அடைத்துவிட வேண்டுமென்பதாகவே இருந்திருக்கிறது. மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளையும், வாழ்வதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தத் தவறிய இந்த அரசுகள், தனியார் பெருமுதலாளிகளுக்கு பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்காகவே மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு எதிராக, சல்வா ஜீடும் என்ற பயங்கரவாதப் படையை உருவாக்கின. சீருடையணிந்த காவல்துறை சட்டத் துக்குப் புறம்பாக எல்லா நேரமும் செயல்பட முடியாது என்பதால்தான் இந்த ஏற்பாடு. இந்த சல்வா ஜீடும், “தன் சொந்த மக்களுக்கு எதிராக போர் நடத்த அரசு உருவாக்கிய இயக்கம்“ என்பதற்கான ஆதாரங்களை விநாயக் சென் வெளியிட்டதுதான், அரசு அவரை குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குவதற்கான காரணம்.

வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற சென், 1981ஆம் ஆண்டு முதல் சங்கர் குகா நியோகி என்ற இயக்கத்தில் இணைந்து சத்தீஸ்கரில் பழங்குடிகளின் உடல்நலத்தை மேம்படுத்த உழைத்தார். குறைந்த கட்டண மருத்துவமனை, உடல்நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அவர் உருவாக்கிய உடல்நலத் திட்டம்தான் மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது செயல்படுத்தி வரும் தேசிய கிராமப்புற உடல்நல இயக்கத் துக்கான முன்னோடி. ஆனால் இன்றைக்கு அவர் ஆயுள் சிறையில் அடைக்கப்பட்டு கிடக்கிறார்.

“மக்கள் உரிமைகள் பறிக்கப்படும், யாரும் அதை எதிர்த்து குரல் எழுப்பக்கூடாது” என்ற அராஜக போக்குடன் நம்மை ஆளும் அரசுகளின் வெளிப்படையான மிரட்டலாகவே விநாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட ஆயுள் சிறையை கருத வேண்டி உள்ளது.

அமெரிக்காவுக்கு வந்தனம்

ஒவ்வோர் ஆண்டும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற் கான சர்வதேச மாநாடுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மனிதகுலம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அறிவியலாளர்கள் ஆதாரங்களுடன் எச்சரித்தும்கூட, உலகத் தலைவர்கள் தங்கள் நாட்டு ஆதிக்க வர்க்க நலன்களைக் காக்கும் நோக்கத்துடன், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் எந்த செயல்பாட்டையும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுத்து வந்தார்கள். கோபன்ஹேகனில் 2009ல் நடைபெற்ற மாநாட்டில் வழக்கம்போல் அமெரிக்கா கைவிரித்துவிட்ட நிலையில், மெக்சிகோவில் உள்ள கேன்குன்னில் கடந்த டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

மனிதகுலத்தைக் காக்க காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தியாக வேண்டும் என்பதால், இடையில் உருவான கியோட்டோ உடன் படிக்கை 2012ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. அந்த உடன் படிக்கையில் கையெழுத்திட்ட வளர்ந்த நாடுகள் ஒப்புக் கொண்டபடி பெரிதாக எதையும் செய்யவில்லை என்றாலும், புதிய உடன்படிக்கை உருவாக்கியாக வேண்டிய நிலை. கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாத அமெரிக்கா, கையெழுத்திட்ட மற்ற பணக்கார நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதனால்தான் கோபன் ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது.

கான்குன் மாநாட்டில், வளர்ந்த நாடுகள் தன்னிச்சையாக பசுமையில்ல வாயுக்களைக் குறைக்க மேற்கொள்ளும் குறைந்த கார்பன் மேம்பாட்டுத் திட்டங்கள், வியூகங்கள், அது தொடர்பான விவரங்களை ஆண்டுதோறும் வெளியிடுவது போன்றவை காலநிலை மாற்ற உடன்படிக்கையின் ஒரு பாகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேநேரம் வளரும் நாடுகள் பசுமையில்ல வாயுக்களைக் குறைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இணையாக பணக்கார நாடுகள் நிதியும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கும். தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பனில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மாநாட்டில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கான்குன்னில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் உதவக்கூடும்.

“கார்பன் வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இந்த மாநாட்டில் யோசனை முன்வைத்தார். இப்படியாக கார்பன் வெளியீட்டை குறைக்க இந்தியா தன்னிச்சையாக முன்வந்திருக்கிறது. கார்பன் வெளியீட்டை குறைப்பது முக்கியம்தான். ஆனால் இதுவரை வளிமண்டலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் கார்பனில் 27 சதவீதம் அமெரிக்கா வெளியிட்டது. அமெரிக்கா தொடர்ந்து கார்பனை வெளியிட்டு வருகிறது. ஆனால், கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க அந்நாடு அராஜகமாக மறுத்து வருகிறது. இந்நிலையில் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக அமெரிக்காவை மகிழ்ச்சிப் படுத்தும் நோக்குடன், அதற்குச் சாதகமான செயல் பாடுகளை சுற்றுச்சூழல் ரீதியிலும் எடுக்க மத்திய அரசு தயாராகிவிட்டதன் வெளிப்பாடுதான் ஜெய்ராம் ரமேஷின் பேச்சு.

அவர் முன் வைத்துள்ள இந்த கார்பன் வெளியீட்டுக் குறைப்பு மேல்தட்டு மக்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்தினால், அதை வரவேற் கலாம். மேல்தட்டு வர்க்கம் ஆதிக்கம் செலுத்தி வரும் கட்டுமானத் துறையிலும் போக்குவரத்துத் துறையிலும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும், செயல்திறனை மேம் படுத்தவும் மத்திய அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. அதேநேரம், வயிற்றில் நெருப்பை கட்டிக்கொள்ளும் வகையில் அணுசக்தியை ஊக்குவிக்கிறது. ஏற்கெனவே, காலநிலை மாற்றத்தால் அவதிப்படும் சாதாரண மக்கள், கார்பன் வெளியீட்டுக் குறைப்பு என்ற சுமையையும் சேர்த்துச் சுமக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைப்பது போல் தெரிகிறது. வாழ்க அமெரிக்கா!

Pin It