அலுவலகத்தில் வெகுநாட்களாக ஓர் அணில் உலவி கொண்டிருந்தது. அதன் இருப்பிடம், நீர், காப்பி, டீ அருந்தும் ஒதுக்குப்புறமான தடினமான பெரிய கண்ணாடிகளால் அடைக்கப்பட்ட ஒரு சின்ன அறை போன்ற இடம். அங்கே தான் மூடிய நிலையில் இருந்தது அந்த குப்பை சேகரிக்கும் பெரிய தொட்டியும், இந்த தொட்டிக்கு மேலே சற்று அகலமான தட்டையான வெற்றிடமுமிருந்தது. இந்த அணிற்பிள்ளை குப்பைப் பெட்டியினுள் செல்வதும் வெளியே மேலே வந்து எதையோ தேடுவதும் போலவே செய்கைகளைக் கொண்டிருந்தது. இது கணினி அலுவலகமாதலால் கணினிகளுக்குத் தேவையான மின் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புக்கான கம்பிகளும் (ஒயர்கள்) அந்தந்த இருக்கைகளின் கீழே கொடுக்கப்பட்டிருந்தன. அணிற் பிள்ளையால் இந்த இணைப்புகளுக்கோ அவற்றால் அணிலுக்கோ ஆபத்து நேராமலிருக்க நிர்வாகத்தில் கூறியதன் பலன் அணிலைப் பிடிக்க ஒரு பொறி வைக்கப்பட்டது. பொறி வைத்து சில நாட்கள்...

...கழிந்தன ஆனால் அணில் சிக்கவில்லை. ஒரு நாள் இந்த அணிலின் சில செய்கைகளைக் காண நேர்ந்தது. மதியமும் மாலையும் கூடித்தழுவும் நேரத்தில், எனது இருக்கைக்குப் பின்னே சற்றுத் தள்ளியே அமைந்துள்ள அந்த சின்ன அறையிலிருந்த பெரிய குப்பை (மூடிய) பெட்டியினுள்ளிருந்து வந்த அணில் சற்றே வித்தியாசமான வகையில் அந்த பெட்டியின் மேலிருந்ததைக் கவனித்தேன். தனது உடலை விரைப்பாக நீட்டியும், வாலை (நடுப்பகுதி) சற்று மேல் நோக்கி வளைத்தவாறு ஏதோ ஒரு பொருளை அதிதீவிர கவனத்துடன் பார்ப்பது போன்ற அசையாமலிருந்தது. சில நிமிடங்கள் கடந்தும் அதே நிலையில் அப்படியே இருந்தது. நான் எழுப்பிய மெல்லி ஓசைகளுக்கும், உண்டாக்கிய சிறு அதிர்வுகளுக்கும் சற்றும் அசையாமல் அதே நிலையைத் தொடர்ந்தது. சில விநாடிகள் கழித்து அணிலின் பின்புறத்திலிருந்து மெதுவாக ஏதோ கறுப்பு நிறத்தில் ஒன்று துருத்திக் கொண்டு மெதுவாக தலையை நீட்டுவது போலிருந்தது. மெல்ல மெல்ல அந்த கறுப்புப் பொருள் வெளியே வர, வர எனக்குப் புரிந்தது. அணில் ஏன் கல்லில் செய்த சிலை போன்று இருந்தது என்று!

முன்னர் கூறியபடியே, அணில் தன் உடலையும், வாலையும் (நடுப்பகுதியில் தூக்கியபடி மட்டும்) தனது முழு வலிமையும் கொண்டு அதன் எச்சத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தது. சற்றேறக் குறைய இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வரை எவ்வித இடைவெளியின்றி இது நடந்தேறி முடிந்தது. எச்சம் கடைசி நுனி வெளியேறும் வரை அணில் அசையவேயில்லை. எச்சம் முழுவதும் வெளி வந்த பின்னர், மெதுவாக முதுகின் பிற்பகுதியை அரை வட்டத்திற்கு மேல்நோக்கி வளைத்துக் கொண்டு தனது வாலையும் மேல்நோக்கி மாற்றிவைத்துக் கொண்டு சற்று இணைப்பாறுவது போன்று இருந்தது.

இப்படியருன்றை இதுவரை நான் கண்டதே யில்லை. ஆனால் அணிலின் செய்கைகள் மிக்க நேர்த்தியுடன் இருந்ததோடு மட்டுமல்லாமல் பார்ப் பதற்கு அருவருப்பில்லாமல் இருந்தது.

இந்த எச்சம் வெளியேற்றம் நடந்து முடிந்ததும், நாங்கள் தனது முன்னங்கால்களால் உடம்பை சொறிவது போன்று இந்த அணிலும் தனது உடம்பை முழுவதுமாக ஒரு பக்கமாக சாய்த்துக் கொண்டு உடம்பின் அடிப்பாகத்தினை தன்னுடைய வலதுபக்க கால்களால் உடற்மயிரை கோதிக் கொண்டது. கீழே விழாமலிருப்பதற்காக இடப் பக்கத்திலிருந்த கால்களை (முன் & பின்) நன்றாக ஊன்றி வாலையும் துணைக்கொண்டு சாய்ந்தவாறே இதனை செய்து முடித்தது.

மீண்டும் ஓசையெழுப்பினேன் சற்று அதிர்வுடன் - இம்முறை உடனே அந்த பெரிய பெட்டிக்குப் பின்னர் ஓடி மறைந்துவிட்டது. சிறிது நேரம் கழித்து அந்த எச்சததை காண ஆவலுடன் சென்றேன். ஆங்கில மருத்துவத்தில் நீண்ட குடுவைகளில் வரும் மாத்திரைப் போன்று நீண்ட கறுப்பு நிறத்திலிருந்தது. காயாமல் சிறிது கொழுகொழுவென்று இருந்தது. அதனைத் தொடாமலேயே தெளிவாக இருந்தது.

Pin It