அகிலம் முழுவதும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன; இத்தொழிலாளர்களின் மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல‌. தேசிய மாதிரி ஆய்வு நிறுவன கணக்கீட்டின்படி, 1999-2000ஆம் ஆண்டில் இந்தியாவில் 39.7 கோடி உழைப்பாளிகள் உள்ளனர். இதில் 2.8 கோடிப்பேர் மாதாந்திர ஊதியம் பெறக்கூடிய நிறுவனத்துறைகளில் பணிபுரிகின்றனர். எஞ்சியுள்ள 36.9 கோடிப்பேர் அமைப்பு சாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் 23.7 கோடிப்பேர் அதாவது 64 சதவீதம் பேர் விவசாயத்துறையிலும், 1.7 கோடிப்பேர் கட்டுமானத் துறையிலும், 4.1 கோடிப்பேர் உற்பத்தித் துறையிலும், 7.4 கோடிப்பேர் வணிகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைத்துறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாயம் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ளோர், மீன்பிடிப்பு, கிராமக் கைவினைஞர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பண்ணைகளில் அடிமைகளாகவும், இணைக்கப்பட்ட தொழிலாளிகளாகவும் வேலைபார்ப்போர், ஒப்பந்த கூலித் தொழிலாளர்கள், மரம் ஏறுவோர், துப்புரவுப் பணியாளர்கள், வீட்டுவேலை செய்வோர், சலவை, முடிதிருத்தும் தொழிலாளர்கள், தெருவில் காய்கறி, செய்தித்தாள் விற்போர் என பலதரப்பட்ட பிரிவினர் இதில் அடங்குவர்.

மனித உரிமைகள்

  மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்படுகின்றன. குடிசார் மற்றும் அரசயில் உரிமைகள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நுகர்வுச் சுதந்திரம், பண்பாட்டுச் சுதந்திரம், உணவுக்கான உரிமை, கல்வி உரிமை ஆகியன இதில் அடங்கும்.

உலக மயமும், மனித உரிமை மீறல்களும்.

  புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உலகமயக் கொள்கைகள் காரணமாக அமைப்புச் சாராத் தொழிலாளர்களின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. அவர்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அரசு சட்டங்கள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு சாலைப் போக்குவரத்து, இரயில்வே சாலை அமைப்பு, பாலங்கள் கட்டுதல், கட்டிடக் கட்டுமானப் பணிகள் உலகளாவிய ஒப்பந்த அடிப்படையில் முடிவு செய்யப்படுவதால், ஒப்பந்தப்புள்ளி எடுத்து பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களை மாநிலம்விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு புலம்பெயரச் செய்து  கொட்டில்களில் மாடுகளை அடைப்பது போன்று சிறுசிறு குடில்களில் தங்கவைத்து வேலை வாங்குகின்றனர். இத்தொழிலாளர்களும் தங்களின் வேலையின்மை, அறியாமை, வறுமை ஆகியவற்றின் காரணமாக தங்களின் உரிமைகள் குறித்து, மாறுபட்ட இடம், மதம், மொழி காரணமாக யாருடனும் இணைந்து தொடர்ந்து குரல் எழுப்ப முடியாத அவலநிலையில் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்காக அரசால் ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்ச கூலிச்சட்டம் 1948, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்புச்சட்டம் 1979, கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் நலச்சட்டம் 1996 ஆகியவை குறித்தும், அதன் நடைமுறை குறித்தும் கூட அறியாமல் இருக்கின்றனர். இதனால் இவர்கள் குறைவான கூலியில் அதிக நேரம் உழைத்திடவும், போதுமான காற்றோட்டமற்ற, கழிவறை வசதிகளற்ற இடங்களில் தங்கிடவும், இயற்கை அழைப்புகளைக் கூட உரிய காலத்தில் செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றனர். இதிலும், பெண் உழைப்பாளிகளின் நிலை மிக மிக மோசமாக உள்ளது கண்கூடு.

   சமீபத்தில் பிரமாண்டமாகக் கட்டிமுடிக்கப்பட்ட பசுமைக்கட்டிடமாம் தமிழக சட்டசபைக் கட்டிட கட்டுமானப் பணியில் ஏறத்தாழ ஆறாயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டு பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான உழைப்பாளர்கள் தங்கள் வேலை உரிமையை இழந்துள்ளனர். புலம்பெயர்ந்து இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பாளிகள் எந்தளவுக்கு தங்கள் உரிமைகளைப் பெற்றனர் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

சமீபத்தில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வட இந்தியாவைச் சார்ந்த உழைப்பாளி ஆதரவற்ற நிலையில் தவித்து வருதாகச் செய்தி வந்தது. இவர் வடமாநிலத்தைச் சார்ந்த ஒப்பந்ததாரரால், மதுரையில் நடைபெற்ற பாதாளச் சாக்கடை கட்டும் பணிக்காக அழைத்து வரப்பட்டிருக்கிறார். பணியின்போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் பணிமுடிந்த பின்பு அவரை மருத்துவமனையில் தவிக்கவிட்டுவிட்டு ஒப்பந்ததாரர் தனது சொந்த மாநிலம் திரும்பிவிட்டார். அந்த உழைப்பாளி தனது உரிமைகளை மட்டுமல்லாது தன்மானத்தையும் இழந்து தனது உணவிற்காக மொழி தெரியாத இடத்தில் பிறரை நம்பி வாழ வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்றே இதே மாவட்டத்தில் மாநகராட்சிப் பணியில் ஈடுபட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மூன்று மாதத்திற்கும் மேலாக ஒப்பந்தகாரரால் ஊதியம் வழங்கப்படாமல், நீதிமன்றத்தை நாடித்தீர்வைத் தேடிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இயந்திர‌ மயமும், மனித உரிமை மீறல்களும்

  இன்றைக்கு பல்வேறு சமுதாய கட்டமைப்புப் பணிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வேலையிழப்பின் காரணமாக, உழைப்புத் தொழிலாளர்களின் வேலை பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சரின் முன்முயற்சியால், வைகை அணை சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தபோது வீட்டுக்கு ஒருவர் வந்து வெள்ள அடைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டுமென மன்னர் கட்டளையிட்டதால், புட்டமுது விற்கும் பாட்டியிடம் புட்டு சாப்பிட்ட கடனை அடைக்க சிவனே நேரில் வந்து வைகை பராமரிப்புப்பணியில் ஈடுபட்டு பிரம்படி பட்டதாகவும் புராணம் கூறுகிறது. ஆனால் இன்று கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்ப‌ட்டு, முழுவதும் இயந்திரத்தால் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இயந்திரம் கொண்டு அவசர அவசரமாக முடிக்க வேண்டிய அளவிற்கு வைகையில் தண்ணீர் ஒன்றும் பெருக்கெடுத்து ஓடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுவும் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கெதிரான மனித உரிமை மீறலேயாகும்.  இதனைத்தான் தேசத்தந்தை மகாத்மா காந்தி 'இந்தியாவிற்குத் தேவை அதிக உற்பத்தியல்ல, அதிக மக்களால் செய்யப்படும் உற்பத்தி்' என்றார்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் - அமைப்புச் சாரா தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்களும்

  இன்றைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரிலே ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வளைக்கப்படுகின்றன. இதுவரை 29,73,190 சதுர கீலோ மீட்டர் நிலப்பரப்பினை கையகப்படுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 54.5 சதவீத நிலப்பரப்பு (16,20,388 ச.கி.மீ) விவசாய நிலமாகும். நில உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டாலும், சிறு, குறு விவசாயிகள் மற்றும் இந்நிலத்திலேய விவசாய வேலை செய்து அதை மட்டுமே தெரிந்த தொழிலாகக் கொண்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. இதனால் இவர்களின் வாழ்வாதார உரிமை வேலை செய்வதற்கான உரிமை முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக நகரங்களை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்போது அரசால் ஏற்கெனவே இயற்றப்பட்ட நில உச்சவரம்புச்சட்டம், நிலக் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சட்டம் ஆகியவை அப்பட்டமாக மீறப்படுகின்றன.

வறுமையும் மனித உரிமை மீறல்களும்

  இந்திய மொத்த மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாகத் திட்டக்குழுவும், 50 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக என்.சி.சேக்சேனா குழுவும், 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக டெண்டுல்கர் குழுவும் கூறுகின்றன. அமைப்பு சாரா நிறுவனங்களுக்கான தேசியக்குழுவின் தலைவர் அர்ஜுன் சென் குப்தா இது 80 சதவீதம் எனவும் குறிப்பிடுகிறார். மேலும், வறுமையும் மனித உரிமை மீறலே என்றும் வறுமை மனிதனின் தன்மானத்தை பாதிப்பதாக உள்ளதெனவும், இதனால் தனிமனிதனின் உரிமை மறுக்கப்படுகிறதெனவும் குறிப்பிடுகிறார். மேலும், உலக வங்கியும், பன்னபாட்டு நிதியமும் தங்களின் சட்ட அமைப்பு விதிகளில் வறுமையும் மனித உரிமை மீறலே என்பதை கணக்கில் கொண்டு மாறுதல்கள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கிறார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில் 90 சதவீதம் பேர் அமைப்புசாரா தொழில்களில்தான் ஈடுபட்டுள்ளனர்.

  எனவே, சமூக ஆர்வலர்கள், மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய அரசு சாரா நிறுவனங்கள் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் இத்தகைய அவலநிலைக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைப்பு சாராத் தொழிலாளர்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் உலகமயக் கொள்கைகளின் பாதிப்புகளை வெளி உலகிற்கு கொணர்ந்து உழைப்புச் சுரண்டலுக்கு முடிவுகட்ட வேண்டியதும், இவர்களின் உரிமைகளை பாதுகாத்திடுதலும் காலத்தின் தேவையாகும்.

- மதுரை சு.கிருஷ்ணன்  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It