நவம்பர் 27 மாவீரர் தினம். கடந்த முப்பாதாண்டுகால ஈழப் போரில் தங்களின் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளின் நினைவைப் போற்றும் அந்த நாளில் நீங்கள் ஒரு ஈழ ஆதரவாளராக இருந்தால் என்ன செய்வீர்கள்? மாவீரர் நாளை அனுசரிப்பீர்கள். தமிழ் தலைமகன் கருணாநிதியின் காவல்துறை பாயும் என்கிற பயம் உங்களுக்கு இருந்தால் அமைதியாக இருந்து அந்த நாளை நினைவு கூர்வீர்கள். ஈழத்து ஆதரவாளர், பிரபாகரனோடு நெருங்கிப் பழகிய ஜெகத் கஸ்பர் ராஜ் என்ன செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஈழப் போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் மையம் சார்பில் நினைவஞ்சலி ஏற்பாடு செய்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் இன்னமும் நீங்கள் ஜெகத்திடம் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அந்த மாவீரர் நாளில் அவர் மத்திய அமைச்சரும் ஈழப் போராட்டத்தில் புலிகளை ஒழித்தேக் கட்டுவது என்று கங்கணம் கட்டி செயல்பட்டவருமான சிதம்பரம் அவர்களின் மருமகளான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டிய நிகழ்ச்சியை தனது தமிழ் மையம் சார்பில் சென்னையில் நடத்தியிருக்கிறார். அதில் சிறப்பு விருந்தினராக சிதம்பரமே கலந்து கொண்டிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சரின் அப்பாயின்ட்மெண்ட் வேண்டும் என்றால் அது பல மாதங்களுக்கு முன்பே வாங்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர் நிகழ்வில் கலந்து கொள்வது சாத்தியம். ஆக மாவீரர் தினத்தில் உள்ளூர் மாவீரனான ஜெகத், சிதம்பரத்தின் மருமகளின் பரத நாட்டியத்தை அரங்கேற்றியது தற்செயலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பதற்கான பதிலை நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்களை உலக உளவாளி என்று நக்கீரனில் எழுதுவார். அதை நக்கீரன் கோபாலும் அனுமதிப்பார். சரி கிடக்கட்டும்.....

இணையதளங்கள் மாற்று ஊடகங்களாக உருவாகி வளர்ந்து நிற்கின்றன. இணைய தளங்களின் பதிவுகளைத் தவிர்த்து விட்டு இன்றைய அச்சு ஊடகத்துறை செயல்பட முடியாது என்பதை இணையதளங்களின் வளர்ச்சி பறைசாற்றி நிற்கிற அதே வேளையில் அச்சு, காட்சி ஊடகங்கள் அனைத்துமே ஆளும் கட்சிகளுக்கும் அதிகார வர்க்கங்களுக்கும் எடுபிடிகளாக மாறிப் போன ஒரு காலச் சூழலுக்குள் நாம் வாழ்கிறோம். இணைய தளங்களில் வெளியாகும் செய்திகளும் புகைப்படங்களுமே வணிக இதழ்களின் பக்கங்களை பெருமளவில் ஆக்கிரமித்து நிற்கிறது என்கிற யதார்த்தத்தை நாம் ஈழ விவகாரத்தில் காண்கிறோம். பிரபாகரன், ஈழம், புலிகள், மீண்டும் போர் என்கிற கருத்துக்கள் எல்லாவற்றுக்குமே இந்த பாப்புலர் இதழ்கள் சார்ந்திருப்பது இணையதளங்களைத்தான். ஈழம், பிரபாகரன், புலிகள் என்கிற பிராண்டைத் தவிர்த்து விட்டு எந்த இதழும் வீழ்ந்து விட்ட தங்களின் விற்பனையைத் தூக்கி நிறுத்த முடியாது என்பதை சம காலத்தில் நாம் கண்டு வருகிறோம்.

அந்த ஈழம் என்னும் பிராண்டிற்கான நக்கீரன் இதழின் அம்பாஸ்டராக உருவாக்கப்பட்டிருக்கும் அ(இ)ருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் கிறிஸ்தவப் பாதிரி ஈழம் பற்றி அடுத்த வாரம் என்ன வாந்தி எடுக்கப் போகிறார் என்று ஒரு காலத்தில் புலத்து ஈழ நண்பர்கள் காத்துக் கிடந்தனர். மொண்ணையான அரதப் பழைய மொழியில் வாந்தி எடுக்கும் ஜெகத்தின் எழுத்துக்களை தங்களின் இணைய தளங்களில் கொட்டை எழுத்துக்களிலும் வெளியிட்டு வந்தார்கள். இன்று அதே இணைய தளங்கள் இவரது கடைசி நேர கால் வாரல்களையும் கழுத்தறுப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. எப்போதோ ஒரு நண்பர் ‘‘ஜெகத் கஸ்பரை உன்னிப்பாக கவனிப்பது நல்லது; நடவடிக்கை சரியில்லை’’ என்றார். நாமும் கவனித்தோம். வினவு தோழர்கள் ஜெகத்தின் கடைசி நேர கழுத்தறுப்பை ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வர, ‘நேரம் வரட்டும் பதில் சொல்கிறேன்’ என்று எம்.ஜி.ஆர் பாணியில் பதில் அளித்தார் இந்தப் பாதிரி. நல்ல நேரம் பார்த்தா நடேசனையும் போராளிகளையும் காட்டிக் கொடுத்து கருவறுத்தார் இந்தப் பாதிரி?

சரி கிடக்கட்டும். தன் மீது ஆதாரப்பூர்வமாக ஒரு குற்றச்சாட்டை சொல்கிறவர்களைக் கூட சர்வதேச உளவாளிகள், அந்நிய கைக்கூலிகள், சிறு குழுவினர் என்றெல்லாம் தனது நக்கீரன் தொடரில் எழுதுகிறார். நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து ஆனந்த விகடனை ஜெகத் கஸ்பர் மூலமாகத் தாக்கி தன் வன்மத்தை தீர்த்துக் கொள்கிறது என்பதெல்லாம் தனிக் கதை... நமக்கும் விகடன் குழும இதழ்கள் மீது ஏராளமான விமர்சனங்கள் உண்டு, அவை கீற்று தளத்திலேயே பதிவாகியிருக்கிறது. ஆனால் ஜெகத் முன் வைக்கும் விமர்சனமும் நாம் வைக்கும் விமர்சனங்களும் ஒன்றல்ல. தவிரவும் கருணாநிதி வழமையாக தன் மீது விமர்சனம் கொட்டும் இதழ்களை "அவாள்", "ஆத்தூக்காரா ஆட்டம் போடுறா" என்றெல்லாம் நக்கல் செய்வார். ஈழத்துக்கு எதிராக கருணாநிதி செய்த துரோகத்தில் விழுகிற உள்குத்தில் இந்த அவா இவா... ஆட்டம் இப்போது எடுபடவில்லை என்பது தனிக்கதை. காரணம் பார்ப்பனீயம் என்னும் அதிகார பீடத்திலேயே இன்றைய கருணாநிதியின் அதிகாரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. திராவிடன் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து...........

கருணாநிதி சொல்லும் குற்றச்சாட்டுகளை இன்று ஜெகத் கஸ்பரும் இந்த இதழ்கள் மீது சொல்வார் என்று பார்த்தால் அப்படி எதையும் சொல்லவில்லை. ஏன் தெரியுமா? இந்த கேள்விக்கான விடை தெரிவதற்கு முன்னால் இந்த மோசடிப் பாதிரியின் ஈழம் தவிர்த்த சென்னை சங்கமம் முகத்தை தோலுரித்துப் பார்த்து விடுவோம். நாம் இதில் முன் வைக்கும் கேள்விகளுக்கும் ஜெகத் பதில் சொல்லாமல் விடலாம். இதெல்லாம் உங்களின் தனிப்பட்ட விஷய‌மோ நாலு கன்னியாஸ்திரிகளும், பத்து பாதர்களும், கூடி அல்லேலூயா என்று ஜெபம் செய்கிற விஷயமோ அல்ல... பொது விஷயம். பல லட்சம் மக்களின் ரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்டிருக்கும் வரலாற்றை நீங்கள் பணம் பண்ணுகிறீர்கள் என்பதை நினைவூட்டவே இதை எழுதுகிறோம்.

இனி.......... சென்னை சங்கமம்.........


அழகிரியைப் பற்றி, "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை" என்றொரு நூலை மதுரையில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். கருணாநிதியின் வாரிசுகளே முன்னின்று வெளியிட்டுள்ளார்கள். (என்ன அழகான தலைப்பு பாருங்கள்) இப்படி தன்னைப் பற்றி தானே புகழ்ந்து ஒரு கவிதை எழுதி அதை தனது இதழிலேயே வெளியிடுகிற கருணாநிதியின் கூச்சமற்ற அதிகார போதையின் இன்னொரு வெளிப்பாடாகவே அதன் அடுத்த தலைமுறையில் முளைத்து நிற்கும் ஜெகத்தையும், கனிமொழியையும் நாம் காண வேண்டும். சமீபத்தில் வெளியான நக்கீரன் இதழில் சென்னை சங்கமத்தின் அருமை பெருமைகளை எல்லாம் ஜெகத் பட்டியலிட்டிருந்தார்....... தானே தன்னுடைய சென்னை சங்கமத்தைப் பற்றி, தான் எழுதுகிற இதழிலேயே புகழ்ந்திருக்கிறார். இன்றைய ஆளும் வர்க்கங்களின் அரிப்புச் செயல்பாடுகளை அவர்களே புகழ்வது என்பது இந்தத் தலைமுறையில் இயல்புதான். ஆனால் அந்தப் புகழ்தல் என்னும் சுயமோகத்தைக் கடந்து சென்னை சங்கமம் என்னும் தமிழர்களின் ஆகப்பெரிய பண்பாட்டு நிகழ்வில் எத்தனை தீண்டாமையும், சுரண்டலும் அடங்கியிருக்கிறது என்பதை நாம் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு இக்கட்டுரையை எழுதுகிறோம்.

தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு என்று எவ்வளவு பெரிய மோசடிகளை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சென்னை சங்கமும் ஓர் எடுத்துக்காட்டு, (ஆனால் தமிழன் கொல்லப்பட்டால் அவனைக் காப்பாற்ற மாட்டார்கள். தமிழை மட்டும் அரியணை ஏற்றுவார்களாம்) சென்னை சங்கமத்தில் கடந்த பத்து நாட்களாக அதில் பங்கேற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள், புத்திஜீவிகள், உணவுப் பணியாளர்கள் என பல்வேறு சக்திகளுடனும் பேசியபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், சென்னை சங்கமத்தின் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்ட விதம் குறித்தும் அவதானித்த பின்பே இதை எழுதுகிறோம்.

நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வில் விளக்கேற்றுகிறோம், மடிந்து கொண்டிருக்கும் தமிழனின் கலைகளை காசாக்குகிறோம்... சீ..... கண்காட்சியாக்குறோம் என்றெல்லாம் பறைசாற்றி தமிழக அரசின் நிதி உதவியோடும், தமிழக சுற்றுலாத் துறையின் உதவியோடும் இன்னபிற ஸ்பான்சர்களின் உதவியோடும் வருடா வருடம் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு சென்னைவாசிகளுக்கு (?) விருந்து வைப்பதுதான் சென்னை சங்கமம். இது முழுக்க முழுக்க ஜெகத் என்னும் பாதிரியின் மூளையில் தோன்றி தமிழ் தலைமகனின் கடைசி வாரிசான கனிமொழியின் அதிகார உதவியோடு நடத்தப்படுகிறது. சென்னை சங்கமத்திற்கு செலவிடப்படுகிற பணம் ஜெகத் குமரி மாவட்டத்தின் காஞ்சாம்புரத்தில் இருந்து கொண்டு வந்த பணமல்ல அல்லது கனிமொழி தனது கவிதைப் புத்தகங்களை விற்று கொண்டுவந்த காசுமல்ல; திருக்குவளையில் இருந்து மஞ்சள் பையில் கட்டிக் கொண்டு வந்த பணமுமல்ல; மாறாக சென்னை சங்கமத்தில் செலவிடப்படுவது தமிழக மக்களின் பணம். சென்றவருடம் பல லட்சம் ரூபாயை சென்னை சங்கமத்திற்கு அள்ளிக் கொடுத்தார் கருணாநிதி. இந்த வருடம் கனிமொழி முதல்வரிடம் உதவி கேட்போம் என்றார். மகள் கேட்டாரா? அப்பா கொடுத்தாரா? என்பதெல்லாம் பரம ரகசியம். அது அந்த ஜீசஸ்சுக்கே வெளிச்சம். அல்லேலூயா..........

கிடையை காவல் காக்கும் உரிமையை நரி எடுத்துக் கொண்டது போல நாட்டுப்புறக் கலைகளை காவல் காக்கும் உரிமையை ஜெகத் கஸ்பர் எடுத்திருக்கிறார். நாட்டுப்புறக் கலைகளை உயர்த்த நடத்தப்படுவதாக சொல்லப்படும் சென்னை சங்கமத்தின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களில் (அகிலா சீனிவாசன், அருணா சுப்ரமணியம், இன்னொருவர் பெயர் தெரியவில்லை) மூன்று பேர் பார்ப்பனர்கள். கருணாநிதி ஊடகங்களை அவாள், இவாள் என்று திட்டுவது போல ஜெகத்தும் திட்ட முடியாது என்றோம் இல்லையா? அதற்கான பதில் இதுதான். மேலே சொன்ன அருணா சுப்ரமணியன்கள், சீனிவாசன்கள் இவர்கள் எல்லாம் யார்? சுத்த திராவிட ரத்தம் ஓடும், தலைவரைப் போல் தமிழன் செத்தாலும் பரவாயில்லை தமிழ் வாழட்டும் என்று தமிழுக்காக போராடுகிறவர்களா? அல்லது நாட்டுப்புறக் கலைகள், அந்தக் கலைஞர்களின் வாழ்வு பற்றி கரைத்துக் குடித்து அவர்களின் மேம்பாட்டுக்காக சதா உழைத்துக் கொண்டிருப்பவர்களா? இந்த வெள்ளைத் தோல் பார்ப்பனர்களை வைத்துத்தான் சென்னை சங்கமம் நடத்த முடியும் என்கிற உங்களது எண்ணத்தின் பின்னால் ஒளிந்திருப்பது கலைகளுக்கு சேவை செய்யும் தியாகமா? அல்லது கலைகளை அழித்து காசு பார்க்கும் வழக்கமான வசூல் எண்ணமா?

பொதுவாக நமது மரபுரீதியான கலைவடிவமான பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலைவடிவங்களையும் எண்ணற்ற உழைக்கும் மக்களின் இசை வடிவங்களையும் புரட்சிகரத் தோழர்கள், முற்போக்கு அமைப்பினர் தங்களின் அரசியல் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் யாரும் கிராமத்துக் கலைஞர்கள் ஏறும் மேடைகளில் சுதா ரகுநாதனையோ, பாம்பே ஜெயஸ்ரீகளையோ ஏற்றுவதில்லை. அங்கே முதல் மரியாதை மக்கள் இசைக்கும், மக்கள் கலைஞர்களுக்கும்தான். ஆனால் கிராமத்துக் கலைஞர்களை வாழ வைக்கிறோம்; கலைகளை வளர்க்கிறோம் என்று சொல்லி கலைத்துறைக்குள்ளும் குதித்த ஜெகத் கஸ்பர் முடமாகிப் போன பார்ப்பன இசை வடிவமான கர்நாடக இசைக்கு காவல் காக்கும் நாய்களாக நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்துகிறார். சுடலை மாடன் கோயிலுக்கு வெளியே காவல் காக்கும் சண்டாளனைப் போல எமது மக்கள் மரபை பார்ப்பனப் பன்னாடைகளுக்கு காவல் காக்க வைக்கிறது இந்த ஜெகத் கஸ்பர் ராஜ் & கனிமொழி கம்பெனி.

சென்னை சங்கமம் நாட்டுப்புற‌க் கலைஞர்களுக்கு வழங்கும் ஊதியம்...

சென்னை சங்கமத்தின் செலவுக் கணக்குள் குறித்து சென்னை சங்கமம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்கள். அது இந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட வரவில்லை. அதுவும் அந்த ஜீசஸ்சுக்கே வெளிச்சம். அல்லேலூயா... இது பற்றி எல்லாம் எழுத, பதில் சொல்ல நேரம் வராத ஜெகத் கஸ்பர் சென்னை சங்கமத்தின் அருமை பெருமைகளை மட்டும் பட்டியலிடுகிறார். எங்கோ எவனோ சிந்துகிற வியர்வையை சென்னையின் சிங்கார எருமைகளுக்குப் பந்தி வைத்து அதை பணமாக்குகிற ஜெகத் கஸ்பரும், கனிமொழியும், சென்னை சங்கமத்தில் கலந்து கொள்ளும் - தமிழைத் தவிர வேறு மொழி தெரியாத - தமிழ் உணவுகளான கூழையோ, கஞ்சியையோ குடித்து வாழ்கிற கிராமப்புறக் கலைஞர்களுக்கு - வழங்கிய கூலி ஒரு நாளைக்கு ரூபாய் 800. அதாவது காலை பத்து மணி தொடங்கி இரவு 10 மணி வரை உடல் நோக பறையடிக்கிற, கரகாட்டம் ஆடுகிறவர்களுக்கு கொடுத்தது 800 ரூபாய். வயிற்றுப்பாட்டிற்காக இவர்கள் சொன்ன ஊதியத்திற்கு வந்து ஆடிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் நமது தலித் சகோதரர்கள். ஆனால் உடல் நோகாமல் வியர்க்காமல் பட்டுச் சேலை சலசலக்க பைஃவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கி ஏசி காரில் வந்திறங்கி ஆடாமல் அசையாமல் மேடையில் அமர்ந்து கர்நாடக சங்கீதம் பாடியவர்களுக்கும், மேற்கத்திய நடனம் என்று மானாட மயிலாட மார்பாட குத்தாட்டம் போட்டவர்களுக்கும் ஒரு நாள் கூலி எவ்வளவு தெரியுமா? 20,000 முதல் 50,000 ரூபாய் வரை, அவரவர்களது பேரத் திறமைக்கேற்ப. கடம், மிருதங்கம், வீணை உள்ளிட்ட பக்கவாத்தியக்காரர்களுக்கு எட்டாயிரம் ரூபாய். அதாவது ஒரு மணி நேரமோ... இரண்டு மணி நேரமோ வாசித்து விட்டுப் போக எட்டாயிரம் ரூபாய்.

நான் தொடர்பு கொண்டு பேசிய ஒரு நாட்டுப்புறக் கலைஞர், “காலையில் 10 மணியில் இருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் வேலை வாங்குறாங்க. ஆனா 800 ரூபாய்தான் கொடுக்கிறாங்க... நாங்க ஊர்ப்பக்கம் போற நிகழ்ச்சிகளுக்கு 2 அல்லது 3 மணி நேரத்திலே இந்தக் காசை வாங்கிவிடுவோம். ஊரிலே தொடர்ச்சியாக நிகழ்ச்சி வராததால், பொழப்புக்காக இங்க வந்து இவங்க சொல்ற நேரம் வரைக்கும் ஆடி, கஷ்டப்படுறோம். எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் நான் இருந்த அறையில் மொத்தம் 15 பேர் தங்கியிருந்தோம். பெரும்பாலான அறைகளில் இந்த நிலைமைதான். ஒரு நாளைக்கு நாலு, அஞ்சு இடத்துலே ஆடறது ரொம்ப உடம்பு வலியாப் போயிடறது. இரவு 10 மணிக்கு நிகழ்ச்சியை முடிச்சுட்டு ஹாஸ்டல் வந்து சேரதுக்கு 11 மணி ஆயிடுது. பின்ன சாப்பிட்டு, கொஞ்சம் பேசிட்டு தூங்கறதுக்கு எப்படியும் 1 மணி ஆயிடுது. ஆனா சில ஆபிசருங்க மறுநாள் காலையிலே எட்டு மணிக்கு எல்லாம் தயாராகச் சொல்றாங்க. அவ்வளவு உடம்பு வலியிலே காலையிலே எப்படிங்க சீக்கிரம் எழுந்திருக்க முடியும்?

இங்க வந்து ஆடுறதால் எங்களுக்கு பெரிய பிரோஜனம் எல்லாம் இல்லீங்க. ஊருல பெரியாளுங்க தலையிட்டுதான் எங்களை இங்கே வரச் சொல்றாங்க. தவிர‌வும் எங்களை ஒரு மாதிரியாவும், பணக்கார பாடகிங்களை (பார்ப்பனப் பாடகர்களைச் சொல்கிறார்) வேறு மாதிரியும் நடத்துறாங்க. அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனா நாங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க... கடைசியா கனிமொழியம்மாவோட போட்டோ எடுத்ததுதாங்க மிச்சம். இத்தனைக்கும் அவுக பாடும்போது யாரும் அதைக் கேக்குறதில்ல. அதான் சபாவுல அவுக பாடும்போது கேக்குறாகல்ல வெளியிடத்துல எங்காளுக பாடும் போதும் ஆடும் போதும்தான் மொத்த செனமும் கைதட்டிக் கொண்டாடுது அது ஒண்ணுதாங்க இதுல பெருமை” என்று பெயர் சொல்ல விரும்பாத அந்தக் கலைஞர் சொல்கிறார். தப்பித்தவறி இவர் யார் என்று தெரிந்தால் அடுத்த வருடம் இவர் மட்டுமல்ல இவருடைய குழுவினரைக் கூட அழைக்க மாட்டார்களாம்.

சங்கமத்திற்கு வந்து செல்கிற செலவு எல்லாக் கலைஞர்களுக்கும் ஓரே மாதிரி கிடையாது. இதிலும் வேறுபாடு காட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலான நாட்டுப்புறக் கலைஞர்கள் அரசுப் பேருந்தில் வந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு பஸ் டிக்கட்டுக்கான பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் வேன் பிடித்துதான் வருவோம் என்று சொன்னவர்களுக்கு அதற்கான‌ பயணச் செலவு தந்திருக்கிறார்கள். அதாவது எந்தப் பிள்ளை அதிகமாக அழுகிறதோ அதற்கு அதிக கவனிப்பு; மற்ற குழந்தைகளைத் தெருவில் விட்டுவிடுவது. சம்பள விஷயத்திலும் அப்படித்தான். இவ்வளவு ரேட் கொடுத்தால்தான் வருவோம் என்றவர்களுக்கு மட்டும் அந்தப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் ஒரு நாளைக்கு ரூ.800 மட்டும்தான். அதேநேரத்தில் சில கர்நாடக, மேற்கத்திய கலைஞர்கள் சென்னை சங்கமத்துக்கு விமானத்தில் வந்துபோவதற்கான செலவையும் விழா ஏற்பாட்டாளர்கள் ஏற்றிருக்கிறார்கள்.

பட்டுச் சேலை கோஷ்டிகளுக்கோ மினரல் வாட்டர்... நமது நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மொந்தக் கேனில் தண்ணீர். கர்நாடக சங்கீதப் பாடகிகள் பிளைட்டில் வருவதாக இருந்தாலும் பல்லக்கில் வருவதாக இருந்தாலும் வழிந்தோடி அவர்களுக்கு பயணப்படி வழங்கிய இவர்கள் கிராமப்புறக் கலைஞர்களை இழிவு செய்திருக்கிறார்கள். இந்த சலுகைப் பாகுபாடு கர்நாடக சங்கீகத வித்வான்கள், வயலின்ஸ்டுகள், கத்ரி கோபால்நாத், டிரம்ஸ் சிவமணி போன்ற கோடீஸ்வரக் கலைஞர்களுக்கு ஒன்றாகவும், தஞ்சை சின்னப் பொண்ணு, இன்னமுள்ள கரகாட்டக்காரர்களுக்கு வேறொன்றாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. கலைஞர் டிவியில் மானாட மயிலாட................ மார்பாட நடக்கும் குத்தாட்டம் போல இன்னமும் சில குழுக்களும் சென்னை சங்கமத்தில் களமிறக்கப்படுகின்றனர். அந்த குழுக்களுக்கு 50,000க்கும் மேல் ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல முதல் வருட சங்கமத்தில் தப்பாட்டம் மாதிரியான ‘சண்டாள’க் கலைகள் நடைபெற்ற பின்பு, அந்த மேடைகளில் தாங்கள் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று சில பட்டுச்சேலைகள் எதிர்ப்புத் தெரிவிக்க இரண்டாம் ஆண்டு நிகழ்வில் ‘மாமி’களின் முகம் கோணாமல், முதலில் அவர்களை களமிறக்கி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் நான்கு பேர் ராக ஆலாபனை செய்தாலே, அந்த சேனல் பக்கம் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு தலைகாட்டாமல் தங்களைக் காத்துக் கொள்வதுதான் தமிழர்களின் இயல்பு. இந்த இயல்பின் காரணமாகவோ என்னவோ, இரண்டாம் ஆண்டில் முதல் நிகழ்ச்சியாக கர்நாடக வித்துவான்கள் மேடையேறியபோது கச்சேரி களை கட்டவில்லை. அடுத்ததாக நம்ம கலைஞர்கள் தங்களது திறமையைக் காட்டும்போது கூட்டமும், கைதட்டலுமாக நிகழ்ச்சி ஆர்ப்பரித்திருக்கிறது.

இது மறுபடியும் பட்டுச்சேலைகளுக்கு உறுத்தியிருக்கிறது. அவர்களின் மனக்குறையைத் தீர்க்க, கனிமொழி, ஜெகத் அண்ட் கோ என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? பிரைம் டைம் என்று சொல்லக் கூடிய ஆறரையிலிருந்து எட்டு மணி வரை என்கிற கால நேரம் இந்த கர்நாடக சங்கீத மாமேதைகளுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மாமிகளின் ஆலாபனைகள் முடியும் வரை நமது ஏழை பள்ளு, பறைகள் காத்திருக்க வேண்டும். முதலில் நாட்டுப்புற கலைஞர்களை ஆடவிட்டு கூட்டம் சேர்ப்பது, பின்பு கர்நாடகங்களை மேடையேற்றுவது. அவர்கள் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ பாடிவிட்டுப் போனபின்பு, மீண்டும் நாட்டுப்புறக் கலைஞர்களை இரவு 10 மணிவரை வேலை வாங்குவது. பார்ப்பனக் கலைகளுக்கும், பட்டுச் சேலை மாமிகளுக்கும், கத்ரி கோபால்நாத்துக்களுக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மூலம் கூட்டம் சேர்க்கும் வேலையைத்தான் சென்னை சங்கமம் குழு செய்கிறது.

மேலும் இதிலிலுள்ள பாரபட்சத்தைப் பாருங்கள்.. மாமாக்களும், மாமிகளும் மதியம் சாப்பிட்டு ஒரு தூக்கத்தைப் போட்டு, ஆற அமர மேக்கப் போட்டு, பட்டுப் புடவை, நகைகளை மாட்டி ஆறரை மணிக்கு வருவார்கள். வந்து கொஞ்ச நேரம் தங்களது அக்கப்போரை அவிழ்த்துவிட்டு, இரவு போஜனத்துக்கு சரியான நேரத்தில் ஷேமமாக ஆத்துக்குப் போய்விடுவார்கள். நாள் முழுக்க ஆடிப் பாடுகிற நமது கலைஞர்கள் இரவு 11 மணிக்குத்தான் சாப்பிடப் போகிறார்கள்.

அதுவும் மாமிகள் வருகிறார்கள் என்றால், சங்கமத்துப் பொறுப்பாளர்கள் அந்த நிகழ்ச்சிக்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிடுகிறார்கள். ‘அவங்க வர்றாங்க, சீக்கிரம் நிகழ்ச்சியை முடிங்க..’ என்று மற்ற கலைஞர்களை விரட்டுகிறார்கள். மாமிகளைக் காக்க வைக்கிற அபச்சாரம் எதுவும் நடந்துவிடக்கூடாது அல்லவா? ஒரு முறை 7 மணிக்கு கர்நாடக சங்கீத நிகழ்ச்சி. அவர்களது வாத்தியக் கோஷ்டி வந்துவிட்டது. மேடையில் இருந்த நாட்டுப்புறக் கலைஞர்களை அவசர அவசரமாக முடிக்கச் சொல்லி, 6.55க்கு எல்லாம் மேடையை தயார் செய்துவிட்டார்கள். ஆனால் அந்த பட்டுச்சேலை 7 மணிக்கு வரவில்லை. போக்குவரத்து நெரிசலோ அல்லது மேக்கப் போட நேரமாகிவிட்டதோ 7.30க்குத்தான் வரும் என்று தகவல் வந்தது. மறுபடியும் நாட்டுப்புறக் கலைஞர்களை மேடையேற்றி, அது வரும்வரை ஆட வைத்திருக்கிறார்கள். இதுமாதிரியான நிகழ்வுகள் பல இடங்களில் நடந்துள்ளன. கனிமொழியும், ஜெகத்தும் நாட்டுப்புறக் கலைகளுக்கு உச்சபட்ச அங்கீகாரம் வழங்குவது இப்படித்தான். ஆதிக்க சாதியினரின் கால்களில் தலித் மக்களை விழவைப்பது போன்ற கட்டப்பஞ்சாயத்துகளின் தீர்ப்புகளுக்கும், கனிமொழி, ஜெகத் அண்ட் கோ-வின் இத்தகைய செயல்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

அதேநேரத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான துவக்க நாள் நிகழ்ச்சி போன்ற - நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் - இடங்களில் அம்மாஞ்சிகளை ஓரங்கட்டிவிட்டு, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற நுண்ணரசியல் ஏமாற்று வேலைகளையும் இவர்கள் கைக்கொள்ளத் தயங்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் சென்னை சங்கமத்தில் கலந்துகொண்டு, இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்காமல் நிராகரித்தவரும், முற்போக்கான கருத்துக்களை தனது நையாண்டி நிகழ்ச்சி மூலம் பரப்பி வருபவருமான புதுகை பூபாளம் கலைக்குழுவின் பிரகதீஸ்வரன் சென்னை சங்கமம் குறித்து கூறும்போது...

"பெரும்பாலான நாட்டுப்புறக்கலைகள் தலித் மக்களின் கைகளில்தான் இருக்கின்றன. அந்த மக்கள் தங்கள் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்திற்கு எதிரான கோபத்தை கலைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். ஆண்டைகளின் முன் பணிந்து நிற்கும் ஒரு தலித், பறை எடுத்து ஆடும்போது, எந்த அச்சமுமின்றி, கம்பீரமாக வீரவேசமாக நெஞ்சு நிமிர்த்தி ஆடுவதன்மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான். இப்படி இயல்பாகவே அதிகாரத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்பு அரசியல் நாட்டுப்புறக்கலைகளில் இருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தலித் அமைப்புகள் போன்ற முற்போக்கான சக்திகள் தங்களது கருத்துக்களைக் கொண்டு செல்லும் ஊடகமாக நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்தினர். ஆனால் சென்னை சங்கமம் அந்த எதிர்ப்பு அரசியலை அதிகாரத்தின் கால்களில் போய் விழவைக்கிறது.

அதிகார சக்திகளின் மனமகிழ்வுக்காக, பட்டன் தட்டினால் ஆடும் பொம்மை போல் நாட்டுப்புறக் கலைஞர்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாராட்டுவதுதான் உச்சபட்ச அங்கீகாரம் என்ற மனநிலை உருவாக்கப்படுகிறது. பார்ப்பனியக் கலைகளுடன் நாட்டுப்புறக் கலைகளை மேடையேற்றும்போது, நாட்டுப்புறக் கலைஞர்களை விட பார்ப்பனர்களுக்கே அதிக மரியாதையும், அதிக வசதிகளும் தரப்படுவதை கிராமங்களிலிருந்து வரும் தலித் கலைஞர்கள் பார்க்கிறார்கள். இதனால் ஏற்படும் தாழ்வுணர்ச்சியும், அது ஏற்படுத்தும் உளவியல் சிக்கலும் நாட்டுப்புறக் கலைகளுக்கு மிகவும் ஆபத்தானது.

‘நல்லாத்தான் பாடுறீங்க... இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பயிற்சி வேணும். நித்யஸ்ரீயைப் பாருங்க...’ என்று அம்பிகள் அடிக்கும் கமெண்ட்கள், இறுதியில் நாட்டுப்புறக் கலைஞர்களை பார்ப்பனமயமாக்கலில் கொண்டுபோய்தான் சேர்க்கும். இதற்கு நம்முன் இருக்கும் மிகப்பெரிய உதாரணம் இளையராஜா.

பொதுவாக பறையாட்டக் கலைஞர்கள் தங்களது ஆட்டத்தைத் தொடங்கி உச்சத்தை அடைவதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும். அதுவரையிலான அவர்களது ஆட்டம், அடுத்து ஆடவிருக்கும் வேகமான அசைவுகளுக்கான ‘warm up’ தான். உச்சத்திலிருந்து இயல்புக்குத் திரும்புவதற்கும் நேரம் எடுத்துக்கொள்வார்கள். இது ஏறக்குறைய கிராமத்தில் சாமியாடுவது போல்தான். ஆனால் சென்னை சங்கமத்தில் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் 15 நிமிடம், 20 நிமிடம் என்று நேரம் ஒதுக்குவது, கர்நாடக ‘வித்து’வான்கள் வந்தவுடன் முடித்துக்கொள்ளச் சொல்லுவது எல்லாம் அந்த கிராமக் கலைகளின் உன்னதக் கலையம்சத்தைப் பாதிக்கும். கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் தங்களது திறமையைக் காட்டவேண்டும் என்ற ஆவல், இறுதியில் கைதட்டலுக்கு ஆடும் கலைஞர்களாக அவர்களை மாற்றிவிடுகிறது. சென்னை சங்கமம் ஏற்படுத்தும் மிகப்பெரிய அழிவாக இதைத்தான் நான் பார்க்கிறேன்.

சென்னை சங்கமத்தை நடத்துபவர்களுக்கு உண்மையிலேயே நாட்டுப்புறக்கலைகளின் மீது அக்கறை இருந்தால், இந்தக் கலைகளை பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைத்து, அசல் கலைஞர்களை - அவர்களின் கல்வித்தகுதிக்கு முக்கியத்துவம் தராமல் - அந்தக் கலைகளை கற்றுத் தரும் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இவர்களிடம்தான் அதிகாரம் இருக்கிறதே! அதைப் பயன்படுத்தி இந்தக் காரியத்தைச் செய்யலாமே!" என்று பிரகதீஸ்வரன் கூறினார்.

மங்கலம், அமங்கலம் பார்த்து துவங்குகிறார்களோ என்னவோ, சென்னை சங்கமத்தில் காலையில் முதல் நிகழ்வை கர்நாடக சங்கீதப்பாடகர்களே துவக்கி வைக்கிறார்கள். பட்டுச் சேலைகள் பாடவும், அவர்களை மேடை ஏற்றவும் மயிலாப்பூர், கே.கே.நகர், தியாகராயர் நகர், பெசண்ட்நகர் மாதிரியான இடங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். சென்னை பற்றிய நமது பொதுப்புத்தியில் பதிந்து போன மேட்டுக்குடி சிந்தனைகளின் அடிப்படையில் வடசென்னை மீதான நவீன தீண்டாமையும் சென்னை சங்கமத்தில் துல்லியமாக வெளிப்பட்டு நிற்கிறது. கோபாலபுரம் என்றால் படித்த மேதாவிகள் இருக்கும் இடம், ராயபுரம் என்றால் ரௌடிகளின் வசிப்பிடம் என்கிற பொதுப்புத்தி ஒரு பாமரனுக்கு இருக்கலாம். ஒரு ஃபாதருக்கோ, கவியரசிக்கோ இருக்கலாமா என்பதே நமது கேள்வி. இந்த பொதுப்புத்தியும் வர்க்க குணமுமே கிராமப்புறக் கலைஞர்களை இரண்டாம் தரக் குடிகளாக நடத்தவும், வெளித்தெரியாத ஆனால் நுண்மையான தீண்டாமையை கர்நாடக சங்கீதத்துக்காரர்கள் காட்டவும் சென்னை சங்கமக் குழு அனுமதித்திருக்கிறது. ஆமாம் தோழர்களே, வடசென்னையில் நடந்த எந்தவொரு சென்னை சங்கம நிகழ்ச்சிகளிலும் மாமிகளோ, அம்மாஞ்சிகளோ நிகழ்ச்சி நடத்துவதைப் பார்க்க முடியவில்லை. அவர்களது நிகழ்ச்சிகள் எல்லாம் அண்ணா நகருக்கு அந்தப்புறம் தாண்டவே இல்லை.

மிகத்துல்லியமாக சென்னை சங்கமம் கர்நாடக சங்கீதக்காரர்களையும் பணக்கார பட்டுச் சேலைகளையும் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கும்போது எங்கள் அப்பனையும், ஆத்தாளையும் கொண்டு போய் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் அறைகளிலும், அறை கிடைக்காதவர்களை எம்.எல்.ஏ. ஹாஸ்டல் வளாகத்தில் டெண்ட் அடித்தும் தங்க வைத்திருக்கிறது. கோடிகளில் புரள்கிற பாதிரி ஜெகத்திற்கும், கனிமொழிக்கும் நாட்டுபுறக் கலைஞர்களையும் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து அவர்களுக்கும் சம உரிமை, சமூக அந்தஸ்து வழங்க முடியவில்லையா? ஒரு வேளை இதையும் நேரம் வரும்போது செய்வார்களோ என்னவோ? இப்படிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. அதை எல்லாம் சொன்னால் உலக உளவாளி என்று ஜெகத் சொல்லி விடுவார் என்ற பயம் நமக்கு இருப்பதால் நாம் அடுத்த விவாகரத்திற்குச் சென்று விடுவோம்.

ஸ்பான்சர்களும் & கிராம உணவுத் திருவிழா என்னும் மோசடி.............

ஒவ்வொரு வருடமும் மூன்று கோடியில் இருந்து பல கோடி ரூபாய் வரை சென்னை சங்கமத்திற்கு வருமானம் வருவதாக ஒரு நண்பர் சொல்கிறார். பெருமளவு திராவிட, ஆரிய கருப்புப் பணங்கள் குவிக்கப்படும் ஒரு திருவிழாவாகவே சென்னை சங்கமம் நடத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது. ஜெகத் கஸ்பர், தமிழ் மையம், கிறிஸ்தவப் பின்புலம், பட்டத்து இளவரசி கனிமொழியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நிரல் என்பதையும் தாண்டி இப்போது திமுக, கருணாநிதி, ஆளும்வர்க்க ஊடகங்கள் என்று அவதாரம் எடுத்து நிற்கிறது சென்னை சங்கமம். இன்றைய காலச் சூழலில் பலர் கருப்புப் பண முதலைகளை குறிவைத்து அவர்களை ஊடகம், சினிமா, என்று பல்வேறு துறைகளுக்கும் மறைமுகமாக இழுத்து வருவதை நாம் காண்கிறோம். சென்னை சங்கமமும் அதற்கான ஒரு வாய்ப்பாக உருவாகி நிற்கிறது என்ற உண்மையை நேர்மையாகப் பார்த்தால் நாம் புரிந்து கொள்ள முடியும். மர்மமான அதன் கணக்கு வழக்குகள், பெரிய வணிக நிறுவனங்களுக்கும் சென்னை சங்கமத்திற்குமான தொடர்புகள் என நெருக்கிப் பார்த்தால் இந்த கருப்பை வெள்ளையாக மாற்றும் வேதாந்தி வேலையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே இதன் கணக்கு வழக்குகள் பற்றி எழுதிய பத்திரிகையாளர் ஞாநியை பார்ப்பான் என்று திட்டிய ஜெகத் இப்போது நம்மை என்ன சொல்லித் திட்டப் போகிறாரோ தெரியவில்லை.

மிகப்பெரிய ஆளும் வர்க்க ஊடகங்கள், பைவ் ஸ்டார் ஹோட்டல்கள், மிகப்பெரிய தேசம் கடந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என்று பலரும் சென்னை சங்கமத்திற்கு ஸ்பான்சர் செய்கிறார்கள். அப்படி ஸ்பான்சர் செய்கிற ஹோட்டல்களே கிராமத்து உணவு என்று தாங்களே தயாரித்து விற்கிறார்கள். இரண்டு பரோட்டாவும் கறியும் எழுபது ரூபாய் என்று சென்ற வருடம் விற்றார்கள். இப்போது எவ்வளவுக்கு விற்றார்கள் என்று தெரியவில்லை. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, கும்பகோணம் குல்மா போன்ற விதவிதமாக தேடித் தேடியே ருசிக்கும் மனிதர்களுக்கு இம்மாதிரி பிராண்டட் உணவுகளை மட்டும் அங்கிருந்தே இறக்கி இங்கு வைத்து விற்று காசுபார்க்கிறார்கள். மற்றபடி கிராமத்து உணவு என்று இவர்கள் விற்கிற எந்த உணவும் கிராமத்தானின் கைபட்டு தயாராகவில்லை, மாறாக இங்கே உள்ள நட்சத்திர விடுதிகளில்தான் தயாராகிறது. வழக்கம் போல ஏமாந்த தமிழினமோ இதுதான் கிராமத்து உணவு என்று வாங்கித் தின்கிறது. வாங்கித் தின்பது என்றவுடன் நினைவுக்கு வருகிறது சென்ற வருட கவிதைத் திருவிழா.

இலக்கியவாதிகளுக்கு சென்னை சங்கமம் வழங்கிய கௌரவம்

ஒவ்வொரு வருடமும் தமிழ் இலக்கியவாதிகளைத் திரட்டி சென்னை சங்கமத்தின் இன்னொரு அங்கமாக தமிழ்ச் சங்கமும், அதில் ஒரு பகுதியாக கவிதைத் திருவிழாவையும் நடத்துகிறார்கள். அந்த கவிதைத் திருவிழாவில் 'கடைசி வரை எல்லோரும் ஆடாமல் அசையாமல் இருந்தால்தான் கிளம்பும்போது பயணப்படி' என்று பணத்தைக் காட்டி எழுத்தாளனைப் பயமுறுத்தியிருக்கிறார்கள்... எழுத்தாளனை இப்படி டீல் பண்ணுவதை பொறுத்துக் கொள்ள முடியாத தோழர் ஆதவன் தீட்சண்யா விழா மேடையிலேயே தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஆளும் கும்பலின் அடிவருடிகளாக கவிஞர்கள் செயல்பட முடியாது என்பதை வெளிப்படுத்தினார் ஆதவன். ஒவ்வொரு ஆண்டும் கவிதைத் திருவிழாவில் வாசிக்கப்படும் கவிதைகள் அடுத்த ஆண்டு திருவிழாவின்போது தொகுப்பாக வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டு வெளியான நூலில் தோழர் ஆதவன் தீட்சண்யா, தோழர் கவின்மலர் ஆகியோரின் கவிதைகள் இடம் பெறவில்லை. காரணம் இதுதான்: நாங்கள் சொல்வதைக் கேட்காமல், எங்களுக்கு குடைச்சல் கொடுக்கும்படியான கேள்விகளைக் கேட்டால் உங்களது கவிதைகளை நாங்கள் நிராகரிப்போம். தமிழில் எழுத்தாளன் என்று சொல்லக் கூடிய எந்த மனிதனும் இந்தக் கேவலமான போக்கை தட்டிக் கேட்க முன்வரவில்லை என்ப‌தோடு இந்த வருடம் கவிதைத் திருவிழாவில் கலந்து கொள்ள நமது இலக்கியவாதிகள் போட்டி போட்டார்கள் என்பது நம் தமிழ் இலக்கியவாதிகளின் போலியான இருத்தலை வெளிப்படுத்தி நிற்கிறது.

தோழர் ஆதவனின் எதிர்ப்புக் குரல் ஜூ.வி.யிலும், கீற்று தளத்திலும் வெளிவந்தது. ஆனால் வெளியில் தெரியாத ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்........

யூமா வாசுகி என்றொரு தமிழ் எழுத்தாளர்; சமகால தமிழிலக்கியத்தில் யூமாவின் பங்கு வீச்சு மிகுந்தது. கடந்த ஆண்டு சென்னை சங்கமம் நடத்திய கவிதைத் திருவிழாவுக்கு காலையில் சென்ற யூமா வாசுகி, மதியம் மூன்று மணிவரை அழைக்கப்படவில்லை. காலையிலே சென்ற யூமா வாசுகி பசி தாங்காமல் அங்கே உணவருந்தி விடுகிறார். யூமா வாசுகி கவிதை வாசிக்க அழைக்கப்பட்டபோது, மைக்கைப் பிடித்த அவர் “இங்கு நடக்கிற எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. இங்கு என்னால் கவிதை வாசிக்க முடியாது. ஆனால் என்ன செய்ய? நீங்கள் கொடுத்த உணவை உண்டு விட்டேன். நான் உண்ட அந்த உணவுக்கு ஈடாக இந்த நூலை தந்து விட்டுப் போகிறேன்’’ என்று தான் வைத்திருந்த நூலை கொடுத்து விட்டுச் செல்கிறார் யூமா வாசுகி. ஒரு தமிழ் தலைமகனின் ஆட்சியில் தமிழ் எழுத்தாளனுக்கு தலைமகனின் கடைசி மகள் வழங்கிய அதிகபட்ச மரியாதை இதுதான். ஆனால் பெரும்பாலான இலக்கியவாதிகள் சூடு சுரணை இல்லாதவர்களாக இருப்பதால், அதிகார வர்க்கத்தினர் அழைத்ததும் ஓடோடிச் சென்று கவிதை படிக்கிறார்கள். அவமானம் என்ற ஒன்றையே ஆடையாகக் கொண்டிருக்கும் இவர்கள் தமிழ் தலைவலி மகன் கருணாநிதி நடத்தும் செம்மொழி சங்கமத்திற்கும் ஓடிச் செல்ல இப்போதே ஆவலாக காத்திருக்கிறார்கள். (விரைவில் தமிழறிஞர்கள், தமிழ் இலக்கியவாதிகள் பற்றி விரிவாக எழுத இருக்கிறோம்)

டிசம்பர் சீஸனுக்காக வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் அம்மாஞ்சிகளின் பயணத்திட்டத்தை நிறைவுபடுத்தும் விதமாகத்தான் ஜனவரியில் சங்கமம் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் நமக்கு வருகிறது. பொங்கல் விடுமுறை நாட்களையொட்டி புத்தகக் கண்காட்சி நடைபெறும்போது, புத்தகக் கண்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதும்; விற்பனையும் அதிகரிக்கும். ஆனால் இந்த வருடம் சென்னை சங்கமத்திற்காக புத்தகத் திருவிழாவை விடுமுறை தினங்கள் குறைவாக இருக்கும் நாட்களில் முன்கூட்டியே நடத்த வைத்து, தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பகங்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள் சங்கமம் குழுவினர்.

மாமிகளுக்கு வழங்கப்படும் சமூக அந்தஸ்தும், போலீஸ் காவலும் எப்படிப்பட்டது என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் நமது கலைஞர்களுக்கு அதே அளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. கரகாட்டம் ஆடுகிற கிராமத்துப் பெண்ணை ஊரில் பண்ணைகள் எப்படி ஈனத்தனமாக நடத்துவார்களோ, அப்படித்தான் நகரத்துக் கலாசாரமும். ஆனால் எந்த பண்ணையும், ஆண்டையும் மாமியைச் சீண்டுவதில்லை. சென்னை ஈ.சி.ஆர். சாலையில் மாயாஜால் அருகே எமது பெண்கள் நிகழ்ச்சி நடத்தியபோது அங்குள்ள ரௌடிகள் அந்தப் பெண்களை சீண்டியிருக்கிறார்கள். காரணம் அவர்களுக்குப் போதிய‌ பாதுகாப்பில்லை.

சென்னை சங்கமம் பற்றி எழுத இன்னமும் எவ்வளவோ இருக்கிறது. இதை எல்லாம் நாம் எழுதுவதற்கான காரணம் சென்னை சங்கமத்திற்கு நமது வரிப்பணம் செலவிடப்பட்டதை ஒரு ஆண்டு மட்டுமே நாம் பார்த்தோம். அதன் பிறகு நமது வரிப்பணம் இந்த சுயமோகிகளின் வசூலாட்டத்திற்குப் பயன்படுகிறதா என்பதை நாம் தெரிந்து கொள்ளவே முடியவில்லை. ரகசியமான முறையில் நாமும் நமது மக்களும் சூறையாடப்படுகிறோம். ஈழத்தை கடைசி நேரத்தில் காட்டிக் கொடுத்து சூறையாடிய ஜெகத் கஸ்பர் நாட்டுப்புறக் கலைகள் தொடர்பாக இப்போது எடுத்திருக்கும் இந்த அவதாரத்தை அம்பலப்படுத்துவதுதான் நமது நோக்கம். ஏனென்றால் இந்த நரிகள் நாளை நமது எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையை தீர்மானிப்பவர்களாக வளரும் வாய்ப்பு பிரகாசமாக உருவாகியுள்ளது. அன்பார்ந்த தோழர்களே! இக்கட்டுரையைப் பிரதி எடுத்து நாட்டுப்புறக் கலைஞர்களிடம் கொண்டு செல்லுங்கள். அவர்கள் மீது சென்னை சங்கமம் கும்பல் கடைபிடிக்கும் நவீன தீண்டாமையையும் சுரண்டலையும் அம்பலப்படுத்துங்கள். இந்தப் போலிகளை மக்களின் முன்னால் நிறுத்துங்கள்.

- வசந்தகுமார்

Pin It