இறந்த விண் மீனைக் கண்டறிந்த தொலை நோக்கி..!!

இறந்த 3 தாய் விண்மீன்களைச் சுற்றி வரும் மூன்று கோள்களை சர்வதேச வானியல் ஆராய்ச்சியின் குழு கண்டுபிடித்து,உள்ளது. இவர்கள் பென் மாநிலத்தைச் சேர்ந்த விண்வெளியாளர்கள். இந்தத் தகவலை இவர்கள் 2011, அக்டோபர் 27 ம் நாளில் வெளியில் அறிவித்துள்ளனர். இவற்றை எல்லாம் இந்த ஆராய்ச்சிக் குழு ஒரு தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே. அந்த தொலைநோக்கியின் பெயர் ஹாபி எபெர்லி தொலைநோக்கி (Hobby-Eberly Telescope (HET)).

 exo_planets_370ஹாபி எபெர்லி தொலைநோக்கி..!

 ஹாபி எபெர்லி தொலைநோக்கி (Hobby-Eberly Telescope (HET) ) என்பது உலகத்தின் நான்காவது பெரிய தொலைநோக்கி. இது மெக்டொனால்டு பார்வையகத்தில்/நோக்ககத்தில் (McDonald Observatory) அமைந்துள்ளது . டெக்சாஸ் லெப்டினன்ட் கவர்னர் பெயர் மற்றும் ராபெர்ட் E.எபெர்லியின் பெயர்களை (Texas Lieutenant-Governor Bill Hobby and for Robert E. Eberly, a Penn State benefactor.) இணைத்து இதற்கு சூட்டியுள்ளனர். 1997லிருந்து இந்த தொலைநோக்கி செயல்படுகிறது. பென் மாநிலம், டெக்சாஸ் பலகலைக்கழகம், ஸ்டேன் போர்ட் பல்கலைக்கழகம், லுட்விக் பல்கலை, மூன்சென் பல்கலை மற்றும் கோயட்டின்ஜென் பல்கலை (collaboration between Penn State and the University of Texas at Austin, Stanford University, Ludwig-Maximilians-Universitaet Muenchen, and Goerg-August-Universitaet Goettingen) என அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்பட்டு வானை தன் நுண் கண்களால் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இணைப்புகளுள் பென் மாநிலம்தான் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றுகிறது.

 திறமைசாலி தொலைநோக்கி.!

 ஹாபி எபெர்லி தொலைநோக்கியில், ஒளி வரும் துளையின் விட்டம் 9 .2 மீட்டர். ஒளி பிரதிபலிக்கும் ஆடியின் அளவு 9 .2 மீட்டரைவிட அதிகம். இதில் முதன்மை ஆடியில் 91 அறுகோண கண்ணாடிகள் உள்ளன, ஒளி பிரதிபலிக்க. இந்த ஹெட்(HET) தொலைநோக்கியின் அடிப்பகுதி அப்படியே 70- 81 பாகை வட்டமடித்து வானை ஆராயும். அப்போது இதுவரை நமக்குத் தெரியாமல் விண்வெளியில் வலம் வரும் பல விண்மீன்கள், அவைகளின் புதல்வர்களான கோள்கள் மற்றும் புதிய அண்டங்கள் போன்றவற்றை சல்லடை வலை போட்டுத் தேடும். சுமார் நொடிக்கு ஒரு மீட்டர் சுற்று வேகத்தில் நகரும் விண்மீன்களைக்கூட துல்லியமாய் கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது இந்த தொலைநோக்கி. இதுவரை அவற்றில் பல விண்மீன்களை கண்டுபிடித்துள்ளது. அந்த வலையில் சிக்கிய மீன்கள்தான் அக்டோபர் 27 அன்று அறிவிக்கப்பட்ட, இறந்து போன மூன்று விண்மீன்களும், அவற்றைச் சுற்றிவரும் மூன்று கோள்களும்.

அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டமூன்று புதிய கோள்களும் சுற்றி வரும் தாய் விண்மீன்களின் பெயர்கள்: HD 240237, BD +48 738, & HD 96127 -என்பதாகும். இவை நம் சூரிய குடும்பத்திலிருந்து பல பத்து ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. இதில் ஆச்சரியம் தரும் செய்தி என்னவென்றால், இவற்றில் ஒன்று மிக மிக அதிக நிறை உள்ளது மற்றும் அது இறந்த விண்மீனாகும் . இதனை அந்தக் குழுவின் தலைவரான அலெக்ஸ் வோல்ஸ்க்சான் ( Alex Wolszczan, an Evan Pugh Professor of Astronomy and Astrophysics at Penn State) என்ற வானவியல் பேராசிரியர்தான் கண்டுபிடித்தார். இவர்தான் முதன் முதல் 1992ல் வானில் சூரிய மண்டலத்திற்கு வெளியே சுற்றிவரும் வெளிக் கோள்களைக் கண்டுபிடித்தவரும் கூட. இந்த இறந்த விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்கள் நமக்கு பல எதிர்காலக் கனவுகளை, திட்டங்களை, புதிய வானியல் ஆராய்ச்சிக்கு தடம் போடும் என்று தெரிய வருகிறது. இப்போது இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்த புதிய கோள்கள், அவற்றைப் பற்றிய புதிய ஆராய்ச்சிக்கு நிறைய வழி வகை செய்துள்ளன. இது உலோகங்கள் எவ்வாறு இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை வானவியலாளர்கள் அறிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன.

வெளிக் கோள்களின் (Exo -Planets ) புதிய பரிமாணம்..!

இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்தக் கோள்களின் மண்டலம், நம் சூரிய குடும்பத்தை விட அதிகமான பரிணாமமும், பரிமாணமும் பெற்றது எனத் தெரியவந்துள்ளது. "இந்த மூன்று விண்மீன்களும், ஏற்கனேவே தம்மிடமுள்ள ஆற்றலை எல்லாம் இழந்துவிட்டு, சிவப்பு அரக்கனாக உருமாறிக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் இது தன்னருகே சுற்றி வரும் கோளை கபளீகரம் செய்துவிடும்", என வோல்ஸ்க்சான் கூறியுள்ளார். நமது சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு என்ன நிகழும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ/ எதனைச் சந்திரசேகர் சொன்னாரோ அதுவே இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களின் தலையெழுத்தும் என்று சொல்கிறார் வோல்ஸ்க்சான். நம் சூரியனும் எதிர்காலத்தில், தன் ஆற்றலை எல்லாம் இழந்து அதன் பூத உடல் ஊதிப் போய் சிவப்பு அரக்கனாக ஊதி ஊதி விரியும். அது சமயத்தில் நம் பூமியையும் கூட விழுங்கி விட நேரிடும். அது நடக்க இன்னும் 600 கோடி ஆண்டுகள் ஆகும்.

பழுப்புக் குள்ளனா..?

இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களில் ஒன்று பெரியது; அதிக நிறையுள்ளது மட்டுமல்ல. இதற்கு நம் வியாழன் அளவு பெரிய கோள் உள்ளதுதான் ஆச்சரியமான விஷயம். அது மட்டுமல்ல அதன் அருகில் இரண்டாவது ஒரு புதிரான பொருளும் காணப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக் குழுவின் கணிப்புப் படி, இந்த பொருள் வேறொரு கோளாகவும் கூட இருக்கலாம். அல்லது இது குறைவான நிறையுள்ள விண்மீனாகவோ இருக்கக் கூடும் என்று இந்த வானியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அல்லது நம் வானியலாளர்களுக்கு மிகவும் சுவாரசியமான பழுப்புக் குள்ளனாகவும் கூட இது இருக்கலாம் என்று நினைக்கின்றனர். இந்த பழுப்புக் குள்ளன் என்பது, விண்மீன் போன்ற வான்பொருள் ஆனால் இது மிகமிகக் குளிர்ந்த விண்மீன்களுக்கும், அசுரன் விண்மீன்களுக்கும் இடைப்பட்ட வான்பொருளாகும். “நாங்கள் தொடர்ந்து இந்த வான் பொருளைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்போம், இன்னும் சில வருடங்களில் இவர் யார் என்பதும் இவரைப் பற்றிய முழு ஜாதகத்தையும் நாங்க புட்டு புட்டு வைப்போம், அதன் முழு வண்ணமும் அடையாளமும் தெரிந்துவிடும்..” என்று சர்வதேச வானியல் ஆராய்ச்சி குழுவின் தலைவர் வோல்ஸ்க்சான் அறுதியிட்டுத் தெரிவிக்கிறார்.

ஓயாத இரைச்சல்..!

HET_250வோல்ஸ்க்சான் இன்னும் சில சுவையான தகவல்கள் தருகிறார். என்ன தெரியுமா? இந்த மூன்று விண்மீன்களும் சண்டைபோடுவது போல ரொம்பவும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனவாம். நம் சூரியனைவிட அதிக ஜொலிப்புடனும் , ரொம்பவும் ஆட்டம் போட்டு ஆடிக் கொண்டும் இருந்தனவாம். இந்த சத்தம் இவர்களை அதிகமாக கவனிக்க விடாமல் தடுத்தனவாம். நம் வீட்டுக் குட்டிகள் போடும் கும்மாளம் போல. ஆனால் பிரச்சினைகளுக்கும் மேல் ஒரு சவாலாகத் தான் இறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறை அதிகமுள்ள விண்மீன்களையும், அவற்றைச் சுற்றி வரும் புதிய கோள்களையும், அவற்றைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் மிகப் பெரிய சாதனைதான். இவற்றை எல்லாம் சூரியக் கதிர்களின் ஒளிவண்ணப் பட்டையைப் பிரித்து பதிவு செய்யும் நிழற்படக் கருவி(spectrographs) மூலமே கண்டறியப்பட்டது.

மலை முழுங்கி மகாதேவன்..!

இந்த குழு வேறொரு இறுதி முடிவையும் கூட செய்தது.. அதுதான் இன்னும் ஆச்சரியமான, சுவாரசியமான தகவல். இந்த மூன்று விண்மீன்களுக்கும் அவைகளின் சுற்றுப் பாதையில் நிறைய கோள்கள் இருந்திருக்கலாம். அவற்றை எல்லாம் இவை, மலை முழுங்கி மாகாதேவன் போல காலப்போக்கில் எல்லாவற்றையும் விழுங்கி விட்டன. இப்போது நமக்குத் தெரியும் ஒன்றை மட்டுமே தற்சமயம் பாக்கி வைத்துள்ளளது என்று கருதுகின்றனர். இபோது காணப்படும் கோள்களும் கூட தனது தாயிடமிருந்து சுமார் 0.6 வானியல் அலகு தொலைவில்தான், அதாவது 9 கோடி கி.மீ தூரத்தில்தான் சுற்றுகின்றன என்ற தகவல்களையும் தெரிவிக்கிறார் வோல்ஸ்க்சான். இந்த 0.6வானியல் அலகு என்ற மாய எண் கோள்களை விழுங்கும் தொலைவாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார் வோல்ஸ்க்சான்..

மிச்ச சொச்சமான கோள்...!

இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மற்றும் அதன் கொலைகளைப் பற்றி அறியும் தகவல்கள் நமது சூரிய குடும்பத்தின் தலையெழுத்தையும் கூட துல்லியமாய்த் தெரிவிக்கும் என நம்புகின்றனர். அது மட்டுமல்ல எப்படி நம் சூரியன் எதிர்காலத்தில் புதன், வெள்ளி, நம் பூமி, அதன் துணைக்கோள்களை விழுங்கும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர்.

Pin It

இந்நிகழ்வின் அறிவியல் முக்கியத்துவமும்  வரலாற்றுப் பின்னணியும்

17-ஆம் நூற்றாண்டில் கெப்ளரது கோள்களின் விதிகள் மற்றும் நியூட்டனின் இயக்க விதிகளைப் பயன்படுத்தி சூரியக் குடும்பத்தின் அளவினை ‘வானவியல் அலகின்’  வாயிலாகக்  கணித்தனர். வானவியல் அலகு (Astronomical Unit or A.U) என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரி தொலைவாகும்.  மேற்கூறிய விதிகள் சூரியக் குடும்பத்தின் கோள்களின் தொலைவை வானவியல் அலகில் கணித்தன.  ஆனால் வானவியல் அலகு என்பதன் அளவைக் கணிக்க இயலவில்லை.  18 ஆம் நூற்றாண்டில்  இந்த  அளவைத்துல்லியமாகக் கண்டறிய கடும் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன.  இந்த அலகில் ஏதேனும் தவறு நேரிட்டால், பேரண்டத்தின் அள வைக் கணிக்கையில் அந்தத்தவறு பல்கிப் பெருகிவிடும் அச்சம் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டில்  வெள்ளி  மற்றும் புதன் கோள்கள் 1631  ஆம் ஆண்டில்  சூரிய வட்டைக் கடப்பதைக் காண இயலும் என கெப்ளர் கணித்தறிந்தார். எனினும் 1631-ல் நிகழ்ந்த வெள்ளியின்  சூரியக்  கடப்பு  ஐரோப்பிய நாடுகளில்  புலப்படாத காரணத்தால் யாரும் அதனைக் காணவில்லை. பின்னர் ஜெரேமியா ஹாரக்ஸ்  எனும் இளம் ஆங்கிலேயர் 1639-ல் மீண்டும் ஒரு முறை வெள்ளியின் சூரியக் கடப்பு நிகழும் எனக் கணித்தார். அதனை உடனடியாக உலகிற்குத்தெரிவிக்க இயலாததால்   அவரும்  அவரது நண்பரான  வில்லியம் கிராப்ட்ரீ என்பவரும் மட்டுமே 1639-ல் வெள்ளி யின் சூரியக்கடப்பினைக் கண்ணுற்றனர்.  இதன் மூலம் வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பினை முதன் முதலில் பார்த்தவர்கள் எனும் வரலாற்றுச் சிறப்பை இவர்கள் பெற்றனர்.

பின்னர் 1677-ல் புதன் கோளின் சூரியக் கடப்பை எட்மண்ட் ஹாலி  கண்டார்.  இதன்மூலம், வெள்ளிக்கோளின் சூரியக் கடப்பின் உதவி கொண்டு பூமிக்கும் சூரியனுக்கு முள்ள தொலைவைக் கண்டறிய முடியும் என்று உணர்ந்தார். பூமியின்  பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளியின் சூரியக் கடப்பை  ஆய்வு செய்து வெள்ளியின் கோண மாற்றத்தை (Parallax) அளப்பதன் மூலம் வானவியல்  அலகின் அளவைக் கண்டறியும் முறையையும் அவர் வகுத்தார். இதன் பின்னர் 1761, 1769, 1874 மற்றும் 1882ல் நிகழ்ந்த வெள்ளியின் சூரியக் கடப்பின்போது உலகெங்கும் வானவியல் அலகின் அளவைக்காணும் பெரு முயற்சி வானவியலாளர்களின் ஒன்றிணைந்த உழைப்பால் நிகழ்ந்தது..

கருந்துளி விளைவு

வெள்ளியின் சூரியக்கடப்பைப் பயன்படுத்தி வானவியல் அலகைக் கண்டறியும் முயற்சியால் மிகவும் முக்கியமான பகுதி வெள்ளிக்கோள் சூரிய வட்டினுக்குள் முழுமையாகச் சென்றடையும் நேரத்தைக் கண்டறிவதாகும்.  இதனை இரண்டாம் தொடுநிலை   (II  contact) அல்லது (Interior Ingress)  என்பர் .

பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் இந்த நிகழ்வை ஆராயும்போது இந்தக் கட்டத்தைக் கடந்து சற்று உட்புறமாக வெள்ளிக்கோள் நகர்ந்த பின்னரும் சூரிய வட்டின் விளிம்புடன் கரிய     இணைப்பு ஒன்று தோன்றி ஒரு கருப் புத்திரவத்துளி போன்ற தோற்றத்தை   உருவாக்கியது.  இதனைக் கருந் துளி விளைவு (black  drop effect) என்பர்.

நாம் காணும் சூரிய வட்டின் ஓரத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் அதிகத்தொலைவு பயணம் செய்வதால் ஏற்படும் சூரிய விளிம்புக் கருமையும்  (limb darkening) பூமியின் வளிமண்டல  மாற்றங்களால் தோன்றும் ஒளிவிலகல் விளைவும் இணைந்து கருந்துளி விளைவைத்தோற்றுவிக் கின்றன.  இந்த விளைவின் காரணமாக சூரிய வட்டினுள் மிகச் சரியாக எந்த நேரத்தில்  வெள்ளிக் கோள் நுழைந்தது என்பதனைக் கண்டறிவதில் பிழை  நேரிட்டது.  இதன் காரணமாக வானவியல் அலகைத் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை.  1882-ஆம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளியின் சூரியக்கடப்பின்போது பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு சைமன் நியூகோம்ப் என்பவர், வானவியல்  வானவியல் அலகு என்பது 149.59 ± 0.31 மில்லியன்  கிலோ மீட்டர்  எனக்கணித்தார்.

என்றபோதும் சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு இந்த அளவில் தவறிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது.  ரேடார் அலைகளை சூரியனுக்குச்  செலுத்தி, அவை சென்று திரும்பும்  நேரத்தைக் கணித்து தற் காலத்தில் சூரியனின் தொலைவு கணக்கிடப் படுகிறது.  இதன்படி சூரியன் தொலைவு 149, 597, 870.691 ±  0.030 கிலோமீட்டர்   என்று அறியப் பட்டது.  இதில்  வேறுபாடு  30 மீட்டர்  அளவே யிருக்கும் என்பது குறிப்பி டத்தக்கது.  என்ற போதும் ரேடார் தொழில் நுட்பம் இல்லாத அக் காலத்தில்  வெள்ளியின் சூரியக்கடப்பின் மூலம் நம் முன்னோர் கள் சூரியனின் தொலைவைக் கண்டறிந்த  கடும் முயற்சி இணையற்றது.  இன்றும் பள்ளிக் குழந்தை கள்  உதவியுடன் சூரியனின் தொலைவு காணும் முயற்சி 2012 ஆம் ஆண்டின் சூரியக் கடப்பின்போது பல்வேறு நாடுகளில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், வெள்ளி, சூரியன், கோள்களின் இயக்கம், கணிதம் போன்ற பல்வேறு  துறைகளில் அனுபவம் பெறுகின்றனர்.

கண்  பாதுகாப்பு

சூரியனை வெறும் கண்களால் பார்ப்பது மிகவும் ஆபத்தானது.  மேலும் எக்காரணத்தைக் கொண்டும், தொலை நோக்கி அல்லது  பைனா குலர் மூலமோ அல்லது எந்த உருப்பெருக்கு கருவியைக் கொண்டோ சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது .  அப்படிச் செய்தால் கண் பார்வையை இழக்க நேரிடும்.  சூரியனைக் காண எளிய  ஒரு வழி சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்து பார்ப்பதாகும்.  ஒரு  சிறிய  5 மில்லி மீட்டர் அளவிலான துளையை ஒரு அட்டையில் ஏற்படுத்தி அதன் வழியே ஒரு கண்ணாடியின் உதவி கொண்டு சூரிய ஒளியைப் பாய்ச்சினால் அட்டையின் மறுபக்கத்தில் சற்று தூரத்தில் சூரியனின் பிம்பம் உருவாகும்.  அங்கு ஒரு வெண்ணிற அட்டையைப் பயன்படுத்தி சூரியனின் பிம்பத்தைக் காணலாம்.  இதில் ஒரு சிறு புள்ளிபோல வெள்ளிக்கோள் நகர்வதைக் காணலாம்.

ஒரு சிறிய கண்ணாடியில் சிறு துளையிட்ட அட்டையை ஒட்டி சூரியனின் பிம்பத்தை அந்தத்துளை வழியே ஓர் இருண்ட அறையில் அமைந;த வெண்திரையில் பாய்ச்சியும் காணலாம்.  தொலைநோக்கி அல்லது பைனாகுலரின் வழியே வெளிவரும் சூரியனின் பிம்பத்தைத் திரையில் விழச்செய்தும் காணலாம்.  பற்ற வைப்பவர்கள் பயன்படுத்தும் 14-ம் எண்  (Welders glass shade No.14) ஒளி வடிகட்டி கொண்டும் சூரியனைக் காணலாம்.  எனினும் ஒளிவடிகட்டிகளில் கீறல்களோ, துளைகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையம் பி.எம்.பிர்லா கோளரங்கத்தில்  2004 ஜுன் மாதம் 8 ஆம் நாள் பொதுமக்கள் வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பினைப் பாதுகாப்பாகக் காண தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு 8 தொலைநோக்கிகள் வாயிலாக சூரியனின் பிம்பத்தைத் திரையில் விழச் செய்து பொதுமக்கள் காணும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.   காலை 10.45 மணி முதல் மாலை 4.51 மணி வரை அதனை பொது மக்கள் கண்டுகளித்தனர்.  இவ்வரிய காட்சியை   சுமார் 11,000 பேர் கண்டு களித்தனர்.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)

Pin It

கருந்துளை(Black hole) என்றால் என்ன?

கருந்துளை என்பது விண்வெளியிலுள்ள வலிமைமிக்கதும் அதிக ஈர்ப்புவிசை கொண்டதுமான ஒரு பொருளாகும். நாமறிந்த பொருட்களிலேயே மிக வேகமாகப் பயணிக்கக்கூடியது ஒளியாகும் (300000 கி.மீ/நொடி). கருந்துளையின் ஈர்ப்புவிசையிலிருந்து ஒளிகூடத் தப்ப முடியாது. ஒளியே கருந்துளையின் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பமுடியாதென்றால் நாமறிந்த வேறு எந்தப்பொருளும் தப்பமுடியாது.

கருந்துளை என்றவுடன் அது ஏதோ ஒரு துளை என்று நினைத்து விடாதீர்கள்.  அது துளையோ வெற்றிடமோ இல்லை. கருந்துளை என்பது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடக்கி வைக்கப்பட்ட பலபொருட்களின் தொகுப்பாகும். மிகக்குறைந்த இடத்தில் நிறைய பொருட்கள் அதிக அழுத்தத்தில் அடக்கிவைக்கப்படும்போது அவற்றின் ஈர்ப்புவிசை அதிகமாகும். எனவே கருந்துளை தம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் அதிகவிசையுடன் ஈர்க்கும். அதை ஏன் கருந்துளை என்கிறோம் என்கிறீர்களா? கருந்துளைகள் விண்வெளியில் எவ்வித ஒளியையும் வெளிவிடாததாலும் கருநிறத்திலுள்ள ஒருதுளையைப் போன்று தோன்றுவதினாலும் கருந்துளைகள் என அழைக்கப்படுகின்றன.

கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன?

பெரிய விண்மீனின் எரிபொருள் தீர்ந்துவிட்டால்  அவ்விண்மீனால் அதன் எடையைத் தாங்க முடியாது. விண்மீனிலுள்ள ஐட்ரசன்(Hydrogen) அடுக்குகள் விண்மீனின் மீது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். இவ்வழுத்தத்தினால் விண்மீன் சுருங்கி அளவில் சிறியதாகும். இறுதியில் விண்மீன் அணுவைவிட(Atom) மிகச் சிறியதாகும். ஒரு பெரிய விண்மீன் சுருங்கி அணுவைவிடச் சிறியதாகும்போது அதன் அடர்த்தியும் ஈர்ப்புவிசையும் மிகமிக அதிகமாகிக் கருந்துளை உருவாகின்றது. இந்த மீப்பெரு ஈர்ப்புவிசையால் அது தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களையும் தன்னுள் ஈர்க்கிறது.

விண்மீன் மிகச்சிறியதாவதால் அதன் எடை குறையுமா?

இல்லை. ஒருவிண்மீன் சுருங்கி கருந்துளையானால் அதன் நிறை குறையாது. சிறிதளவு பஞ்சைக் கையில் எடுத்துக்கொண்டு அதை நன்றாகச்சுருட்டிச் சிறியதாக்கினாலும் அதன் எடை குறையாது அல்லவா? அதைப்போன்றுதான் விண்மீன் சிறியதானாலும் அதன் எடைகுறையாது.

கருந்துளைகள் எவ்வளவு பெரியதாக இருக்கும்?

கருந்துளைகளின் அளவு அவற்றில் எந்த அளவுக்குப் பொருட்கள் உள்ளனவோ அதைப்பொறுத்து வேறுபடும். மிகப்பெரிய வீண்மீன்கள் அழிந்து அவற்றின் எச்சங்கள் கருந்துளைகளாகியுள்ளன. நமது சூரியனைவிடச் சிலமடங்கு பெரிய கருந்துளைகள் உள்ளன. இவை மற்ற கருந்துளைகளோடு ஒப்பிடும்போது அளவில் மிகச்சிறியதாகும்.  சில விண்மீன்மண்டில‌ங்களின்(Galaxy) மையத்தில் சில கருந்துளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சூரியனுள்ள பொருட்களைக்காட்டிலும் 100 மில்லியன் மடங்குப் பொருட்களையோ அதைவிட அதிகமான பொருட்களையோ கொண்டிருக்கும்.

கருந்துளைகளைப் பார்க்க முடியுமா?

கருந்துளைகளை நம்மால் பார்க்கமுடியாது. ஆனால் விண்வெளியாளர்கள் கருந்துளைகள் உள்ள இடத்தினைக் கண்டறியமுடியும். கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அதிவேகத்தில் இழுப்பதினால் அப்பொருட்கள் அதிகவெப்பமடைந்து X-கதிர்களை வெளியிடும்.  இந்த X-கதிர்களைப் புவியிலிருந்து கண்டறியலாம்.

நம்முடைய பால்வீதியின்(Milky Way) மையத்தில் கருந்துளைகள் உள்ளனவா?

ஆம். நமது பால்வீதியின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. அது சூரியனைவிட 3 மில்லியன் மடங்கு எடைகொண்டது.  புவியிலிருந்து 24000 ஒளிஆண்டுகள்(Light Years) தொலைவில்உள்ளது. இக்கருந்துளை புவியிலிருந்து  மிகத்தொலைவிலுள்ளதால் அதனால் நமக்கு பாதிப்பு ஏதுமில்லை.

நமது சூரியன் கருந்துளையாக வாய்ப்பு உள்ளதா?

இல்லை.நமது சூரியன் அளவில் மிகச்சிறியது. சூரியன் கருந்துளையாக மாறவேண்டுமானால் அது இப்போது இருப்பதைவிட பலமடங்கு அதிக எடைகொண்டதாகவும் பெரியதாகவும் இருக்கவேண்டும்.

ஆங்கில மூலம்http://coolcosmos.ipac.caltech.edu/cosmic_kids/AskKids/blackholes.shtml , http://www.kidsastronomy.com/black_hole.htm

- வி.நரேந்திரன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

சூரிய மண்டலத்தில் சிறு துண்டுகளாக சுற்றி திரியும் விண்கற்கள் பல உள்ளன. அவை பெரும்பாலும் சூரியனை மையமாகக் கொண்டு தான் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் விண்கற்கள் சில வேளைகளில் கிரகங்களில் மோதுவதும் உண்டு.

அவ்வாறான ஒரு மோதலின் போது தான் பூமியில் காணப்பட்ட டைனோசரஸ் போன்ற பழங்கால உயிரினங்கள் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி ராபர்ட் மெக்மில்லன் என்பவர் ஒரு விண்கல்லை கண்டுபிடித்தார். இந்த விண்கல்லுக்கு 2005 YU55 என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது ஏறக்குறைய கோள வடிவில் உள்ளதாகவும் இதனுடைய விட்டம் 400 மீட்டர்கள் (1,300 அடிகள்) இருக்கும் எனவும் கணக்கிட்டுள்ளனர். இது மெதுவாக சுழல்கிறது எனவும் ஒரு முழு சுழற்சிக்கு 18 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனுடைய மேற்பரப்பு மிகக்கருமையாக காணப்படுகிறது.

வரும் நவம்பர் 8-ம் தேதி 23:28 மணிக்கு (இந்திய நேரப்படி நவ.9 அதிகாலை 04:58 மணி) இந்த விண்கல் பூமிக்கு அருகில் வரவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அருகில் வருகிறது என்பதால் பயப்பட வேண்டிய தேவையில்லை. அது பூமியின் மீது மோதுவதற்கோ அல்லது வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துவதற்கோ வாய்ப்பில்லை. குறிப்பாக அதனுடைய ஈர்ப்புவிசை காரணமாக பூமியின் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.

இந்த விண்கல் தனது சுற்றுப்பாதையில் வரும்போது 3,24,600 கிலோ மீட்டர்கள் (2,01,700 மைல்கள்) வரை பூமியை நெருங்கி வரும் எனக் கணித்துள்ளனர். இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தில் 0.85 மடங்கு மட்டுமே. எனவேதான் பூமியை நெருங்குகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவியின் வட, தென் பாகங்களிலிருந்து இதனை நன்றாக கவனிக்க முடியும்.

நவம்பர் 4-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவின் விஞ்ஞானிகள் கோல்ஸ்டன்(Goldstone) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலமும் பியர்டோ ரிகா(Puerto Rico)வில் உள்ள ரேடார் அமைப்புகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கவுள்ளனர். இதனை ஒளியியல், அகச்சிகப்பு, ரேடார் தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1976-ம் ஆண்டு 2010 XC15 என்ற ஒரு விண்கல் சந்திரனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தைப்போல் 0.5 மடங்குக்கு நெருங்கி வந்தது. அப்போது விஞ்ஞானிகள் அதை கவனிக்க தவறி விட்டனர். எனவே, இம்முறை நெருங்கி வரும் 2005 YU55ஐ மிகத் தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அடுத்து 2028-ம் ஆண்டு 2001 WN5 என்ற விண்கல் பூமியை நெருங்க உள்ளது. அது சந்திரனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தைப்போல் 0.6 மடங்குக்கு நெருங்கி வரவுள்ளது. எனவேதான் விஞ்ஞானிகள் இம்முறை விண்கல்லை கண்காணிப்பதில் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Pin It