ஜாதி, மத, மொழி, நாடு என்ற பேதமின்றி, இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே.

அந்தத் தாய் யாரென்று அறிந்தால் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் கொள்வீர்கள். அந்தத் தாய் 'நட்சத்திரம்' தான். நம்மில் பலர் நட்சத்திரம் (ஸ்டார்) ஆக வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்கள். அவர்களுக்கு, தாங்கள் நட்சத்திரத்தின் குழந்தைகள்தான் என்ற செய்தி பெருமையாகத்தானே இருக்கும்.

நாம் அனைவரும் எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம் என்று விளக்கமாக பார்ப்போம்.

உயிர்கள் உருவாக பல தனிமங்கள் தேவை. மனிதர்களாகிய நமக்கு ரத்தம் சுத்தமாவதற்கு வேண்டிய ஆக்சிஜென், எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியம், ரத்தத்திற்கு வேண்டிய இரும்புச் சத்து, மற்றும் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் என்று தனிமங்களும், கூடவே உப்பில் உள்ள சோடியம் மற்றும் பொட்டசியம், மக்னிசியம் போன்ற பல தனிமங்கள் தேவை. அவை இல்லை என்றால் உயிர் வாழ இயலாது என்பது அனைவர்க்கும் தெரியும்.

மேலும் தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற பல தனிமங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன.
 
இந்தத் தனிமங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி அறிவியலாளர்கள் ஓர் அட்டவணையை ஏற்படுத்தியுள்ளனர் (PERIODIC TABLE). இந்தத் தனிமங்களைப் பற்றி ஆராய்ந்து அதன் அமைப்பு, குணங்கள், பயன்கள் போன்றவற்றை அறிந்து, அவைகளைப் பயன்படுத்தி, நாம் வாழ்வை இனிதே நடத்த அறிவியலாளர்கள் வழி வகுத்திருக்கிறார்கள்.

மாரடைப்பு வந்தால் உயிருக்குப் போராடும் ஒருவருக்குத் தேவையான, ஆக்சிஜன் மற்றும் பல மருந்துகளைக் கொடுத்து, பாசக்கயிறைப் போட்டு இழுத்துக் கொண்டிருக்கும் எமனிடம் போராடி, அந்த பாசக்கயிறை அறுத்து, போய்க்கொண்டிருந்த உயிரை மீண்டும் கொண்டு வர உதவுவார் மருத்துவர்.

ஒவ்வொரு தனிமங்களின் குணங்களை வெகு நாள் ஆய்ந்து அறிந்த அறிவியலாளர்கள் பணி தான் அவர்களுக்கு உதவியாயிருக்கின்றது.

இந்த தனிமங்கள் எல்லாம் பூமியில் கிடைக்கின்றன. சரி பூமிக்கு இவை எப்படி வந்தன?

நட்சத்திரங்களில் தான் முதலில் இவை எல்லாம் உருவாகின என்று அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். ஏன் பூமியில் நாம் காணும் அனைத்துப் பொருட்களும் நட்சத்திரத்திலிருந்துதான் உருவாயின. நட்சத்திரத்திலிருந்து அவை பூமிக்கு எப்படி வந்தன?

நம் சூரியன் என்ற நட்சத்திரத்தில் இது போன்ற பொருட்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நம் சூரிய‌னில் உருவாகும் பொருட்கள் நமக்குக் கிடைக்காது. நம்முடைய சூரியனுடைய தாத்தாவாகிய முதல் தலைமுறை நட்சத்திரம் உருவாக்கியதை நாம் அனுபவிக்கிறோம். முன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நமது சூரியன் உருவாக்கும் பொருட்கள் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கும், உயிர்களுக்குத்தான் உபயோகமாகும்.

எப்படி என்று பார்க்கலாமா?

சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, ஒரு பலூனைப் போல விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு தனிமங்கள் தான் இருந்தது. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்(சுமார் 75 சதவீதம் ஹைட்ரஜன், 25 சதவீதம் ஹீலியம்). வாயுக்களான இவை இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.

ஆச்சரியம் என்னவென்றால் அந்த இரண்டு தனிமங்கள் (வாயுக்கள்) தான் இப்போது நாம் காணும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், அதைச் சுற்றிவரும் கோள்களும், இந்த பூமியும், அதில் நாம் காணும் அனைத்துப் பொருட்களுமாக உருமாறின.

எப்படி?

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரஜன் அணுக்களின் ஈர்ப்புவிசையினால் ஏற்பட்ட பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகின. பல கோடி வெப்பத்தைக் கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே, அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் புதிதாக உருவாகியது. இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல் தான் ஒளியாகிறது. நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாக இந்த இணைப்பு நடந்துகொண்டே இருக்கின்றது.

நட்சத்திரதிற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஒரு ஹீலியம் அணு புதிதாக உருவாவதுபோல, கூடவே இன்னும் பல அணுச்சேர்க்கைகள் நடக்கின்றன. புதிதாக உண்டான இரண்டு ஹீலியம் அணுக்கள் இணைந்து 'பெரிலியம்' என்ற தனிமம் உண்டாகிறது. அதோடு நிற்காமல் ஒரு ஹீலியம் அணுவும் ஒரு பெரிலியம் அணுவும் சேர்ந்து உயிர்களுக்குத் தேவையான முக்கியமான தனிமம் 'கார்பன்' உருவாகிறது.

புதிதாக தோன்றிய அணுக்களின் இணைப்பு மேலும் தொடர்கிறது. இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிரின் ஆதாரமான பிராணவாயு (OXYGEN) உருவாகிறது. இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்து ஒரு 'மெக்னீசியம்' அணு உருவாகிறது. இப்படி பற்பல அணுச்சேர்க்கைகள் நடந்து ஒன்று, இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய அட்டவணையில் உள்ள 26 என்ற எண் கொண்ட இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில் உற்பத்தியாகிறது.

நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார் கோடி டிகிரி வெப்பத்தில் தான் இந்த அணுச்சேர்க்கைகள் நடக்க முடிந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் புதிய தனிமங்களை உண்டாக்கும் பணியில் மனிதன் இறங்கி சில தனிமங்களை உண்டாக்கி வெற்றியும் பெற்றுள்ளான். முன்னதாக பூமியில் உள்ள தனிமங்களிலிருந்து தான் அவை உருவாக்கப்பட்டன. சிறிய அளவில் தான் இவைகளை உண்டு பண்ண முடியும். பெருமளவில் பூமியில் கிடைப்பவை நட்சத்திரங்களில் உற்பத்தியானவை.

தனிமங்களின் அட்டவணையில் இரும்பிற்கு மேல் உள்ள தனிமங்களான தங்கம், வெள்ளி, யூரேனியம் போன்றவை உண்டாக, நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் தேவை. அதனால் நட்சத்திரங்களுக்குள் தனிமங்கள் உற்பத்தி, மூடப்பட்ட தொழிற்சாலை போல நின்று விடுகிறது.

பிறகு எப்படி அவை உருவாகின?

அந்த முதல் தலைமுறை சூரியன் தன வாழ்நாட்கள் முடிந்தபின் அதிபயங்கரமாக வெடித்துச் சிதறும். பிரபஞ்சத்தில் அது மிக அற்புதமான காட்சியாகும். சூப்பர் நோவா என்று கூறுவார் இதனை. அப்படி வெடிக்கும் போது உண்டாகும் அதிபயங்கர வெப்பத்தில் இரும்பு அணுக்களும் அணுச்சேர்க்கையால் இணைந்து இரும்பிற்கு மேல் அணு எண் கொண்ட யூரேனியம், தங்கம், வெள்ளி போன்ற மற்றெல்லா தனிமங்களும் உண்டாகி, நட்சத்திரம் வெடிக்கும் போது, வாயுக்களாக பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டன. பல கோடி மைல்கள் பரந்து விரிந்து கிடக்கும், பார்க்க பரவசமூட்டும் இந்த வாயுக்கூட்டங்களை 'நேபுல்லா' என்றழைப்பர்.

இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டதில் நட்சத்திரத்தில் உருவான எல்லா தனிமங்களுடன், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள ஹைட்ரஜன் வாயுவும் கலந்திருக்கும்.

பிரசவ மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படும்போது எல்லோருக்கும் தெரியும், குழந்தைகள் பிறக்கப் போகின்றன என்று. அதே போல பிரபஞ்சத்தில் காணும் இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டங்களை காணும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு அந்த வாயுக்கூட்டத்தில் 'நட்சத்திரங்கள்' பிறக்கப் போகின்றன என்று தெரியும்

காரணம் , ஈர்ப்பு விசை தன் பணியை அங்கு துவக்கும். ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று இழுத்து, வெப்பமும் அடர்த்தியும் அதிகமாகி, புதிய அடுத்த தலைமுறை நட்சத்திரம் (நமது சூரியனைப் போல) உருவாகும். நட்சத்திரத்தின் தோற்றம் ஒரு அதி பயங்கர வெடிப்புடனும், அதிர்வுடனும் நடக்கும். புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைச் சுற்றி, தூசுகளும், வாயுக்களும் வெடிப்பினால் எறியப்பட்டு அவைகள் அந்த நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கும். அவைகளும் ஈர்ப்பு விசையால் இணைந்து, முதலில் சிறு சிறு பாறைகளாக உருவாகி, அந்தப் பாறைகள் மேலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்களாக உருவாகும். அந்த தூசுகளிலும், வாயுக்களிலும் தான் எல்லா தனிமங்களும் உள்ளனவே. அதனால்தான் அந்தக் கோள்களில் ஒன்றான நமது பூமியிலும் அனைத்து தனிமங்களும் கிடைக்கின்றன.

சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தவிர மற்ற பாறைகளிலும் (ASTEROID) இந்த தனிமங்கள் இருக்கும். ஏனென்றால் சூரியன் உருவாகும்போது உண்டான கோள்களைப்போல தோன்றியதுதான் அந்த பாறைகளும். நமது சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் அந்தப் பாறைகளில் தங்கம் உட்பட பல தனிமங்கள் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு கோள் கண்டுபிடிக்கப் பட்டது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிய அந்தக் கோள் முழுவதும் வைரங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒருதடவை சென்று வந்தால், உலகத்தின் முதல் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். சிக்கல் என்னவென்றால் அந்த கோள் நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. எப்படியாவது முயற்சி செய்து அங்கே போய் சேர்ந்து விடலாம் என்று நினைப்போருக்கு ஒரு மோசமான தகவல் என்னவென்றால் அங்கு வெப்பம் சுமார் 4000 டிகிரி வரை உள்ளது என்பதுதான்.

பூமியில் உள்ள சத்துக்களை எடுத்து விளையும் பயிர்களைத் தின்று வளரும் மிருகங்களையும், அந்த மிருகங்களையும், பயிர்களையும் உண்டு வளரும் நாமும் அடிப்படையில் நட்சத்திரத்தில் இருந்து வந்தவர்கள் தான். இனி யாரவாது நம்மைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால், எந்த வித ஐயமுமின்றி 'நான் நட்சத்திரத்திலிருந்து வருகிறேன்' என்று கூறலாமல்லவா?

நட்சத்திரத்தின் உள்ளே உற்பத்தியான நாம் எல்லாம் அதன் பிள்ளைகள் அல்லவா? நாம் அனைவரும் ஒரு தாய் மக்களல்லவா? ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, புவியின் பல பகுதிகளுக்கு பரவிச் சென்ற மனிதம் ஒரு மாபெரும் குடும்பம் என்பதை இந்த அறிவியல் உண்மை மீண்டும் நிரூபிக்கின்றதல்லவா?

ஒரு தாய் மக்களிடையே, ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் கலவரங்களும், போர்களும் வேண்டுமா?

ஒருகாலத்தில் குகைகளில் கற்களை மட்டுமே ஆயுதமாய் உபயோகித்து வாழ்ந்த காட்டுமிராண்டிகளின் வாழ்க்கையைப் பார்த்து நாம் கேவலமாக இப்போது சிரிக்கின்றோம். அவர்கள் அறியாமல் செய்த தவறு அது. நாகரீகம் நன்கு வளர்ந்த இந்த காலத்தில் ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் சண்டையிடும் நம்மைப் பார்த்து நம் வருங்கால சந்ததியினர் 'படித்த முட்டாள்கள்' எனக் கூறி எள்ளி நகையாடுவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- ஜெயச்சந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

32 comments

32
P.Selvaraj
அருமை,வாழ்த்துக்கல்
shafiq
அப்போ ஐயா அவர்கள் நாம் ஒரு தாய் ஒரு தந்தைக்கு பிறந்தவர்கள் என்கிறார் அப்படித்தானே?...சரி..இந்த ஒரு ஜோடியை படைத்தது கடவுள் என்கிறேன் நான்...
kurinji
மிக அருமையான செய்தி
Joseph a
மிக மிக அருமை! இது போன்ற செய்திகள் அதிகம் தர வேண்டுகிறேன்.
Tholan Mohan
மிக அருமையான கட்டுரை...தொடர்ந்து அரிவியல் கட்டுரைகள் எழுதுங்கள்...

//..இந்த ஒரு ஜோடியை படைத்தது கடவுள் என்கிறேன் நான்...// நீங்கள் என்ன் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் ஆதாரம் வேண்டும்...
[email protected]
இந்த ஒரு ஜோடியை படைத்தது கடவுள் என்கிறேன் நான். என்று சபிக் அவர்கள் கூறுகிறார். இந்த கட்டுரையில் ஆசிரியர் சொல்லவந்தது பிரபஞ்சத்திலும் , இந்த பூமியிலும் எப்படி பொருள்கள் உருப்பெற்றன, அதிலிருந்து உயிர்களும் மனிதர்களும் தோன்றினர் என்பதுதான் . ஒருதாய் , தந்தை உறவு , அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை பற்றி அவர் கூறவில்லை. ஒரு விஞ்ஞான உண்மையை கூறும்போது அதைப்பற்றி கருத்து கூறாமல் , கடவுளை பற்றி சொல்லவருவது , மதங்கள் மனிதனின் அறிவாற்றலை , சிந்திக்கும் திறனை எவ்வளவு தூரம் முடக்கி உள்ளது என்பதை நீங்களே வெளிச்சமாக்குகிரீர்கள் . உங்கள் நம்பிக்கை இழந்த தன்மையை தான் இது காண்பிக்கிறது.
A.Jayaparimalavalli
இது போன்ற அறிவியல் ஆய்வு செய்கின்ற விஞ்ஞானிகளுக்கும் அதனை அனைவரும் புரிந்துக்கொள்ளும்படி கட்டுறை மூலம் எடுதுறைக்கும் ஜெயசந்திரன் போன்ற வழிகாட்டிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இனி சூரிய நமஷ்காரத்தோடு சேர்த்து நட்ஷத்திரத்திற்கும் நமஷ்காரம் செய்ய தோன்றுகிறது.
Rabik
//ஒரு விஞ்ஞான உண்மையை கூறும்போது அதைப்பற்றி கருத்து கூறாமல் , கடவுளை பற்றி சொல்லவருவது , மதங்கள் மனிதனின் அறிவாற்றலை , சிந்திக்கும் திறனை எவ்வளவு தூரம் முடக்கி உள்ளது என்பதை நீங்களே வெளிச்சமாக்குகிரீர்கள் //

இஙுகு யாருக்கு சிந்திக்கும் திறன் முடங்கி உள்ளது. கண்ணாடி பாட்டில்கள் வெடித்து சிதறின. திடீர் என்று தாஜ்மஹால் உருவானது என்று ஒருவர் சொன்னால் எப்படி உள்ளதோ அதே போல் தான் இதுவும் உள்ளது.சிவகாசி பட்டாசு வெடித்தது. அதில் இருந்து அழகான வண்ணமயமான ஒளிக்கதிர்கள் வந்தன. அவையும் வானில் வெடித்து வெவ்வேறு வண்ணங்கலாய் மாறின என்று சொன்னால், எந்த காலத்திலும் இந்த செயல் அதுவாக நடப்பதற்க்கு வாய்ப்பு இல்லை. அதை உருவாக்கியவன் அப்படியெல்லாம் டிசைன் செய்து உருவாக்கி இருக்கிறான். இதில் யார் சொல்வதில் சிந்திக்கும் திறன் முடங்கி உள்ளது என்று நீங்களே தெரிந்து கோள்ளுஙகள் நன்பரே...
jayachandran
நண்பர் ரபிக் அவர்களுக்கு:பூமி உருண்டை, தட்டை இல்லை , ஒரு மனிதனின் இருதயத்தை மாற்றி அமைக்க முடியும் , நட்சத்திரங்களுக்கு ஆயுள் காலம் இருக்கிறது, பொருட்கள் அணுக்களால் ஆனது, அம்மை மற்றும் பல நோய்களுக்கு தடுப்பு ஊசி மூலம் கட்டு படுத்த முடியும், ஆணை பெண்ணாக மாற்றமுடியும், டெஸ்ட் டூப் பேபி மூலம் குழந்தையை உருவாக்க முடியும், பைத்தியத்திற்கு சூடு போட அவசியமில்லை, மந்திரிக்க வேண்டிய அவசியமில்லை மருந்து மூலம் குணப்படுத்த முடியும், நிலவின் மேல் மனிதன் கால் படிக்க முடியும் போன்ற ஆயிரம் ஆயிரம் விஞ்ஞான உண்மைகள் முதலில் கூறியபோது அவைகளை, பலர் நடக்காது என்று எதிர்த்தனர் .பூமிதான் சூரியனை சுற்றுகின்றது என்று கூறிய மேதையை சிறையில் இட்ட மேலை நாட்டவர் அந்த காலத்தில் செய்த தவறுக்கு இன்று மன்னிப்பு கேட்டனர்.
விஞ்ஞான உண்மைகள் பலருக்கு ஜீரணிக்க கடினயாயிருக்கும்.
கண்ணில் காண முடியாத அணுவுக்குள் அதி பயங்கர சக்தி இருக்கின்றது என்ற விஞ்ஞான உண்மை கூறப்பட்ட போது அதையும் பலருக்கு ஜீரணிக்க முடியவில்லை .உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்த அந்த குண்டு வெடித்தபோது தான் அந்த உண்மை தெளிவானது. நோயினால் உயிருக்கு போராடும்போது 'எல்லாம் அவன் செயல்' என்று கோவில்களுக்கு செல்வதை விட்டுவிட்டு உலகத்தில் உள்ள 'அனைத்து நாடுகளிலும்' மருத்துவரை அணுகி சாமி காப்பாற்றுங்கள் என்று கூறும் காலம் வந்து விட்டது. அப்போது யாரும் அந்த மருந்து எப்படி வேலை செய்யும், அறுவை சிகிச்சை தேவை அற்றது என்று கூறுவதில்லை. தினமும் பல மாத்திரைகளினால் தன் உயிரை காப்பாற்றிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் , அன்றாட வாழ்வில் விஞ்ஞானத்தினால் பல சுகங்களை அனுபவிக்கும் பலர் , சில விஞ்ஞான உண்மைகளை கேலி செய்வது ,வியப்பாய் இருக்கின்றது , வருத்தமாயிருக்கின்றது. அணுவுக்குள் பெரும் சக்தி இருக்கின்றது என்ற உண்மை நிரூப்னமானத்தை மனதில் நிறுத்தி நீங்கள் ' உடைந்த கண்ணாடி துகள்களால் தாஜ் மஹால் எப்படி உருவாகும் -அது எப்படி சாத்தியமாகும் ' என்ற கேள்விக்கு விடை தேடுங்கள் என் இனிய நண்பரே.
Rabik
நண்பரே,
எனது கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாமல் ஏதேதோ சுற்றி வளைத்து உள்ளீர்கள். அணுவுக்கு ஆற்றல் இல்லை என்றோ, நட்சத்திரங்கள் பிறந்து இறக்க வில்லை என்றோ, நோய் என்றால் மருத்துவரை பார்க்கக் கூடாது என்றோ நான் எங்கும் கூற வில்லை.எனது நேரிடையான கேள்வி, நீங்கள் கூறுகின்ற நட்சத்திரங்களைப் பற்றிய விசயங்கள் அது அதுவாக நடக்கின்றதா? அல்லது யாராவது இப்படி டிசைன் செய்து நடக்கின்றதா? எது விஞ்ஞான உண்மை? நட்சத்திரங்கள் பிறக்கின்றன. மரணிக்கின்றன. அவைகளில் இருந்து ஹைட்ரஜன் ஹீலிய்ம் உருவாகின்றன. இது தான் அறிவியல் உண்மை? இதில் இருந்து மனிதன் பிறந்திருக்க்க் கூடும் என்பது உங்கள் சொந்த சரக்கு அல்லது கற்பணை. இதற்கும் அறிவியலுக்கும் சம்மந்தம் இல்லை. இந்த இடத்தில் புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் பற்றி இஙுகு குறிப்பிட விரும்புகிறேன். பிறப்பால் அவர் ஒரு கிருஸ்துவர். ஆனால் முக்கடவுள் கொள்கையிலோ, தந்தை மகன் ஆவி கடவுள் கொள்கையிலோ அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் படைப்பாளன் இல்லாது இந்த பிரபஞ்சம் இல்லை என்பதை அவர் உறுதியுடன் நம்பினார். பல மத நம்பிக்கையாளர்கள் மூடத்தனமான செயல்கள் செய்கிறார்கள் என்பதற்காக நீங்களும் படைத்தவன் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு இல்லாத மூட செயல் செய்கின்றீர்கள் என்பது தான் என் வருத்தம்.
jayachandran
//நட்சத்திரங்கள் பிறக்கின்றன. மரணிக்கின்றன. அவைகளில் இருந்து ஹைட்ரஜன் ஹீலிய்ம் உருவாகின்றன. இது தான் அறிவியல் உண்மை?//

நட்சத்திரங்கள் பிறக்கின்றன மரணிக்கின்றன. ஹீலியமும் மற்ற தனிமங்களும் அங்குதான் உருவாகிறது (ஹைட்ரஜென் அங்கு உருவாவதில்லை. அது பிரபஞ்சத்தின் தொடக்கத்திலே இருந்து இருந்துவந்துள்ளது) என்ற உண்மைகளை ஒத்துகொள்கிரீர்களா இல்லையா என்று புரியவில்லை
இந்த உண்மைகளை மறுப்பதானால் நாம் கேட்க்கும் கேள்விகளும் பதில்களும் அவசியமற்றது. தாங்கள் ஒத்துகொள்பவரானால் மேலும் விளக்கம் கொடுக்க தயாராக உள்ளேன். இல்லை என்றால் இந்த விவாதம் தேவையற்றது.
//இதில் இருந்து மனிதன் பிறந்திருக்க்க் கூடும் என்பது உங்கள் சொந்த சரக்கு அல்லது கற்பணை. இதற்கும் அறிவியலுக்கும் சம்மந்தம் இல்லை.//இது என் கற்பனை அல்ல. உலகத்தில் உள்ள 'அணைத்து' வானவியல் விஞ்ஞானிகள் கூறியதைத்தான் நான் கூறியுள்ளேன்.
இனையத்தில் சென்று இதுபற்றி கூகுளில் தேடிப்பாருங்கள்.அதையும் நீங்கள் ஏற்க்க மறுத்தால் நம் விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைப்பது விவேகம
jayachandran
நண்பரே, உங்களுடைய மெயில் அட்ரஸ் அனுப்பவும். //.பிரபஞ்சத்தின் தொடக்கம் என்பதை எதில் இருந்து தொடங்குகின்றீர்கள். // இந்த கேள்விக்கு நான் கீற்றுவில் எழுதிய 'மா வெடிப்பு (பீக் பாண்க்) ஓர் ஆரம்பமா அல்லது தொடர்கதையா?' என்ற கட்டுரையும் அதன் தொடராக ' 'விரிவடையும் பிரபஞ்சம் மீண்டும் சுருங்குமா?' என்ற கட்டுரையும் விளக்க அளிக்கும் என நினைக்கிறேன். மேலும் விவரங்களுக்கு உங்கள் மெயில் அட்ரஸ் கிடைத்தவுடன் தொடர்பு கொள்கிறேன். நன்றி.
Rabik
//(ஹைட்ரஜென் அங்கு உருவாவதில்லை. அது பிரபஞ்சத்தின் தொடக்கத்திலே இருந்து இருந்துவந்துள்ளது) //. தயவு செய்து இதற்கு ஒரு ஆதாரபூர்வமான அறிவியல் இடுக்கை இருந்தால் அனுப்பவும்.பிரபஞ்சத்தின் தொடக்கம் என்பதை எதில் இருந்து தொடங்குகின்றீர்கள். நட்ச்த்திரத்தில் இருந்து மனிதன் உருவானான் என்று கூறுகின்ற ஏதாவது ஒரு ஆதாரபூர்வமான அறிவியல் இடுக்கை இருந்தால் அனுப்பவும். நன்றி
Rabik
ஆரம்பத்தில் இருந்து நான் சந்தேகப்பட்டேன். நீங்கள் பிக் பேங்க் தியரி பற்றி தான் சொல்லி வருகிறீர்கள் என்று. உங்கள் இடுக்கையிலேயே நீங்கள் சொல்லியிருக்கிறீர்க்ள், பிக் பேங்க் நடப்பதற்கு முன்னால் என்ன நடந்தது என்று விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று. பிறகு எப்படி அதனை ஆரம்பம் என்று எடுத்துக் கொண்டீர்கள். ஒரு விச்யத்தை மனிதனால் புரிய முடிய வில்லை என்றால் அந்த விசயமே இல்லை என்ற முடிவுக்கு வருவது பகுத்தறிவு கிடையாது. மனித புரிதலுக்கும் ஒரு எல்லை உண்டு. நீங்களாகவே ஒரு தோராயத்தை ஏற்படுத்திக்கொண்டு விளக்கம் கொடுக்கின்றீர்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், உஙக்ள் தோராயமே தவறு, பிறகு உங்கள் விளக்கம் எப்படி சரியாக இருக்கும். படைத்தவனைப் புரிதலும் அப்படியே. சில அடையாளங்களினால் அவனை புரிந்து கொள்ள முடியுமே தவிர. நேரில் பார்த்தால் தான் நம்புவேன் என்பது பகுத்தறிவு கிடையாது. உஙகள் நேரத்தை செலவழித்து எனக்கு பதில் கூறியதற்கு நன்றி. உஙகள் தோராயம்(பிக் பேங்க் தான் ஆரம்பம் எனும் அஸ்ஸம்சன்) தவறு என்று என்க்கு படுவதால் இதனை தொடர்வதில் அர்த்தம் இல்லை என்று உணர்கிறேன். எனது email ID [email protected]
Baranee
தோழர் ரபிக்-கின் கேள்வி சரியானதே. //ஒரு பலூனைப் போல விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு தனிமங்கள் தான் இருந்தது. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்(சுமார் 75 சதவீதம் ஹைட்ரஜன், 25 சதவீதம் ஹீலியம்). வாயுக்களான இவை இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.// ஏதுவுமே இல்லை; ஆனால் இரண்டு மட்டும் இருந்தது என்ற முரணான கருத்தை கொண்டே "பிக் பேங் " தத்துவம் தன் பிரபஞ்ச உருவாக்க கோட்பாடை முன் வைக்கிறது.

இந்த உலகம் எப்படி தோன்றியது என விரிவாக கூறும் "பிக் பேங் " தத்துவம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மட்டும் திடீர் என எந்த மூலமும் இன்றி தோன்றி நின்றன என கூறுவது நிச்சயம் விவாதத்திற்குரியதே. தற்போதைய அறிவியல் புரிதல்களை மட்டும் வைத்து கொண்டு பின்னோக்கி கட்டமைத்து கடைசியில் பாதியில் முடிக்கப்பட்ட புனைகதை போலவே இந்த தத்துவமும் தொங்கி நிற்கின்றது.

மேற்கத்திய அறிவியலாளர் சிந்தனைகளை தர்க்கரீதியிலான விவாதங்கள் இன்றி நாம் ஏற்றுகொள்வதும், அதன் சாரத்தை கட்டி காக்க முயல்வதும் நம் அடிமை மனோபாவத்தின் நீட்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. பிரபஞ்சம் உருவான வரலாற்றை முழுமையாய் விளக்கும் தத்துவத்தை இன்னும் ஆழமாய் ஆய்வுகள் செய்ய வேண்டி உள்ளது என்பதே முகத்திலரையும் உண்மை.
nanban
தோழர் ஜெயச்சந்திரன், நீங்கள் எதைக்கூரினாலும் அதை மருத்து, அதர்க்கு முன் "கடவுள்" இருந்த்தார்-படத்தார் எனக் கூருவார்கள் இவர்கள்.....!
c.k.jayachandran
' ஏதுவுமே இல்லை; ஆனால் இரண்டு மட்டும் இருந்தது ' என்றல்ல நான் கூறியது. // வாயுக்களான இவை (ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ) இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.// என்றுதான் நான் கூறியது . இதில் என்ன முரண்பாடு என்று தெரியவில்லை.
//ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மட்டும் திடீர் என எந்த மூலமும் இன்றி தோன்றி நின்றன// என்ற உங்கள் கேள்வியை பாராட்டுகின்றேன்.
ஒரு சிறிய கட்டுரையில் பிரபஞ்சத்தை பற்றிய அணைத்து விளக்கங்களையும் கொடுக்க இயலாது. மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? என்ற தலைப்பில், மா வெடிப்பு பற்றிய விஞ்ஞான உண்மைகளை பற்றி ஒரு சிறிய கட்டுரையில் கூற இயலாது.
தங்களுடைய கேள்விக்கு விரிவான விளக்கம் இதோ :
பிரபஞ்சத்தின் ( மா வெடிப்பின் ) ஆரம்பத்தில் சக்தியை தவிர ஒன்றுமே ஒன்றுமே இல்லை. கோடிக்கணக்கான டிகிரி வெப்பம் கொண்ட பிரபஞ்சம் விரிவடைய ஆரம்பித்தவுடன் , அதன் வெப்பம் குறைய துவங்கியது. சரியான வெப்ப அளவில் , சக்தி அணு துகள்களாக மாறியது. மீண்டும் பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய வெப்பம் தணிந்து அணுத்துகள்கள் இணைந்து அணுவாக மாறியது. பிரபஞ்சத்தின் ஆரம்ப சக்தி அணுவாக மாறியது . அணு ,சக்தியாக மாறுவதும் , சக்தி, அணுவாக மாறுவதும் தான் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது .அது அணுகுண்டு கண்டுபிடிப்பால் நிரூபிக்க பட்டுவிட்டது. அப்படி உண்டானதுதான் ஆரம்ப தணிமங்களாகிய ஹைட்ரஜனும் ஹீலியமும். தணிமங்களின் அட்டவணையில் ஹைட்ரஜன் முதல் தணிமம். ஹைட்ரஜனில் ஒரு ப்ரோடான் , ஒரு நியுட்ரான் , ஒரு எலெக்ட்ரான் உள்ளது. ஹீலியம் அடுத்த தணிமம். ஹீலியத்தில் இரண்டு ப்ரோடான் , இரண்டு நியுட்ரான், இரண்டு எலெக்ட்ரான் உள்ளது. இவைகள் மேலும் தங்களுக்குள் (நட்சத்திரங்களில்) இனைந்து மூன்று , நான்கு என்றும் அதற்க்கு மேலும் எலெக்ட்ரான் எண்ணிக்கை கொண்ட அணுக்களாகி நாம் இப்போது காணும் எல்லா பொருட்களாக மாறியது. இவ்வுண்மைகள் இன்று உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் ஏற்க்கபட்டுள்ளது.
//மேற்கத்திய அறிவியலாளர் சிந்தனைகளை தர்க்கரீதியிலான விவாதங்கள் இன்றி நாம் ஏற்றுகொள்வதும், அதன் சாரத்தை கட்டி காக்க முயல்வதும் நம் அடிமை மனோபாவத்தின் நீட்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. // அறிவியலில் இது உண்மையல்ல.
நம் நாட்டு விஞ்ஞானிகளான ,நோபெல் பரிசு பெற்ற சுப்ரமண்யன் சந்திரசேகர் , சர் சி வீ ராமன் ,சத்யேந்திர நாத் போஸ் ஆகியோர் கண்டுபிடித்த உண்மைகளை , மேலை நாடுகள் ஏற்றுக்கொண்டு ராமன் விளைவு , சந்திரசேகர் லிமிட் , ஹிப்ஸ் போசோன் ,என்ற பெயர்கொடுத்து விஞ்ஞானத்தை மேலும் வளர்த்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக சந்திரசேகர்தான் நம் சூரியன் போன்ற நட்சத்திரத்தின் கடைசி விதி ( அழிவு ) என்ன என்று கூறினார். அதைவைத்துதான் மேலைநாட்டவர் பிரபஞ்சத்தின் கருந்துளை வரையில் கண்டுபிடித்தார்கள். மேலை நாட்டு கண்டுபிடிப்புக்கள் தகுந்த ஆய்வுக்குபிறகு நம் நாட்டு அறிவியலாளர்களாலும் , நம் நாட்டு அறிவியலாலர்களது கண்டுபிடிப்புக்கள் மேலை நாட்டவர்களாலும் ஏற்றுக்கொண்டு அறிவியல், மொழி , மத, இனம் என்ற பாகுபாடின்றி முன்னேறி ண்டிருக்கின்றது.
மேலும் ஹோமி ஜஹாங்கிர் பாபா. அப்துல் கலாம் இன்னும் நம் நாட்டின் பற்பல உலகின் தலைசிறந்த பௌதீக விஞ்ஞானிகள் , இப்போது உலகம் ஒத்துக்கொண்ட பிரபஞ்சத்தின் தோற்றம் , மற்றும் பரிணாம வளர்ச்சியை (மா வெடிப்பு ) பற்றி மாற்றுக்கருத்துகள் இல்லாதவர்கள் . அவர்களது மாபெரும் பணியை ' நம் அடிமை மனோபாவத்தின் நீட்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது' என்று கூறியது சரிதானா? உங்களுடைய 'முகத்திலறையும் கேள்விக்கு இந்த பதிலைத்தான் சமர்பிக்கிறேன். மீண்டும் விளக்கங்கள் வேண்டுமெனில்
என் ஈ மெயில் க்கு அனுப்பவும். உங்கள் ஈ மெயில் ஐ டி கொடுக்கவும்
Baranee
முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறேன். பிரஞ்ச உருவாக்க கொள்கை என்பதே தவறு என்பது என் கருத்தில்லை. ஆனால்,மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நாம் முன் வைக்கும் வாதம் மற்றுமொரு முடமான தத்துவத்தின் பேரில் இருத்தல் கூடாது. "பிக் பாங்க்" தத்துவம் முன் வைக்கின்ற சில தோராயங்கள் இன்னும் முரண்பாடுகளை உடையன. உதாரணமா சில:
1) நாம் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்தும், பிரபஞ்சத்தின் 5 சதவிகித பண்புகளை மட்டுமே புரிந்து கொண்டுள்ளோம். 95 சதவிகித தன்மைகள் என்னவென்றே தெரியாது.
2) தற்போதய அறிவியல் விதிகள் யாவும் "பிக் பாங்க்" நிகழ்வுக்கோ அல்லது அதற்கு முந்தய நிகழ்வுக்கோ பொருந்தாது. அதாவது, "பிக் பாங்க்" ஏன் நடந்தது, அதன் சக்தி எப்படி உருவானது என்பதற்கு தற்போதய அறிவியல் விதிகள் செல்லாது.
3) "பிக் பாங்க்" தத்துவம் சொல்லும் காலத்திற்குள் நம் பிரபஞ்சம் இத்தனை பெரிதாக விரிந்திருக்க முடியாது.

பிரஞ்ச உருவாக்க கொள்கையை விளக்கும் எத்தனையோ தத்துவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் "பிக் பாங்க்" தத்துவம். இது தற்போதய அநேக அறிவியல் புரிதல்களை உள்ளடக்கி உள்ளதால், பெரும்பான்மை மக்களால் ஏற்கப்பட்டு இருக்கிறது. அதனாலேயே அது முழுமுதல் தத்துவமாக ஆகிவிடாது.

நம் கல்வி பாடப்புத்தகங்களும், அறிவியல் இதழ்களும் "பிக் பாங்க்" தத்துவம் முழுவதுமாக நிரூபிக்கபட்ட ஒன்றாகவே கருத்தோட்டம் கொண்டுள்ளன. அதற்கு பின்னால் உள்ள கேள்விகளை எழுப்ப அவை தயாராய் இல்லை. அதற்கு விடை தேடும் முயற்சிகளையும் மாற்று தத்துவத்திற்கான தேடலையும் அவை முன்வைப்பதில்லை. இதனையே நம் அடிமை மனோபாவமாக கூறி இருந்தேன்.

பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபணம் செய்த பின்னரே அதை மாற்றுக்கருத்து இன்றி மதநம்பிக்கையாளர்கள் ஏற்க வேண்டி வந்தது. அதே போல் இந்த பிரபஞ்சமும் உருவானது தான் என்று முழுமையாய் விளக்கும் தத்துவம் கண்டறியப்படும் வரையில் அவர்களின் நியாயமான கேள்விகளை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். எனது email ID - [email protected]
vilvalingam
பரணீ அவர்களே
உங்கள் ஐயப்பாடுகளை கேளுங்கள். கட்டுரை ஆசிரியர் பதில் கொடுப்பார். ஆரோக்கியமான விவாதம் வரவேக்கதக்கது. ' முகத்திலறையும் ' என்ற வார்த்தைகளை தவிர்த்தால் ஆவலோடு விளக்கமாக பதிலளிக்க வழிவகுக்கும் . இல்லையெனில் உங்களுக்கு பதில் கூறும் ஆர்வம் குறைந்து விடும்.
Baranee
கருத்தின் தாக்கத்தை உணர்த்துவது மட்டுமே அதன் நோக்கம். கடுமையான சொல்லாடலாக அது அமைந்து இருப்பின் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
tipankarti
இது போல மேலும் பல அரிய கருத்துகள் வழங்க வேண்டுகிறேன்......
Judesonpj
அருமையான அறிவியலை வளர்க்கும் உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி. இன்னும் அறிய ஆசை.
PRINCE
அருமையான அறிவியல் தகவல்.... எழுத்தாளருக்கு மிக்க நன்றி.....

விஞ்ஞானத்தின் தற்போதைய தேடல்
எல்லைகள் கடந்து
ஒரு பாதையின் தேடலா...???
இல்லை...
பாதைகளை உருவாக்கும் பயணமா??
சாணக்கியன்
மனிதனின் கற்பனைக்கு ஓர் எல்லை உணடு. அனைத்தும் மாயமாய் மறைந்துவிட்டால் என்ன மிஞ்சும் என்று கேட்டால் வெற்றிடம் என்று சொல்வான், அதுவும் மாயமாய் மறைந்துவிட்டால் என்ன மிஞ்சுமென்றால் நம்மால் கற்பனை செய்ய இயலாது. அதைத்தான் சூன்யமென்று ஆர்யபட்டா போன்ற மேதைகள் கூறினர். அந்த சூன்யத்தையும் அதற்கு அப்பாற்பட்ட அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ், அவனைப்படைத்தவன் யாருமில்லையென்று திருக்குரான் அறிவிக்கிறது. --- இவ்வளவு தெரிந்திருந்தும் காபிர்கள் ஏன் கல்லையும் மண்ணையும் மாட்டையும் மிருகத்தையும் வணங்குகிறார்களென்பதுதான் புரியாத புதிர்.
Nasraf
றபீக்... காலடியின் கீழ் இருந்த பெற்றே ஹ்லியத்தைப் பற்றி எதுவூம் கூறாத ஒருவனை தீர்க்கதரசி என்று நம்பு.

ஆனால் அவ்வளவூ விளக்கிச் சொல்லும் ஒரு கட்டுரைக்கு தப்புக் கண்டுபிடி மதத்தைக் குடிச்சிட்டு இங்கேயெல்லாம் ஏன் வாறீங்க?

மக்காவில் நீங்க மட்டும் சீபாக் கடவூளின் பிறப்புறுப்பை (கறுப்பக் கல்) முத்தமிடலாம்
கல்லைச்சுற்றலாம்
கலலெறியலாம்
அவன் மாட்டை , கல்லை வணங்கினால் தப்பு என்ன?
Israel
sir,who created the following parts of our body? These are all created by stars ? pl prove it
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்;
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.
தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,
ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.
நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தைஇரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள் 31 நிமிடங்கள்

மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்
தசைகள் 5 நாட்கள்

இதயம் சில நிமிடங்கள
jayachandran
நண்பர் இஸ்ரேல் அவர்களே

மனித உடலின் அற்புதங்களை பற்றிய உங்களுடைய புரிதலை பாராட்டுகின்றேன். என் கட்டுரையை படித்து அதற்க்கு விமர்சனம் எழுதியமைக்கு நன்றி.
முதலாவதாக , நான் இந்த கட்டுரையில் படைப்பை பற்றி கூறவரவில்லை . மனிதன் மற்றும் எல்லா உயிரனங்களின் உடலில் உள்ள மூலக்கூறுகள் எவ்வாறு தோன்றின என்றுதான் கூற விழைந்துள்ளேன். உங்கள் கருத்திற்க்கு என் பதில்: நீங்கள் கூறிய உண்மைகளையும் இன்னும் பல அதிசயங்கள் உலகில் இருப்பதையும் முதலில் நான் அறிந்துகொண்டபோது படைப்பின் அதிசயத்தை பார்த்து வியந்தேன். படைத்தவனை வணங்கினேன். ஆனால் உண்மைகைளை பற்றிய தொடர்ந்த என்னுடைய ஆழமான தேடுதல் என்னை படைப்பின் மாயையிலிருந்து விடுவித்துவிட்டது. ஒரு சிறு உதாரணத்திற்கு :
உலகத்தில் பிறக்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் பல் வேறு குறைகளோடு பிறந்து இறந்துவிடுக்கின்றன . தாயின் வயிற்றிலேயே குறைபாடுகள் உண்டாகி கருப்பையிலிருக்கும் குழந்தைகள் இறந்து தாயையும் கொன்றுவிடுக்கின்றன. பிறந்து வெளியே வந்த குழந்தைகள் நூற்றுக்கணக்கான வியாதிகளினால் சீரழிகின்றன. கண் இன்றி பிறக்கும் குழந்தைகள் , புற்று நோயால் பாதிக்க பட்டு மடிகின்ற பச்சிளம் குழந்தைகள் , மேலும் பல வியாதிகளினாலும் விபத்துகளினாலும், இயற்க்கை பேரழிவுகளாலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பூமியில் இறந்து போனதும் , நரக வாழ்கை அனுபவித்து கொண்டிருப்பதையும் புள்ளியியல் விவரங்கள் கொடுக்கின்றன.
மனிதர்கள் மட்டுமல்ல கடலிலும் காட்டிலும் திரியும் எண்ணற்ற விலங்குகள் அன்றாடம் கொல்லப்படும் நிகழ்ச்சிகள் இரக்கமுள்ள ஒரு மனிதனக்கு படைப்பை போற்ற தோன்றாது .
சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த மனிதகுலம் , மனிதனின் மூளை வளர்ச்சி அடையும் வரை ஒரு விலங்கினைப்போல கேவலமான் வாழ்க்கை அனுபவித்துள்ளது . நம் முன்னோர்கள் சொல்லொனா துயர்கள் அனுபவித்துள்ளார்கள் .பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன மனித எலும்புகளில் இருந்து , அவன் பல ஆண்டுகளாக எலும்பு முறிவு , மேலும் பல வியாதிகளினால் அல்லல் பட்டு இறந்து போனதை விஞ்ஞானம் வெளிக்கொணர்ந்துள்ளது. படைப்பு இவ்வளவு துயரகரமானதாக இருந்தது என்பதை காணும் போது படைப்பை பாராட்ட முடியவில்லை .இவைகளை எல்லாம் ஆழமாக சிந்தித்து பார்த்தால் படைப்பின் அவலம் புரிந்து விடும, நண்பரே. . உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்க்கிறேன். என் ஈமெயில் முகவரிக்கும் அனுப்புங்கள்.
Bhaskaran.N
உங்கள் எல்லோருக்கும் என் முதல் வணக்கம் முதலில் நான் குறிப்பிடும் என் கருத்துக்கள் தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் நமக்கு கம்ப்யூட்டர் உருவான கதை தெரியும் இங்கு ஆசிரயர் குறிப்பிடுவது இரண்டு காரணிகள் அது இல்லாமல் இந்த உலகில் எதுவும் அமையாது என்கிறார் 1.ஹைட்ரஜன் 2.ஹீலியம் அதேப்போல் கம்ப்யூட்டர் 1 அல்லது 0 யென்ற கோட்ப்பாட்டை கொண்டுள்ளது இதை செய்தவரை கடவுள் என்று குறிப்பிட்டு கூற முடியாது ஏன் எனில், அவர் செய்யவில்லை என்றால் வேறு எராவது செய்திருப்பார்.

மிக மிக அடிப்படை தத்துவம் என்னவென்றால் ‘0’ அடுத்தது வெற்றிடம் என்று கூறினார்கள் அப்படி இல்லை 0.1,0.2 .. ….. …..0.000001 இப்படிதான் செல்லும் ஆகா கால அளவை காட்டும் கண்ணாடி போல விரிந்து சுருங்கி விரியும் தத்துவம் கொண்டது நம்மை சுற்றி உள்ள அமைப்புக்களும் எண்ணங்களும் இதில் இறைவனை தேடுவது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் முற்றுப்புள்ளி நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிர்றிகளா? இல்லை என்றால் துவக்க நினைக்கிர்றிகளா? துவக்க நினைப்பவர் புதிதாக பிறக்கிறார் முற்றுப்புள்ளி வைப்பவர் இறக்கிறார்.
Bhaskaran.N
எல்லா விஷயத்தும் இரண்டாக கொள்ளல்லாம் ஆங்கலத்தில் சொல்வது போல் front end -backend. அகம் மற்றும் புறம் யென்ற இரு காரணிகள் உ.ம்: வெற்றிடம் கூட இந்த இரு காரணிகள் இல்லாமல் இருக்கலாம் அதை நாம் தான் கண்டறிய வேண்டும். உ.ம்: வெப்பமும் ஈர்ப்பு விசையும் அகம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் புறம்.
ஆகா இந்த பிரபஞ்சத்தில் இதற்கு பிறகு ஒன்று இல்லை என்று கூறவே முடியாது நமக்கு அதற்க்கு மேல் தெரியவில்லை என்று வேண்டுமானல் கூறலாம் கடவுள் உட்பட…...
சே குமார்
முதலில் இத்தகைய ஒரு அற்புதமான செய்தியை பதிவிட்டதற்க்கு நன்றி அண்ணா. ......

இதனால் எனக்குள் ஒரு தெளிவு தோன்றியுள்ள்து ....உதாரணமாக :நான்(ம்) மதங்கள் கூறுவது போல் மண்ணிருந்து உருவம் பிடித்தோ அல்லது பெண்ணின் முதுகெலும்பிலிருந்தோ மனிதனை படைத்தான் கடவுள் என்பதையும். ....
நம்மை போலவே சின்ன சின்ன விஷயங்களையும் நம்மை போலவே செய்யும் குரங்கு இனத்தில் (ஒரு) பரிணாம வளர்ச்சியால் நீ இவ்வாறு மாற்றம் அடைந்தாய்.என்று கூறும் இதை நம்பும் வகையில் உள்ளது. .....

இருந்தாலும் கடவுளை நம்புகிற என் நண்பர்கள் கேட்கும் ஒரு கேள்விக்கு என்னால் விடையளிக்க முடியவில்லை. ...குரங்கிலிருந்து வந்தோம் என்றால் இப்போது ஏன் குரங்குகள் மனிதனாக மாறவில்லை என்ற கேள்விக்கு நான் திகைக்கிறேன் ....jayacahndran அண்ணா இது சம்பந்தமாக தகவல்கள் இருந்தால் இந்த [email protected] mail கு அனுப்புங்கள். .....

கடவுள்கள் உருவாக்க வில்லை. ..அவரையே நாம் தான் உருவாக்கினோம்....என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ...தந்தை பெரியார் சொன்ன வாசகம் நினைவில் கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுளை பரப்பியவன் அயோக்கியன் ....இதை யோசிக்க வைக்கிறது. ...
mohanraj
ஆச்சரியமான கேள்வியும் பதில்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் உங்களை பாராட்டுகிறோம்.உங்கள் பதில்கள் அனைத்தும் சரியானவைநன்றி திரு ஜெயச்சந்திரன்.
mohanraj
நான் இன்னும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் நீங்கள் எனக்கு விளக்கினால் நேர பயணத்திற்கு இடையே எனக்கு சில சந்தேகம்.time travel இது என் மெயில் ஐடி. [email protected]

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.