கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சுந்தரராஜன்
- பிரிவு: தொழில்நுட்பம்
கூடங்குளம் அணுஉலையை மூடுவதால் சுமார் 13500 கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணம் வீணாகிவிடும் என்று அரசு தரப்பும், அரசுத் தரப்பின் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். கூடங்குளம் போன்றே மக்கள் எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவிலும் சில அணுமின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக அதே மின்உலையில் வேறு எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் புத்திசாலித்தனமான முடிவை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
மின்சாரத்தை தயாரிப்பதில் அணுசக்தி நேரடியாக பயன்படுத்தப்படுவதில்லை. மின் உற்பத்தியை எளிதில் விளக்குவதற்கு நாம் சைக்கிளில் பயன்படுத்தும் டைனமோவின் எளிமையான இயக்கத்தை புரிந்து கொண்டாலே போதும். மின்சாரத்தை கடத்தக்கூடிய உலோகச் சுருளின் இடையே ஒரு காந்தத்தை சுற்றும்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே காந்தம் சுழல்வதற்கு சைக்கிளின் டயர் பயன்படுகிறது.
இதே சைக்கிள் டைனமோவை மிகப்பெரிய அளவில் ஜெனரேட்டர் என்ற பெயரில் செய்து அதன் மையத்தில் உள்ள காந்தத்தை சுழற்றுவதற்காகவே பலவிதமான ஆற்றல் மூலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக காற்றாலைகளில் உள்ள மிகப்பெரிய இறக்கைகள் சுழல்வதால் ஜெனரேட்டரின் மையத்தண்டு எனப்படும் டர்பைன் சுழன்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீர் மின் நிலையங்களில் மேலிருந்து கீழே விழும் நீரின் விசையால் ஜெனரேட்டரின் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனல்மின் நிலையங்கள் மிகப்பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி நீர் கொதிக்க வைக்கப்படுகிறது. இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் நீராவியைக் கொண்டு ஜெனரேட்டரின் டர்பைன் சுழல்கிறது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேற்கண்ட உதாரணங்களில் இருந்து ஜெனரேட்டரின் டர்பைனை சுழல்வதற்கு ஆற்றல் தேவை என்பதை உணர முடியும். இதற்கான ஆற்றலாக நீரை கொதிக்க வைப்பதன் மூலம் உருவாகும் நீராவியே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீரை கொதிக்க வைப்பதற்கு ஒரு எரிபொருள் தேவை. அது நிலக்கரியாகவோ, இயற்கை எரிவாயுவாகவோ இருக்கலாம். அல்லது உயிர்ம எரிபொருள் எனப்படும் பயோமாஸ் போன்ற மற்ற எரிபொருளாகவும் இருக்கலாம்.
கூடங்குளத்தில் அணுஉலையை மூடவேண்டும் என்று கூறும் யாரும், அதே கூடங்குளத்தில் மாற்று எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை எதிர்க்க மாட்டார்கள்.
அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க் அருகே உள்ள ஷோர்ஹாம் என்ற இடத்தில் லாங் ஐலேண்ட் லைட்டிங் கம்பெனி (லில்கோ) சார்பில் 1973 முதல் 1984 ஆண்டுக்குள் அணு உலை ஒன்று கட்டப்பட்டது. 1979ம் ஆண்டு மூன்று மைல் அணுஉலையில் ஏற்பட்ட விபத்து மற்றும் 1986ம் ஆண்டு ஏற்பட்ட செர்னோபில் விபத்து காரணமாக எச்சரிக்கை அடைந்த அமெரிக்க மக்கள் ஷோர்ஹாமில் அமையவிருந்த அணுஉலைக்கு எதிராக தொடர்ச்சியாக போராடினர்.
இதனிடையே இந்த அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அப்பகுதி மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறி அப்பகுதியிலுள்ள சஃபோல்க் உள்ளாட்சி அமைப்பு 1984ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் லில்கோ நிறுவனம் அணுஉலை கட்டுமானத்தை நிறைவு செய்தது. எனினும் மக்களின் கடும் எதிர்ப்பால் இந்த அணுஉலையில் பணிகள் தொடங்கப்படவில்லை.
அணுஉலை கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், மக்களின் போராட்டம் ஓயவில்லை. எனவே இந்த அணுஉலையை இயக்கப்போவதில்லை என்று லில்கோ நிர்வாகம் 1989, மே 19 அன்று அறிவித்தது.
ஷோர்ஹாமில் நிறுவப்பட்டிருந்த அணுஉலை உபகரணங்கள் வேறு அணுஉலைகளுக்கு அனுப்பப்பட்டன. 2002, ஆகஸ்ட் மாதத்தில் அதே இடத்தில் இயற்கை வாயுவால் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் காற்றாலைகளும் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.
அடுத்து ஓஹியோ மாகாணம் மாஸ்கோ கிராமத்தில் அமைந்த வில்லியம் ஹெச். ஜிம்மர் மின் திட்டத்தின் கதையை பார்க்கலாம். சின்சினாட்டி எரிவாயு மற்றும் மின்நிறுவனத் தலைவரின் பெயரில் அமைந்த இந்த மின்திட்டம் 1969இல் திட்டமிடப்பட்டது. இந்த மின்திட்டத்தின் பணிகள் ஏறத்தாழ 97 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இதன் கட்டுமானத்திலும், இயந்திரங்கள் நிறுவப்பட்டதிலும் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே 1982ம் ஆண்டில் இந்த மின்திட்டப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
வில்லியம் ஹெச். ஜிம்மர் அணுஉலைப் பணிகள் நிறுத்தப்பட்டாலும் அதே உலையில் வேறு ஆற்றல் மூலங்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக அந்த மின் உற்பத்தி நிலையத்தை நிலக்கரி மூலமாக இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1991ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
மேற்கூறப்பட்ட இரு அணுஉலைகளும் ஆரம்பிக்கப்பட்ட 1967ம் ஆண்டிலேயே மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மிட்லாண்ட் பகுதியிலும் ஒரு அணுஉலை திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் பணிகள் சுமார் 85 சதவீதம் நிறைவடைந்த நிலையில், 1984ம் ஆண்டில் இந்த அணுமின் நிலையத்தின் நிலத்தேர்வு, கட்டுமானம், இயந்திரங்கள் ஆகியவற்றில் குறைகள் கண்டறியப்பட்டன.
சுமார் 17 ஆண்டுகால பணியும், 400 கோடி அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 20 ஆயிரம் கோடி ரூபாய்களும் செலவழிக்கப்பட்ட நிலையில் 1984ம் ஆண்டில் இந்த அணுஉலைத் திட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இதே உலையை இயற்கை எரிவாயு மூலமாக இயக்கத் திட்டமிடப்பட்டு 1986ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டு இந்த அனல் மின் நிலையம் இயங்கத் தொடங்கி, சுமார் 1560 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
***
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 5900 துணை மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 80 சதவீதம் துணை மாவட்டங்களுக்கு 15 முதல் 20 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தேவை. மிகக்குறைந்த அளவிலான இந்த மின்சாரத்தை அந்தந்த பகுதிகளிலேயே நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்களிலிருந்து தயாரிக்க முடியும்.
இந்தியாவில் முன்னர் பயன்படுத்தப்பட்ட காற்றாலைகள் சுமார் 200 கிலோ வாட் மின் உற்பத்தி திறனைக் கொண்டிருந்தன. தற்போது சுமார் 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே தற்போது பயன்பாட்டில் உள்ள உற்பத்தித் திறன் குறைந்த காற்றாலைகளின் திறனை அதிகரிக்க (Repowering) வேண்டும். இவ்வாறு உற்பத்தித் திறன் மேம்பட்ட காற்றாலைகளை துணை மாவட்டம் ஒன்றுக்கு சுமார் 10 வீதம் பொருத்தினாலே அப்பகுதியின் மின்சார தேவையை நிறைவு செய்ய முடியும்.
டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு வற்றாத ஆற்றல் மூலம் சூரியன்தான்! டெல்லி மாநகரத்தில் உள்ள கட்டிடங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்கும் இயந்திரங்களை முழுமையாக நிறுவினால், அம்மாநகரத்தின் தேவையில் சுமார் 48 சதவீதம் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டுக்கு சுமார் 300 நாட்களுக்கும் மேல் மேகம் மறைக்காத சூரிய ஒளி கிடைக்கும் நாட்களே! தார் பாலைவனத்தில் சுமார் 1 லட்சம் சதுர கிலோ மீட்டரை முறையாக பயன்படுத்தினால் மட்டும் சுமார் 35 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இந்தியாவில் சுமார் 7200 கிலோ மீட்டர் கடற்கரைப் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் காற்று, கடல் அலை, கடல் நீர் மின்சாரம் ஆகியவற்றின் மூலமாகவும் கணிசமான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.
மேலே கண்ட உதாரணங்களின் உதவியோடு கூடங்குளம் அணுஉலை குறித்தும் மறுபரிசீலனை செய்யலாம். கூடங்குளம் மின்திட்டத்தையும் நிலக்கரி மூலமோ, இயற்கை எரிவாயு மூலமோ இயக்க முடியும்.
மேலும் கூடங்குளத்தின் அருகே உள்ள கயத்தாறு, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, முப்பந்தல் உள்ளிட்ட இடங்களில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் சுமார் 4,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்படுகிறது. மீதியுள்ள சுமார் 1,100 மெகாவாட் மின்சாரம் சரியான திட்டமிடாமையால் வீணாகிறது.
இந்த காற்றாலைகள் அனைத்தும் தரையிலிருந்து சுமார் 150 மீட்டர் உயரத்தில் சுழல்கின்றன. இதையும் சற்று மாற்றி அமைத்து இரண்டு வேறு உயரங்களில் இரண்டு அடுக்கு காற்றாலைகள் அமைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளிலேயே இந்த காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. இதன் கீழே காலியாக இருக்கும் வெற்றிடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பானல்களை நிறுவலாம். அல்லது இதன் இடையே உள்ள இடங்களில் மாற்று எரிபொருளாக பயன்படத்தக்க தாவரங்களை சாகுபடி செய்யமுடியும்.
மாட்டுச்சாணத்திலிருந்து கோபார் வாயு மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வது நாம் அறிந்ததுதான். மாட்டுச்சாணத்திலிருந்து மட்டுமல்ல, மனிதக்கழிவிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் மாநகரங்களில் உருவாகும் மனிதக்கழிவுகளையும் ஆற்றல் மூலமாக மாற்றி அமைக்கலாம்.
மேற்கூறப்பட்ட இந்த மாற்று ஆற்றல் மூலங்களில் பெரும்பான்மை எந்த விதமான சூழல் சீர்கேட்டுக்கும் இடமளிக்காதவை. இந்த மாற்று ஆற்றல் மூலங்கள் அனைத்தும் அணுஉலைகளைப் போல பெரும் விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அறவே அற்றவை. மேலும் சிறப்பு தொழில்நுட்ப கல்வி அறிவு இல்லாதவர்களுக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்க வாய்ப்புள்ளவை.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் சுமார் 40 சதவீத மின்சாரம் வீணாவதாக அரசுப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அணுஉலைகள் போன்ற மிகப்பெரும் மின் உற்பத்தி திட்டங்களால்தான் இதுபோன்ற ஆற்றல் இழப்புகள் ஏற்படுகின்றன. மின்சாரம் தேவைப்படும் இடத்திலேயே மாற்று ஆற்றல் மூலங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் இத்தகைய ஆற்றல் இழப்புகளை தவிர்க்கலாம். இதன் மூலம் மாநில தேவைகளுக்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்திற்காக கையேந்தி நிற்கும் நிலையையும் மாற்றி அமைக்கலாம்.
***
ஐக்கிய நாடுகள் அவை சார்பில் நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்கள் மூலமான மின்சாரத்தை மனித குலம் முழுமைக்கும் அளிப்பதற்கான இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலும் குறிப்பாக பிறந்துள்ள 2012ம் ஆண்டு, “நீடித்து நிலைக்கும் (மின்)ஆற்றலை அனைவருக்கும் அளிப்பதற்கான சர்வதேச ஆண்டா”க (International year of Sustainable Energy For All) குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு பெயர்களில் சுரண்டப்படும் உலக மக்களை பாதுகாப்பதற்கான திட்டமாகவே இந்த திட்டத்தை ஐ.நா. அவை முன்னிறுத்துகிறது. மின்சாரம் தேவைப்படும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும் ஆற்றல் மூலங்களைக் கொண்டு, எளிய தொழில்நுட்பத்தின் மூலமாக அம்மக்களுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்.
ஐ.நா. அவையின் இந்த கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் மாறாக அணுமின் உலை போன்ற மிகப்பெரிய திட்டங்களை வளர்த்தெடுப்பது அதிகாரத்தை குவிப்பதற்கும், அந்த அதிகாரத்தை அறநெறிகளுக்கு புறம்பாக, மக்களுக்கு எதிராக பயன்படுத்த மட்டுமே உதவி செய்யும். இதைத்தான் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் செய்து வருகின்றன. அணுஉலை போன்ற சிக்கலான தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா போன்ற ஏழை நாடுகளை தங்கள் பொருளாதார அடிமைகளாக வைத்திருக்க இந்த நாடுகள் விரும்புகின்றன.
இதேபோல இந்தியாவை ஆளும் மத்திய அரசும், மாநிலங்கள் எந்த வகையிலும் தன்னிறைவு அடைவதை விரும்புவதில்லை. மாறாக, மாநில அரசுகள் மின்சாரம் உட்பட அனைத்து அம்சங்களுக்கும், மத்திய அரசை எதிர்பார்த்து கையேந்தி இருப்பதையே மத்தியில் ஆட்சிக்கு வரும் அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன.
இந்த அடிப்படையான அரசியல் உண்மைகளை புரிந்து கொண்டால் மட்டுமே, கூடங்குளம் அணுமின் திட்டம் போன்றவை குறித்து தெளிவான முடிவை எட்ட முடியும்.
இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இந்தியாவின் குடிமக்களுக்கோ, இந்தியத் தொழில் அதிபர்களுக்கோ எந்த முன்னுரிமையும் இல்லை என்ற உண்மையையும் மறந்துவிட முடியாது. அதே நேரத்தில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமையுடன் தடையற்ற மின்சாரம் வழங்குவதை மத்திய அரசு ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும். இந்நிலையில் கூடங்குளத்தில் அனுமின்உலை இயங்க ஆரம்பித்தால், இந்தியர்களுக்கும் – இந்தியர்களின் நிறுவனங்களுக்கும் தேவையான மின்சாரம் முழுமையாக கிடைக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் மறந்துவிட முடியாது.
***
மனித வாழ்க்கைக்கு மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால் மின்சாரத்திற்காக வெளியார் யாரையும் நம்பியிருக்கத் தேவையில்லாமல், சுயச்சார்புடன், பாதுகாப்பான, மலிவான, வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய, தூய்மையான, நீடித்த ஆற்றல் மூலங்கள் இருக்கும்போது அவற்றிற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
மனித குலத்தை அனைத்து தளைகளிலிருந்தும் விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஐ.நா. அவை இந்த ஆண்டை “நீடித்து நிலைக்கும் (மின்)ஆற்றலை அனைவருக்கும் அளிப்பதற்கான சர்வதேச ஆண்டா”க (International year of Sustainable Energy For All) கொண்டாடும் நிலையில் இந்தியா தனது இறையாண்மையை ஆதிக்க நாடுகளிடம் சமர்ப்பிக்கும் விதத்தில் அணுமின் உலைகளை தேர்வு செய்வதை கைவிட வேண்டும். அமெரிக்காவை முன் மாதிரியாகக் கொண்டு கூடங்குளம் மின்திட்டத்தை அணுசக்தி பயன்படுத்தாத பாதுகாப்பான மாற்று எரிபொருள் மின்திட்டமாக செயல்படுத்த முன்வர வேண்டும்.
- வழக்கறிஞர் சுந்தரராஜன் (
(நன்றி தினமணி 30.01.2012)
- விவரங்கள்
- உலோ.செந்தமிழ்க்கோதை
- பிரிவு: தொழில்நுட்பம்
தனித்த வேதிப்புலன் உயிர்க்கலன்கள்: (Solitary chemosensory cells)
படிமலர்ச்சிப் போக்கில் முதலில் தனித்த வேதிப்புலன் உயிர்க்கலன் உடலில் ஆங் காங்கே தோன்றியிருக்க வேண்டும். பிறகு அவை கூடுதலாகத் தேவைப்படும் இடங்களில் வேதிப்புலன் கொத்துகளாகி இரண்டும் இணைந்த விரவு நிலை வேதிப்புலன் மண்டலம் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்க வேண்டும். பிறகு தனிப்புலன் உறுப்பு தோன்றிய நிலையில் இவை அவ்வுறுப்புகளின் வேதிப்புலன் உணரிகளாக உருமாற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, மோப்ப, சுவை, புலன் உறுப்புகளில் இவை புறச்சூழலின் புலன் வாங்கும் அல்லது பெறும் உணரிகளாக உருமாற்றமுற்றன.
இந்தப் புலன் உறுப்பு படி மலர்ச்சி ஐம்புலன்களுக்கும் கூடப்பொருந்தும். தனித் தனி புலன் கலன்கள் பொதுவான உயிர்க்கலன் களிலிருந்து தகவமைந்து தோன்றுகின்றன. பிறகு அவை புலன் கொத்துகளாக உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் திரண்டு புலன் கொத்துக்கள் தோன்றுகின்றன. புலன் கலன் களும் கொத்துகளும் மயங்கிய விரவு நிலை புலன் மண்டலம் முதலில் தோன்றுகின்றது. பிறகே இவை புலன் உறுப்புகளான கண், காது, மூக்கு., நாக்கு போன்றவை உருவானதும் புலன் வாங்கிகளாக, அதாவது தனிக் கூறுகளாக அந்த உறுப்புகளில் உருமாறுகின்றன. எனவே, உயிரினப் படி மலர்ச்சியில் ஐம்புலன் விரிவாக் கம் என்பது மிகவும் சிக்கலான சூழல் ஊடாட்ட வினையில் ஏற்படுவதாகும். எனவே ஐம்புலன் வளர்ச்சி என்பது தனித்தனிப் புலன் என நேர்க் கோட்டில் உருவாவதில்லை.
மின்னணுவியல் மூக்கு: (Electronic Nose)
1.0. அறிமுகம்:
மின்னணுவியல் மூக்கு என்பது மணத்தை அல்லது நறுமணத்தைக் (flavour) கண்டறியும் கருவியாகும்.
தொழில் வணிக வளர்ச்சிக்காகக் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த செறிந்த ஆராய்ச்சியாக மின்னணுவியல் புலனுணர்வு தொழில் நுட்பமும், கருவிகளும் உருவாக்கப்பட்டுள் ளன. மின்னணுவியல் புலனுணர்வு என்பது மனிதப் புலனுணர்வைத் தக்க உணரிகளையும் உணர்ந்தறிதல் நுட்ப அமைப்புகளையும் கொண்டு மீளாக்கம் செய்யும் வழி முறை யாகும். 1982ஆம் ஆண்டிலிருந்தே மணத்தை யும், நறுமணத்தையும் ஒற்றி உணர்ந்தறியும் மின்னணுவியல் மூக்குக்கான தொழில் நுட்ப ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணத்தையும், நறுமணத்தையும் ஒற்றி உணர்ந்தறியும் மின்னணுவியல் மூக்குக்கான தொழில் நுட்ப ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மணத்தையும், நறுமணத்தை யும் செயற்கையாக உணர்ந்தறியும் செயல் முறையின் கட்டங்கள் மனித மோப்ப நிகழ்வின் கட்டங்களையே பின்பற்றுகின்றன.
அவையாவன, 1) மணத்தை இனங்காணல், 2) ஒப்பிடல், 3) அளவிடல், 4) தேவைக்கேற்ப பயன்படுத்தல் என்பனவாகும். மின்னணு மூக்கும், இச்செயல் முறைகளைத் திறம்பட நிறைவேற்ற வல்லதாக உள்ளது. இது அண்மையில் மிகப்பெரும் வளர்ச்சியை எய்தியுள்ளதால் தொழிலகங்களில் பரவலாக் கும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. என்றாலும் மனித மோப்பம் என்பது இன்ப அல்லது புலன் துய்ப்பு நாட்டத்தால் படி மலர்ந்து கூர்மையுற்றதாகும். மேலும், ஒவ்வொரு தனியர்க்கு வேறுபாடுடையதாகும்.
2.0. மணத்தைப் பகுத்தாயும் பிற நுட்பங்கள்:
அனைத்துத் தொழிலகங்களிலும் மணம் மதிப்பிடல் மனிதப் புலன் உணர்வாலேயே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. வேதி உணரிகளும் வளிம எடைப் பகுப்பு முறையும் கூட அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள் ளன. பின்னர்க் குறிப்பிட்ட முறை ஆவியாகும் வளிமச் சேர்மங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறதே ஒழிய, பகுப்பாய்வு முடிவுகளுக்கும் மணமறிந்துணர்தலும் மான ஒப்புரவு நேரடி யாக அமையாமல் பல மணக்கூறுகளின் இடைவினைகளால் குழப்பப்படுகிறது.
3.0. மின்னணுவியல் மூக்கின் செயல்பாட்டு நெறிமுறை:
மணமும், நறுமணமும் ஒருங்கிணைந்த முறையில் கண்டறியும் மனித மோப்பத்தை உருவகிக்க மின்னணுவியல் மூக்கு உருவாக்கப் பட்டது. மனித மோப்பம் மணத்தையும், நறுமணத்தையும் பிரிக்காமல் முழுமை வாய்ந்த பதிவு அடையாளமாக இனங் காண் கிறது.
மின்னணுவியல் மூக்கில் மூன்று பகுதிகள்(உறுப்புகள்) உள்ளன. அவையாவன: அ) பதக்கூறு வழங்கல் அமைப்பு, ஆ) ஒற்றறியும் அமைப்பு, இ) கணிப்பு அமைப்பு என்பனவாகும்.
அ) பதங்கூறு வழங்கல் அமைப்பு:
பதங்கூறு வழங்கல் அமைப்பு பகுத்தாய வேண்டிய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பதக்கூற்றின் ஆவிநிலைச் சேர்மங்களை உருவாக்க வைக்கிறது. பிறகு இந்த ஆவியாகும் சேர்மங்கள் மின்னணுவியல் மூக்கின் ஒற்றறியும் அமைப்புக்குள் செலுத்தப் படுகின்றன. தொடர்ந்த இயக்க நிலைமைகளை மின்னணுவியல் மூக்குக்கு உட்ட தேவைப் படும் ஓர் இன்றியமையாத உறுப்பாகும்.
2. ஒற்றறியும் அமைப்பு:
ஒற்றறியும் அமைப்பு என்பது உணரி அணியாகும். இது இக்கருவியின் வினைப்படும் பகுதியாகும். ஆவியாகும் சேர்மங்களின் தொடர்பு ஏற்பட்டதும் இவ்வமைப்பின் உணரிகள் வினை புரிகிறது. அதாவது ஆவிச் சேர்மங்களால் ஏற்படும் மின்னியல்புகளின் மாற்றத்தை உணர்கின்றன. ஒவ்வோர் உணரி யும் அனைத்து ஆவிநிலைச் சேர்மங்களுக்கும் வினைபுரியும் என்றாலும் குறிப்பிட்ட உணரி குறிப்பிட்ட சேர்மத்திற்கு வினை புரிதல், தனித்த பாங்கில் அமையும். பெரும்பாலான மின்னணுவியல் மூக்குகள் தொட்டதும் வினைபடும் உணரி அணிகளைப் பெற்றுள் ளன. உணரிப் பரப்பில் ஆவிச் சேர்மங்கள் பரப்பீர்ப்பால் கவரப்படும்போது உணரியின் இயற்பியல் மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்தத் தனிவகைப்பட்ட துலங்கல் ஓர் மின்னணுவியல் இடைமுகத்தால் இலக்க மதிப்புகளாக மாற்றப்படுகிறது. இங்ஙனம் பதிவாகிய தரவுகள் புள்ளியியல் படிமங்கள் வழியாகக் கணிப்பிடப் படுகின்றன.
(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)
- விவரங்கள்
- நெல்லை சு.முத்து
- பிரிவு: தொழில்நுட்பம்
தண்ணீருக்குள் மீன்கள், தவளைகள் மாதிரி நம்மால் சுவாசிக்க முடியுமா என்றால் அதற்குப் பல்வேறு உத்திகள் இன்று ஆராயப்பட்டு வருகின்றன. தண்ணீரில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்து சுவாசிக்க வழி உண்டாம். அர்னால்ட் லாண்டே(Arnold Lande) என்பவர் புதிய சிந்தனை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் ஹுஸ்டன் நகரில் டெக்சாஸ் மருத்துவக் கல்வியகப் பல்கலைக் கழகத்தில் இருந்து பணி ஒய்வு பெற்றவர். இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர்.
தண்ணீருக்குள் மூழ்கி முத்தெடுப்பவர் ஆகட்டும், ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகட்டும் இவரது உத்தி மிகவும் உதவும்.
பொதுவாக கடலடியில் மூழ்குபவர் காற்று உருளைகளைச் சுமந்து செல்வார் அல்லவா? நுரையீரலுக்குள் சுமந்து செல்லும் அந்தக் காற்றினுள் நைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற மந்த வாயுக்கள் அடங்கி இருக்குமே. அந்த வாயுக்கள் இரத்தத்தில் கலந்து கரைந்து விடும். பின்னர் அவர்கள் தண்ணீர் மட்டத்திற்கு வெளியே வரும்போது அந்த வாயுக்கள் அழுத்தக் குறைவினால் இரத்தத்தில் இருந்து குமிழிகளாக வெளிப்படும். ஏறத்தாழ சோடா பாட்டில் திறந்த போது நுங்கும் நுரையுமாகப் பொங்குமே அந்த மாதிரி ‘திடும்’ என்று ஜட வாயுக்கள் வெளிப்பட்டால் இரத்த நாளங் களுக்குள்ளும் ஆபத்து. அன்றியும், கால், கை, மூட்டிலும் வலி உண்டாகும். தசைப்பிடிப்பு, பக்க வாதம் என்று கூட வர வாய்ப்பு உண்டு.
அதனாலேயே நீர் மூழ்கி வீரர்கள் காற்று உருளைகளைச் சுமந்து செல்லாமல் ஆக்சிஜன் நிறைந்த உருளைகளையே எடுத்துச் செல்கின்றனர். ஆனால் திரவ ஊடகத்தில் சுவாசிக்க உதவும் உத்தி 1960 ஆம் ஆண்டுகளில் உதித்தது. திரவத்தில் கரைந்துள்ள ஆக்சிஜனைப் பிரித்து சுவாசித்திட நுரையீரல்களில் அடங்கிய ‘அல்வியோலி’(alveoli) என்கிற நுண்ணிய இழைவேர்கள் உதவுகின்றன. ஆனால், ஒரு திரவத்தில் கரைந்துள்ள ஆக்சிஜனை உறிஞ்சி, கரியமில வாயுவை வெளியிடும் வேகத்திற்கு இந்த அல்வியோலி ஈடு கொடுக்க இயலாது. அதனால், நீர் மூழ்கி வீரர் உயிருக்கு மூச்சுத் திணறும்.
இந்த வகையில் இத்தாலியில் வெனிஸ் நகரில் நடைபெற்ற பயன்பாட்டு உயிரி மின்னணு நுட்பம் மற்றும் உயிரி விசை நுட்பம் (Applied Bionics and Biomechanics) தொடர்பான முதலாவது சர்வதேச மாநாட்டில் லாண்டே ஒரு புதுச் சிந்தனையை வெளியிட்டார்.
நீர் மூழ்கி வீரர்கள் பயன்படுத்தும் தலைக் கவசத்தினுள் ஆக்சிஜன் செறிந்த பெர்ஃபுளூரோ கார்பன் திரவத்தை நிரப்பி விடலாம் என்கிறார். போர்க் கவசம் மாதிரி மார்பிலும் ஓர் உறையை மாற்றிக் கொள்வதாக இருக்கட்டும். உள்மூச்சு வாங்கும்போது மார்பு விரிவடை யுமே. அப்போது மார்புக் கவச உறை அழுத்தப் படுவதால், அதில் இருந்து பெர் ஃபுளூரோ கார்பன் திரவம் பிதுக்கப்பட்டு தலைக்கவசத்திற் குள் பாயும். அப்போது அதில் அடங்கிய ஆக்சிஜன் சுவாசத்திற்குப் பயன்படும். வெளிமூச்சில் அடங்கிய கார்பன் டை ஆக்சைடை ஏதேனும் செவுள் போன்ற சவ்வு அமைப்பினூடே வெளியேற்ற வேண்டும். அல்லது சுண்ணாம்புக் கரைசல் போன்ற ஏதேனும் வேதிமத்தில் கரைக்க வேண்டும்.
நியூ மோர்ஸ்/ஆல்ஃபிரெட், ஐ.டீ பான்ட் குழந்தைகள் மருத்துவ மனையில்(Nenours / Alfred I.duPont Hospital for Children) தாமஸ் ஷாஃபர் இந்தப் புதிய சுவாச நுட்பத்தை ஏனைய உயிரினங்களில் பரிசோதித்துப் பார்த்து விட்டனர், விஞ்ஞானிகள். இந்தத் தொழில் நுடபம் மட்டும் நிரூபிக்கப்படும் பட்சத்தில். ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் கடல் ஆராய்ச்சிகள் நடத்தலாம். அது மட்டுமின்றி, மெக்சிகோ வளை குடாவில் 1500 மீட்டர்கள் ஆழ்நீர் அடிவான எண்ணெய்த் துரப்பணி பணியில் இந்த உத்தி பெரிதும் உதவக்கூடும்.
(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)
- விவரங்கள்
- பெ.வ.செகந்நாதன்
- பிரிவு: தொழில்நுட்பம்
EPR சோதனை என்பதை அணு இயற்பியலில் உள்ள கருத்தைக் கொண்டு டேவிட் போஹம் (David Bohm) விளக்கினார். அதாவது இரண்டு சுழலும் மின்னணுக்களின் சுழற்சியைப் பற்றித் தெளிவாக அவர் அலசி ஆராய்ந்து தன் கருத்துக்களை வெளியிட்டார்.
51. துகள் சுழற்சி(particle spin) என்பது “துகள் தன் சொந்த அச்சை ஆதாரமாகக் கொண்டு சுழல்வதாகும்(rotation).”
52. இக்கருத்து அணுத்துகள் இயற்பியலுக்கும்(Sub atomic physics) பொருந்துவதாக உள்ளது.
53. துகள் சுழற்சி கொடுக்கப்பட்ட ஒரு சுழல் அச்சினுக்கு இரண்டு விவரங்களை மதிப்பைப் (value) பொறுத்தது.
(i) மின்னணு ஒரு திசையிலோ அல்லது அதன் எதிர்த்திசையிலோ சுழல்கிறது.
(ii) அதாவது இடமிருந்து வலமாகவோ (clockwise), அல்லது வலமிருந்து இடமாகவோ (anticlockwise) சுழல்கிறது.
54. இரண்டு மின்னணுக்களின் சுழற்சியின் மொத்த அளவு எப்போதும் மாறாததாக உள்ளது. (The amount of spin of two electrons is always the same)
55. சுழற்சியின் இந்த இரண்டு மதிப்புகளும் ‘மேல்’(up), ‘கீழ்’(down) எனப்படுகின்றன.
56. பழமையான இயற்பியல் இலக்கணங்களால்(classical terms) மின்னணு சுழற்சியைப் புரிந்துகொள்வது கடினம்.
57. அதாவது சுழல்வதற்கு ஆதாரமான சுழல் அச்சு தீர்மானமாக இப்படித்தான் என்று வரையறுக்க முடியாது.
58. மின்னணு சில இடங்களில் இருக்கக் கூடிய விருப்புத் தன்மையைக்(tendencies) கொண்டுள்ளன. (ஏன்?...)
59. மேலும் அவை ஒரு குறிப்பிட்ட சுழல் அச்சில் சுழலும் தன்மை கொண்டுள்ளன.
60. மின்னணு ஓர் அச்சை ஆதாரமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட திசையிலோ அல்லது அதற்கு எதிர்த்திசையிலோ சுழல்வதை, அளக்க முற்படுகையில் - ஒரு திட்டவட்டமான சுழல் அச்சு கிடைக்கிறது.
61. அளக்க ஆரம்பிப்பதற்கு முன் மின்னணு சுழற்சியில் மின்னணு ஒரு குறிப்பிட்ட அச்சை ஆதாரமாகக் கொண்டு சுழல்வதில்லை.
அதாவது மின்னணு ஏதோ ஓரு வகையான ஈடுபாட்டால் அல்லது தன்னுள் நிறைந்திருக்கும் ஆற்றலால் அவ்விதம் செயல்பட முனைகின்றது.
(பூமி தன் அச்சை ஆதாரமாகக் கொண்டு (23 1/2 டிகிரி) சுழல்கிறது. ஆர்யபட்டா எப்படி, எதன் துணையுடன் இக்கருத்தை வெளியிட்டார்? வானவியலில் இக்கருத்தின் பங்கென்ன? இவையெல்லாம் இன்றைய இளைய தலைமுறை யினர் எழுப்பும் வினாக்கள்.
இக்கருத்து சோதிடவியலில் வழக்கில் உள்ளது. வானவியல் கருத்துக்களையும், கோட்பாடுகளையும் கணிப்பிற்கு சோதிடவியல் பயன் படுத்துகிறது. அது விரிக்கின் பெருகும். அதற்கான இடமும், நேரமும் இதுவல்ல. அது பற்றித் தனிக் கட்டுரையில் பார்க்கவேண்டும்.
அயனம் என்றால் அசைதல் என்று பொருள். புவியின் அச்சு 23 1/2 o யில் மைய நேர்குத்துக்கோட்டிற்கு இரு புறமும், ஊசலாடுகிறது. அதனைக் கணித சோதிடம் கணக்கில் எடுக்கிறது. இதனை அயனாம்சம் என்பர்.
62. மின்னணு சுழற்சி பற்றிய இந்தத் தெளிவான புரிந்த நிலையில் நாம் EPR சோதனைகளையும், பெல் தேற்றத்தையும் பரிசீலிக்கலாம்.
EPR சோதனை - விளக்க விரிவாக்கம்
63. இச்சோதனையில் இரண்டு மின்ன ணுக்கள் எதிர் எதிர்த் திசைகளில் சுழல்கின்றன. அவற்றின் மொத்த சுழற்சி சுழி ஆகும்.
64. தனிப்பட்ட சுழற்சியின் திசை தீர்மானமாகத் தெரியாத நிலையில், இரண்டு மின்னணுக்களை அந்நிலையில் வைக்க எவ்வளவோ சோதனை முறைகள் உள்ளன.
65. ஆனால் ஒன்று சேர மொத்தமாக இரண்டு மின்னணுக்களின் சுழற்சியின் அளவு சுழியே. (கூறியது கூறல் முக்கியத்துவத்தின் காரணமாகக் கூறப்பட்டது.)
66. ஒரு சுழற்சியை கற்பனை செய்து பார்ப்போம். இந்த இரண்டு துகள்களும் ஒன்றை யொன்று விலகிச் செல்கின்றன. எப்படி? ஏதோ ஒரு முறையில் அவற்றின் சுழற்சி பாதிக்கப் படவில்லை என்போம்.
67. இவ்விரண்டு துகள்களும் எதிர்த் திசையில் செல்கின்றன. அவற்றின் ஒட்டு மொத்த சுழற்சி சுழியே ஆகும். அவற்றின் இடைத்தூரம் வெகுவாக, அதிகமாக, தனிப்பட்ட சுழற்சி அளக்கப்படுகிறது.
68. இச்சோதனையின் முக்கியமான கருத்தைக் கவனிப்போம். இந்த இரண்டு துகள்களுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகமானது என்போம். (தில்லியில் ஒன்றும், கன்னியாகுமரியில் மற்ற ஒன்றும் ஏன்? பூமியில் ஒன்றும், சந்திரனில் மற்றொன்றும்.) இவற்றில் ஒன்றின் சுழற்சி திசையை ‘மேல்’ என்றும், மற்றொன்றின் சுழற்சி திசையை ‘கீழ்’ என்றும் குறிப்பர்.
69. EPR சோதனையின் பார்வையாளர் சுழற்சியின் அச்சு எதுவெனத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் தரப்படுகிறார்.
70. ஒரு துகளின் சுழற்சி செங்குத்து அச்சில் சுழன்றால் அதனை ‘மேல்’ என்று காண்கிறோம்.
71. ஒட்டு மொத்த சுழற்சியின் அளவு சுழி ஆக இருப்பதால் இந்த அளவீடு இரண்டாவது துகளின் சுழற்சி ‘கீழ்’ என ஆகிறது. முதல் துகளின் சுழற்சியை அளவீடு செய்வதால், நாம் இரண்டாவது துகளின் சுழற்சியை மறைமுகமாய் அளவீடு செய்கிறோம். இம்முறையில் இந்தத் துகள்கள் எவ்வகையிலும் இடையூறு பெறுவதில்லை.
72. பார்வையாளர் அளவீடு செய்ய எந்த அச்சையும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகிறார். இது ஒரு விதமான முரண்பாடாகத் தோன்றுகிறது அல்லவா? (ஆழ்ந்து சிந்திக்கவும்)
73. குவையக் கொள்கைப்படி அளவீடு எடுப்பதற்கு முன் இத்துகள் ஒருவித ஈடுபாடு உள்ளதாகவோ, உள் நிறைந்த சக்தி நிறைந்ததா கவோ உள்ளன. எந்நிலையிலும் இரண்டு துகள்களின் ஒரு குறிப்பிட்ட அச்சிற்கு, சுழற்சிகள் எப்போதுமே எதிர் எதிராகவே இருக்கின்றன. (The spins of two electrons about any axis will always be opposite, but they will exist only as tendencies or potentialities before the measurement is taken – Quantum Theory)
74. பார்வையாளர் ஒரு குறிப்பிட்ட அச்சினைத் தேர்ந்தெடுத்த பின், அளவீடு செய்யும்போது, இந்த இரண்டு துகள்களுக்கும் ஒரு திட்டவட்டமான சுழல் அச்சு அமைகிறது.
75. இறுதி நிமிடத்தில் கூட பார்வையாளர் தான் விரும்பும் சுழல் அச்சினைத் தேர்ந்து எடுக்கலாம். அப்போது மின்னணு வெகுவாக ஒன்றை விட்டு ஒன்று வெகு தூரத்தில் இருக்கும். இது மிகவும் முக்கியமான இக்கட்டான நிலையாகும்.
(தொடர்வோம்)
(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)
- வேதியியலின் கதை – 8
- புழை இருவாயின் செயல்பாடு(Function of tunnel diode)
- அணு உலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 2
- அணுஉலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 1
- ஐன்ஸ்ட்டீன் கோட்பாடு ஆட்டம் காண்கிறது!
- ஒளிரும் புரதங்கள்
- மின்மினிகள்... உயிர் காக்கும் கண்மணிகள்
- காற்றாலை - ஒரு அலசல்
- பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு?
- அசத்தும் அன்ட்ரோயிட் அலைபேசிகள் - அடுத்த தலைமுறைக்கு
- எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் நீர்த் துப்புரவு முறை
- சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி
- இழப்பில்லாமல் மின்சாரத்தைக் கடத்த முடியுமா?
- கிருமியகற்றும் ஒளிவெள்ளம்
- வெப்பத்தை பூட்டிவைக்க இயலுமா?
- கல்லீரல் புத்துருவாக்கம்
- அரிப்பு நரம்புகள்
- முட்டையா...? கோழியா...?
- செவி பாதுகாப்பிற்கு ஒரு புதிய கருவி
- உணவை பகுத்து ஆராயும் காந்தவியல்