மூட நம்பிக்கைகள் நமக்கு ஒன்றும் புதியவை அல்ல.  சமூகத்தில் பரவியிருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவகை வெளிப்பாடு தான் பிள்ளையார் சிலைகள் ‘பால் குடிப்பதாக’ மக்கள் கூட்டம் நம்பிய நிகழ்வுமாகும். இது அறிவியலாளர்கள் சிந்தனையையும் முட்டத் தவறவில்லை.

 

பலரால் நோக்கப்பட்ட இந்தக் கருத்தாக்கத்திற்குத் தெளிவான விளக்கம் உண்டு. நீரோ, பாலோ வேறெந்த நீர்மமோ ஒரு கரண்டியிலோ சிறிய கிண்ணத்திலோ எடுத்துக்கொள்ளப்படும்போது அதன் புறப்பரப்பு தட்டையாக இல்லாமல் சிறிது வளைந்திருக்கும் என்பது நன்கு அறியப்பட்ட விடயம். புறப்பரப்பு விசையால் (‘surface tension’) நீர்மம் தனது மேற்பரப்பைச் சுருக்கிக்கொள்ள முனையும் தன்மையே இதன் காரணம் ஆகும். நீரோ பாலோ நிரப்பப்பட்ட ஒரு கரண்டியைச் சிலையின் வாய்க்கருகில் கொண்டு செல்லும்போது நீர்மத்தின் மேற்பரப்பைச் சிலையின் மேலுதடு தொடுவது இயல்பு. உதடில்லாத பிள்ளையார் சிலையாக இருப்பின் துதிக்கையின் கீழ்ப்பகுதிக்கும் முகத்திற்கும் உள்ள இடைவெளியில் கரண்டியைக் காட்டுவோம். இங்கும் நீர்மத்தின் மேற்பரப்பை சிலையின் ஒரு பகுதியைத் தொடும். இதனால் நீர்மம் வெளிப்புறம் வழிந்தோட வாய்ப்பு உண்டு.

இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது மற்ற நிலைகளைச் சார்ந்துள்ளது. சிலை ஈரமாக உள்ளபோது அதிலுள்ள நீரும் கரண்டியின் பாலும் சேர்ந்து ஒரு நீர்மமாக நீரின் தடம் வழியே வெளியில் வழிந்தோடும். இவ்வாறு பால் சிலையின் மீது சிந்தும்.

சிலை உலர்ந்திருக்கும்போது கரண்டியிலிருந்து சிலையின் உதடுகளிலுள்ள விரிசலுக்கிடையே (ஒரு சிறு துளையாக இருந்தாலும்) வழிந்து கீழே சிந்திவிடும். கரண்டியின் மேற்பரப்பிலுள்ள பால் மட்டுமே இவ்வாறு வழிந்தோடுகிறது. நீர்மங்களின் புறப்பரப்பு விசை இயல்பினால் ஏற்படும் நுண்புழை செயற்பாடும் இதற்கு உதவுகிறது. சிலை உதடுகளுக்கிடையே உள்ள விரிசலானது நுண்புழைக்குழாயாகச் செயல்பட்டு பால் வழிந்தோடச் செய்கிறது. இவ்வாறு முதல் கரண்டி பாலில் உதடு ஈரமடைந்துவிடும். இரண்டாம் கரண்டி பாலில் இன்னும் எளிதாக வழிந்தோடும். ஏனெனில், நுண்புழைக்குழாய் (சிலை உதடுகளின் விரிசல்) முன்னமே முதல் கரண்டி பாலில் நிரம்பிவிட்டது. இவ்விளக்கம் குறிப்பிட்ட சூழலுக்கேற்ப சிறிது திரிந்தமையும். ஆனால், இதன் அடிப்படை ஒன்று தான்.

இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியது பால் கரண்டியிலிருந்து படிப்படியாகக் குறையும்போது அது சிலைக்குள் சென்று மறையவில்லை; மாறாகச் சிலையின் அடித்தளத்தில் படிந்து கிடக்கும்.

ஒரு சிறு கரண்டியில் பால் அளக்கப்பட்டு எடுத்துக்கொண்டு சிலையை ஒரு தட்டில் வைத்துவிடுவோம். இப்போது பாலைச் சிலை உதடுகளில் ஊட்டுவோம். சிறிது நேரம் பொறுத்த பின் கரண்டியில் குறைந்துபோன பாலின் அளவையும் தட்டில் சேர்ந்த பாலின் அளவையும் ஒப்பிட்டு பார்க்கும்போது நடப்பது என்னவென்று விளங்கிவிடும். வெள்ளி சிலையாக இருப்பின் இந்தச் செயல்முறை இன்னும் சிறப்பாக விளங்கும். கூர்ந்து நோக்கும்போது பால் சிற்பத்தின் பரப்பில் வழிந்தோடுவது கண்கூடு.

இதைப்போன்று இன்னும் எளிமையான இரண்டு செய்முறைகளைக் காண்போம்.

  1. ஒரு குவளையில் படிப்படியாக நீர் ஊற்றும்போது அதன் விளிம்பளவு நிரம்பியவுடன் நீர் வழியாமல் சிறிது மேல்நோக்கி புடைத்திருப்பதைக் காணலாம். இதன் அடிப்படை நீரின் புறப்பரப்பு விசை இயல்பு.
  2. ஒரு தட்டையான பரப்பில் ஒரு சொட்டு நீர் ஊற்றி அந்த நீர்ச்சொட்டினை நகக்கண்ணால் துளைப்போம். இப்போது நகக்கண்ணில் படிந்த நீரைப் பரப்பின் விளிம்புக்கு அருகில் கோடிடுவோம். நீர் பரவாமல் நகக்கண் நகர்த்திய வழியில் போகும். இவ்வாறு பால், எண்ணெய் என எந்த நீர்மத்தையும் ஆய்ந்து பார்க்கலாம்.

இவ்விளக்கத்தின் அடிப்படைக் கருத்தாக்கம் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் பாடப்பகுதியாகும். இந்த ‘அற்புதத்தின்’ தொலைக்காட்சிப் படங்களைக் கூர்ந்து நோக்குவதே இதனைப் புரிந்து கொள்ளப் போதுமானது.

- சு.உலோகேசுவரன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

(http://www.imsc.res.in/~jayaram/Articles/milkb.html இணைப்பில் உள்ள ஆங்கிலக் கட்டுரையைத் தழுவியது.)

Pin It